இட்சாக் ராபினையும், ஓஸ்லோ ஒப்பந்தத்தையும் பற்றிப் பேசாமல் இஸ்ரேலின் வரலாற்றைப் பேச முடியாது. இரண்டுமுறை இஸ்ரேலின் பிரதமராக இருந்தவர் ராபின். கோல்டா மெய்ரின் பதவிக் காலம் 1974- இல் முடிவடைந்து மீண்டும் அவரே பிரதமராக வரக்கூடிய சூழ்நிலையில், கோல்டா மெய்ரின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் உலக அரங்கில் இஸ்ரேலுக்குக் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்தது. இதன் காரணமாக இஸ்ரேலிய கென்ஸெட்டில் பெரும் விவாதம் நடந்தது. இறுதியில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ராபினுக்கு பிரதமராகும் வாய்ப்புக் கிடைத்தது.

இடைக்கால பிரதமராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோதும் மூன்று ஆண்டுகள் பிரதம ராக இருந்தார். மீண்டும் 1992ஆம் ஆண்டு பிரதமராகக் கிடைத்த வாய்ப்பில் தான் கொல்லப்படும் வரை இஸ்ரேலின் பிரதமராகவே இருந்தார். இஸ்ரேலிய வரலாற்றில் பிரதமராக இருக்கும்போதே கொல்லப்பட்ட ஒரே பிரதமர் ராபின்தான். அதுவும் இஸ்ரேலிய யூதர்களால் கொல்லப்பட்டார்.

ராபின் இஸ்ரேலுக்குச் செய்த சாதனைகளை இதுவரை எவரும் செய்திருக்க வாய்ப்பில்லை. ஓர் இராணுவ வீரனாகத் தன் வாழ்க்கையை ஆரம்பித்து இராணுவத் தளபதியாக உயர்ந்தவர் அவர். 1967இல் அரபு நாடுகளுடன் நடந்த யுத்தத்திற்கு ராபின்தான் தலைமை தாங்கினார். இது ராபின் நேரடியாகக் களத்தில் நின்ற யுத்தமாகும். கோலன் குன்றுகள், மேற்குக் கரை, காஸா பகுதிகள் அவரின் தலைமையிலான இஸ்ரேலிய இராணுவத்தினர் கைப்பற்றிய பகுதிகள்.

 இஸ்ரேலின் நிலப்பரப்பை அதிகப்படுத்தியதில் ராபினின் பங்கு அளப்பரியதாகும். ஆனாலும் இறுதிக் காலத்தில் யூதர்களின் மத்தியில் அவருக்கு இருந்த ஹீரோ இமேஜ் உடைந்து தூள் தூளானது. அதற்குக் காரணமானவர்கள் இருவர். ஒருவர் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யாசர் அரஃபாத், மற்றொருவர் அமெரிக்க அதிபர் கிளின்டன். 1992-இல் ராபின் இஸ்ரேலின் பிரதமராக மீண்டும் தேர்ந் தெடுக்கப்பட்ட கால கட்டத்தில் பாலஸ்தீன மண்ணில் ஏராளமான வெடி குண்டு தாக்குதலை ஹமாஸ் முன்னெடுத்தது.

இஸ்ரேலிய சிவிலியன்கள் பலரும் கொல்லப்பட்டனர். இது இஸ்ரேலிய அரசுக்கு மிகப்பெரும் தலைவலியைக் கொடுத்தது. யாசர் அரஃபாத் அரசியல்  சார்ந்து பயணித்ததால் ஹமாஸ் நாள்தோறும் வெடிகுண்டை வெடித்துக் கொண்டிருந்தது. கிளின்டன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்றால் ராபினும், யாசர் அரஃபாத்தும் சந்திக்க வேண்டும். ஒரு பொதுவான இடத்தில் இருவரும் சந்திப்பை நடத்த வேண்டும். இதுவே பிராந்திய அமைதிக்குச் சரியான தீர்வாக இருக்கும்.

அமைதி உடன்படிக்கை மூலம் மட்டுமே இது சாத்தியம். கிளின்டனின் அழைப்பு இருவருக்கும் தேவைப்பட்ட ஒன்றாக இருந்தது. நாள்தோறும் வெடிக்கும் வெடி குண்டுகளும், கொரில்லா தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டுமென ராபின் நினைத்தார். யாசர் அரஃபாத்திற்கும் அந்த எண்ணமே இருந்தது. தம் வாழ்நாளில் பாலஸ்தீனம் என்று ஒரு சிறு பகுதியையாவது சுதந்திரமாக ஆட்சி செய்ய வேண்டுமென்று யாசர் அரஃபாத் நினைத்தார்.

இஸ்ரேல், பாலஸ்தீனிய தூதர்கள் இரகசியக் கூட்டங்களை நடத்தும் ஓர் இடத்தை நார்வே அரசாங்கம் வழங்கியது. நார்வே ஒரு பொதுவான நாடு என்ற அடிப்படையில் இருவரும் ஏற்றுக் கொண்டனர். நார்வேயின் ஓஸ்லோவுக்கு அருகே ஒதுக்கப்பட்ட வனப்பகுதியில் தான் அச்சந்திப்பு நடந்தது. யாசர் அரஃபாத்தின் தூதர்களும் இட்சாக் ராபினின் கேபினட் செயலாளர்களும் அந்த வனப்பகுதியில் ஒருமுறை அல்ல 14 முறை இரகசியக் கூட்டம் நடத்தினர். அதனால் தான் இந்த உடன்படிக்கையை ஓஸ்லோ காடுகளின் பிரகடனம் என்றும், ஓஸ்லோ உடன்படிக்கை என்றும் அழைத்தனர்.

இந்த உடன்படிக்கையில் பல அம்சங் கள் இருந்தாலும் நான்கு தீர்மானங்கள்தான் யூதர்களையும்,  பாலஸ்தீனியர்களையும் ஒன்று சேர கோபப்படவைத்தது. அவை

1. இனிமேல் துப்பாக்கிகளை வன்முறைக்குப் பயன்படுத்தக் கூடாது.

2. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் உரிமையை இஸ்ரேல் அரசு அங்கீகரிக்கும்.

3. பாலஸ்தீன சுயாட்சி என்பது காஸா, மேற்குக் கரையில் உள்ள ஜெரிகோ பகுதியில் மட்டுமே. அங்கு அவர்கள் ஆட்சி செய்யலாம், அதைத் தாண்டி வரக்கூடாது.

4. ஐந்தாண்டு கால இடைவெளியில் ஆக்கிரமிக்கப்பட்ட மற்ற பகுதிகளை இஸ்ரேலே மெதுவாக விடுவிக்கும். அதற்கான கால நிர்ணயம் என்று ஏதும் இல்லை.

இந்த 4 தீர்மானங்களால் பாலஸ்தீனியர்களை விட யூதர்கள் கொதித்துப் போயினர். மிகச் சிரமப்பட்டு பிடித்த இடங்களை விட்டுக் கொடுப்பதா? இட்சாக் ராபினுக்கு என்ன பைத்தியம் பிடித்துவிட்டதா? யூதர்களின் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்தது.

ஆனால், ராபினின் திட்டம் நிலத்தைக் கொடுப்பது  அல்ல.  குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவது. தற்காலிக அமைதியின் மூலம் ஹமாஸைக் கட்டுப்படுத்துவது. இஸ்ரேலில் பல சீர்திருத்தங்கள் செய்ய கால அவகாசம் தேவை. அதன் அடிப்படையில்  இந்த அமைதி ஒப்பந்தம் போடுவதற்கு அவர் உடன்பட்டார். ஆனால், ராபினின் திட்டத்தை யூதர்கள் எவரும் புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை.

அதே போன்றுதான் யாசர் அரஃபாத்திற்கும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. பாலஸ்தீனியர்கள் பெரும் அளவில் அதிருப்தி அடைந்தனர். அரஃபாத் விலை போய்விட்டார் என்றது ஹமாஸ். ஒரு சிறு பகுதியை, ஒரு நகராட்சி தலைவர் போன்று ஆட்சி செய்வதற்கு யாசர் உடன்பட்டு விட்டார். இஸ்ரேலுக்கு விலை போய்விட்டார் என கண்டனக் குரலை முதலில் எழுப்பியது ஹமாஸ்தான்.

1993 செப்டம்பரில் ராபின்  அரஃபாத் வெள்ளை மாளிகையில் சட்டபூர்வமாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கிளின்டன் கூடவே இருந்தார். ராபின்  கிளின்டன் யாசர் அரஃபாத் என மூவருமே ஏதோ ஒரு வகையில் அமைதியை விரும்பினர். வெகு அபூர்வமாக அமைந்த கூட்டணி இது. ‘ஆபிரகாமின் குழந்தைகள் சமாதானத்தை நோக்கி தைரியமான முடிவை எடுத்துள்ளார்கள் என அமெரிக்க அதிபர் கிளின்டன் பாராட்டுப் பத்திரம் வாதித்தார்.

 இஸ்ரேலின் சூழ்ச்சியில் யாசர் அரஃபாத் சிக்கிக் கொண்டார் என ஹமாஸ் வெளிப்படையாகவே விமர்சித்தது. 1991இல் நடந்த யாசரின் திருமணம் ஒரு  சர்ச்சையென்றால், 1993இல் நடந்த இந்த ஒப்பந்தம் கடும் சர்ச்சைக்குள்ளானது. ஹமாஸ் தனியாகச் செயல்பட ஆரம்பித்தது அப்போதுதான். இந்த அமைதி உடன்படிக்கை காரணமாக மொசாத்தின் ஹிட் லிஸ்டிலிருந்து யாசர் அரஃபாத்தின் பெயர் நீக்கப்படவில்லை. அது கோல்டா மெய்ருக்கும், மொசாத்திற்கும் நடந்த ஒப்பந்தம். இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தம், கிட்டத்தட்ட அது ஒரு மாற்ற முடியாத உத்தரவு. அந்த உத்தரவை மாற்றி அமைக்க எவருக்கும் அதிகாரம் இல்லை.

மொசாத் ஒன்றை இறுதி செய்துவிட்டால், பிரதமர்கள் மாறினாலும் மொசாத்தின் முடிவு என்றும் மாறாது. ராபினுக்கும் யாசர் அரஃபாத்திற்கும் நடந்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள்  சபை மகிழ்ச்சியோடு வரவேற்றது. அதன் எதிரொலியாக ராபினுக்கும், யாசருக்கும் 1993ஆம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது அமைதிக்கான நோபல் பரிசு அது. என்னதான் சர்வதேச சமூகம் இவர்கள் இருவரையும் பாராட்டினாலும், இஸ்ரேல், பாலஸ்தீன பகுதிகளில் இவர்கள் இருவரின் மீதும் கசப்புப் படிவம் படர்வதை அமெரிக்காவோ, ஐ.நா.  சபையோ தடுத்து நிறுத்த முடியவில்லை.

 இட்சாக் ராபினுக்கான எதிர்ப்பு அதிகமானது. ராபினுக்கும் அவர் மனைவிக்கும் வாஷிங்டன் டிசியில் வங்கிக் கணக்குகள் திறக்ப்பட்டுள்ளன என்ற செய்தியை ஜெருசலத்தின் முன்னணி ஏடு வெளியிட்டது. யூதர்களின் கோபம் இன்னும் அதிகமானது. 1995ஆம் ஆண்டு வாக்கில் நடந்த பேரணியில், ராபின் விலை போய்விட்டார், அவர் ஒரு யூத துரோகி என பதாகைகளை டெல் அவிவ்வில் நடக்கும் அப்பேரணியில் ஏந்திச் செல்வதைப் பார்த்து அதன் வீரியத்தை உணர்ந்து கொண்டார். தான் பதவி விலகி விடலாம் என்ற முடிவுக்கு வந்த நிலையில்தான், டெல் அவிவ் நகரில் நடைபெற்ற ஒரு யூத வலதுசாரியின் கார் வெடிகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

உலக நாடுகள் அதிர்ந்துபோனது. அமெரிக்காவிற்கே உச்சபட்ச அதிர்ச்சிதான். யூத சிந்தனையை அதன் சித்தாந்தத்தை மிக லேசாக எடை போட்டுவிட்டதை அன்று உலகம் உணர்ந்திருக்கும். இஸ்ரேலியர்களின் நோக்கத்தை ஒரு பிரதமர் தனித்துவமாகத் தடுத்து நிறுத்த முடியாது. என்றுமே அவர் பெரும்பான்மை மக்களின் எண்ணத்தைச் செயல்படுத்தக் கூடிய ஒரு நபர் மட்டுமே என்ற தங்களின் கோட்பாட்டை யூதர்கள் உலகிற்கு உரக்கச்  சொன்னார்கள். ‘ரத்தமும் நெருப்பும் கொண்டு ராபின் இஸ்ரேலை விட்டு வெளியேற்றப்பட்டார்‘என யூத பத்திரிகைகள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன. அதில் அத்தனை வன்மம் மிகுந்திருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *