பள்ளிக் கல்விக்கு அரசே பொறுப்பு: அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் அடிப்படைத் தேவையான ‘அனைவருக்கும் சமமான கற்றல் வாய்ப்பு’ என்ற கோரிக்கையில் இருந்து விலகியே நிற்கின்றன. அரசுப் பள்ளிகள் அனைத்தும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்புகளை இதுவரையிலான அரசுகள் உருவாக்காமல், சமூகத்தில் உள்ள பாகுபாட்டையும் ஏற்றத்தாழ்வுகளையும் பிரதிபலிக்கும் வகையில் பள்ளிக் கல்வியை வைத்துள்ளன. மாதிரிப் பள்ளி, பள்ளி வளாகம், சிறப்புப் பள்ளிகள் என்று பல அடுக்குக் கல்வி முறையை அரசு ஊக்குவிக்கிறது. இந்த சமத்துவமின்மையைக் களைந்து, பள்ளிக் கல்வியை மேலும் சிறப்பாக வளர்த்தெடுக்கத் தொலைநோக்குத் திட்டங்கள் தேவை. சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்க அரசு தன் பொறுப்பிலும் செலவிலும் கட்டணமில்லாக் கல்வியை முன்பருவக் கல்வி தொடங்கி மேல்நிலைப் பள்ளிக் கல்வி வரை அருகமைப் பள்ளி அமைப்பில் பொதுப் பள்ளி முறைமை மூலம் வழங்கிட வேண்டும்.

பள்ளிகள் படிப்பதற்கே… தொழில் பழகுவதற்கு அல்ல: ஒரு குழந்தைக்கு ஒரு குறிப்பிட்ட பாடத்தில் அல்லது கல்வியியல் செயல்பாட்டில் ஆர்வமில்லை என்று கண்டறிந்தால் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து, அந்தப் பாடத்தில் அல்லது செயல்பாட்டில் ஆர்வத்தைப் பெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கு மாற்றாக, பள்ளியிலேயே வேலைவாய்ப்புத் திறனைப் பெற்றால் அவர்கள் பிழைத்துக்கொள்வார்கள் என்ற நோக்கில் அரசு செயல்பட்டால், கல்வி வழங்குவதில் அரசு தோற்றுவிட்டது என்றுதான் கருத இயலும். பிறப்பு முதல் 18 வயது முடியும் வரை குழந்தைகள் ஊதியம் ஈட்டும் எந்த உழைப்பிலும் ஈடுபடக் கூடாது.

நிரந்தர ஆசிரியர்கள்: பள்ளிப் பருவத்தில் கல்வி கற்கப் பாடல்களுடன் உடற்பயிற்சி, பல் துறை விளையாட்டுகள், கலை, இலக்கியம், கணினி மொழி உள்ளிட்ட செயல்பாடுகளை, முறையான பயிற்சி பெற்ற, நிரந்தரப் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலம் அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களின் மீது சவால்களைச் சுமத்தக் கூடாது: மேல்நிலைப் பள்ளிக் கல்வி மதிப்பீடே அதற்கு அடுத்த நிலை உயர்கல்வியில் சேருவதற்கான தகுதியாக அமைந்திட வேண்டும். கிடைத்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி, கொடுக்கப்பட்ட பாடத்தை எதிர்பார்த்த முறைப்படி கற்றார்களா என்றே மதிப்பிட வேண்டும். இந்த நிலைக்கு மாணவர்கள் உரிய அறிவு பெற்றுள்ளனர் என்பதை உறுதிசெய்துகொண்டு, அடுத்த நிலைக்குச் செல்லத் தகுதி படைத்தவர் என்ற நிலைதான் உயர் கல்வியின் மீது நம்பிக்கையும் ஈர்ப்பும் ஏற்படுத்தும். வாய்ப்பும் வசதியும் தலைமுறை தலைமுறையாகப் பெற்ற ஒருசிலரால் எத்தகைய சவாலையும் சந்திக்க இயலும் என்பதால், எல்லா மாணவர்களுக்கும் சவால்களைக் கூட்டிக்கொண்டே செல்வது தனிமனித வளர்ச்சிக்கோ சமூக மேம்பாட்டுக்கோ உதவாது.

மாணவர் விடுதிகள்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகளை அதிக எண்ணிக்கையில் உருவாக்கி, அதைப் பராமரிப்பதில் புதிய அணுகுமுறைகளை வகுக்க வேண்டும். பல்வகை மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களின் தேவைகளுக்கும், ஒவ்வொரு பாலினத்தவருக்கும் உரிய தேவைகளைக் கணக்கில் கொண்டும் சமூகத்தில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையிலும் விடுதிக் கட்டமைப்பு உருவாக்கிட வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சமச்சீரான சத்து தரும் மூன்று வேளை உணவுடன், ஊட்டச் சத்து மருந்துகள் வழங்கிட வேண்டும். அனைத்து மாணவருக்கும் முழுமையான மருத்துவப் பரிசோதனை ஆண்டுக்கு ஒரு முறையாவது நடத்திட வேண்டும்.

அனைத்து மட்டங்களிலும் ஜனநாயகம்: மக்களாட்சி மாண்புகளை மாணவர் உணர்ந்திடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளில், மாணவர் பேரவைத் தேர்தல் நடத்தி முறைப்படி மாணவப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளிகளில் பெற்றோர் ஈடுபாட்டை அதிகரித்திட, பெற்றோர் ஆசிரியர் கழகம் முறைப்படி இயங்கிட முறையான தேர்தல் மூலம் பள்ளிதோறும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆசிரியர் சங்கங்களை கல்வியியல் அமைப்பாக அங்கீகரிக்க வேண்டும். ஆசிரியர்களின் பணி சார்ந்த கோரிக்கைகளுடன் கல்வியியல் சார்ந்த விவாதங்களை நடத்த ஊக்கப்படுத்திட வேண்டும். ஆசிரியர் சங்கங்களுடன் தொடர் உரையாடலை அரசு நிகழ்த்த வேண்டும். கல்விக் கொள்கை, கல்வித்திட்டம், பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் ஆசிரியர் அமைப்புகள், மாணவர், பெற்றோர் அமைப்புகள் பங்கேற்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

மாநிலக் கல்விக் கொள்கை: கல்வி என்பது பண்பாட்டின் கூறு. பன்முகப் பண்பாடு கொண்ட இந்தியாவில் மாநில மக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கு ஏற்றாற்போல் கல்வி வளர்ச்சிக்குத் திட்டமிட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். அத்தகைய மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்கிட மாநிலத்தின் கல்வி ஆளுமைகளைக் கொண்ட மாநிலக் கல்விக் குழுவை அமைத்திட வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டம், கல்வியை ஒத்திசைவுப் பட்டியலில்தான் வைத்துள்ளது. எனவே, மாநில அரசு கல்விக் கொள்கை வகுப்பதற்கு அனைத்து வாய்ப்புகளையும் இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ளது. அரசியல் உறுதிப்பாட்டுடன் அரசு செயல்படுமேயானால், மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்குவது சாத்தியமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *