ராஜீவ் காந்தி, இந்தியாவின் ஆறாவது பிரதமர் ஆவார். நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வருகை தந்த அவர் 21 மே 1991 அன்று  ஸ்ரீபெரும்புதூரில் ஒரு குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலையில் தீர்க்கப்படாத சந்தேகங்கள் இன்னும் உள்ளன.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முதலில் மரண தண்டனையும் பிறகு அது ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டு 31 வருட காலம் சிறையில் இருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்ற தலையீட்டின் காரணத்தினால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொன்னதைப்போல 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சுதந்திரக்காற்றை சுவாசித்து இருக்கிறார். இது அவருக்கு நிம்மதியின், சந்தோசத்தின் நிமிடங்கள். வாழ்க்கையின் வசந்த காலத்தில் இழந்த முப்பது வருட காலங்களை யாரும் அவருக்கு திருப்பித் தர இயலாது. ஏழு பேரில் ஒருவர் விடுதலையாகி விட்டார். மீதியுள்ளவர்கள் காலத்தின் கருணைக்காக காத்திருக்கிறார்கள். அதற்கான வாசல்கள் திறந்து கொண்டிருக்கிறது.

அமைப்புச் சட்டத்தின் 142 வது பிரிவை பயன்படுத்தித்தான் உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்துள்ளது. இதற்கு முன்பாக பேரறிவாளன்  விடுதலைக்காக தமிழ்நாடு அரசு ஆளுநரிடம் பேசியிருந்தது. அமைப்புச் சட்டத்தின் 162 ஆவது பிரிவை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டிருந்தது. ஆனால் ராஜ் பவனுக்கும் ஜார்ஜ் கோட்டைக்கும் இடையேயான சண்டையில் ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்தி கொண்டிருந்தார். ஆளுநரின் அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டு ஆத்திரமுற்ற உச்சநீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் இந்த தலையிடல் ஒரு அரசியல் விவாதமாக மாற வேண்டிய காலத்தின் தேவை உள்ளது. காலனியாதிக்க எச்சங்களில் ஒன்றான ஆளுநர் பதவி தேவையா என்ற மிக முக்கியமான விவாதமும் இங்கே முன்னெடுக்கப்பட வேண்டும்.

நமது நாட்டில் முன்னாள் பிரதமர் தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட வழக்கில் தண்டிக்கப்பட்டவர்தான் பேரறிவாளன். ஆனால் அவர் குற்றவாளி இல்லை என்றும் தவறான தகவலின் பேரில் அவர் தண்டிக்கப்பட்டு உள்ளார் என்றும் வெளியான தகவலையடுத்து அவர் விடுதலை பெற வேண்டும் என்ற குரல் வலுப்பெறத் தொடங்கியது. விசாரணை அமைப்புகளும் ஊடகங்களும் தவறான தகவல்களை பொதுமக்களிடத்தில் பரப்பி இருந்தார்கள். ‘வெடிகுண்டு தயாரிப்பு நிபுணர்’ என்றுதான் பல ஊடகங்களும் பேரறிவாளனை அறிமுகப்படுத்தினர். எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பட்டயப்படிப்பு படித்துள்ள பேரறிவாளன்தான் தற்கொலை படை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டை தயாரித்தார் என்றும் ஊடகங்கள் கதைகளை கட்டமைத்தனர். ஆனால், உண்மைகள் வெளியான பிறகு அவர்களுக்கான விடுதலைக் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. தனது மகனின் விடுதலைக்காக வயதான காலகட்டத்திலும் ஓயாது உழைத்த அற்புதம்மாள் என்ற அற்புதமான தாயின் குரலை தமிழ்நாடு உற்று கேட்டது.

பேரறிவாளனை கைது செய்யப்படுகின்ற பொழுது அவருக்கு வயது 19. தடா நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்த போது அதை சரி என்று தான் மக்கள் நம்பினர். 9-வாட் பேட்டரி இரண்டை பேரறிவாளன் வாங்கினார் என்றும் அதைத்தான் வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தினார்கள் என்றும் விசாரணை குழு நீதிமன்றத்தில் தெரிவித்தது. அதற்கு ஆதாரமாக பேட்டரி வாங்கிய பில்லையும் சமர்ப்பித்தார்கள். 31 வருடங்களுக்கு முன்பு 2 பேட்டரி வாங்கினால்  கடையில் பில் தரும் பழக்கம் உண்டா இல்லையா என்பதைக் குறித்து யாரும் சிந்திக்கவில்லை. கேள்வி கேட்கவும் இல்லை. நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளும் இதுபோன்று போலியானவைதான் என்பதை உணர்ந்த பிறகுதான் சில ஊடகங்களும் மனித உரிமை அமைப்புகளும் வைகோ போன்றவர்களும் வலுவான கேள்விகளை எழுப்ப ஆரம்பித்தனர். அந்தக் கேள்விகளின் பலனாய் 1998ல் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய மரண தண்டனை 2014இல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மட்டுமல்ல 2017இல் அவர்களில் சிலருக்கு பரோலும் கிடைத்தது. குடிமை சமூகங்களின், சில ஊடகங்களின் தொடர் செயல்பாடுகளின் மூலமாகத்தான் பேரறிவாளனின் விடுதலையும் இப்போது சாத்தியப்பட்டுள்ளது.

பதினோரு வருடங்களுக்கு முன்னால் தூக்குக் கயிறை எதிர்நோக்கி காத்திருந்த பேரறிவாளன் இவ்வாறு கூறினார். “இருபது வருடங்களுக்கு முன்னால் தெருக்களில் சுதந்திரமாக சுற்றித் திரிந்த ஒருவனை திடீரென தீவிரவாதியாகவும் கொலைகாரனாகவும்  குற்றம் சாட்டப்பட்டது பெரும் துயர நிகழ்வாகும். சக மனிதர்களின் துன்பம்  கண்டு அவர்களுக்கு ஆதரவளிப்பதும் அவர்கள் கண்ணீர் துடைக்க பாடுபடுவதும் கொலைகாரனாக சித்தரிக்கப்படுவதற்கு காரணமாக அமையும் என்று நான் ஒருபோதும் கருதவில்லை.” நீதிமன்றமும் நமது நாட்டில் உள்ள விசாரணை அமைப்புகளும்  தனது வாழ்க்கையில் ஏற்பட்ட துயர நிகழ்வுகளும் உருவாக்கிய விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகள் இவை. இனி பேரறிவாளன் வாழ்க்கையில் வசந்தம் வீசட்டும். தனது 31 வருட சிறை வாழ்க்கையின் நினைவுகளை சுமந்து கொண்டு அவரது தெருக்களில் சுதந்திரமாக சுற்றி வரட்டும்.  அற்புதம்மாளின் வாழ்வில் வரக்கூடிய நாட்களாவது நிம்மதியாக இருக்கட்டும். 

ஆனால், அன்று பேரறிவாளன் சொன்ன வார்த்தைகளில் உள்ள விரக்தியை சுமந்து கொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் இப்போதும் இந்த நாட்டிலுள்ள சிறைகளுக்கு பின்னால் வாடிக் கொண்டிருக்கின்றார்கள். என்ன நடந்தது என்பதை அறியாமலேயே திடீரென்று ஒரு நாள் பயங்கரவாதிகளாகவும் கொலைகாரர்களாகவும் சித்தரிக்கப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள் அவர்கள். அவர்களில் பலரும் துன்பப்படும் சக மனிதர்களின் துயரங்களில் பங்கெடுத்தவர்கள். பேரறிவாளனின் விடுதலையை கொண்டாடக்கூடிய இந்நேரத்தில் நிரபராதிகளாய் சிறையில் உள்ளவர்களையும் நாம் நினைவு கூற கடமைப்பட்டிருக்கின்றோம். அவர்களுக்கும் தாயும் மனைவியும் மக்களும் உண்டு. ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்ற வாசகத்தை தலைப்பாக கொண்டிருக்கின்ற என் நாட்டில்தான் மக்களுக்காக பாடுபட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக  சிறைகளிலேயே பலர் மரணங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அரசின் சுயலாபங்களுக்காக போலி குற்றச்சாட்டுகளால் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர்கள், நீதிமன்றத்தால் நிரபராதிகள் என விடுதலை செய்யப்படுகின்ற பொழுது சிறையில் கழித்த அந்த நாட்களுக்கு யார் பதில் சொல்வார்கள்?

மகனின் பரிவை, கணவனின் அருகாமையை, தந்தையின் பாசத்தை இழந்து தவிப்போருக்கு யார் ஆதரவளிப்பார்கள்?

சமூகத்தில் அவர்கள் இழந்த கண்ணியத்தை, மரியாதையை யார் திருப்பித் தருவார்கள்?

பேரறிவாளனின் விடுதலை இவர்களுக்கான விடுதலையின் துவக்கமாகவும் அமையட்டும்.

K.S. அப்துல் ரஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *