இந்தியாவில் கொரானா இரண்டாம் அலை அதிதீவிரமாக உயிர்களை பலிவாங்கிக் கொண்டுருப்பதற்கு மதம் சார்ந்த நிகழ்வுகளும் அரசியல் அணிதிரட்டல்களும் முக்கிய காரணிகள் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. அரசியல் அணி திரட்டல்களுக்கு ஆட்சி, அதிகாரம் உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கலாம்.. ஆனால் மத வழிபாட்டு கூடல்களில் பிடிவாதம் பிடிக்க என்ன நோக்கம் இருக்க முடியும்?

சாலையோரம் பிணங்கள்.. வீடுகள் தோறும் மரண ஓலங்கள்.. நிச்சயமற்ற வாழ்க்கை முகத்தில் அறையும் போதாமைகள்.. கொரானா கொடுந்தொற்றுக் காலத்தின் இந்த கையறு நிலை, மக்களின் எந்த நம்பிக்கையையும் உறுதி செய்யாமல் விரக்தியின் விளிம்புக்கு தள்ளி விட்டிருக்கிறது. கொரானா உயிர்கொல்லி நோய் என்பது எல்லோருக்கும் தெரிகிறது. மக்கள் நெருக்கமாக புழங்கும் இடங்களில் அது வேகமாக பரவுகிறது என்பதும் அனைவருக்கும் தெரிகிறது. விளைவுகளும் புரிகிறது. இருப்பினும் சமய கேந்திரங்களில் வழிபாட்டிற்கு மக்கள் ஆர்வமாக குமிகிறார்கள். வழிபாட்டு உரிமைக்காக குரல் கொடுக்கிறார்கள். ஏன் இப்படி அழிச்சாட்டியமாக நடக்கிறார்கள்? மதங்கள் இந்த முட்டாள்தனங்களைத் தானா போதிக்கின்றன? இந்த கேள்விகளுக்கு விடை காண்பதற்கு முன் உலகெங்கும் மத வழிபாட்டுத் தலங்களில் என்ன நடக்கிறது என்பதை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு, மலேசிய அரசு வரும் ஈகைப் பெருநாளன்று ஆயிரம் பேர் தொழுகை நடத்தும் பள்ளியில் ஐம்பது பேர் மட்டும் தொழுகை நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது. ஆயிரத்துக்கும் குறைவான கொள்ளளவு உள்ள பள்ளியில் வெறும் இருபது பேர் மட்டும் தொழுகலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.. ஆனால் நம் பாரத பிரதமர் கோவிட் அச்சுறுத்தல் கத்தியாய் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த காலத்தில் லட்சக்கணக்கான பேர்கள் அன்றாடம் கூடிய  கும்பமேளா உற்சவத்திற்கு எழுந்த விமர்சனத்தைக் கண்ட பிறகு, கும்பமேளா நிகழ்வை விரைவாக முடித்துக் கொள்ள சாமியார்களிடம் வேண்டுகோள் விடுத்தார். எல்லாவற்றிலும் ஒற்றை அதிகாரத்தை குறிவைத்து நகரும் ஆளுகை ஏன் மத பீடங்களுக்கு முன் பம்முகிறது. ஏனெனில் இந்த ஆட்சிக்கான சாற்றுக்காலே மத பீடங்கள் தான். இவர்களுடைய அதிகாரம் மத நிறுவனங்களுக்கு முன் செல்லாது. அவையே இவர்களை அமோகமாக வாழ வைத்துள்ளன. மத நிறுவனங்களின் (அது எந்த மதத்தைச் சார்ந்த நிறுவனமாக இருந்தாலும்) விடுதல் – தொடுதல்களின் பலன்களை ஆட்சியாளர்கள் பரவசத்தோடு அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மை மதத்தின் நேர்மறைகளையும் சிறுபான்மை மதத்தின் எதிர்மறைகளையும் இவர்கள் அநுகூலமாக்கிக் கொள்கிறார்கள்.

ஆட்சியின் நலன் இதை அனுமதிக்கிறது என்றால் மக்களுக்கு எங்கே போனது புத்தி என்ற அடுத்த கேள்வி எழக்கூடும். இதற்கு நாம் உலகளாவிய நிலையில் பெருமதங்களாக இருக்கும் கிருத்துவ – இஸ்லாமிய புனிதத் தலங்களில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். வருடந்தோறும் 50 லட்சத்துக்கு மேல் யாத்திரீகர்கள் வருகைத் தரும் வாட்டிகன் தேவாலயம் 2020 முதல் ஏறக்குறைய வெறிச்சோடி கிடக்கிறது. அதே போல் வருடந்தோறும் ஹஜ் பயணத்தில் 30 லட்சம் மக்களை ஈர்க்கும் முஸ்லிம்களின் புனிதத் தலமான மெக்காவில் 2020 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை ரத்து செய்யப்பட்டது. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 50 லட்சம் மக்கள் குவியும் உம்ரா பயணம், இப்போது மிக குறைந்த எண்ணிக்கையுடன் பல்வேறு நிபந்தனைகளுடன் முன்பதிவுக்குட்பட்டு (slot system) நடைபெறுகிறது. மேலும் புனித சுற்றுலாவில் பெரு வருவாய் குவிக்கும் சவூதி அரேபியாவிற்குள் தடுப்பூசி போடாமல் ஒருவர் கூட நுழைய முடியாது.

ஆனால் மறுபுறம் மத பெரும்பான்மைவாத, வலதுசாரி தேசங்களில் என்ன நடக்கிறது. தடுப்பூசி போடுவதில் முனைப்புடன் ஈடுபட்டு கொரானாவைக் கட்டுப்படுத்த வீரியத்துடன் செயல்படும் இஸ்ரேலிய அரசாங்கம் சென்ற இரண்டு ஆண்டுகளாக யூத திருநாளான ப்யூரிம் பண்டிகை கொண்டாட்டங்களில் பெருங்கூட்டம் கூட அனுமதித்தது. அதே போல் கடந்த ஜனவரியில் இறந்து போன இரண்டு யூத குருமார்களின் (rabbies) இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். இவை மீண்டும் அங்கே கொரானா பரவ காரணமாக அமைந்தது. 

இதே மத தேசியவாத நிலையில் தான்   இந்தியாவும் தனது பெரும்பான்மை மத கொண்டாட்டங்களை எந்த தடையுமின்றி அனுமதிக்கத் தொடங்கியது. அதில் மிக முக்கியமானது உலகிலேயே அதிக மக்கள் குவியும் மகா கும்பமேளா உற்சவம். இது மட்டுமன்றி நாடெங்கும் ஹோலி பண்டிகைகள், நவராத்திரி விழாக்கள் என்று அமோகமாக நடந்தன. இவை எவற்றையும் கண்டும் காணாமல் இருந்த அரசு தான் கடந்த ஏப்ரலில் எல்லா வித மத கூடல்களும் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படும் என்று ஆணை பிறப்பித்திருந்தது.. இந்த ஒருதலைபட்ச அணுகுமுறை பிற மத பின்பற்றாளர்களையும் போர்க்கொடி தூக்க வைக்கிறது.

இதில் ஒளிந்திருக்கும் சமய உணர்வு பொது புத்தியை பேதலிக்கச் செய்கிறது.. இவற்றிலிருந்து ஒன்றை நீங்கள் எளிமையாக புரிந்து கொள்ள முடியும். எந்த அரசு மக்கள் நலம் பேணுவதில் வெற்றி பெறுகிறதோ, அது தன் மக்களை மூட பக்தியை விட்டும் விடுவிக்க முடிகிறது. தங்களின் நலன்களை பாதுகாக்கும் மக்களும் அரசுடன் ஒத்துழைக்கிறார்கள். அவர்களால் புரோகித, சமய தரகர்களின் கிறுக்குப் பிடிகளை (clutches) விட்டும் இறை நம்பிக்கையை சுதந்திரமாக விடுவித்துக் கொள்ள முடிகிறது. அதற்கு கையாலாகாத அரசுகள் மக்களை மழுங்கடிக்க மதத்தை பயன்படுத்திக் கொள்கின்றன. மதத்தை விட்டு அரசியலை விலக்கி வைக்கும் அமைப்பை கைகொண்ட நாடுகள் இந்த உணர்வு பெருந்தீயை இலகுவாக கடக்கின்றன.. ஐரோப்பாவின் தேச அரசுகளின் பாணியை தனது பொருளாதார நலன்களுக்காக வரிந்து கொண்ட அரபு தேசங்களும் மக்களுக்குத் தேவையானதை செய்து கொடுத்துவிட்டு ஆவேசமான வெகுமக்கள் பக்தியைக் (public piety) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றன.

அப்படி செய்யத் தவறும் ஊழல் அரசுகள் இந்த பெருந்தீயை மேலும் விசிறி விட்டு குளிர்காய்கின்றன.. இந்தியாவில் இரண்டாவது அலை மோசமாக மாறியதற்கு மக்களே காரணம் என்று நம் பிரதமர் தட்டைத் திருப்பிப் போடவும் இதுவே துணையாகிறது.. கஷ்டம் வந்தால் தான் கடவுளை அதிகம் தேடுகிறார்கள் என்பது ஒரு மனவியல் முரண். மனிதன் ஒரு சார்பு உயிரி. (Social animal) அவனால் தனித்து இயங்கவே முடியாது. திருக்குர்ஆனின் கடைசி அத்தியாயம் இப்படி கூறுகிறது.

//நீர் கூறுவீராக: நான் காவல் தேடுகிறேன்.

மனிதர்களின் காப்பாளனிடம்..

(அவனே) மனிதர்களின் அரசன்;

(அவனே) மனிதர்களின் நாயன்.//

மனிதன் தனது தேவைகளை மூன்று பிரிவினரிடம் தான் கேட்க வேண்டியிருக்கிறது.. ஒன்று அவனது காப்பாளன், அடுத்து அவனது அரசன், மூன்றாவது அவன் வணங்கும் இறைவன்.. மனிதர்களின் உதவிதேடல் எல்லா சூழலிலும் இந்த மூன்று பிரிவினரில் அடங்கிவிடும். எப்போதும் எல்லா நிலையிலும் இறைவனை சார்ந்து நிற்பவர்களை விட்டு விடுவோம். சாமானிய மனிதனின் பார்வையில் பெருந்தொற்று காலத்தில் அரசு தன்னைக் காப்பாற்றும் கடமையைச் செய்யும் என்று அவன் எதிர்பார்க்கிறான். இங்கே அந்த அரசு அவனை மணியடிக்க சொல்கிறது.. விளக்கேற்ற சொல்கிறது.. தியானத்தில் மெய்மறக்கச் சொல்கிறது. இதுதானே எல்லா ஆலயங்களிலும் நடக்கிறது. இப்போது சொல்லுங்கள்.. இந்தியர்கள் மத விழாக்களில்  லயித்துப்போவதில் ஏதேனும் தவறு காண முடியுமா? 

இங்கே வழிபாட்டுத் தலங்கள் என்பவை மதம் சார்ந்த சடங்காச்சார நிலையங்கள் என்பதைத் தாண்டி அவை கூடுதலுக்கான இடங்களாக (Places for congregation)வும் இருக்கின்றன. அப்படிப்பட்ட கூடுகைகள் மனிதர்களுக்கு மன நிம்மதியை (solace) தருபவையாக உள்ளன. குறிப்பாக அதிகார மையங்களால் கைவிடப்பட்டு கையறு நிலையில் நிறுத்தப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையை வலுப்படுத்தும் கேந்திரங்களாக வழிபாட்டுத் தலங்கள் திகழ்கின்றன. இந்த இடத்தில் கார்ல் மார்க்ஸின் “மதம் மக்களின் அபின்” எனும் புகழ்பெற்ற வாக்கியத்தை நினைவுபடுத்திக் கொள்ளலாம்.  ஆனால் அதை பெரும்பாலும் மதம் மக்களை மயக்கி, போதைக்கு ஆட்படுத்தி வைத்திருப்பதாக பலர் சுருக்கமாக புரிந்து கொள்கிறார்கள்.

“மதம் என்பது ஆத்ம உயிர்ப்பற்ற ஒரு நிலைமையின் உயிர்ப்பாக இருப்பதுபோல், ஒடுக்கப்பட்ட மனிதனின் பெருமூச்சாக, இதயமற்ற உலகின் இதயமாக உள்ளது” என்ற மார்க்ஸின் கருத்துக்களை முழுமையாக உள்வாங்கினால், சமய சடங்குகள் எங்ஙனம் மனிதர்களின் ஆசை – நிராசைகளுக்கான புகலிடமாக மாறிப் போகிறது என்பதை விளங்கலாம். கட்டுக்கடங்காத ஆவேச பக்தியுணர்வைக் கிண்டிக் கிளறுவதில் தேர்ச்சி பெற்ற அரசு மத விழாக்களின் மூலம் ஒரு இளைப்பாற்று வெளியை (comfort zone) உருவாக்கிவிட்டு தன் பொறுப்பை விட்டும் தந்திரமாக விலகிக் கொள்கிறது. மருத்துவமனை வாசல்களிலும் சாலையோரங்களிலும் மருத்துவம் கிடைக்காமல் கதறும் மக்களைப் பார்க்கும்போது பீறிடும் கட்டுக்கடங்காத கோபம் இந்த பக்திப் பரவசத்தில் அடங்கிப் போகிறது.

லாஜிக் தியரியில் உள்ள “ஆக்கம்’ஸ் ரேசர்” (Occam’s Razor) தத்துவம் குறித்து சமீபத்தில் நண்பர் விளக்கியிருந்தார்.

இந்தக் கோட்பாட்டின் படி, ஒரு பிரச்சினையில் முடிவெடுக்க முடியாமல் பல சாத்தியக்கூறுகள் இருக்கும் பொழுது இருப்பதிலேயே எளிய தேர்வுதான் பெரும்பாலும் சரியானதாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த அடிப்படையில் கேட்க நாதியின்றி அநாதையாக எரியும் உடல்களைக் காணும்போது நெஞ்சம் பதறி, நமக்கு என்ன நிலையோ என்று இயலாமையில் உழலும் சாமானியனுக்கு பக்தி என்பதும் ஆக்கம்ஸ் ரேசராகவே வேலை செய்கிறது.

கடவுள் நம்பிக்கை மனிதர்களின் அன்றாட அவலங்களை விட்டும் மன நிம்மதியைத் தருகிறது.. மக்கள் நலனில் அக்கறை கொண்ட பரோபகார அரசுகள் மத நிறுவனங்களை விட்டு மக்களை விடுவிக்கும்.. ஆதிக்க நலனில் தோய்ந்த அடக்குமுறை அரசுகள் மூடபக்தியை வளர்த்து அதை ராஜ விசுவாசமாக்கிக் கொள்கின்றன. பாரதப் பண்பாடு பற்றி வாய்கிழிய பேசும் இவர்கள் தாம், சந்தனத்தைக் கரைத்து கண்ட இடத்தில் பூசிக் கொள்கிறார்கள்.. தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு வாய்க்கரிசி போட்டு விட்டு 1450 கோடியில் கரும காரியங்கள் பண்ணுகிறார்கள்.. சிதைகளில் நெருப்பெடுத்து விளக்கேற்றுகிறார்கள்.. எள்ளும் தண்ணீரும் இறைக்க மறுத்துவிட்டு அக்கார அடிசிலோடு அறுசுவை பெருவிருந்து படைத்து கூடி களிக்கிறார்கள்.. பிராணவாயு இல்லாமல் பிராணனை விடும் மனிதர்களைத் தூக்கி கங்கையில் வீசிவிட்டு பாலாபிஷேகம் செய்கிறார்கள்.. குண்டி காய்கிறது.. இவர்கள் பன்னீரில் வாய்க் கொப்பளிக்கிறார்கள்.. மனிதர்களைப் பற்றி கவலையே படாமல் மாடுகளுக்கு ஆக்ஸி மீட்டர் பொருந்துகிறார்கள்.. எல்லா தார்மீக நெறிகளையும் காலில் போட்டு மிதித்து இழவு வீட்டில் ஓங்காரமாக சிரிக்கிறார்கள்.

தத்துவயியல் அறிஞர் ஜே.கே. சொன்னார்: ஏழைகளையும் ஏதிலிகளையும் அரசும், அதன் ஊழியர்களும், பொதுச் சமூகமும், கடவுளும் காப்பாற்றுவார்கள் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.. ஆனால் அவர்களை யாரும் காப்பாற்றப் போவதில்லை… உங்களுடைய அச்சத்தைத் தணித்துக் கொள்ளும் இந்த நல்லெண்ணத்தின் பொருட்டு எதையும் கேள்வி கேட்பதை விட்டும் தங்களை விடுவித்துக் கொள்கிறீர்கள்.. கடவுளை நம்புவதோடு வேலை முடிந்துவிடுகிறது என்பதில் எந்த அர்த்தமும் இல்லை..

உண்மையில் இங்கே கடவுளை நம்பும் அந்த ஒற்றை நம்பிக்கை மட்டும் தான் வாழ்வுரிமைக்கான குறைந்தபட்ச உத்திரவாதத்தை சாமானியனுக்குத் தந்திருக்கிறது. மொத்த நிர்வாகமும் சீர்குலைந்து, நம்பிக்கையைத் தொலைத்துவிட்ட அரசு இறையியலையும் தனது தூண்டில் முள்ளாக மாற்றிக் கொஆண்டு குழம்பிய குட்டைகளில் மீன் பிடிக்கிறது. அந்த தூண்டிலில் விடுதலை இறையியல் திமிங்கிலம் சிக்குவதில்லை..

லியாகத் அலி

சமூக செயற்பாட்டாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *