கோவை ஜங்ஷனுக்கு தொட்டடுத்து இருக்கும் “ஹைதர்அலி திப்புசுல்தான் தக்னி சுன்னத் பள்ளிவாசல்” என்ற அடையாளத்துடன் பள்ளிவாசல் ஒன்று உள்ளது.

1921ல் மலப்புரத்தில், ஆங்கிலேயருக்கும் மாப்பிளாமாருக்கும் இடையில் நடத்தப்பட்ட போர் நடைபெற்ற பிறகு மாப்பிளாமாரை சூர்ச்சியால் வீழ்த்தி கொத்துக்கொத்தாக கொன்றுகுவித்ததோடு நில்லாமல்…அவர்களில் வீரியமாக சண்டையிட்டவர்களை வங்காளத்திற்கும் மதராஸ் மாகாணத்திற்குமாக சுமார் நான்காயிரம் பேரை அந்தமான் சிறைக்கு நாடுகடத்த திட்டமிட்டனர் வெள்ளைய ஆதிக்கவாதிகள். இந்த நிகழ்வுக்காக போர் கைதிகளை மொத்தம் மொத்தமாக ஆடு,மாடுகளை போல சரக்கு ரயில்களில் அடைத்து கோவை வழியாக அனுப்பி வைத்தனர்.

மலப்புரம், ஆருரங்காடி வழியாக கோவை வந்த கூட்ஸ் ரயிலில் பசி,தாகத்தோடும் அடிபட்ட நிலையில் குத்துயிரும் குலையுயிருமாக வந்தவர்களில் பலர் ரயிலுக்குள் சுவாசிக்க காற்றும் கிடைக்கப்பெறாது சுமார் 70 பேர் வரை மாண்டுபோயினர். கோவை – போத்தனூர் ரயில் நிலையத்தில் வந்நு, ரயில் நின்றபோது ரத்தவாடையில் மிதந்து எஞ்சியிருந்த அனைவரும் இறந்து போயிருந்தனர். அவ்வாறு இறந்து போனவர்கள் 316பேரை படத்திலுள்ள ஹைதர்அலி திப்புசுல்தான் பள்ளிவாசலில் தான் அடக்கம் செய்துள்ளனர்.

பள்ளிவாசல் கபரஸ்தானில் இதற்கான கல்வெட்டுகள் எதுவும் காணப்படவில்லை, எனினும் இறுதியாக வரும் ‘H’ வரிசையில் தான் அந்த மாப்பிளா சஹீதுகள் புதைக்கப்பட்டுள்ளனர் , மதராஸ் வழி போனவர்களும் இதேபோல மூச்சுத்திணறி இறந்துபோய் அவர்களை திருச்சியில் அடக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் தகவல்.

திப்புசுல்தான் ஆட்சிக்காலத்தில் அவர் நேரடியாக வந்து இந்த பள்ளிவாசலில் இமாமாக நின்று தொழுகை நடத்திய காரணத்தால் இப்பள்ளிக்கு அவரது தந்தையார் பெயருடன் அவரது பெயர் சேர்த்து அழைக்கப்படுகிறதாம்,தற்காலம் பள்ளிவாசல் புதிதாக கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சிதருகிறது. திண்டுக்கல் மலையில் அவரது கோட்டைக்கான சுற்றுச்சுவர் இப்போதும் சாட்சியாக நின்றுகொண்டுள்ளது.

இந்திய சுதந்திர போர் வரலாற்றில் மாப்பிளா போர் என்பதை கூட ‘மாப்பிள்ளா கலகம்’ என கொச்சைப்படுத்தி திரித்துக்கூற தயங்கவில்லை தேசவிரோத கூட்டம். பஞ்சாபில் 1850ல் எப்படி விவசாயிகள் ஒன்று கூடி பிரிட்டிஷாரை எதிர்க்க ‘அகாலிதளம்’ உருவாக்கப்பட்டதோ அதேபோல கிபி.1836லேயே மலபார் உழவர்கள் பலர் இணைந்து முஸ்லிம் இமாம்களின் தலைமையில் ஆங்கிலேய வரிவிதிப்பிற்கும் ஆங்கில அடிவருடிகளாய் இருந்து உழவர்களையும் குடியானவர்களகயும் கசக்கிப்பிழிந்து ரத்தம் குடித்த நம்பூதிரி ஜமான்தார்களையும், மடாதிபதிகளையும் எதிர்த்தும் கிலாஃபத் இயக்கத்தை ஆதரித்தும் உருவானது தான் மலையாள மாப்பிளா இயக்கம்.

கடுமையான வரிவிதிப்புகள், விளைச்சல் இல்லாதபோதும் ‘வெட்டி’ என்ற பெயரில் தண்டல் வசூலித்து ஏழை உழவர்களை கொடுமைப்படுத்தியது போக ஆங்கில அரசுக்கு ஆதரவாக இருந்தவர்களது வீட்டுப்பெண்கள் தவிர்த்து சாதாரணப்பட்ட பெண்களை மானபங்கப்படுத்துவது, கற்பழித்து கொலை செய்வது என இருந்தவர்களை எதிர்த்தும் கேட்க நாதியில்லாத ஏழை மக்களுக்களை ஆதரித்து மலபார் பள்ளிவாசல்களில் பயான்கள் நடைபெற்றது. ஆலி முஸல்லியார் தலைமையிலும் அதற்கு முன்னதாகவும் ஆங்கிலேயர்கள் விதித்த ரயத்வாரி முறையையும் நிலவரி சட்டத்தையும் எதிர்த்து வந்தனர் அங்குள்ள பெருவாரியான முஸ்லிம்கள், ஆனால் இதை ஏதோ இந்து-முஸ்லிம் கலவரம் போல சித்தரித்து…அடக்குமுறை செய்துகொண்டிருந்த ஆங்கிலேயர்களுக்கு மாப்பிளாக்களை அடக்கமுடியாத நிலைவந்த போது அவர்களுக்காகவே மலபார் ஃபோர்ஸ் எனும் படையை நிறுவியது பிரிட்டிஷ் அரசு.

சில ஜமீன்கள் 19ம் நூற்றாண்டிலும் பெண்களைச் ‘சிறை’ எடுக்கும் உரிமையை வைத்திருந்தன. மணப்பெண்ணினைக் ‘கன்னி கழிக்கும்’ உரிமையையும் இந்நிலப்பிரபுக்கள் பெற்றிருந்தனர். கொடுமைகள் கோலோச்சிய அக்காலச் சூழல் 20ம் நூற்றாண்டிலும் தொடர்ந்தது.
1920களின் ஆரம்பத்தில் இந்தியா முழுவதும் விவசாயிகள், தங்களை நேரடியாகச் சுரண்டிக் கொண்டிருந்த ஜமீன்தார்களை எதிர்த்துப் போர்க்குணம் மிக்க போராட்டத்தை ஆரம்பித்தனர் என்பது வரலாறு.

ஜமீன்களின் நேரடி எஜமான் ஆன பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம் இத்தகைய கலகங்களை ஈவிரக்கம் இல்லாமல், ரத்தம் சிந்த வைத்து ஒடுக்கியது. இதில் ஒரு பகுதி நிகழ்வே மலபார் பகுதியின் ‘மாப்ளா’ விவசாயிகள் எழுச்சி ஆகும். வரலாற்று அறிஞர் பிபின் சந்திரா தனது ‘modern india’ நூலில் இவ்வரலாற்று நிகழ்வைக் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.
“In Malabar (northern Kerala), the Moplahs or Muslim peasants, created a powerful anti-zamindar movement”

இவ்வெழுச்சியை, 1922, 05 டிசம்பரில் நான்காம் கம்யூனிஸ்ட் அகிலம் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது. The struggle to free the land from feudal dues and requisitions thus assumes the character of a national liberation struggle against imperialism and the great feudal landowners (examples are the Moplah rising against the landowners and the British in India in the autumn of 1921 and the Sikh rising in 1922).
1921 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மலையாள தேசத்தின் மாப்ளா முஸ்லிம் விவசாயக் குத்தகைதாரர்கள், தங்களை ஒட்டச் சுரண்டி வந்த நம்பூதிரிப் பார்ப்பன ஜமீன்தார்களுக்கு எதிரான ஆயுதக் கிளர்ச்சியைத் தொடங்கினர். ஆயுதம் ஏந்திடத் துணிந்திடும் முன்னரே ஏறக்குறைய 80 வருடங்களுக்கும் மேலே, ஜமீன் எதிர்ப்பு, மாப்ளா குத்தகை விவசாயிகளிடையே இருந்துதான் வந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *