சுதந்திரம் பெற்றது முதல் ‘போலி மதச்சார்பின்மைவாதிகள்’ குற்றம் சுமத்தி வந்ததுபோல் இங்கு முஸ்லிம்களுக்கான எந்த ஆதரவு குரலுமில்லை. இன்று பெரும்பான்மைவாத வெறுப்புவாதிகள் முஸ்லிம்களை வேட்டையாடுவது, அவர்கள் வழிபாட்டிடங்களைத் தாக்குவது, குடியிருப்பையும் வாழ்வாதாரத்தையும் புல்டோசரால் தகர்ப்பது, உணவு, உடை போன்ற கலாச்சார சின்னங்களை மறுப்பது போன்றவற்றை அரங்கேற்றுகிறார்கள். மதச்சார்பின்மையின் சிதைந்த வடிவமே சங்பரிவாரங்களின் வழிமுறையாக உள்ளது.

இது நூற்றாண்டு கால திட்டமாகக் கண்டெடுத்த கலாச்சார தேசியத்தின் அறுவடையாகும். இது விடுதலை வீரர்கள் முன்மொழிந்த அனைவரையும் உள்ளடக்கிய பிராந்திய தேசியத்திற்கு எதிரானதாகும். முகமது அலி ஜின்னா வெளிப்படுத்துவதற்கு முன்பே விநாயக் தாமோதர் சாவர்க்கர் இரு தேச கொள்கையை முதலில் கட்டமைத்தார். 1923ம் ஆண்டு தேசியத்திற்கான அவரது சிந்தனையை வார்த்தை மாறாமல் இவ்வாறு குறிப்பிட்டார்,

‘அனைத்து இந்துக்களுக்கும் பாரத தேசமானது பித்ரு பூமியாகவும் புண்ணிய தேசமாகவும் உள்ளது. அவர்களின் தந்தை நாடு மட்டுமன்றி புனித நாடாகும். நமது நாட்டின் முகமதியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் உண்மையில் கட்டாயமாக இந்து அல்லாதவர்களாக மாறினார்கள். அவர்களை இந்துக்களாக அங்கீகரிக்க முடியாது. அப்படியிருக்கையில், பிற இந்துக்களைப் போல் அவர்களுக்கு இந்துஸ்தானம் தந்தை நாடாக இருக்கும். ஆனால், புனித பூமியாக இருக்க முடியாது. அது எங்கோ தொலைவில் அரேபியாவிலும் பாலத்தீனத்திலும் உள்ளது.’

எம்எஸ் கோல்வாக்கர் இன்னும் தீவிர நிலையை அடைகிறார், ‘ஒவ்வொரு இந்துவும் தனது தாயின் கருவறையில் இருக்கும்போதே ‘சான்ஸ்கர்'(புனிதம்) அடைகிறார். ஆதலால் அவர் இந்துவாகப் பிறக்கிறார். மற்றவர்கள் எந்த பெயருமற்று சாதாரண மனிதர்களாகப் பிறக்கிறார்கள். பிறகு, விருத்தசேதனம் அல்லது ஞானஸ்தானம் செய்துகொள்வதன் பொருட்டு முஸ்லிமாகவும் கிறிஸ்தவனாகவும் மாறுகிறார்கள். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை’.

பிறகு மோகன் பகவத் வந்தார், ‘ஜெர்மனி நாடு யாருடையது?, அது ஜெர்மானியர்களுடையது. பிரிட்டன் பிரிட்டிஷ்காரர்கள் நாடு, அமெரிக்கா அமெரிக்கர்களுடையது, அதே வழியில் இந்துஸ்தான் இந்துக்களுடைய நாடு. இதன் அர்த்தம் இந்துஸ்தான் இந்துக்கள் அல்லாதவர்களின் நாடல்ல என்பதல்ல. இந்து என்ற சொல்லாகத்தின் பொருள் பாரதமாதாவின் பிள்ளைகள், இந்திய மூதாதையரின் சந்ததிகள், இந்தியக் கலாச்சாரத்தை (இந்து கலாச்சாரம்) ஏற்பவர்கள் என அனைவரையும் குறிக்கும்.’

2014 வரை சங் தத்துவவியலாளர்கள் தங்களின் சொந்த பார்வையிலான இந்தியாவை விளக்கினார்கள். தங்கள் சொந்த கற்பனையிலான இந்தியாவைத் திட்டமிட்டார்கள். பிறகு, இந்தியப் பெருமுதலாளிகளின் வளர்ச்சி கோஷத்துடன் நரேந்திர மோடி வந்தார். சங் பரிவாரின் நூற்றாண்டு திட்டத்தை முன்னகர்த்தி செல்லும் சிறந்த ஊழியனாகத் தன்னை வெளிப்படுத்தினார்.

‘நீங்கள் பின்னிருக்கையில் அமர்ந்து செல்லும் காரை வேறொருவர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது, ஒரு நாய் சக்கரத்தில் வந்து சிக்கிக்கொண்டால் உங்களுக்கு மனம் புண்படுமா இல்லையா? ஆம் படும். நான் முதலமைச்சரோ இல்லையோ, சாதாரண மனிதன். தவறாக ஏதும் நேரும்போது அதற்குக் கவலைப்படுவது இயல்பு’- இவ்வாறு கூறியது சமூகத்திற்கு எதிரான நயவஞ்சக சக்தி யாருமில்லை. பிரதமருக்கான விருப்பத்திலிருந்த முதலமைச்சர் நரேந்திர மோடி. தனது ஆளுகையில் நடந்த முஸ்லீம் வெறுப்பு கலவரத்தை இவ்வாறு மேற்கோள் காட்டினார். பிறகு, கலவரத்தில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கிய முஸ்லிம்களைக் கேலி செய்து தன் சோகத்தைத் துடைத்துக்கொண்டார். ‘நாங்கள் ஐந்து, எங்களுடையது ஐம்பது…’ என்ற மோடியின் பரவலான வாக்கியம் முஸ்லீம் முகாம்களைக் குழந்தை உற்பத்தி மையமாகக் குறிப்பிட்டது.

அன்றிலிருந்து என்ன மாற்றம் நடந்துள்ளது? சிஎம் பிஎம்-ஆக இருக்கிறார். கார்கள் புல்டோசர்களாக உள்ளன. வன்மமான அடக்குமுறையில் ‘அந்த நாய்கள்’ அதே அச்சத்தில் ஆழ்த்தப்படுகின்றன. தீயசக்தி மையமாகவும் மையம் தீயசக்தியாகவும், தார்மீகம் குற்றமாகவும் குற்றம் தார்மீகமாகவும் இருக்கின்றன. புல்டோசர்கள் நகர்ந்துகொண்டிருக்கையில் மாண்புமிகு பிரதமர் மௌனத்தைத் தேர்ந்தெடுக்கிறார். ஊடகவியலாளர்கள் ‘கேளிக்கை மங்கைகளாக’ (Cheergirls) மாறி கல்லெறியும் காவிக் கலவரக்காரர்களைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால், இந்தியா என்ற கருத்தாக்கத்தின் மீது அக்கறை கொண்டவர்களுக்கு மௌனம் தேர்வாக இருக்காது. இப்பொழுது அவர்கள் துணை நிற்கவும் பேசவும் இல்லையென்றால், வருங்கால எதிர்ப்பில் அவர்களால் எதுவும் செய்ய முடியாது. இதனைத் தேசபக்தியின் செயல் எனக் குறிப்பிடுகிறார் ஹோவர்ட் ஜின்.

புல்டோசர் பாபாக்களின் நிலத்தில் தேசபக்தியாக இருப்பது அவ்வளவு சுலபமல்ல. பீட்டர் சீகர் முன்வைக்கையில், ‘கடந்த நூற்றாண்டின் ஊடாக இந்த சூட்சமம் உலகம் முழுக்க பல்வேறு கட்டமைப்புகளில் முயலப்பட்டுள்ளது. அவர்கள் மக்களைக் கட்டாயமாக ஈடுபடுத்திப் பல சோதனைகளை மேற்கொள்கிறார்கள். அது என்னவென்றால் மக்கள் கொண்டுள்ள எதிர்ப்புணர்வுனை நீக்குவது’. அவர்கள் எதிர்ப்புணர்வின் பொருண்மையை (உள்ளடக்கம்) கணக்கிடையில் அது அவ்வளவு சுலபமல்ல. எதிர்ப்பு நீரைப்போன்றது. தனது வழியைக் கண்டடையும்…

மூத்த பத்திரிக்கையாளர், Frontline இதழின் ஆசிரியர். விஜய்சங்கர் ராமச்சந்திரன் தனது பணி நிறைவை ஒட்டி ஆசிரியராகக் கடைசி இதழுக்கு (மே 20,2022) எழுதிய தலையங்கம்.

தமிழில் – அஜ்மீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *