‘Life without Liberty is like a body without soul’ ‘சுதந்திரம் இல்லாத வாழ்க்கை ஆன்மா இல்லாத உடலை போன்றது ‘

இயேசு கிறிஸ்து தனது புகழ்பெற்ற மலை பிரசங்கத்தில் சொன்ன வார்த்தைகள் இது.

சுதந்திரம் – அது ஒரு மனிதனின் தவிர்க்கவியலா தேவை. தனி மனிதனுக்கும் சமூகத்திற்கும் அவர்கள் வாழும் நாட்டிலும் சுதந்திரமும் சுதந்திரச் செயல்பாடுகளும் இன்றியமையாதது. தங்கள் எஜமானர்களை அண்டிப் பிழைப்பவர்களுக்கும் சில நேரங்களில் அவர்களின் ‘ஷூக்களை’ நக்கிப் பிழைப்பவர்களுக்கும் சுதந்திரத்தின் மேன்மை புரியாது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்து விட்டது. நாடு முழுவதும் அமுதப் பெருவிழா – அம்ரித் மஹோட்சவ் – ஒன்றிய அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது.

தடைகள் இல்லா சுதந்திரமும் எல்லைகள் இல்லா மானிடமும் தழைத்து நிற்கும் ஒரு மண்ணை உருவாகத்தான் நமது முன்னோர்கள் பாடுபட்டார்கள். ஒரு நீண்ட 75 ஆண்டு கால நெடும் பயணத்திற்குப் பிறகு அவர்கள் கண்ட கனவு எந்த அளவிற்கு நிஜப்படுத்தப்பட்டு இருக்கிறது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய காலகட்டம் இது. உள்ளத்தின் ஆழத்திலிருந்து உயிர்த்தெழ வேண்டிய நாட்டுப்பற்று, கொடிகளிலும் வெற்றுக் கோஷங்களிலும் வெளி வேஷங்களிலும் அடங்கிப் போகும் தேசபக்தியாக மாறிவிட்டதோ என்ற அச்சம் எழுகிறது. 75 வது ஆண்டு துவங்கியதை ஒட்டி ஓராண்டு கால நிகழ்வுகளுக்கு ஒன்றிய அரசு திட்டமிட்டது. அதன் இறுதியாக ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய நாட்களில் வீடுகள் தோறும் மூவண்ணப் பதாகையை பறக்கச் செய்வோம் என ஒன்றிய அரசு அறிவித்தது. தடைகள் இன்றி பறக்கும் மூவண்ணக் கொடிகளை சூழ்ந்து நிற்கும் காரிருள்களை குறித்தும் நாம் கவலைப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இந்த சூழலில் அவற்றை மாற்றியமைக்கவும் முன்னேறவும் நாம் தேவையான செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

எப்படிப்பட்ட சுதந்திர இந்தியா வேண்டும் என்ற நம் முன்னோர்களின் கனவை ரவீந்திரநாத் தாகூர் தன் கவிதை வரிகளில் வெளிப்படுத்தினார்.

உள்ளத்தில் அச்சம் இல்லாத ஒரு இடம்..

தன்மானத்தோடு தலை நிமிர்ந்து நிற்க ஒரு இடம்..

அறிவிற்கு தடைகள் இல்லாத ஒரு இடம்…

குறுகிய (சிந்தனை) சுவர்களால் உலகத்தை பிரிக்காத ஓர் இடம்..

பேசும் வார்த்தைகள் யாவும் நேர்மையின் ஆழத்திலிருந்து உயிர்த்தெழும் ஒரு இடம்…

என் இறைவா…

சுதந்திரத்தின் அந்த சொர்க்க பூமியாக என் நாட்டை உயிர்த்தெழுச் செய்…

ஆம். இதுதான் நம் முன்னோர்கள் கனவு கண்ட இந்தியா.

அமுத (அம்ரித்) சுதந்திரம் எது? ஆக்கிரமிப்பில் இருந்து, அவர்களுடைய சுரண்டலில் இருந்து, அந்த அரசாங்கத்தின் தீய கொள்கைகளை செயல்பாடுகளை விமர்சிப்பதை தடை செய்யும் சட்டங்களிலிருந்து, ஒடுக்கப்படுவதை எதிர்த்தால், எதிர்ப்பவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக எதையும் செய்ய முனையும்  அதிகார வர்க்கத்திடம் இருந்து… என அனைத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்கு பெயர்தான் சுதந்திரம் என்பது. அப்படிப்பட்ட ஒரு நாட்டைத் தான் 1947 ஆகஸ்ட் 14ன் விடியா இரவில்  இந்த நாட்டின் மக்கள் கனவு கண்டிருப்பார்கள்.

 அதை நிஜப்படுத்தும் நோக்கோடு, சமூகத்தை வழிநடத்துவதற்காக ஒரு அமைப்புச் சட்டத்தை நீண்ட நெடிய விவாதங்களுக்கு பிறகு உருவாக்கினார்கள். அதை உருவாக்கும் வேலையில் சில குறிப்பிட்ட சமூகங்களுக்கு சில அதிகாரங்களும் உரிமைகளும் சலுகைகளும் அளிக்கப்பட்ட பொழுது அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். சுதந்திரத்திற்கு பிறகான நாம் கனவு காணும் நாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்றால் இந்த  அதிகாரங்களும் உரிமைகளும் சலுகைகளும் இதில் ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்றார் பி ஆர் அம்பேத்கர். இவற்றையெல்லாம் பார்த்து பார்த்து பதிவு செய்த பின்னரும் அம்பேத்கருக்கு ஒரு ஐயம் ஏற்பட்டது. ஒரு குறிப்பிட்ட மதப் பிரிவினர் பெரும்பான்மையாக உள்ள இந்திய ஒன்றியத்திற்கு நாடாளுமன்ற ஜனநாயகம் சிறந்ததாக இருக்குமா என்ற கேள்வியை பிந்தைய காலகட்டத்தில் அவர் எழுப்பினார்.

இங்கே இருந்து தான் சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால பயணத்தை நாம் ஆய்வு செய்ய வேண்டி இருக்கிறது. இந்த கொண்டாட்டத்தின் ஆரம்ப கட்டத்திலேயே, அதன் பெயர் சூட்டுதலிலேயே இந்துத்துவ சக்திகள் அதன் அடையாளங்களை புகுத்திவிட்டனர். ஆசாத் கி அம்ருத் மஹோத்ஷவ் – அமுதப் பெருவிழா – என்று இந்த கொண்டாட்டங்களுக்கு ஒன்றிய அரசு பெயர் சூட்டியுள்ளது. 75 ஆண்டு நிகழ்வுகளுக்கு பவள விழா கொண்டாட்டங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுவது உண்டு. ஆனால் ஒன்றிய அரசு அம்ருத் என்று பெயர் சூட்டியதின் மர்மம் என்ன?

நித்திய ஜீவன் பெரும் பொருட்டு மகாவிஷ்ணுவின் பாற்கடலை மேரு மலையை மத்தாக்கி, வாசுகி பாம்பை கயிறாக்கி தலைப்பகுதியை அசுரர்களும் வால் பகுதியை தேவர்களும் பிடித்து கடைந்தனர். அதன் இறுதியில் வெளிவந்த அமுதை – அம்ருதை –  தேவர்கள் உண்டார்கள். தலைப்பகுதியை பிடித்து பெரும்பாடுபட்ட அசுரர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள் என்பது புராண வரலாறு. அதைத்தான் 75 ஆண்டு கால கொண்டாட்டத்திற்கு ஒன்றிய அரசு தலைப்பாக பெயர் சூட்டி உள்ளது. இந்த நாடு இந்து அடையாளங்களை கொண்ட நாடு, அம்ருதை உணவாகக் கொண்ட  தேவர்கள்  போன்றவர்கள் நாங்கள், இந்த நாட்டை நித்தியமாக ஆளப்போறவர்கள் என்ற செய்தியை சொல்லாமல் சொல்லிச் செல்கிறது ஒன்றிய அரசு.

ஆளும் அரசின் சர்வாதிகாரப் போக்கில் இருந்து விடுதலை என்பதுதான் நம் முன்னோரின் கனவாக இருந்தது. அரசின் அச்சுறுத்தல்கள் இல்லாத சுதந்திரம் மிக்க ஒரு நாடு. ஆனால் இன்றைக்கு நம் நாடு எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. அரசை விமர்சிப்பவர்களுக்கு என்ன நேரும் என்ற அச்சத்தோடு தான் ஒவ்வொரு பொழுதும் விடுகிறது. பசியும் பட்டினியும் வேலை வாய்ப்பின்மையும் கொடூர சட்டங்களும் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் நம்மை அச்சுறுத்தி கவலை அடையச் செய்தது என்று சொன்னால், அதில் சற்றும் குறைவில்லாமல்தான் இன்றைய தினங்களும் கடந்து செல்கிறது. இந்தியா இதுவரை கண்டிராத அளவு வேலை வாய்ப்பின்மை உச்சத்தில் இருக்கிறது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்து கொடூரச் சட்டங்களில்  திருத்தங்கள் செய்யப்பட்டு, முன் இருந்ததை விட கொடூரச் சட்டங்களாக நடைமுறையில் இருக்கிறது. அவை இந்த நாட்டு குடிமக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது. குற்றம் இழக்காமலேயே ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் தங்கள் ஆயுளை கழித்துக் கொண்டிருக்கின்றனர்.

காற்றில் சுதந்திரமாய் தடைகள் இன்றி பறக்கும் தேசியக்கொடி நமக்கு பல பாடங்களை கற்றுத் தருகிறது. தேசிய கொடிக்கு அளிக்கப்படும் அந்த சுதந்திரம் அந்த கொடிக்கு கீழ் வாழும் மக்களுக்கும் அளிக்கப்பட வேண்டும். அரசின் வரம்பற்ற அதிகாரம் மக்களை அடிமைகளாக மாற்றக்கூடாது. ஒரு குடிமகன் எதை உண்ண வேண்டும், எதை உடுக்க வேண்டும், எங்கே உறையுள் கொள்ள வேண்டும், எங்கு செல்ல வேண்டும், செல்லக்கூடாது, எதை நம்ப வேண்டும், எதை நம்பிக்கை கொள்ளக் கூடாது, எதை வழிபட வேண்டும், எதை வழிபடக்கூடாது என்ற முடிவுகளை எடுக்கக்கூடிய தனிமனித சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதுவே சுதந்திரத்தின் தேட்டமாகும். அந்த சுதந்திரம் மறுக்கப்படுகிறது என்று சொன்னால் 75 ஆண்டு காலகட்டத்தில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்று பொருள்.

இந்த நாட்டின் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகம் மதிக்கப்படுகிறது. இன்றைக்கு ஊடக சுதந்திரம் என்பது வெறும் வீழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டு இருந்தது. ஆங்கிலேயே ஆட்சியாளர்களை எதிர்த்து எழுதினார்கள் என்பதற்காக காந்தியும் பாரதியும் சிறைவாசம் அனுபவித்தார்கள். அதற்குச் சற்றும் குறையாத நிலைதான் இன்றைய இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஊடக சுதந்திரம் என்பது அதல பாதாளத்தில் உள்ளது என சர்வதேச அறிக்கைகள் சுட்டிக் காட்டுகிறது. சர்வதேச அளவில் ஊடக சுதந்திரம்மிக்க நாடுகளின் பட்டியலில் 160 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது என்பது அதற்குச் சான்று.

இந்தியாவில் சட்டங்கள் இயற்றப்படுகின்ற பொழுது சாதாரண மக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் சட்டங்கள் இயற்ற வேண்டும் என தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்கள் வழிகாட்டுதல் அளித்தார்கள். இன்றைக்கு எல்லா சட்டங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு அனுகூலமாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. நாட்டின் சட்டங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் வங்கிகளும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவாக்கப்பட்டு கொண்டு இருக்கிறது. ஆனால் சாதாரண பொதுமக்களோ அன்றாட செலவினங்களுக்கு கூட திண்டாட வேண்டிய நிலைமைதான். இந்தியாவில் இலவசங்கள் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசக்கூடிய அதே நேரத்தில்தான் 10 லட்சம் கோடிக்கும் அதிகமான வங்கி கடன்கள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. இருக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமையும் பன்மைத்துவமும் இந்தியாவின் அடையாளம். ஆனால் பல வண்ணக் கொடியின் நிறத்தை ஒற்றை வண்ணமாக மாற்ற ஒன்றிய அரசும் இந்துத்துவ பயங்கரவாத சக்திகளும் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒற்றை மொழி, மதம், கலாச்சாரம் என்ற திணிப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகம் என்பது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

அமைப்புச் சட்ட நிறுவனங்களும் நீதிமன்றங்களும் அதன் ஆன்மாவை இழந்து விட்டிருக்கிறது. ஒடுக்கு முறைக்கு ஆளாகக்கூடிய மக்களின் குரல்களாக ஓங்கி ஒழிக்க வேண்டிய நீதிமன்றங்கள், ஆட்சியாளர்களின் சொல்லுக்கு இயங்கும் நிலைமைக்கு மாறி இருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டமும் லோக் ஆயுக்தாவும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் குரல்வலைகள் நெறிக்கப்படுகின்றன.   சட்டவியல் அமைப்புகளும் அமலாக்கத் துறையும் வேட்டை மிருகங்களாக மாற்றப்பட்டுள்ளன.

இந்தியா பின்பற்றி வரும் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்பட்டுள்ளது. கல்வியிலும் வரி வருவாயிலும் அமைப்புச் சட்டம் அனுமதித்துள்ள பிற விஷயங்களிலும் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. தங்களுக்கு இணங்கி வரும் மாநிலங்களுக்கு தனிச்சலுகைகளும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புறக்கணிப்புகளும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் படு பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது. 2020 இல் வெளியான மனித உரிமைகள் பாதுகாப்பு பட்டியலில் 162 நாடுகளில் இந்தியா 111வது இடத்தை வைத்துக் கொண்டிருக்கிறது.  பாதி சுதந்திரம் அளிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்து விட்டது. குறிப்பாக  இனப்படுகொலை நடைபெறுவதற்கு வாய்ப்புள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. ஒரு குவளை தண்ணீர் குடிப்பதற்கு கூட தகுதியற்றவர்கள் தலித்துகள் என்ற நிலைதான் 75 ஆண்டுகால பயணத்திற்கு பிறகும் இந்த நாட்டின் நிலவிக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், அவ்வாறு தண்ணீர் குடித்தால் அடித்து கொலை செய்யப்படும் சூழல்தான் நிலவுகிறது என்று சொன்னால் நாம் சுதந்திரத்தின் மேன்மையை அடைந்து விட்டோமா என்ற கேள்வி விடையில்லாமல் தொக்கி நிற்கிறது.

ஒட்டுமொத்தமாக சுதந்திர இந்தியா மீண்டும் ஒரு சர்வாதிகாரத்தின் கீழ் அடக்குமுறை தேசமாக மாறிவிட்டது என்பதுதான் 75 ஆண்டுகால பயணத்தில் நாம் அடைந்த பலன். இதை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு. சுதந்திரத்தின் உண்மையான அடையாளங்கள் இந்த நாட்டில் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பலன்களை அனைத்து குடிமக்களும் அனுபவிக்க வேண்டும். ரவீந்திரநாத் தாகூர் விரும்பியதைப் போல சுதந்திரத்தின் சொர்க்க பூமியாக இந்த நாடு மாற்றியமைக்கப்பட வேண்டும்.

எதிர்காலத் தலைமுறைக்கு இந்த நாட்டை எல்லா சுதந்திரம் மிக்க நாடாக நாம் மாற்றி அமைக்க வேண்டும் என்று சொன்னால் உணர்வு கொள்வோம்.., உயிர்த்தெழுவோம்.., சுதந்திரத்தின் மேன்மையை உயர்த்திப் பிடிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *