இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்தவர்கள் யூதர்கள். அவர்களைப் பொருத்தவரையில் ஹிட்லருக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களை ஆதரிப்பார்கள் என்றாலும் பிரிட்டன் அவர்களுக்கு சற்று விஷேசமான நாடு. ஐரோப்பிய நாடுகளிலேயே பிரிட்டனில்தான் படித்த வசதியான யூதர்கள் அதிகமானோர் அடைக்கலமாகி இருந்தனர். ஆயிரமாயிரம் யூதர்கள் எங்களையும் பிரிட்டன் படையில் வீரர்களாகச் சேர்த்துக் கொள்ளுங்கள் நாங்களும் பிரிட்டன் சார்பில் போரில் கலந்து கொள்கிறோம் என பிரிட்டன் அரசைச் சுயமாகவே கேட்டுக் கொள்ளும் அளவுக்கு பிரிட்டன் ஆதரவு நிலை அவர்களிடையே வெறித்தனமாக நிலவியது.

ரஷ்யாவும் ஜெர்மனியை எதிர்த்த நாடுதான். ஆனால் அங்கு நடந்த  கிறித்தவ யூத மோதல்கள் ரஷ்யாவுடன் இணக்கமான சூழ்நிலையைக்  கொடுக்கவில்லை. அங்கிருந்து சுமார் பத்து இலட்சம் யூதர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அதன் வடு இன்று வரையில் யூதர்களிடம் இருக்கிறது. டேவிட் பென்குரியன் இஸ்ரேல் நாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர். யூதர்களுக்காக ஹிட்லர் போலந்து நாட்டில் ஆஸ்விட்ச் நகரில்தான் மிகப் பெரும் வதை முகாமைக் கட்டமைத்தான். அந்நகரில் பிறந்தவர் இந்த டேவிட் பென் குரியன். தியோடரின் சியோனிச சித்தாந்தத்தில் தன்னை சிறுவயதில் ஈடுபடுத்திக் கொண்ட ஐரோப்பிய யூதராவார். போலந்து நாட்டிலிருந்து பிரிட்டனுக்கு குடிவந்தவுடன் டேவிட் பென்குரியனின் அரசியல் வாழ்க்கையில் ஏறுமுகம் தான்.

தியோடர் ஹெஸில் சியோனிச சித்தாந்தத்தைக் கட்டமைத்தார் என்றால், டேவிட் பென்குரியன், சியோனி சத்தை ஒரு சர்வதேச யூத சமுதாயமாகக் கட்டமைத்தார். பிரிட்டனில் வாழ்ந்த யூத சமுதாயத்தைத் தாண்டி சர்வதேச யூத சமுதாயத்தின் தலைவராக  உருவெடுத்தார். பென்குரியனுக்கும் அப்போதைய பிரிட்டன் பிரதமர் சர்ச்சிலுக்குமான நட்பும் இதற்கு பெரிய அளவில் உதவி செய்தது. 1920 முதல் யூதர்களின் நில வங்கி பாலஸ்தீனத்தில் நிலங்களைக்கையகப்படுத்தத் தொடங்கியது. குறைந்த மதிப்பில் உள்ள ஏராளமான இடங்களை பாலஸ்தீனியர்கள் நல்ல இலாபத்துடன் நில வங்கிக்கு விற்று வந்தனர். நில வங்கி ஏன் இத்தனை இடங்களை இங்கு வந்து வாங்கு– கிறார்கள் என்ற எந்த அடிப்படை அறிவும் அப்போது பாலஸ்தீன மக்களுக்கு இல்லை. அப்போது பாலஸ்தீனத்தை பிரிட்டன் அதிகாரிகள்  ஆட்சி செய்து கொண்டிருந்தனர். பிரிட்டனின் சட்டம் மட்டுமே அங்கு செல்லுபடியாகும் நிலை.

டேவிட் பென்குரியன் தன்னுடைய நண்பரும், பிரிட்டன் பிரதமருமான  சர்ச்சிலிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். அப்போது டேவிட் பென்குரியன் பிரிட்டன் யூத காங்கிரஸின் தலைவரும் கூட..! டேவிட் பென்குரியன் சர்ச்சிலிடம் வைத்த கோரிக்கை என்னவெனில், யூத சமுதாயம் பாலஸ்தீனத்தில் இடம் வாங்குவது சட்டப்படி சரி என்கிற ஆணையை பிரிட்டன் கொண்டுவர வேண்டும்  என்பதாகும். இதன் மூலம் ஐரோப்பாவில் பிற நாடுகளில் வசிக்கும் யூதர்கள் எந்தவித பயமுமின்றி பாலஸ்தீனத்தில் இடத்தை வாங்கிப் போடலாம். பாலஸ்தீனத்தில் பிரிட்டனின் ஹை கமிஷனராக ஹெர்பட் சாமுவேல் இருக்கும் வரை, யூதர்களின் நிலவங்கி மிக எளிதாகவே இடங்களை வாங்கிக் குவிக்க முடிந்தது. 1935 வாக்கில் இடங்களைக் கையகப்படுத்துவதில் சில சட்டச் சிக்கல்கள் இருந்தன. சர்ச்சில் தீர்க்கமாகச் சொன்னார். இரண்டாம் உலக யுத்தம் முடிந்தவுடன் இதுபற்றிப் பேசுவோம். சர்ச்சிலின் மேல் டேவிட் பென்குரியனுக்கு முழு நம்பிக்கை இருந்தது. இருவருக்குமான நட்பும் மிக நெருக்கமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா என்ற நாடு பிரிட்டனுக்கு ஆதரவாக கை கோர்க்கும் வரையில் ஹிட்லரின் கை  சற்று ஓங்கியே இருந்தது. இரண்டாம் உலகப்போரும் அதன் முடிவும் யூதர்களுக்கு வாழ்வா சாவா என்ற நிலைதான்.

 ஹிட்லரின் நாஜிக்கள் வெற்றி பெற்றிருந்தால் இஸ்ரேல் என்ற நாடு உருவாகியிருக்குமா என்பதே சந்தேகம்தான். பாலஸ்தீனத்து மக்கள் ஹிட்லர் வெற்றி பெற வேண்டுமென நினைத்தார்கள். யூதர்களின் நிலவங்கியின் நோக்கம் தெரியாமல் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு தங்களுடைய நிலங்களையெல்லாம் விற்றுத் தீர்த்திருந்தார்கள். கார்ப்பரேட் கம்பெனிக்குத் தங்களின் தரிசு நிலங்களை விற்ற விவ சாயிகளின் நிலையில், எல்லா நிலங்களும் விற்றுத் தீர்ந்த பிறகே அவர்களுக்குச் சற்று உரைக்க ஆரம்பித்தது. பாலஸ்தீனத்தில் அப்போது எந்த அமைப்பும் கிடையாது. பிரிட்டனின் காலனி நாடு என்ற அளவில் அந்த மக்கள் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்தனர்.

யூதர்கள் என்ற எதிரி தங்களின் நாட்டில் ஏராளமான நிலங்களை வாங்கிக் குவித்துள்ள மர்மம் அவர்களுக்கு விளங்கத் தொடங்கியது. ஆனால் அதற்குள் விசயம் கைமீறிப் போய்விட்டது. பிரிட்டனின் நிலஉரிமைச் சட்டத்தின்படி பத்திரப் பதிவும் கச்சிதமாக செய்து முடிக்கப்பட்டுவிட்டது. முகம்மது அமீன் அல் ஹுசைனி என்பவர் அன்றைய பாலஸ்தீன மக்களிடம் தலைவர் போன்று மதிக்கப்பட்டவர். பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சார்ந்தவர். அவருடைய தந்தையார் உதுமானியப் பேரர சில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தவர். முகம்மது அமீனுக்கு பெரும் கவலையாக இருந்தது. அவருடைய அறிவு இங்கு ஏதோ மிகப்பெரும் சூழ்ச்சி நடக்கப்போகிறது என்பதை உணர்த்திக் கொண்டேயிருந்தது. தன்னுடைய முழுச் சொத்தையும் விற்றாவது பாலஸ்தீன மக்களுக்கு நிம்மதி தேடித்தர முடியுமா என்று யோசித்தார்.

கிராண்ட் முஃப்தி என்று அழைக்கப்பட்ட முகம்மது அமீனை பாலஸ்தீன மக்கள் தங்களின் இறுதி நம்பிக்கையாகக் கருதினார்கள். முகம்மது அமீன் ஜெர்மனிக்குச் சென்று ஹிட்லரைச் சந்தித்தும் பேசினார். ஹிட்லர் நல்லவரா கெட்டவரா என்றெல்லாம் அவர் பார்க்கவில்லை. ஹிட்லர் யூதர்களின் விரோதி, ஆகவே அவர் நமக்கு நண்பராகத்தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலான சந்திப்பு என்று எடுத்துக் கொள்ளலாம். பாலஸ்தீன மக்கள் அனைவருமே உங்களை முழு மனதோடு ஆதரிக்கிறோம். பிரிட்டனின் காலனி நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் ஆதரவு என்ற செய்தி ஹிட்லருக்கு மகிழ்ச்சியையே கொடுத்திருக்கும். எங்களின் சிறிய படையையும் திரட்டித் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். பாலஸ்தீனத்தில் எங்களுக்குத் தொந்தரவு செய்யும் யூதர்களை எங்களின்  மண்ணிலிருந்து விரட்டுவதற்கு உதவ வேண்டும். ஹிட்லருக்கு இதைவிட வேறு ஏதாவது ஒன்று மகிழ்ச்சியைக் கொடுத்திருக்க முடியுமா? முழு சம்மதம் என்றார் ஜெர்மானிய அதிபர் ஹிட்லர்.

ஆனால் இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவு பாலஸ்தீன மக்களுக்குச் சாதகமாக அமையவே இல்லை. ‘மறுபிறப்பும் இஸ்ரேலின் விதியும்’ டேவிட் பென்குரியன் எழுதிய புத்தகம். இதை புத்தகமென்று சொல்வதைவிட இஸ்ரேல் என்ற நாட்டின் அரசமைப்புச்  சட்டமென்று சொல்லலாம். இன்றுவரையில் இஸ்ரேலுக்கென்று எந்தவித அரசமைப்புச் சட்டமும் கிடையாது. அவர்களுக்கு டேவிட் பென்குரியனின் எழுத்துகள் தான் எல்லாமே. தோராவை வாசிக்கும் யூதர்கள் டேவிட் பென்குரியனின் எழுத்துகளையும் வாசிக்கத் தவறுவதில்லை. 1944இல் பிரிட்டனின் நேசப் படை- களின் வெற்றியைக் கொண்டாடும் விழாக்களில் கூட பாலஸ்தீன அரபிகளின் துரோகத்தையும் சந்தடி சாக்கில் போட்டுக் கொடுத்தார்கள் யூதர்கள்.

கிளெமென்ட் அட்லி, ஹெர்பட் மாரிசன் போன்ற யூதர்கள் பிரிட்டன் பிரதமர் சர்ச்சிலின் அரசியல் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றிருந்தார்கள். மேல்மட்ட ஆலோசனைக் கூட்டங்களில் என்ன பேசினாலும் யூதர்களுக்கு அந்த இரகசியம் கசிந்து விடும். ஒரு பக்கம் அரசியல் நகர்வு. மறுபக்கம் யூதர்களின் மேல் அனுதாபம். ஹிட்லரின் மரணமும், யூத வதை முகாம்கள் பற்றிய செய்திகளும் யூதர்கள் மேல் அனுதாபத்தை ஏற்படுத்தியிருந்தது. பாலஸ்தீனியர்களின் துரோகம் வேறு பிரிட்டனை  கடுப்பேற்றியிருந்தது. காலச் சூழ்நிலை யூதர்களுக்கு  பெரும்  சாதகமாக  இருந்தது. யுத்தமும் முடிந்துவிட்டது. ஹிட்லரும் உயிரோடு இல்லை. 1917இல் போடப்பட்ட பால்ஃபர் பிரகடனத்தைத் தூசி தட்டி எடுத்தார்கள். பிரிட்டன் கொடுத்த வாக்குறுதி இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது. தெளிவாக அறிவித்தார் பிரிட்டன் பிரதமர் சர்ச்சில். அப்போது அமெரிக்காவும் யூதர்களுக்கு ஆதரவு கொடுத்ததைக் கவனித்த சர்ச்சில் அதைத் தன் உரையில் குறிப்பிடவும் செய்தார். கூட்டணிக் கணக்குகள் கச்சிதமாகப் பொருந்தின. அமெரிக்காவின் ஆதரவு மனநிலையை மகிழ்ச்சியோடு வரவேற்றது சர்வதேச யூத சமுதாயம்.

நன்றி சமரசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *