மாலிக் – சந்தேகத்திற்கிடமின்றி பெரும்பான்மையான ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மலையாளத் திரைப்படம். டேக் ஆஃப், சீ யூ சூன் திரைப்படங்களைத் தொடர்ந்து மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் நடித்த திரைப்படம். நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிட இயலாததால் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

திரைப்படத்தின் உருவாக்கத்தைப் பொறுத்தவரை, முந்தைய கேங்க்ஸ்டர் படங்களின் சாயல்கள் இருந்தாலும் சிறந்த படம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தொடக்கத்திலும் முடிவிலும் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு என அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குகிறது. திரைப்படத்தின் தொடக்கம் 12 நிமிடங்கள் நீண்ட ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு இடங்கள், மாறுபட்ட சூழல்கள், பல்வேறு கதாபாத்திரங்கள், வசனங்கள் எனத் திரைப்படம் தெளிந்த நீரோடையாகப் பயணிக்கிறது. 2 மணி நேரம் 41 நிமிடங்கள் சோர்வே ஏற்படாத அளவுக்குப் பார்வையாளர்களை இருக்கையில் கட்டிப்போட்டுள்ளார் படத்தின் இயக்குநரும் எடிட்டருமான மகேஷ் நாராயணன்.

அண்மையில் வெளியான மலையாளத் திரைப்படங்களில் தொழில்நுட்பத்தில் இத்திரைப்படம் சிறந்து விளங்குகிறது. நடிகர்களின் அமைதியான, அடக்கமான, முதிர்ச்சியான நடிப்பும், அழகான ஃப்ரேம்களும் பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும். பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது.

மூன்று மாறுபட்ட காலக்கட்டத்தின் ஊடே கடந்து செல்லும் கதையை மாலிக்கின் மூலம் மகேஷ் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்துள்ளார். இந்த மூன்று காலகட்டங்களையும் தெளிவாக அடையாளப்படுத்த திரைப்படத்தின் கலை இயக்கக் குழுவினர் மிகவும் மெனக்கெட்டுள்ளனர். இத்தகைய சிறப்புகள் இருந்தபோதிலும், மாலிக் படத்தின் அரசியல் கடுமையான விமர்சனங்களை எழுப்புகிறது.

கேரள வரலாற்றில் நிகழ்த்தப்பட்ட மிக மோசமான அரச பயங்கரவாதமான பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மறைமுகமாகச் சித்தரிக்கும் வகையில்தான் மாலிக் தயாரிக்கப்பட்டுள்ளது. திரைப்படத்தின் இறுதியில் பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூடு காவல்துறையின் உருவாக்கம் என்று கூறினாலும், இத்திரைப்படம் பேசாத அரசியல் சூழலைக் கேள்விக்குட்படுத்தியே ஆகவேண்டும்.

இத்திரைப்படம் முஸ்லிம் கதாநாயகனை முன்னிறுத்தியே முஸ்லிம் சமுதாயத்தை ஆயுதக் கடத்தல்காரர்களாகவும், வன்முறையாளர்களாகவும், சொந்த சமுதாயத்திற்கு துரோகம் இழைப்பவர்களாகவும் சித்தரிக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக முஸ்லிம்களையே எதிரியாக நிறுத்தும் ’நல்ல முஸ்லிம், கெட்ட முஸ்லிம்’ என்ற சங் பரிவாரத்தின் பைனரியை அணுவளவு பிசகாமல் சித்தரிக்கவும் இயக்குநர் தவறவில்லை. அரசியல் ரீதியாக நோக்கினால் ’டேக் ஆஃப்’ படத்தைவிட முஸ்லிம் விரோதத் திரைப்படம் இது. சிறிய துறை கடற்கரை கிராமம் இடவாத்துறை கடற்கரை கிராமமாகவும், பீமாப்பள்ளி ரமதாப்பள்ளியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

திரைப்படம் முழுவதும் பீமாப்பள்ளி பகுதியில் வாழும் மக்கள் நிழலுக, மாஃபியாக் கும்பல்களாகச் சித்தரிக்கப்படுகிறார்கள். IUIF என்ற சமுதாயக் கட்சியின் தலைவர், அலிக்கா ஆகிய கற்பனையான கதாபாத்திரங்களோடு, பீமாப்பள்ளி பகுதிவாசிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்கத் துப்பாக்கிகளைத் திருட்டுத்தனமாக இறக்குமதி செய்யும் காட்சியும் உருவாக்கப்பட்டுள்ளது. பீமாப்பள்ளி மக்கள் அவ்வப்போது ’போலோ தக்பீர்’ என்று முழக்கமிடுவதை எதேச்சையாகக் கருத முடியாது. தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்று பீமாப்பள்ளியில் உள்ள ஒரு தலைவர் கூறும் காட்சி இயக்குநரின் முஸ்லிம் விரோதப் போக்கை அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.

இயக்குநர் இஸ்லாமோ ஃபோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி போதும். சுனாமி ஆழிப் பேரலை தாக்கிய வேளையில், பீமாப்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த இதர மதத்தவர்கள் பள்ளிவாசலை நோக்கி அபயம் தேடி வருகின்றனர். அவர்களை உள்ளே அனுமதிக்காமல் அங்குள்ள முஸ்லிம்கள் தடுப்பதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வட மாநிலம் ஒன்றில் கோவில் வளாகத்திற்குள் நுழைந்து தாகம் தீர்க்கத் தண்ணீர் குடித்த முஸ்லிம் சிறுவனை அடித்து உதைத்த நாட்டில், இன்றுவரை பேரிடர் காலங்களில் இதர மதத்தவர்களுக்கு புகலிடம் அளிக்காமல் பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டதாக வரலாறு இல்லை.

முஸ்லிம்-கிறிஸ்தவப் பிரச்னைகளை முன்வைக்கும் இடத்தில் முஸ்லிம் பிரிவினரை வன்முறையைச் சுயமாகத் தேர்ந்தெடுப்பவர்களாகவும், கிறிஸ்தவர்கள் சிஸ்டத்தின் வலையில் சிக்கிய அப்பாவிகளாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். ’காவல்துறையால் உருவாக்கப்பட்ட கலவரமே தவிர, கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இங்கு எந்தச் சண்டையும் கிடையாது’ என்பது இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நேர்மையான வசனம். ஆனால், இச்சம்பவத்தில் காவல்துறை மட்டும் குற்றவாளிகள் அல்லர். அன்று ஆட்சியில் இருந்த சிபிஎம் தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்துக்கும் பங்கிருக்கிறது.

அதையெல்லாம் நுட்பமாக மறைத்துவிட்டு, முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதுடன், இடதுசாரி அல்லாத அரசும் முஸ்லிம் பிரதிநிதியும் இணைந்து நடத்திய ஒரு படுகொலையாக மடைமாற்றம் செய்கிறது இப்படம். இதன் மூலம் கேரளாவிலுள்ள மதச்சார்பற்ற இடதுசாரிகளின் உள்ளங்களில் வேண்டுமானால் குளிர்ச்சி ஏற்படலாம்; ஆனால், ஒரு சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட துரோகத்தையும் அநீதியையும் யாராலும் மூடி மறைக்க முடியாது!

பல இடங்களில் சுலைமான் என்ற ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரத்திலிருந்து எழும் ஆவேசமானது நெடுங்காலமாக நடக்கும் வகுப்புவாதத் தாக்குதல்களின் பாதிப்பிலிருந்து உருவான தற்காப்பு நடவடிக்கை என்பதாகத் தெளிவில்லாமல் சித்தரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், அதைச் சமநிலைப்படுத்துவதற்கு சுலைமானின் தாயாரை ஒரு ’நல்ல முஸ்லிமாக’ காட்டி, நீதிமன்றத்தில் சுலைமானுக்கு எதிரான சாட்சியாக அவரை நிறுத்துகிறார் இயக்குநர்.

திரைப்படத்தை உண்மையான நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு பார்ப்போம். 2009 மே மாதம் 17ம் தேதி பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூடு நடந்தது. 6 பேர் கொல்லப்பட்டனர். 70 ரவுண்ட் சுட்ட பிறகும் வெறி அடங்காத காவல்துறையினர் காயமடைந்தவர்களை அடித்து உதைத்தனர். 40 ரவுண்டுகள் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. துப்பாக்கியின் முனையால் ஒருவரைக் குத்திக் கொலைசெய்தனர். 52 பேர் காயமடைந்த இந்தத் திட்டமிட்ட முஸ்லிம் வேட்டை நடக்கும்போது, சிபிஎம்மின் வி.எஸ்.அச்சுதானந்தன் முதலமைச்சராகவும், கொடியேரி பாலகிருஷ்ணன் உள்துறை அமைச்சராகவும் இருந்தனர்.

மேலும், அப்போது வி.சுரேந்திரன் பிள்ளை என்பவர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், இத்திரைப்படத்தில் துப்பாக்கிச்சூட்டின் பின்னணியிலுள்ள அரசியல் சதித்திட்டத்தின் முழுப் பங்கையும் IUIF என்ற முஸ்லிம் அமைப்பின் தலைவரான அபூபக்கர் (திலீஷ் போத்தன்) கதாபாத்திரத்திடம் தள்ளிவிட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, துப்பாக்கிச்சூட்டில் அதிகார மட்டத்தின் பங்களிப்பைத் தெளிவாக முஸ்லிம் கதாபாத்திரத்துடன் இணைத்திருக்கும் வரலாற்று முரணை வரலாறு குறித்த அறியாமையாகக் காண முடியவில்லை. மாறாக, இயக்குநரின் அரசியலாகவே பார்க்க முடிகிறது.

சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் சஞ்சய் கவுல் திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியராகவும், கே.பிஜு உதவி ஆட்சியராகவும் இருந்தனர். ஆனால், படத்தில் உதவி ஆட்சியராக அன்வர் அலீ (ஜோஜு ஜார்ஜ்) என்ற கதாபாத்திரம் வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ளது. நடந்த முஸ்லிம் இனப்படுகொலையை திரிக்கும் முயற்சியே அன்றி இது வேறில்லை. இந்தப் பின்னணியில்தான் சிறிய துறை மீனவக் கிராமத்தைச் சேர்ந்த கொம்பு ஷிபு என்ற உள்ளூர் ரவுடிதான் பிரச்னைகளுக்கு ஆரம்பப்புள்ளி எனும் உண்மையையும் மூடி மறைத்துள்ளனர்.

அப்போதைய வி.எஸ். அச்சுதானந்தன் தலைமையிலான அரசாங்கம் நீதிபதி கே.ராமகிருஷ்ணன் தலைமையில் நீதி விசாரணையை நடத்தியபோதிலும், அந்த அறிக்கை இன்றுவரை வெளியிடப்படவில்லை. அந்த வரலாற்று உண்மையும் இப்படத்தில் மறைக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூட்டில் மரணித்தவர்கள், காயமடைந்தவர்கள், நேரடியாகவும் மறைமுகமாகவும் இழப்புகளைச் சந்தித்தவர்களுக்கு இத்திரைப்படம் மூலம் இன்னொருமுறை அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

பீமாப்பள்ளி துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணமானவர்களைக் குறித்து பேசாமல் மெளனம் சாதித்தும், பாதிக்கப்பட்டவர்கள் மீது சந்தேகத்தின் நிழலைப் படியச் செய்தும், வரலாற்றையும் உண்மையையும் திரித்தும் ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். நேர்த்தியான படைப்பு என்ற ஒற்றைக் காரணம் மட்டுமே ஒரு திரைப்படத்திற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கிவிடாது எனும் உண்மையை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்யது அலீ – எழுத்தாளர்

நன்றி – மெய்பொருள் இணையதளம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *