மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனைகளின்’ பின்பலத்தில்,  மக்கள் நல அரசியலின் முழக்கங்களின் ஊடாக உருவானதுதான் இந்தியா எனும் நமது நாடு. கால ஓட்டத்தில் ‘சத்திய சோதனைகளின்’ பாதை அசத்தியத்தின் இராஜபாட்டையாக மாறிவிட்டது. மக்கள் நல அரசியல், சில ஆதிக்க சக்திகளின் சுயநல அரசியலாக மாறிவிட்டது. அதன் பலனை இந்த நாடு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. உண்மைகளை பொய்களாக்கி, உணர்வுகளை மட்டுமே மையமாக்கி மக்களை ஏமாற்றும் பின் சத்தியக் காலம் (Post Truth era) இது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் ஜே பி நட்டா, எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்ப்பது என்ற பேரில் அவர்கள் நாட்டை எதிர்க்கிறார்கள் என்று கூறியுள்ளார். ஆனால் உண்மையில், மோடி அரசின் குறைபாடுகள் கொண்ட  கொள்கைகளையும் தோல்விகளையும் விமர்சிப்பதையெல்லாம் தேச துரோகமாக சங்பரிவார் கும்பலும் பாசிச பாஜகவும் கட்டமைத்து வருகிறது.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் கொரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட போதும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போதும் அவர்களின் இந்த போலித்தனம் வெளிப்பட்டது. உண்மைகளையும் போலிகளையும் தனித்தனியாக அடையாளம் காண முடியாத வண்ணம் நாடு குழப்பத்தில் ஆழ்த்தப்படுகின்ற வேளையில், நீதியை காப்பாற்ற வேண்டிய சட்டம் நீதி மறுப்பிற்கு துணை போகிறது. இந்த முரண்பாட்டின் வெளிப்படையான உதாரணம்தான் சில நாட்களுக்கு முன்பு  உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு. இந்திய சட்டத்துறை முற்று முழுதாக சுதந்திரமாகவும் நீதியின் அடிப்படையிலும் இயங்குகிறது என்று ஜெர்மனியிலே இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரமணா முழங்கிய அதே வேளையில், இங்கு சகியா ஜாப்ரியின் மனுவை தள்ளுபடி செய்து, டீஸ்டா செதல்வாட்டிற்கும் ஆர் பி ஸ்ரீ குமாருக்கும் சஞ்சய் பட்டுக்கும் எதிராக கருத்துக்களை கூறி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பெரும் விவாதத்தை உருவாக்கியது.

நீதி மறுப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு அளித்தவர்களுக்கு சட்டப்படி அறிவிக்கை கூட அளிக்காமல், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில்   டீஸ்டா, ஶ்ரீ குமார் மீது  குற்றம் சுமத்தி  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பு இங்கே நீதியின் அறத்திற்கு எதிராக  நிற்கிறது. இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பையும் இதே காலகட்டத்தில் மற்றொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும். நுபுர் சர்மா நடத்திய நபி நிந்தனைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நுபுர் சர்மாவுக்கு எதிரான கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியது.

டீஸ்டாவிற்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் கருத்து தீர்ப்பின் ஒரு பகுதியாக இருந்தது. மேலும் அரசு டீஸ்டாவை வேட்டையாடுவதற்கும் அது பயன்பட்டது. ஆனால் நுபுர் சர்மாவிற்கு எதிரான  ( நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற) நீதிமன்றத்தின் கருத்து ஒரு அலங்கார பயன்பாடாக மட்டுமே இருந்தது. அதைத்தொடர்ந்து எவ்வித கைது நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நீதிமன்ற தீர்ப்புகளும் அரசின் நடவடிக்கைகளும் சட்டப்படி இயங்குகிறது என்று சொல்லப்பட்டாலும், அங்கே நீதி நடைமுறைப்படுத்தப்படுகிறதா? காப்பாற்றப்படுகிறதா? என்று ஐயப்பாடு எழுகிறது.  சட்டங்களின் போர்வையில் நீதி புறக்கணிக்கப்படுகின்ற பொழுது, அதை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சட்ட வல்லுனர்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் உண்டு. அதைக் குறித்து அவர்கள் ஆய்வு செய்ய வேண்டிய தேவை இருக்கிறது.

சட்டபூர்வமாக என்ற போர்வையில் சமூகத்தில் நடைபெறும் பல விஷயங்களும் அநீதியின் அடையாளங்களாக இருந்ததை வரலாறு நமக்கு அடையாளப்படுத்துகிறது. அவ்வாறான பல அநீதிகளை பல நாடுகள் திருத்தி உள்ளன. தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை இன ஆதிக்கமும் இன வேறுபாடும் சட்டபூர்வமானதாகவே இருந்தது. சட்டத்தின் அடிப்படையில்தான் நாஜி ஜெர்மனியில் யூத இன வேட்டை நடைபெற்றது. சூரியன் மறையாத ஆங்கில சாம்ராஜ்யமும் அவர்களின் ‘சட்டத்தின்’ அடிப்படையில் தான் இயங்கியது. இன்றைக்கு பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்து இயங்கும் இஸ்ரேலும் அவர்களின் சட்டப்படி தான் இயங்குகிறது. சட்டம் அதிகாரத்தின் மொழியும் ஆயுதமும் ஆகும். அது நீதியின் அடிப்படையில் இயங்குகின்ற பொழுதுதான் மானுடமயமாகும். இன்றைக்கு இந்தியாவில் பல வழக்குகளிலும் அரசு சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறது. தங்களது நோக்கத்தை அடைவதற்குண்டான ஆயுதமாக அதை கையாளுகிறது.

அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உரிய விளக்கங்களை அளித்து, சட்டத்தின் மறைவில் திணிக்கப்படும் அநீதிகளை நீதிமன்றங்கள் மாற்றி அமைக்க வேண்டும். தேசத்துரோக வழக்குகளின் விஷயத்தில் நீதிமன்றம் அவ்வாறான ஒரு தலையீட்டை சில நாட்களுக்கு முன்பு நடத்தியது. தேசத்துரோக சட்டத்திற்கு தடை விதித்தது. அதே நேரத்தில், தேர்தல் பாண்ட் விஷயம் தொடர்பாக நீதிமன்றம் காலதாமதம் செய்து கொண்டிருக்கின்றது. தேர்தல் பாண்ட் தொடர்பாக அநியாயங்களும் ஊழல்களும் வெளிப்படையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வேளையில் நீதிமன்றத்தின் தாமதம் இந்திய அரசியல் களத்தை மேலும் சிக்கலுக்கே ஆளாக்கும். நீதிமன்றத்தில் அரசு தரப்பு கை மேற்கொள்ளும் இரட்டை வேட நிலைப்பாடு நீதியை நிறைவேற்றுவதில் பெரும் தடையாக உள்ளது. வழக்கை ஏற்றுக் கொள்வதிலும் விரைவாக முடிப்பதிலும் அரசின் விருப்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இங்கேயும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. ஆனால்,  நீதி தோற்கிறது.

பழைய கால திரைப்பட துணுக்கை ட்வீட் செய்ததற்காக, ஒரு போலியான ட்விட்டர் கணக்கின் மூலமாக (fact Checker) முஹம்மது ஜுபைர் மீதுபுகார் அளிக்கப்பட்டது. வெளிவரும் செய்திகளின் உண்மை தன்மையை ஆய்வு செய்து வெளியிட்டு வருபவர்தான் ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர். ஆனால் ஒரு போலி ட்விட்டர் கணக்கின் மூலமாக வந்த புகார் மனுவை, முஹம்மது ஜுபைரை வேட்டையாடுவதற்கான ஆயுதமாக அரசு பயன்படுத்துகிறது. அரசு தவறாக பயன்படுத்துவதற்கு ஏதுவான ஏராளமான சட்டங்கள் நமது நாட்டில் உள்ளது. முன்னாள் காவல்துறை அதிகாரிகளான சஞ்சய் பட்டிருக்கும் ஆர்பி ஸ்ரீ குமாருக்கும்  எதிராக சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், அதன் மறுபக்கத்தில் சட்டங்களும் நீதிகளும் காற்றில் பறக்கவிடப்படுகிறது. கும்பல் தாக்குதல்களுக்கும் கொலைகளுக்கும் எதிராக நடவடிக்கைகள் எடுக்கச் சொல்லி 2018ல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்திருந்தது. ஒரு வருடத்திற்கு பிறகும் ஒன்றிய, மாநில அரசுகள் அந்த தீர்ப்பையும் வழிகாட்டுதல்களையும் நடைமுறைப்படுத்தவில்லை என்று சொல்லி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் மூன்று வருடங்களான பிறகும் அவ்வழக்கு கேட்பாரற்று கிடைக்கிறது. அடிக்கடி செய்தித்தாள்களில் செய்திகளாக நம்மால் பார்க்கப்பட்டு கடந்து செல்லப்படும் போலி காவல்துறை மோதல்களும் (False Encounter) நஜிப்பை போன்று காணாமல் போவதும் வெறுமனே விசாரணை கைதிகளாய் ஆண்டாண்டு காலமாக அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டு கிடப்பவர்களும் நம்முடைய சட்டமுறைமைகளின் அநீதிக்கு சாட்சிகள் ஆகும். குடி உரிமைகளையும் மனித உரிமைகளையும் மறுக்கும் ஆயுதங்களாக அனேக சட்டங்கள் நமக்கிடையே உள்ளது. ஆனால், நீதியை நிலை நிறுத்துவதற்குண்டான அமைப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. இந்த நீதிக் குறைபாடு (Justice Deficit) நாட்டின் ஒருமைபாட்டிற்கும்  அமைதிக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறும்.

நீதி மறுக்கப்படும் இடத்தில், நீதி இல்லாத இடத்தில் அமைதியும் இருக்காது. அமைதி இல்லாத இடத்தில் வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்காது. நீதியை நிலைநாட்ட, இந்த குறைபாட்டை மாற்றி அமைக்க நம்முடைய கண்காணிப்பும் நீதிமன்றத்தின் விழிப்புணர்வும் காலத்தின் தேவையாகும்.

– K.S. அப்துல் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *