1878ஆம் ஆண்டு, ஜெர்மன் நாட்டின் பெர்லினில் ஐரோப்பிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. 28 நாடுகளும் கலந்து கொண்டனவா என்றால் இல்லை. பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரியா ஆகிய ஆறு நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்றனர். அப்போது ஐரோப்பிய யூனியன் என்று எதுவும் இல்லை. ஐரோப்பிய யூனியனை ஏற்படுத்துவதுதான் மாநாட்டின் நோக்கம் என்றாலும் இந்த ஆறு நாடுகள் மட்டுமே ஒரு யூனியன் போன்று செயல்பட்டன. அந்த மாநாட்டில் வேறொரு நோக்கமும் பேசப்பட்டது. அது உதுமானியப் பேரரசின் செல்வாக்கை ஐரோப்பாவில் குறைப்பது என்பதுதான்.

அன்றைய காலகட்டத்தில் ஒட்டமன் என்கிற உதுமானியப் பேரரசின் செல்வாக்கு தென் கிழக்கு ஐரோப்பா எங்கும்  நீக்கமற நிறைந்திருந்தது. கிரீஸ், செர்பியா, ரோமானியா, பல்கேரியா என உதுமானிய  ஆட்சி தென் கிழக்கு ஐரோப்பா முழுவதும் தன் ஆக்டோபஸ் பிடிக்குள் வைத்திருந்தது. ஐரோப்பிய நாடுகளின் விடுதலை முழுதாக இல்லாமல், ஐரோப்பிய யூனியன்  சாத்தியமில்லை. உதுமானியப் பேரரசு பீனல் கோட் முறையிலான ஆட்சிக்குப் பதிலாக ஷரீஅத் சட்டத்தை வடகிழக்கு ஐரோப்பாவில் நடைமுறைப்படுத்துவதும் இந்த ஆறு நாடுகளின் கூட்டமைப்புக்கு மிகுந்த எரிச்சலை கொடுத்துக் கொண்டிருந்தது. ஆகவே இனிமேல் ஒட்டமன் பேரரசு தென் கிழக்கு ஐரோப்பா நாடுகளில் பீனல் கோட் என்கிற உரிமைகள் குறீயீட்டு சட்டத்தை பொது சிவில் சட்டமாக நடைமுறைப் படுத்த வேண்டும். இதுதான் அந்த மாநாட்டின் முதல் தீர்மானம்.

 ஜெர்மனியின் அதிபர் ஓட்டோ வான் பிஸ்மார்க் இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தார். மற்ற ஐந்து உறுப்பு நாடுகளும் தீர்மானத்தை ஏகமனதாக முன் மொழிந்தன. பிஸ்மார்க் ஜெர்மனியின் இரும்புத் தலைவர் என்று அழைக்கப்பட்டவர். ஒட்டமன் அரசின்  செல்வாக்கு ஐரோப்பாவில் தடைப்பட வேண்டும் என்ற மற்ற நாடுகளின் எண்ணம் போலவே பிஸ்மார்க்கிற்கும் இருந்தது. அதைத்தான் அவர் முன் மொழிந்தார். ஐரோப்பிய பிரதேசத்தில் முஸ்லிம்களின் ஆட்சி தொடர்வதை அவர் என்றுமே விரும்பியதில்லை. ஒட்டமன் பேரரசு தென் கிழக்கு ஐரோப்பாவைத் தாண்டி ஐரோப்பா முழுதும் பரவிவிடுமோ என்ற பயமும் அவருக்கு இருந்தது. ஒட்டமன் பேரரசோடு இத்தாலியும், பிரான்ஸும் தொடர்ந்து பால்கன் யுத்தங்களை நடத்திக் கொண்-டிருக்கின்றன. ஆனாலும் பிரிட்டனை எதிர்க்கும் போதெல்லாம் பிரான்ஸ் இதே ஒட்டமன் அரசுடன் சேர்ந்து கொள்வதையும், பிஸ்மார்க் தன் உரையில் மேற்கோள்காட்ட மறக்கவில்லை.

 பால்கன் குடா என்ற பால்கன் தீபகற்பம் புவியியல் வரையறையில் தென்கிழக்கு ஐரோப்பாவின் ஓர் அங்கமாக இருக்கிறது. பல்கேரியா நாட்டிலிருந்து  செர்பியா வரையில் பரவியிருக்கும் பால்கன் மலைத் தொடரின் பெயரைத்தான் இந்த வளைகுடாவிற்கே வைத்திருக்கிறார் கள். பால்கன் என்ற சொல்லுக்கு துருக்கி மொழியில் காடுகள் சூழ்ந்த மலைத்தொடர் என்று பொருள். ஒட்டோ ஃபென் பிஸ்மார்க் கொண்டு வந்த தீர்மானத்தின் நகலை, உதுமானிய கலீபாவுக்கு மறக்காமல் அனுப்பி வைத்தார்கள். ஆறு நூற்றாண்டுகளைக் கடந்த ஆட்சியென்றாலும் அப்போது உதுமானியப் பேரரசு பெரும் வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருந்தது. பேருக்குத்தான் இஸ்லாமிய ஆட்சி, மேற்கத்தியப் பண்பாடும், ஐரோப்பியர்களின் வாழ்வியல் முறையும் உதுமானியப் பேரரசில் பெரும் சேதத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.

 பெயரளவில் ஷரீஅத் சட்டம், மற்றபடி அநாச்சாரம் மிகுதியான சூழல். மது, மங்கை என மேற்கத்தியப் பண்பாட்டுக்குச் சவால் விடும் சூழல். கலீபா ஏன் கோபப்படப் போகிறார்? ஒரு பேரரசின் அழிவுக்கான அத்தனை முகாந்திரமும் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது. ஆரம்பகால உதுமானியப் பேரரசின் ஆட்சி அதுபோன்றது அல்ல. ஆறு நூற்றாண்டுகள் ஆட்சி செய்வதென்பது  சாதாரண எண்ணிக்கை அல்ல. மங்கோலியர்களின் படையெடுப்பால் உலக முஸ்லிம்கள் பெரும் சோதனையைச் சந்தித்துக் கொண்டிருந்த காலகட்டம். அர்தகிரல் இப்னு சுலைமான் என்பவரின் தலைமையிலான ஒரு சிறிய படையினர் துருக்கியை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் அஜர் பைஜானுக்குள் மறைந்து வாழ்ந்தனர்.  நீண்ட நாள்களுக்குப் பிறகு இனி துருக்கி சென்றுவிடலாம் என முடிவெடுத்தார் அர்தகிரல் இப்னு சுலைமான்.

அஜர்பைஜானிலிருந்து அர்தகிரலின் படை துருக்கி நோக்கி நகர்ந்தது. ஆறாவது நாள்..! இன்னும் இரண்டு நாள்களில் துருக்கி போய்விடலாம். லெவுதலிக் என்ற இடத்தை நெருங்கும் போதே தெரிந்தது. அங்கு மிகப்பெரும் யுத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்பாசிய மன்னர் அலாவுதீனுக்கும் மங்கோலிய படையின ருக்குமான யுத்தம். அர்தகிரல் எதிர்பாராத யுத்த சூழல். மன்னர் அலாவுதீனுடன் சேர்ந்து போரிடக் கூடிய சூழல் இயற்கையாகவே அமைந்துவிட்டது. அர்தகிரலின் படை வந்தவுடன் அலாவுதீனின் படை பலம் பெற்றது. அந்த சிறிய படையினரின் வீரம் மன்னர் அலாவுதீனுக்குப் பெரும் வியப்பைக் கொடுத்தது. மங்கோலியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். மன்னர் அலாவுதீன் அக மகிழ்ந்து போனார். அர்தகிரல் இப்னு சுலைமானைக் கட்டித் தழுவிவிட்டு மன்னர் அலாவுதீன் சொன்னார் ‘யா அர்தகிரல். உன் படையினரின் வீரத்தைப் பாராட்ட வார்த்தையில்லை. லெவுதாரி, தூமானிக் ஆகிய இரு நகரங்களையும் நீயே எடுத்துக் கொள். இங்கு சிறப்பான ஆட்சியைக் கொடு’. மகிழ்ச்சியில் பூரித்துப் போனார் அர்தகிரல் இப்னு சுலைமான். எதிர்பார்க்காத பரிசுதான் அல்லாஹ்வின் மிகப்பெரும் கருணை. நாடோடியாகத் திரிந்த தனக்கு ஆட்சிப் பொறுப்பை  கொடுத்த இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.

மன்னர் அலாவுதீன் ஊருக்குச் செல்வதற்கு முன் அர்தகிரலுக்கு ஓர் உத்தரவை மட்டும் கொடுத்தார். இஸ்லாமிய ஷரீஅத் முறையில்தான் நீ இங்கு ஆட்சி புரிய வேண்டும். அப்பாசிய இறுதி மன்னர் அலாவுதீனின் இறுதி உத்தரவும் அதுவாக மட்டுமே இருந்தது. கிழக்கு ரோமானிய ஆட்சிக்குட்பட்ட நகரத்துக்கு அருகே ஓர் இஸ்லாமிய ஆட்சி. காண்ஸ்டாண்டி நோபில் என்று அழைக்கப்படும் இன்றைய இஸ்தான்புல்லை தலைநகராகக் கொண்டு கிழக்கு ரோமாபுரியை ஆட்சி செய்த நிக்கோலஸ் மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட காராகிஸாவை அர்தகிரல் கைப்பற்றும் வரை அர்தகிரல் இப்னு சுலைமானை ஒரு பொருட்டாக நிக்கோலஸ் மதிக்கவே இல்லை. அர்தகிரலின் புகழ் இஸ்தான்புல் முழுவதும் பரவியது அப்போதுதான். கிபி 1288இல் அர்தகிரல் இப்னு சுலைமானின் தீடீர் மரணம் அவரின் மகன் உதுமான் ஆட்சிப் பொறுப்பேற்க வைத்தது. வீரத்திலும் விவேகத்திலும் தன் தந்தையை  விட பலம் பொருந்திய வீரனாக , நிக்கோலஸின் ஆட்சியிலிருந்த கரச்சா, லதிஸர் நகரங்களையும் கைப்பற்றி தான் சாதாரணமானவன் அல்ல பெரும் சாம்ராஜ்யத்தைக் கட்டமைக்கப் போகிறவன் என்று ரோமாபுரி முழுவதும் செய்தி பரவிடச் செய்தார் உதுமான் பின் அர்தகிரல் இப்னு சுலைமான். உதுமானியப் பேரரசின் முதல் கலீபா. அதன் பின்பு உதுமானியப் பேரரசு என்றும், ஒட்டமன் பேரரசு என்றும் ஐரோப்பா முழுவதும் கிளை பரப்பி தன் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியது ஒட்டமன் பேரரசு.

பாக்தாத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த அப்பாசியாக்களின் ஆட்சி இப்பூமியில் முழுவதுமாக வீழ்ச்சியடைந்த நிலையில் ஒட்டமன் பேரரசு தன் கிலாபத்தை தன் கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் விரித்தது. ஒட்டமன் பேரரசின் எழுச்சியை  ஆரம்ப காலங்களில் ஐரோப்பியர்கள் பெரிதாக கவனத்தில் கொள்ளவில்லை. 1359இல் முதலாம் முராத் ஒட்டமன் பேரரசின் கலீபாவாகப் பொறுப்பேற்றவுடன் தான், ஆட்சியின் எல்லை தென் கிழக்கு ஐரோப்பா முழுவதும் பரவியது. பல்கோரிய நாட்டின் கிறித்தவ மன்னர் தன் மகளை, முதலாம் முராத்திற்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வும் நடந்தது. துருக்கி கொடியில் சிவப்பு நிறத்திலான இளம்பிறைச் சின்னம் பொறிக்கப்பட்டதும் அப்போதுதான். ஒட்டமன் ஆட்சியில் இன்னும் ஒரு முக்கிய சம்பவமும் நடந்தது. 1453இல் ரோமன் சக்ரவர்த்தி கைசருக்கும் ஒட்டமன் பேரரசருக்கும் நடந்த யுத்தம். 1453 மே மாதம் நடந்த அந்த யுத்தத்தில் ரோமானிய சக்ரவர்த்தி கைசரின் கோட்டை தகர்க்கப்பட்டது. கடல் மார்க்கமாக ஒட்டமன் பேரரசின் கப்பல் படை நடத்திய தாக்குதல். ரோமர் கைசரின் கோட்டை முஸ்லிம்கள் வசமாகும் என்ற முகம்மது நபி-யின் முன்னறிவிப்பு அன்று நிறைவேறியதாக முஸ்லிம் நாடுகள், குறிப்பாக அரபு நாடுகள் உதுமானிய கிலாபத்தின் மீது மிகுந்த நம்பிக்கையும், எழுச்சியும் கொண்டன. கைசரின் கோட்டையைக் கைப்பற்றியவுடன் மொத்த இஸ்தான் புல்லும் ஒட்டமன் பேரரசின் கீழ் வந்தது. மிகப்பெரும் இஸ்லாமிய கிலாபத் தோற்று விக்கப்பட்டது அப்போதுதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *