1528-ல் முகலாய அரசர் ஸஹீருதீன் பாபரின் கவர்னர் மீர்பாகியால்,  இன்று அயோத்தியா என்று அழைக்கப்படக்கூடிய பைசாபாத்தில் பாபரி மஸ்ஜித் என்ற பெயரில் பள்ளிவாசல்  கட்டப்பட்டது. அப்பள்ளி கட்டப்பட்ட நாள் முதல் 1949 டிசம்பர் 22 இரவு வரை வழிபாடுகள் தொடர்ந்து நடந்து வந்தது. மறுநாள் காலை அதிகாலைத் தொழுகைக்காக பள்ளிக்கு வந்த முஸ்லிம்கள் அங்கு பள்ளியின் மையத்தில் சிலை வைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்கள். பதறிப்போன முஸ்லிம்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் அளித்தார்கள். அன்றைக்கு ஃபைசாபாத் மாவட்ட ஆட்சியாளராக இருந்த கேரளாவைச் சேர்ந்த கே கே நாயர் ஆச்சரியப்படத்தக்க வேகத்தில் செயல்பட்டு சிஆர்பிசி145 இன் படி தடையை போட்டார். பள்ளிவாசல் அரசின் கட்டுப்பாட்டுக்குள்  வந்தது. இதை எதிர்த்து பள்ளியை நிர்வகித்து வந்த மத்திய சன்னி வக்ஃப் போர்டு உடனடியாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள்.  இந்து அமைப்புகளும் நீதிமன்றத்திற்கு  சென்றார்கள். இதனால் இறுதியில் இவ்வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு பல்லாண்டு காலமாக நிலுவையில் இருந்த காரணத்தினால் பூட்டிய பாபரி மஸ்ஜிதை முஸ்லிம்களுக்கு வழிபாட்டிற்காக திறந்து விடாமலே வைத்து இருந்தனர். ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்த காலத்தில், 1976 பிப்ரவரி 6 அன்று   பைசாபாத் மாவட்ட நீதிபதியாக இருந்த கே.எம். பாண்டே, முஸ்லிம்களிடமும் மத்திய சன்னி வக்பு போர்டுடனும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக இந்துக்களுக்கு வழிபாட்டிற்காக பள்ளியை திறந்து விட்டார். அதற்குப் பிறகு இந்த நாட்டில் நடந்த போராட்டங்களின், கலவரங்களின், ஆட்சி மாற்றங்களின் வரலாறுகளை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாட்டில் இந்து – முஸ்லிம் பிரிவினைக்கு இந்த பிரச்சனை பெரிதும் பயன்படுத்தப்பட்டது. அதனூடாக சங்பரிவாரால் அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது. அதைத் தொடர்ந்து இந்த நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களை எல்லாம் குன்றின் மேல் தீபம் போல் கண்கள் இருப்பவர்கள் எல்லோராலும் காண முடியும். 2019 நவம்பர் 9 அன்று அன்றைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமைப்புச் சட்ட அமர்வு பாபரி மஸ்ஜித் இருக்கும் இடத்தில் கோவிலோ வேறு ஏதாவது வழிபாட்டுத்தளமோ இருந்ததற்கான எவ்வித ஆதாரமும் நீதிமன்றத்திற்கு முன்பாக சமர்ப்பிக்கப்படவில்லை என்று தெளிவுபடுத்தினார்கள். இருப்பினும் பெரும்பான்மை சமூகத்தின் நம்பிக்கையும் உணர்வையும் மதிக்கும் வண்ணம் பாபரி மஸ்ஜித் இருந்த நிலத்தை அவர்களுக்காக வேண்டி வழக்கு தொடுத்தவர்களிடம் ஒப்படைப்பதாக வித்தியாசமான தீர்ப்பை அளித்தார்கள். குற்றம்சாட்டப்பட்டவர் குற்றம் செய்யவில்லை. எனினும் எதிர் தரப்பின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கும் விதமாக அவருக்கு தண்டனை அளிக்கப்படுகிறது என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனமோ அதைப் போன்றுதான் இந்த தீர்ப்பும் அமைந்தது. உடைக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் உண்மையான உரிமையாளர்கள் உடைந்த மனதோடும் குமுறும் வேதனையோடும் தீர்ப்பை ஏற்றுக் கொண்டார்கள்.  நாட்டில் ஒரு இடத்தில் கூட முஸ்லிம்களிடமிருந்து எவ்வித பிரச்சனைகளும் உருவாகவில்லை. 1947 ஆகஸ்ட் 15 அன்று நாட்டில் எங்கெல்லாம் வழிபாட்டுத்தலங்கள் யாருடைய கைகளில் உள்ளதோ அவர்களுடைய உரிமையின் கீழேயே அவைகள் தொடரும் என்றும் எவ்வித தகராறுகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் அனுமதி இல்லை என்றும் ஒரு சட்டத்தை 1991 ஏப்ரலில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருந்தார்கள்.   இச்சட்டத்திலிருந்து சர்ச்சைக்குரிய பாபரி மஸ்ஜித் மட்டுமே விதிவிலக்காக இருக்கும் என்றும் உறுதிபட தெளிவுபடுத்தினார்கள். பாபரி மஸ்ஜிதை ராமர் கோவிலுக்காக விட்டுக்கொடுத்து அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பிலும் அந்த  சட்டத்தைக் குறித்து குறிப்பிட்டுள்ளார்கள். அச்சட்டத்திலும் உச்சநீதிமன்றத்திலும் நம்பிக்கை வைத்தவர்களாக முஸ்லிம்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அமைப்புச் சட்டம் உறுதியளிக்கும் மத சுதந்திரத்திற்கு சிறிதளவாவது மரியாதை இருக்கும் எனில் இந்த சட்டத்தையாவது மதிப்பார்கள் என்று அவர்கள் கருதினார்கள்.

ஆனால், இப்போது என்ன நடக்கிறது? காசி விஸ்வநாத ஆலயத்திற்கு  அருகில் நூற்றாண்டுகளாய் செயல்பட்டு வரும், அஞ்சுமன் இன்திசாமிய மஸ்ஜித் நிர்வாகக் குழுவின் கீழ் உள்ள கியான் வாபி மஸ்ஜித் பழைய சிவன் கோவிலாக இருந்தது என்று சில இந்துத்துவ பயங்கரவாதிகள் உரிமை கோர ஆரம்பித்துள்ளனர். அங்கே தங்களுக்கு வழிபட அனுமதி வேண்டும் என்று கேட்டு 5 இந்துப் பெண்கள் தாக்கல் செய்த மனுவின் மீது 2022 ஏப்ரல் 26 அன்று வாராணசி சிவில் நீதிபதி ஒரு வீடியோ சர்வே குழுவை நியமித்து ஆணையிட்டார். அக்குழு தனது பணியை முடித்து அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் முன்னரே, பள்ளியில் ஒழு செய்யும் இடத்தில் சிவலிங்கத்தை பார்த்தோம் என கூச்சலிட ஆரம்பித்திருக்கிறார்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள்.

உத்திரபிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா சிவலிங்கத்தை கண்டுபிடித்ததில் மகிழ்ச்சியை தெரிவித்து ட்விட்டர் செய்துள்ளார். ‘எவ்வளவு மறைத்து வைத்தாலும் உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும்’ என்று அவர் பதிவிட்டுள்ளார். ‘புத்த பூர்ணிமா அன்று சிவலிங்கம் வெளிவந்தது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று அவர் கூறியுள்ளார். சிவனுக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு என்பது எனக்கு தெரியவில்லை. ஒருவேளை சிவனின் அவதாரம்தான் புத்தன் என்று சொல்கிறாரோ என்னவோ.

ஆனால் அவர்கள் கண்டுபிடித்ததாக சொல்லும் சிவலிங்கம் என்பது ஒரு லிங்கம் அல்ல என்றும், ஒழு செய்வதற்காக கட்டப்பட்டுள்ள நீர் தொட்டியில் உள்ள ஒரு நீரூற்று மட்டுமே என பள்ளி நிர்வாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

வாராணசி மூத்த பத்திரிக்கையாளரும், காசி பத்திரிக்கையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ராஜ்நாத் திவாரி இந்துத்துவ வழக்கறிஞர்களின் சிவலிங்க கண்டுபிடிப்பை  புறந்தள்ளினார். “காசி விசுவநாத ஆலயம் – கியான் வாபி மஸ்ஜிதுக்கு அருகில்தான் எனது வீடு இருந்தது.  தோளோடு தோள் நிற்கும் இந்த இறை ஆலயங்களின் முற்றத்தில்தான் எனது சிறுவயது செலவழிந்தது.  இங்கு மஸ்ஜிதுக்கும் கோவிலுக்கும் வருகை தரும் பக்தர்கள் அனைவரும் சகோதரத்துவத்துடந்தான் பழகி வந்தனர். அயோத்தியா விவகாரம் பூதாகரமாக பற்றி எரிந்து கொண்டிருந்த வேளையில்தான் காசி ஆலயம் தொடர்பான புதிய வரலாற்று உருவாக்கங்கள் ஆரம்பித்தது. அதன்பிறகு இரு ஆலயங்களும் இரும்பு வேலி போட்டு பிரிக்கப்பட்டது. அதுகால்வரை இரு இறை ஆலயங்களுக்குள்ளும் எல்லோருக்கும்  சென்று வர இருந்த சுதந்திரம் இப்போது பறிக்கப்பட்டு விட்டது.” இவ்வார்த்தைகளை அவர் தடுமாற்றத்துடன்தான் வெளிப்படுத்தினார். ஆனால், அதெல்லாம் பூட்டி வைக்கப்பட்டிருந்த பாபர் மசூதிக்குள் தானே தோன்றிய ராமர் சிலையை கண்டுபிடித்தவர்களின் பின்தலைமுறைகாரர்களின் காதுகளில் இதெல்லாம் விழவில்லை. அவர்களுக்கு அது ஒரு பிரச்சனையும் இல்லை. 

 வழக்கு இப்போது உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. 1991-ன் சட்டத்தை பாபர் மசூதி தீர்ப்பில் சுட்டிக் காட்டியிருந்தது உச்சநீதிமன்றம். எனவே சட்டத்தையும் சட்ட ஆட்சியையும்  கண்ணியத்தையும் பாதிக்கும் வகையில் க்யான் வாபி மஸ்ஜித் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்காது என இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் நம்புகிறார்கள். எதிர்பார்க்கிறார்கள்.

இவ்விஷயம் இத்தோடு முடிந்து விடவில்லை. அடுத்ததாக மதுராவில் உள்ள ஷாஹி ஈத்கா மஸ்ஜிதுக்கும் உரிமை கோரி நீதமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர் சில இந்துத்துவ வழக்கறிஞர்கள். ஷாஹி ஈத்கா மஸ்ஜிதுக்குள் முஸ்லிம்கள் நுழையவும், தொழுகவும் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் பள்ளியை பூட்டி சீல் வைக்க வேண்டும் என்றும் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி உள்ள இடத்தில்தான் கிருஷ்ணன் பிறந்தார் எனவும் கிருஷ்ணன் கோவிலை இடித்துதான் பள்ளியை கட்டியுள்ளனர் எனவும் கதை கட்டி வருகின்றனர். எனவே கியான் வாபி மஸ்ஜிதில் செய்ததை போல ஷாஹி மஸ்ஜிதிலும் செய்தால் இந்து மத அடையாளங்களை காண முடியும் என லக்னோவை சைலேந்திர சிங் மனு தாக்கல் செய்துள்ளார். 

 பெரும்பான்மை வாக்குகள் தங்களுக்கு கிடைக்காதோ என்று மதச்சார்பற்ற கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள அச்சமும் சங்பரிவார் அடைந்து கொண்டிருக்கும் வெற்றியை குறித்து அவர்களிடம் ஏற்பட்டுள்ள கவலையும்தான் இந்துத்துவ பயங்கரவாதிகள் நாட்டை கபளீகரம் செய்வதற்கு உதவிகரமாக உள்ளது என்ற உண்மையை இனியாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உண்மையை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள் என்றால், இப்போதாவது சங்பரிவார் முன்னெடுக்கும் செயல் திட்டங்களுக்கு எதிராக வலிமையோடு களம் இறங்கி போராட வேண்டும்.

K.S. அப்துல் ரஹ்மான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *