முக்கியமான 5 மாநிலத் தேர்தல் போராட்டக் களத்தில் இருக்கின்றபோதும் மாநிலங்களின் அதிகாரங்களை பறிக்கவும் கூட்டாட்சியை சிதைக்கவும் மோடி அரசுக்கு எந்த தயக்கமும் இல்லை. புதிய ஒவ்வொரு சட்ட உருவாக்கத்தின் போதும் சட்டத் திருத்தங்களின் போதும் முழு அதிகாரத்தையும் புதுதில்லியில் மையப்படுத்துவதற்குண்டான முயற்சி தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. நிதி ஒருங்கிணைப்பு என்ற ஊகமயமான பொருளாதார திட்டத்தை ஜிஎஸ்டின் ஊடாக உருவாக்கினார்கள். மாநிலங்களின் பொருளாதார உரிமையும் பாதுகாப்பும் ஒன்றியத்தின் அகங்காரத்தின் கீழ் அடிமைப்பட்டு போனதுதான் ஜிஎஸ்டின் ஊடாக நடந்தது. கூட்டுறவு துறைகளில் சட்டத் திருத்தம், வங்கி கட்டுப்பாட்டு திருத்தம், NIA சட்டத்திருத்தம் போன்ற சமீப காலத்தில் சங்பரிவார் அடுப்பங்கரையில் வேகவைத்து எடுத்ததும் வெந்து கொண்டிருப்பதுமான ஒட்டுமொத்த சட்டங்களும் கூட்டாட்சிக்கு வேட்டு வைப்பதுதான். இதோ, இப்போது இந்திய ஆட்சியியல் சேவை துறையான IAS (கேடர்) சட்டப்பிரிவு 6ல் திருத்தங்களைச் செய்வதற்கு தீர்மானித்திருக்கிறார்கள். ஜனவரி 25க்கு முன்பாக அனைத்து மாநிலங்களில் இருந்தும் கருத்துக்களை கேட்டு ஒன்றிய அரசு அனுப்பிய கடிதத்தில் சட்டத்திருத்தத்தை உடனே நடைமுறைப்படுத்துவதற்கான அறிகுறி உள்ளது.

காலனி ஆதிக்க ஆட்சியின் தொடர்ச்சியாக இருந்தபோதிலும், பிரிவினையைத் தொடர்ந்து நாட்டை ஒருங்கிணைத்து நிறுத்துவதற்கான அமைப்புச் சட்ட உருவாக்க சபையின் விருப்பத்திற்கிணங்கதான் இந்தியாவின் ஒன்றிய, கூட்டாட்சி தன்மை உருவானது என பல பொழுதும் பலரும் வாதித்ததுண்டு. அதன் அடிப்படையில் குறைந்தபட்ச அதிகாரத்துடன் ஒன்றியமும் ஒன்றியத்திற்கும் மாநிலத்திற்கும் சம அதிகாரம் உள்ள கண்கரண்ட் பட்டியலும் மாநிலங்களுக்கு பரவலான அதிகாரமும் உள்ள அமைப்பு சட்டம் உருவானது. நாட்டில் மிகவும் முக்கியமான அதிகார அமைப்பான இந்திய சிவில் சர்வீஸ் அதிகார வினியோகத்திலும் ஒன்றிய, மாநில அதிகாரங்கள் சமப்படுத்தப்பட்டன. ஆனால், மோடி அரசு ஐஏஎஸ் சட்டப்பிரிவு ஆறில் கொண்டுவரக்கூடிய திருத்தம் மாநில அரசின் அதிகாரங்களை பறிப்பதும் ஒன்றிய அரசின் அளவற்ற அதிகாரத்தை உறுதி செய்வதுமாகத்தான் உள்ளது. தற்போது பரிந்துரைக்கப்பட்ட சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் மாநிலத்திலிருந்து ஒன்றிய பணிக்கு செல்லக்கூடிய அதிகாரிகளின் எண்ணிக்கையை தீர்மானிக்கக் கூடிய அதிகாரம் ஒன்றியத்திற்குதான் உள்ளது. மாநிலங்கள் ஒன்றிய பணிக்கு செல்பவர்களின் பட்டியலை அனைத்து வருடமும் கண்டிப்பாக அளிக்க வேண்டும். அப்பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு கேட்பவர்களை தரவேண்டியது மாநில அரசுகளின் கடமையாகும்.
‘மக்கள் நலனின்’ அடிப்படையில் எந்த அதிகாரிகளுடைய சேவையையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கேட்பதற்கு உண்டான அதிகாரம் ஒன்றிய அரசுக்கு இருக்கும். பிறகு ஒன்றியத்திற்கும் மாநிலங்களுக்கும் இடையே ஏதேனும் முரண்பாடுகள் உருவானால் தீர்ப்பு அளிக்கும் அதிகாரமும் ஒன்றிய அரசிடம்தான் இருக்கும். இந்த தீர்மானங்களை மாநிலங்கள் ‘குறிப்பிட்ட காலத்திற்குள்’ நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

விஷயம் இதுதான். இந்த சட்டத் திருத்தத்தின் ஊடாக ஐஏஎஸ், ஐபிஎஸ் மீதான கட்டுப்பாட்டு அதிகாரம் முழுவதுமாக ஒன்றிய அரசின் கீழ் போகும். அதிகாரிகளை ஒன்றியத்திற்கு வழங்க கட்டாயப்படுத்துவது, அவர்களுடைய இடமாற்றம், பொறுப்பு மாற்றம் உள்ளிட்டவைகள் ஒன்றியத்திற்கு கீழ் விடுவது போன்றவற்றின் மூலம் மாநிலங்கள் மீதான அதிகார கையேற்றத்தை இன்னும் வலுப்படுத்த மோடி சர்க்கார் மோகம் கொள்கிறது. சென்ற மேற்குவங்க தேர்தலின் பொழுது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடனும் தலைமைச் செயலாளர் ஆலாபன் பந்தோபாத்யாயாவுடனும் பிரதமர் என்ற அந்தஸ்தை மறந்து சண்டையிட்டு தோல்வியடைந்து மானங்கெட்டு போனதை போன்ற நிகழ்வுகளை இனி இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்தலாம் என்று மோடி நினைக்கிறார் போலும். எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களும் இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராகத்தான் இருக்கிறார்கள். பாஜக ஆளும் பல மாநிலங்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இதன் மூலம் எல்லாம் ஒன்றிய அரசு இந்த சட்டத்தில் இருந்து அவ்வளவு எளிதாக பின்வாங்காது. வலிமையான எதிர்ப்புகள் மாநில அரசுகளிடமிருந்து உருவாக வேண்டும். மம்தா பானர்ஜி துவங்கி வைத்ததை மற்றவர்களும் ஏற்றெடுக்க வேண்டும். அதிகாரங்கள் மையப்படுத்தப்படாத ஜனநாயக முறைமை மிகவும் கண்டிப்பான தேவையாகும்.

டெல்லியிலே அதிகார மையங்களிடத்திலே அளவுக்கதிகமான, எல்லையில்லாத அதிகாரங்கள் இல்லாத அமைப்புதான் நம்முடைய நாட்டுக்கு தேவை. அதிகாரம் மக்களிடத்திலும் அவர்களோடு ஒருங்கிணைந்த சேர்ந்து நிற்கின்ற கீழ்நிலை அமைப்புகள் இடத்திலும் சேரும் விதத்தில் மையப்படுத்தப்படாத சமூக அமைப்பு நமக்குத் தேவை. நம்முடைய அமைப்புச் சட்டம் உறுதி அளிக்கக்கூடிய கூட்டாட்சி தத்துவத்தின், அமைப்பின் ஆன்மாகும் அது. மோடி அரசு கடந்த 7 வருடமாக அதை வெட்டி வீழ்த்த துடிக்கிறது. மையப்படுத்தப்படாத அதிகார அமைப்பை சிதைக்கும் இந்தச் சட்டத் திருத்தத்தை குறித்து பிரகாஷ் அம்பேத்கர் அளித்த எச்சரிக்கையை கௌரவத்தோடு நாம் விவாதிக்க வேண்டும். “இந்த மாற்றங்கள் ஆர்எஸ்எஸின் மறைமுகமான அர்ஜெண்டாவை நிறைவேற்றவே உதவும். இந்த திருத்தங்கள் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்பட்டால் மாநிலங்களுக்கும் ஒன்றியத்துக்கும் இடையே அரசியல் கலவரங்கள் உருவாகும். அதையும் கடந்து மிகப்பெரிய சமூக பாதிப்புகள் உருவாகும்”

காலாகாலமாக பிராமணிய ஆதிக்க சக்திகளிடம் குவிக்கப்பட்டிருந்த அதிகாரங்கள், இந்திய அமைப்பு சட்டத்தின் ஊடாக பறிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதிகாரங்களை பிராமணிய ஆதிக்க சக்திகளிடம் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் அஜண்டாதான் இங்கே முன்னிலைப்படுத்தப்படுகிறது. பார்ப்பனியத்தின் பாதிப்புகளை மிகத் தெளிவாக புரிந்து கொண்டு அதை இந்த மண்ணை விட்டு விரட்டி அடித்த பெரியாரின் வழிவந்த திராவிட முன்னேற்றக் கழக அரசு உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த நாடு ஒரு சில குறிப்பிட்ட ஜாதியினருக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் அடிமைப்படுத்துவதற்கு உண்டான மோடி அரசின் முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

கல்வி, பொருளாதாரம், சட்ட அதிகாரம் போன்ற அதிகாரங்கள் மாநிலங்கள் இடத்திலேயே இருக்க வேண்டும் என்ற உரத்த முழக்கத்தை திமுக அரசு முன்னெடுக்க வேண்டும். ஒன்றிய அரசோடு ஒருங்கிணைந்து போவது என்ற உருப்படாத கொள்கையை முன்னால் வைத்து மாநில அரசுகள் சமாதானம் அடைந்து சமரசமாகி விடக்கூடாது. மாநிலங்களின் உரிமையை காப்பாற்ற வேண்டிய கடமை மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். அவர்கள் அவற்றை விட்டுக் கொடுப்பார்கள் எனில் மக்களின் நம்பிக்கையை அவர்கள் சிதைத்து விடுவார்கள். வாய்ச் சொற்களில் மட்டும் சுயமரியாதையை பேசிவிட்டு செயற்காலத்தில் சரணாகதி அடைந்து விடக்கூடாது. மாநில உரிமைகளை காப்பாற்றும் விஷயத்தில் உறுதியான நிலைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். பாசிச பாசிஸ்டுகள் முன்வைக்கும் தேசிய கொள்கைக்கு எதிராக கூட்டாட்சி தத்துவத்தை, பெடரல் முறைமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இதை மாநிலங்கள் மட்டுமல்ல அனைத்து அமைப்புகளும் உயர்த்திப் பிடிக்க வேண்டும். தேசியத்தின் உச்ச வடிவம்தான் பாசிசம். பாசிசத்தை வீழ்த்த வேண்டுமானால் தேசியத்தை உடைத்தெறிய வேண்டும். ஃபெடரல் கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *