தேசம் :- வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, பொதுமொழி, பொதுவான பொருளாதார வாழ்வு மற்றும் நாமெல்லாம் ஓரினம் என்ற உணர்வு  3

தேசம் :- வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பு, பொதுமொழி, பொதுவான பொருளாதார வாழ்வு மற்றும் நாமெல்லாம் ஓரினம் என்ற உணர்வு.

தேசியம் :— மேற்கண்ட தேசத்தின் தன்னுரிமை, விடுதலை, இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட கருத்தாக்கம்.

தேசியவாதம்:- தேசியவாதம் என்பது நாட்டினம் ஒன்றின் மீது அக்கறை கொண்ட ஒரு கருத்தியல், உணர்வு, ஒரு பண்பாட்டு வடிவம் அல்லது சமூக இயக்கம் ஆகும். நாட்டினங்கள் என்பதன் வரலாற்று மூலம் குறித்துக் குறிப்பிடத் தக்க கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், ஒரு கருத்தியல், ஒரு சமூக இயக்கம் என்ற வகையிலாவது, தேசியவாதம் என்பது ஐரோப்பாவில் உருவான ஒரு அண்மைக்காலத் தோற்றப்பாடு என்பதைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இது எப்போது எங்கே தோன்றியது என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாவிட்டாலும், 18 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுப் புரட்சிக் காலத்தில் தோன்றிய மக்கள் இறைமைக்கான போராட்டங்கள் போன்றவற்றோடு இது நெருங்கிய தொடர்பு கொண்டது. அப்போதிருந்து, உலக வரலாற்றில் தேசியவாதம், குறிப்பிடத்தக்க அரசியல், சமூக சக்தியாக இருந்து வந்தது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் உருவானதற்காக முக்கிய காரணமாகவும் இது தொழிற்பட்டதைச் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

இந்திய தேசியம் :— வரையறுக்கப்பட்ட நிரப்பரப்பு (இந்தியா), பொதுமொழி (ஹிந்தி), பொதுவான பொருளாதாரம் (பணம், இந்திய அரசின் பொருளியல் கொள்கை) மற்றும் இந்தியர் என்ற உணர்வும் இவற்றை தற்காப்பதற்குமான ஒரு கருத்தாக்கம். இந்திய தேசியம் என்ற கருத்தாக்கம் இந்து மதத்தை சார்ந்து இயங்குவதும், விலகி நிற்பதும் கட்சிகளை பொறுத்தது. ஆனால் அது ஒருபோதும் ஹிந்தி மொழியை விட்டு விலகி நிற்காது, நிற்கவும் முடியாது.

தமிழ்த்தேசியம் :— இந்திய தேசியத்துக்கான அதே கண்ணோட்டத்தில் அணுகவும்.

தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா?

இல்லை. தேசம் (Nation) வேறு; நாடு (Country) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.

ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம். வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.

தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகரமுதலி (Compact Oxford Dictionary Thesaurus and Word power Guide- Indian Edition) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.

‘ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்”.

நாடு என்பதற்கு அந்த அகரமுதலி கூறும் விளக்கம்:

‘ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்”

இந்தியா ஒரு நாடு. ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம் என்று குறிப்பிடுகிறது.  (Article 1(1) India that is Bharat shall be a Union of States).

இந்தியா நாடா? தேசமா? 4

இந்தியா ஒரு நாடு என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அது ஒரு தேசமல்ல. ‘நேஷன்’ (Nation)என்னும் ஆங்கிலச்சொல் ‘தேசம்’ ‘தேசிய இனம்’ இரண்டையும் குறிக்கும்.

இதற்க்கு முன் நாம் கண்ட ஒரு தேசிய இனத்தை வரையறுக்கும் எந்த அடிப்படைக் கூறுகளையும் ‘இந்தியா’ நிறைவு செய்யவில்லை. ஆகவே, அது ஒரு நாடு, தேசமல்ல (A State And Not A Nation). மார்க்சியரான பிரகாஷ் காரத் ‘சோஷியல் சைன்டிஸ்ட்’ (எண் 37)-இல் இவ்வாறு கூறுகிறார். அதுதான் உண்மை.

“இந்தியாவை ஒரு தேசம் (Nation) என்பது முழுக்க முழுக்க வரலாற்றறிவியலற்ற வார்த்தையாகும். மொழியால், எல்லையால், பண்பாட்டால் தெளிவாகப் பிரிந்துள்ள பெரிய தேசிய இனங்கள் குறைந்தபட்சம் 12 இருக்கின்றன. தெலுங்கு, அஸ்ஸாமி, வங்காளி, ஒரியா, தமிழ், மலையாளி, கன்னடிகா, மகாராஷ்டிரியன், குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (ஹிந்துஸ்தானி) மற்றும் காஷ்மீரி, இவைகளுக்கப்பால் மணிப்புரி, திரிபுரி, நாகர்கள், கரோ மற்றும் சந்தால் போன்ற ஏராளமான சிறு தேசிய இனங்களும் இருக்கின்றன.

உலகம் முழுவதும் ஒவ்வொரு தேசிய இனமும், அதன் மொழியாலேயே அறியப்படுகிறது. ஆங்கிலேய தேசிய இனம் ஆங்கில மொழியாலும், பிரெஞ்சு தேசிய இனம் பிரெஞ்சு மொழியாலும், ஜெர்மானிய தேசிய இனம் ஜெர்மன் மொழியாலும் அறியப்படுவதுபோலவே, தமிழ்த் தேசிய இனம் தமிழ்மொழியாலும், மராட்டிய தேசிய இனம் மராட்டிய மொழியாலும், வங்காள தேசிய இனம் வங்காள மொழியாலும் அறியப்படுகின்றன. இத்தகைய தேசிய இனங்கள் தனித்தனி சுதந்திர தேசங்களையும் அமைக்க உலக சாசனங்களால் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றன.

இந்திய தேசியம் என்பது ஒரு தேசியம் என்பதற்கான அடிப்படைத் தகுதிகளை நிறைவு செய்யவில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் தேசிய இனங்களின் தனி அடையாளங்களை அழித்து ஓர் ஒற்றைத் தன்மையை வலியுறுத்துகிறது. இது நிலப்பரப்பு தேசியம் (Territorial Nationalism) ஆகும். இந்தியத் தேசியரான ம.பொ.சிவஞானம் ‘இந்திய தேசியத்தின் வயது 100’ என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் வயது அவ்வளவே.

தமிழர் என்பது ஒரு மரபினம். அது இன்று தமிழ்த் தேசிய இனமாகவும் உள்ளது. இந்தியாவின், பாகிஸ்தானின் பல பழங்குடிகளிலும் தேசிய இனங்களிலும் தமிழ் மரபினம் கலந்து உள்ளது.

 ஆரியர்கள் இந்திய மண்டலத்திற்கு வந்த போது தமிழ் பேசிய மக்களைக் கொச்சையாகத் ‘திராவிட” என்று அழைத்தனர். ‘தமிழ்” என்பதை ஒலிக்கத் தெரியாமல் ‘த்ரமிள்” என்று உச்சரித்து அதுவே பின்னர் ‘த்ரமிள”,’த்ராவிட” என்று மாறியது என்றும் ஆய்வாளர்கள் (பாவாணர் உள்ளிட்டோர்) கூறுகின்றனர்.

  சமஸ்கிருத நூல்களில், சமஸ்கிருதம் அல்லாத மொழிக்கும், ஆரியர் அல்லாத இனத்திற்கும் ஆரியர்கள் வைத்த பெயரான “த்ராவிட” என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு “திராவிடம்” என்று பெயர் சூட்டிக் கொண்டார்.

 திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை. ஆய்வு வசதிக்காக அவர் ஆரிய வழக்கிலிருந்து எடுத்துக் கொண்ட அடையாளப் பெயரே திராவிடம்.

 பிரித்தானிய ஆட்சியில் தமிழக, ஆந்திர, கேரளப் பகுதிகளைக் கொண்டிருந்த அன்றைய சென்னை மாகாணத்தில் தோன்றிய பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்பு இயக்கத்திற்கு ‘திராவிடர் கழகம்” என்று பெயர் சூட்டிக் கொண்டது அன்றைய சூழ்நிலையையும் தேவையையும் பொறுத்ததே ஆகும். அதற்கு மேல் அப்பெயரில் முக்கியத்துவம் எதுவும் இல்லை. தனித்தன்மை எதுவுமில்லை. அப்பெயருக்கான மொழி, இன அடிப்படையில் அமைந்த வரலாற்றுக் காரணங்கள் எதுவுமில்லை.

தமிழ்த் தேசிய இனத்துக்கு அடிப்படை

தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது. நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை, இலக்கியம், பொதுப் பழக்கவழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை. இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம். தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதுவே.

இந்திய அரசமைப்புச் சட்டம், ‘இந்தியர்” என்று ஒரு தேசிய இனம்(Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை (Citizenship) பற்றி மட்டுமே பகுதி ௦2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. ‘இந்தியாவின் குடிமகன்”(Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.

 இந்தியப் பெருமுதலாளிய-இந்தி ஆதிக்க-பார்ப்பனிய சக்திகளும் அவர்களின் அரசியல் பிரதிநிதிகளும் ‘இந்தியன்” என்று ஒரு தேசிய இனம் இருப்பது போல் சட்டவிரோதமாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். அதே போல் இச்சக்திகள் இந்தியாவை ஒரு தேசம் என்றும் சட்டத்திற்குப் புறம்பாகப் பேசியும் எழுதியும் வருகின்றனர். இவையெல்லாம், சுரண்டல் சக்திகளும், ஆதிக்கசக்திகளும் கிளப்பிவிடும் இந்திய தேசிய வெறிப் பரப்பல் முறையாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *