கடந்த 22.5.2020 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அந்தச் சந்திப்புக்கான காரணத்தை அறிக்கையாகவும் அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். அந்த அறிக்கை வரிக்குவரி கடும் ஆட்சேபனைக்கு உரியதாக இருப்பதைப் பதிவு செய்யவே நாங்கள் இந்தக் கூட்டறிக்கையை விடுக்கிறோம்.

நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் வீரத் தமிழர் முன்னணி, தமிழம் மதம் போன்றவை குறித்து நம்மில் பலரிடம் அச்சம் இருந்து வந்த நிலையில், அந்தக் கட்சியைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவர் சிவன், முருகன் பெயர் கூறி திருமணம் நடத்தியது சாமன்ய முஸ்லிம்களிடையே பெரும் விவாதப் பொருளானது.

இந்தப் பின்னணியில்தான் பல்வேறு இஸ்லாமிய அமைப்புப் பிரதிநிதிகள் ஒன்றுதிரண்டு சீமானை வீடு தேடிச் சென்று சந்தித்தனர். சந்தித்ததற்கு வலுவான காரணம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. எனினும் இச்சந்திப்பை ஒரு குற்றமாகவும் நாங்கள் பார்க்கவில்லை.

அதேசமயம், சந்திப்புக்குப் பிறகு அந்தக் கூட்டமைப்பினர் வெளியிட்ட அறிக்கை தம் சொந்த சமூகத்தையே குற்றவாளியாக்குவது போல அமைந்துள்ளதை நாங்கள் சுட்டிக்காட்டவும் கண்டிக்கவும் விரும்புகிறோம். கீழே இரட்டை மேற்கோள்களுக்குள் காணப்படுவது அந்த அறிக்கையில் உள்ள கூற்றுகள். அதைத் தொடர்ந்து வருவது நம் கருத்துகள்.

 1. “…இவைகளை (வீரத் தமிழர் முன்னணி, தமிழம்) சமூக ஊடகங்களில் பேசு பொருளாக்கி ஒரு தலைவரையும் அவரது கட்சியையும் இலக்கு வைத்து பல்முனைத் தாக்குதல் நடத்துவது தலைவர்களை கவலைக்கு உள்ளாக்கியது.”

¶ அறிக்கையின் தொடக்கமே இப்படி எதிர்மறையாகவும் முன்தீர்மானத்துடனும்தான் உள்ளது. அந்தக் கட்சி மீதும் சீமான் மீதும் எவ்வித அடிப்படையும் இல்லாமல் முஸ்லிம்கள் ‘பன்முனைத் தாக்குதல்’ நடத்துகிறார்கள் எனும் கருத்தை முன்வைத்துள்ளார்கள். ‘விமர்சனம்’ என்று கூட சொல்லாமல் ‘பன்முனைத் தாக்குதல்’ என்று குறிப்பிடுவதன் மூலம் சீமான் பாதிக்கப்பட்டவராகவும் முஸ்லிம்கள் பாதிப்பை ஏற்படுத்துவோராகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.

 1. ”அரசியல் களத்திலும் சித்தாந்த ரீதியிலும் இஸ்லாமிய சமூகத்திற்கு சீமான் தோழமையாக இருந்ததையே நாம் காண முடிந்தது. எனவே பாசிச பரிவாரங்களால் குறிவைக்கப்பட்டு களமாடும் ஒருவர் இஸ்லாமிய சமூகத்தாலும் அலைக்கழிக்கப் படுவது எதிரிகளை அதிகப்படுத்தும் உத்தியாகவே அரசியல் பார்வையாளர்களால் உணரப்பட்டது.”

¶ பாஜக-வை விமர்சிப்பதாலேயே ஒருவர் சித்தாந்த அடிப்படையில் தோழமை ஆகிவிடுவார் என்பதுதான் இவர்கள் சொல்ல வருவதா? அப்படியானால் மொழி சிறுபான்மையினர், தலித்கள் பற்றியெல்லாம் இவர்களுக்கு அக்கறையில்லையா?

ஆதிக்கச் சாதியினர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைத் தாக்கும்போதெல்லாம் ‘நடுநிலை’ வகிப்பவர் சீமான். “அடித்துக்கொள்ளும் இருவருமே என் ரத்தம்தான். அங்கே போய் நான் யார் பக்கம் நிற்பது” என உணர்வுப் பூர்வமாகப் பேசி ஆதிக்க சாதிக் கொடுமைகளை பூசி மெழுகுபவர்.

தமிழ் மண்ணில் தோன்றிய பெளத்த, சமண மரபுகளை ஓரங்கட்டிவிட்டு சைவத்தை மட்டும் தூக்கிப் பிடிப்பவர் இவர். இந்த மண் எப்போதும் ஒற்றை மரபை அடிப்படையாகக் கொண்டு இருந்ததில்லை; பன்முகத்தன்மையிலேயே இருந்து வந்திருக்கிறது. இங்கு கிறிஸ்தவம், இஸ்லாம் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்புகள் கூட எண்ணிலடங்காதவை.

இது தவிர, சீமான் வகையறாக்கள் பெரியார், பெருஞ்சித்திரனார் போன்றோரை விலக்கிவிட்டு மா.பொ.சி முதலானோருக்கு விழா எடுக்கிறார்கள். தொடர்ந்து தெலுங்கர்கள் உள்ளிட்ட மொழி சிறுபான்மையினருக்கும், பெரியாருக்கும் எதிராக வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் பெ.மணியரசனை தன் பேராசான் என்கிறார் சீமான். சாதியமும் பார்ப்பனியமும் தலைவிரித்தாடிய சோழர் காலத்தை பொற்காலம் எனவும் போற்றுகிறார். அப்படியானால் என்ன மாதிரியான எதிர்காலத்தை அவரும், அவரது சகாக்களும் கட்டமைக்க விரும்புகிறார்கள்?

மேற்கூறிய இவை குறித்தெல்லாம் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்புக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையா?

3.”சதாமை, தானே (சீமானே) கண்டித்து சீர் செய்து தனது தலைமையில் இஸ்லாமிய திருமணத்தை நடத்தி தர வாக்குறுதி அளித்தார்.”

¶ இது தேவையில்லாத வேலை! சதாம் எனும் அந்தத் தனிநபரை சீர்திருத்துவதற்குத்தான் இப்படி கூட்டமாகப் போனார்களா இவர்கள்? முதலில் இவர்களுக்குப் பிரச்னை புரிகிறதா எனும் சந்தேகம் எழுகிறது. தமிழ்நாட்டின் பிரதான கடவுள் யார், மதம் எது, மண்ணின் மைந்தர்கள் யார் என்றெல்லாம் அந்தக் கட்சியினர் ஒரு வரையரையை முன்வைக்கிறார்கள். நாம் கேள்வி எழுப்ப வேண்டியது அவை குறித்துதான். சதாம் உசேன் எனும் ஒரு தனிநபர் இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறாரா என்ற ஆராய்ச்சியெல்லாம் விவாதத்தைத் திசைத் திருப்புவதற்கே இட்டுச் செல்லும்.

அரபுப் பண்பாட்டுக் கூறுகள் பல தமிழ் முஸ்லிம் பண்பாடுகளுள் அடக்கம். பெயரில் தொடங்கி பேச்சு வழக்குகள், சமய வழக்காறுகள் வரை. குறைந்தபட்சம் அது பற்றிய சீமானின் நிலைப்பாட்டையாவது முஸ்லிம் அமைப்புகள் அவரிடம் கேட்டறிந்தார்களா?

4.”வீரத்தமிழர் முன்னணி, தமிழம் என்பது தமிழர்களின் மெய்யியல் மற்றும் தொன்மங்களின் அடிப்படையில் மதவாத பாசிசத்தை எதிர்த்து களமாடும் உத்தி என்பதை விளக்கினார். எனவே உண்மைக்குப் புறம்பாக சமூக ஊடகங்களில் பதிவிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது உணரப்பட்டது.”

¶ அதாவது, சீமான் இவர்களுக்கு விளக்கி புரியவைத்தாராம். உண்மைக்குப் புறம்பாக சமூக ஊடகங்களில் பொய்ப் பிரச்சாரம் செய்யாதீர்கள் என்கிறார்கள். இதற்குத் துணையாக அறிக்கையின் முடிவில் ஒரு குர்ஆன் வசனத்தை வேறு மேற்கோள் காட்டுகிறார்கள். என்ன கொடுமை!

முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, பிற சமூகத்திற்கு மத்தியிலும் நாம் தமிழர் கட்சியின் கருத்துநிலை மீது பல விமர்சனங்கள் உள்ளன. அவர் இனவாதம் பேசுகிறார் என்பதில் தொடங்கி, சாதி ரீதியில் மக்களைக் கூறுபோடும் தமிழ்ப் பாசிஸ்டாக உள்ளார் என்பது வரை. அதைப் பற்றியெல்லாம் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை இந்த முஸ்லிம் அமைப்பினர். கேட்காதது மட்டுமின்றி அதன் மீது கேள்வி எழுப்பும் அனைத்து தரப்பினரையும் கொச்சைப்படுத்தும் விதமாக இப்படியொரு கருத்தை முன்வைத்துள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரியது.

5.”எல்லாவற்றையும் அரசியல் கணக்கில் வரவு வைப்பது நன்மையைத் தராது. அதையும் தாண்டி பதற்றம் தணிப்பதையும் சந்திப்புகள் சாத்தியமாக்கும். இஸ்லாமிய சமுதாய நலனை முன்வைத்து இச்சந்திப்பு ஏற்பாடானது.”

¶ இந்தப் பத்தியில் சிக்கல் எதுவுமில்லை. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதன்படி அவர்கள் நடந்துகொள்ளவில்லை என்பதுதான் அதிலுள்ள சிக்கல். சீமான் மட்டுமல்ல, யாரை வேண்டுமானாலும் அந்தக் கூட்டமைப்பினர் சந்திக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் அவர்களின் சந்திப்பு பரஸ்பர கருத்துப் பறிமாற்றமாக இல்லாமல் சரணாகதி ஆவதற்கானதாக இருப்பது ஏற்புடையதல்ல. அதிலும் தம்மை ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகக் கருதும் அவர்கள், சீமானிடம் விளக்கம் பெற்று வந்து அந்தச் சமூகத்தையே குற்றம் சாட்டுவது அபத்தமாகப் படுகிறது.

நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய இஸ்லாமிய இயக்கங்களும் அமைப்புகளும் இப்படி தெளிவில்லாமல் இருப்பது எதிர்காலத்திற்கு உகந்ததல்ல என்பதை இந்த அறிக்கையின் வாயிலாக சம்பந்தப்பட்ட அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறோம்..

இவண்,
சனநாயகம் மற்றும் சமத்துவ சமூக அமைப்பில் அக்கறை கொண்ட செயல்பாட்டாளர்கள்..

 1. பேரா. ஆஷிர் முஹம்மது
 2. சம்சுத்தீன் ஹீரா
 3. லியாகத் அலி கலீமுல்லாஹ்
 4. உவைஸ் அஹமது
 5. பேரா அ. மார்க்ஸ்
 6. பகவநிதி
 7. அஹமது ரிஸ்வான்
 8. T.A. இஸ்மாயீல்
 9. கோ. சுகுமாரன்
 10. தோழர் சந்துரு
 11. தோழர் ர. முகமது இல்யாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *