பழிதீர் படலம்

மொசாத்தின் தலைவர் ஸமிர் கொடுத்த பட்டியலில் தேர்வு செய்யப்பட்ட 11 பேரும் கொல்லப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த இஸ்ரேலிய பிரதமர் கோல்டா மெய்ர், வாதி ஹத்தாதை முதல் நபராகத் தேர்ந்தெடுத்தார். ஏன் தெரியுமா? ஹத்தாத் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர். முஸ்லிம்களுக்காவது ஒரு நியாயமான காரணம் இருக்கிறது. ஆனால் ஹத்தாத் போன்றவர்கள் துரோகிகள், கொல்லப்பட வேண்டியவர்கள் என எண்ணினார் கோல்டா மெய்ர்.

ஹத்தாத் மருத்துவரான தம் நண்பர் ஹீபாஸு-டன் சேர்ந்து ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஒரு கிளினிக் ஆரம்பித்தார். 1956ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பாலஸ்தீனர்களின் புனர் வாழ்வுக்காக ஓர் அமைப்பை ஏற்படுத்தியது. அதில் தன்னை இணைத்துக் கொண்டார் ஹத்தாத். அரபு தேசிய இயக்கம் ஒரு பொத்தாம் பொதுவான இயக்கம். தன்னைப் போன்ற பாலஸ்தீன அகதிகளுக்குச் சேவை செய்யும் இயக்கம்.அதன் சேவை தீவிரமெடுத்தது. 1967 இஸ்ரேலுடன் அரபு நாடுகள் அனைத்தும் சண்டையிட்டுப் பின்வாங்கின. இன்னும் அகதிகள் ஜோர்டானுக்குள் நுழைந்தனர்.

1967 முதல் 1977 வரை இவர் தலைமையிலான தாக்குதல் இஸ்ரேலுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியது. இந்தக் காலகட்டத்தில் யூதர்கள் விமானத்தில் பயணம் செய்ய அச்சமடைந்தனர். விமானக் கடத்தலை உலகிற்கு அறிமுகம் செய்தவரும் வாதி ஹத்தாத் தான். உலகம் முழுவதும் போராளிக் குழுவிற்கு அலுவலகம் அமைத்தார். பாலஸ்தீனத்திற்குள் சுருங்கி வந்த போராளிக் குழுவினர் உலகம் முழுவதும் பரந்து விரிந்தனர்.

அதையும் தாண்டி, ஜெர்மனியில் இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கடத்தலின் காரணகர்த்தா சாட்சாத் வாதி ஹத்தாத் தான். தீர்த்துக் கட்ட வேண்டும் என்று இஸ்ரேல் முடிவு செய்தவுடன் அந்தப் பட்டியலில் எல்லா முஸ்லிம் போராளிகளைவிட முதல் முக்கிய நபராக இருந்தார் வாதி ஹத்தாத். பொதுவாக மொசாத் ஒரு விசயத்தை நடைமுறைப்படுத்தினால் சில வழமையைக் கடைப்பிடிக்கும். கொலை செய்யப்பட வேண்டியவர்கள் இஸ்ரேலுக்கு வெளியே இருந்தால் அந்த நாட்டின் கூலிப் படையினருக்குக் கச்சி தமாக திட்டம் தீட்டிக் கொடுத்துவிடும். அதில் பிளான் முதல் பிளான் வரை இருக்கும். ஒன்று தோல்வியில் முடிந்தால் அடுத்த திட்டம் தயாராக இருக்கும்.

கொலை செய்வதில்  மொசாத்தின் திட்டமிடலை எவரும் மிஞ்ச முடியாது. வாதி ஹத்தாத் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் மொஸாத்திற்குச்  சிரமமாக இருந்தது. தான் மொசாத்தால் கொல்லப்படுவோம் என்பதை அறிந்து நாள்தோறும் தம் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டிருந்தார் வாதி ஹத்தாத். இறுதியாக ஒரு நம்பத்தகுந்த துப்புக் கிடைத்தது. வாதி ஹத்தாத் ஈராக்கில் இருக்கிறார் என்ற தகவல். எப்படிக் கொல்வது? சதாம் ஹுசைன் பாதுகாப்பில் இருந்தார் ஹத்தாத். அவருக்கு சாக்லேட் சாப்பிடும் பழக்கம் இருந்தது.

 1970களில் உயர்ரக  சாக்லேட் ஈராக்கில் கிடைப் பது அரிது. மொசாத் வாதி ஹத்தாத்தின் சமையல்காரனை மிரட்டியோ, விலை கொடுத்தோ இந்த வேலைக்குப் பயன்படுத்திக் கொண்டது. பெல்ஜியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட  சாக்லேட்களை சமையல்காரன் மூலம் வாதி ஹத்தாதுக்குக் கொடுக்க ஆரம்பித்தது. ஸ்லோ பாய்சன் என்று சொல்லும் அளவிற்கு மிதமான உயிர்க் கொல்லி மருந்து தடவிய சாக்லேட்.

ஆறுமாத காலம் எவருக்கும் ஐயம் வராமல் ஹத்தாதின் கல்லீரலைத் தாக்கி லுக்கிமிய நோயை ஏற்படுத்தி ஹத்தாதின் உயிரைக் காவு வாங்கியது. ஆனால் இந்த உண்மை பல ஆண்டுகள் எவருக்குமே தெரியாது. 2007ஆம் ஆண்டு மொசாதின் ஓய்வு பெற்ற அதிகாரியான ஆரோன் கிளீன் என்பவர் டைம் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இந்த உண்மையை வெளியில் சொன்னார். மொசாத் ஒருவரைப் படுகொலை செய்ய நினைத்தால் எந்த உத்தியை வேண்டுமானாலும் பயன்படுத்தத் தயங்காது என்பதற்கு வாதி ஹத்தாதின் படுகொலை ஓர் உதாரணம் என்று எழுதினார்.

கொல்லப்பட வேண்டிய 11 பேரில் கோல்டா மெய்ர் தேர்வு செய்த மற்ற போராளிகள் யார் யார் என்ற தகவலை அந்த அதிகாரி சொல்ல விரும்பவில்லை. ஆனால் நிச்சயமாக யாசர் அரஃபாத்தின் பெயரும் இருந்திருக்கும் என்று டைம் பத்திரிகை பின்னூட்டம் எழுதியது. ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துதான். ஏனெனில் யாசர் அரஃபாத் மரணத்திலும் கூட இன்றுவரையில் சந்தேக முடிச்சுகள் அவிழவில்லை. 1969இல் கோல்டா மெய்ர் பிரதமராக இருக்கும் போதுதான் யாசர் அரஃபாத் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயல் தலைவரானார்.

அபூ அம்மார் என்று இயக்கம் சார்ந்த போராளிகளால் அழைக்கப்பட்டவர் யாசர் அரஃபாத். பாலஸ்தீனத்தில் குண்டுகள் வெடித்துக் கொண்டிருந்தாலும், உலக நாடுகளின் மத்தியில் அமைதியான முறையில் பாலஸ்தீனர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று இஸ்ரேலை ஐக்கிய நாடுகள் சபையில் நாள்தோறும் பஞ்சாயத்திற்கு இழுத்துக் கொண்டிருந்தார்

ஜெர்மனியில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களின் கொலைக்குத் தாம் எந்த விதத்திலும் காரணமில்லையென பொதுப்படையாகத் தெரிவித்தாலும் இஸ்ரேல் அவரை நம்பத் தயாராக இல்லை. இஸ்ரேல் என்பதைவிட கோல்டா மெய்ர் அவரை நம்பத் தயாராக இல்லை. யாசர் அரஃபாத் இரட்டை வேடதாரி என பலமுறை சொன்னவர் அவர். 1990இல் தனது 61ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார் யாசர் அரஃபாத். இந்தத் திருமணம் கூட பாலஸ்தீனியர்கள் மத்தியில் பேசு பொருளாகியது.

 சிலர் ஆதரித்த நிலையில் பலர் விமர் சித்தார்கள். காரணம் அவர் திருமணம் செய்தது தன்னிடம் உதவியாளராக வேலைபார்த்த  கிறித்தவப் பெண்ணை. பிரான்சில் வைத்து அந்தப் பெண்ணின் தாயார் தன் மகளை யாசர் அரஃபாத்திற்கு அறிமுகம் செய்து வைத்தார். சுஹா என்ற பெண்மணி தன் தாயார் வற்புறுத்தியதால்   யாசர் அரஃபாத்தைத் திருமணம் செய்தேன் எனச் சொன்ன செய்தியும் பாலஸ்தீனியர்களைக் கோபம் கொள்ளச் செய்தது. யாசர் அரஃபாத் கவனமாக இருந்து கொள்ளட்டும். அவரின் உயிருக்கு  மொசாத் குறி வைக்கிறது எனச் சொன்னவர் ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன்.

அவர் சொன்னதுபோல் 1992 ஏப்ரல் 7ஆம் நாள் அரஃபாத் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த இரண்டு விமானிகளும் கொல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக யாசர் அரஃபாத் உயிர் தப்பினார். அதன் பின்பு அவரின் இருப்பிடம் படு இரகசியமாக வைக்கப்பட்டது. யாசர் அரஃபாத் தன்னுடைய போராட்டக் குணத்தை மிதவாதமாக மாற்றியதில்  பாலஸ்தீனியர்கள் பெரும்பாலானோர் அதிருப்தியில் இருந்தனர். உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால் அகிம்சை வழியிலும் பல நேரங்களில் பயணிக்க வேண்டும் என்ற அவரின் கருத்தை பாலஸ்தீனிய இளைய சமுதாயம் ஏற்கவில்லை.

1987இல் அஹமது யாஸீன், முகம்மது தாஹா என்ற இருவரால் ஆரம்பிக்கப்பட்டது  ஹமாஸ். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தை, பாலஸ்தீனியர்களுக்கே மீட்டுக் கொடுத்து மேற்குக் கரை, காஸா ஆகிய பகுதிகளை இஸ்லாமியக் குடியரசாக மாற்றுவதே அதன் நோக்கம். அஹமது யாஸீன் 12 வயது முதல்  சக்கர நாற்காலி உதவியுடன் வாழ்ந்தவர். இவரின் எழுச்சியான பேச்சு தாஹாவை இவருடன் ஒன்றிணைத்தது. வீட்டிலிருந்த படியே அரசியல், சமூகவியல், பொருளாதாரம் படித்தவர். இஸ்லாமிய மார்க்க நூல்களை நன்கு கற்று, சிறந்த உரைகளைப் பேசக் கூடியவராக இருந்தவர்.

2004ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் நாள் அதிகாலைத் தொழுகைக்காகச்  செல்லும் வழியில் இஸ்ரேலிய இராணுவ ஹெலிகாப்டர் தாக்குதலில் அஹமது யாஸீன் கொல்லப்பட்டார். அவரின் பாதுகாப்பிற்காக உடன் சென்ற 11 போராளிகளும் கொல்லப்பட்டனர். காத்திருந்து கொத்தும் நாகம் மொசாத். கோல்டா மெய்ரின் கொல்லப்பட வேண்டிய பட்டியலில் இவரும் இருந்தார் என பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. மீதம் இருப்பவர்கள் யார் யார் என காலம் பதில் சொன்னது.

நன்றி சமரசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *