ஜோசப் சிரில் பாம்போர்ட் என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பொறியாளர் 1945ல் உருவாக்கியதுதான் ஜேசிபி என்ற எந்திரம். ‘ஜிஹாத் கண்ட்ரோல் போர்ட்’ என்பதுதான் தற்போது சங்கிகள் ஜேசிபி இயந்திரத்திற்கு அளித்துள்ள புதிய பெயர். முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பாசிச பாஜக அரசுகள் கையாளும் புதிய ஆயுதம் இந்த இயந்திரம். அதற்கான அங்கீகாரம்தான் பாசிச பாஜகவினர் அதற்கு கொடுத்துள்ள பெயர் மாற்றம்.

‘புல்டோசர் பாபா’ என்ற பெயரில்தான் உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அழைக்கப்படுகிறார்.  மிகவும் மரியாதையுடன் இந்தப் பெயரால் பாஜகவினர் அவரை அழைக்கிறார்கள். தனக்கு எதிரானவர்களை புல்டோசரால் அவர் எதிர் கொள்வதால் இப்பெயரால் அவர் அழைக்கப்படுகிறார். தன்னை விமர்சிப்பவர்களின், தனக்கு எதிராக செயல்படுபவர்களின் இருப்பிடங்களையும் அலுவலகங்களையும் வியாபார நிறுவனங்களையும் புல்டோசரால் இடித்துக் தள்ளும்  பழிவாங்கும் நடவடிக்கையை யோகி ஆதித்யநாத் மேற்கொண்டு வருகிறார். உத்திரபிரதேசத்தின் புல்டோசர் கலாச்சாரம் மத்தியப் பிரதேசத்திற்கும் பரவி வருவதை சென்ற வாரம் நாம் பார்த்தோம். இராமநவமி கொண்டாட்டங்களின் போது  வட இந்தியாவில் முஸ்லிம் பகுதிகளில் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மத்திய பிரதேசத்தின் குர்கான் நகரத்திலும் நடைபெற்றது. அங்கு சங்பரிவார் கும்பலின் தாக்குதல்களை எதிர்த்து நின்ற முஸ்லிம்களை கலவரம் செய்தார்கள் என்று சொல்லி காவல்துறை கைது செய்தது.  கலவர வழக்கில் கைது செய்பவர்களின் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் இயல்பாக நடக்கும். ஆனால் குர்கானில் அரசு விசித்திரமாக செயல்பட்டது. வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளும் கடைகளும் புல்டோசர்களால் இடித்து தள்ளப்பட்டது. இப்போது மத்தியபிரதேச முதலமைச்சருக்கு புதிய பெயர் கிடைத்திருக்கிறது. அது ‘புல்டோசர் மாமா’. டஜன் கணக்கான முஸ்லிம்களின் வீடுகளும் கடைகளும் அங்கே தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசமும் மத்திய பிரதேசம் கடந்து இப்போது புல்டோசர் டெல்லியை வந்தடைந்திருக்கிறது. டெல்லியில் ஜஹாங்கீர் பூரியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் என்று குற்றம் சாட்டி ஏராளமான இருப்பிடங்களும் வியாபார நிறுவனங்களும் வட டெல்லி  மாநகராட்சியால் புதன்கிழமையன்று புல்டோசரை பயன்படுத்தி இடித்து நொறுக்கப்பட்டு உள்ளது. ஆயுதப்படை காவலர்களின் உதவியோடுதான் இந்த அக்கிரமங்கள் அரங்கேறியுள்ளது. இவ்விஷயத்தை உடனடியாக ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பாக கொண்டு சென்றது. உச்சநீதிமன்றம் மேற்படி நடவடிக்கைக்கு தடை விதித்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உத்தரவு எங்களுக்கு கிடைக்கவில்லை என்று சொல்லி இடித்து தள்ளத் தொடங்கினார்கள் அதிகாரிகள். உடனடியாக வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கவனத்திற்கு மீண்டும் இவ்விஷயத்தை கொண்டு சென்றார்கள்.  உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிட்ட பிறகுதான் இடித்து தள்ளும் நடவடிக்கையை அதிகாரிகள் நிறுத்தினார்கள்.

ஹனுமான் ஜெயந்தியின் பெயரில் சில தினங்களுக்கு முன்பாக ஜஹாங்கீர் பூரியில் சங்பரிவார் கும்பல் கையில் ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்றார்கள். அதனால் அங்கு கலவர சூழல் உருவானது. ஜஹாங்கீர் பூரியில் உள்ள மக்கள் ஒருங்கிணைந்து அவர்களை எதிர்த்து நின்றார்கள். அந்த எதிர்ப்பை தாங்கமுடியாத பாசிச பாஜக அரசு அந்த கோபத்தை இதன் மூலம் தீர்த்துக் கொள்ள முனைகிறது. பாசிச பாஜக ஆளும் ஒன்றிய அரசும் வட டெல்லி நகராட்சியும் இணைந்துதான் இந்த அக்கிரமங்களை  செய்துள்ளது. ஹனுமான் ஜெயந்தி மூலம் பாசிச பாஜக சங்பரிவார் கும்பல் உருவாக்க நினைத்த கலவரம் முறியடிக்கப்பட்ட நாள்முதல் டெல்லி பாஜக தலைவர் ஒரு வேண்டுகோளை எழுப்பினார்.

ஜஹாங்கீர் பூரியில் பங்களாதேஷ் அகதிகள் சட்டவிரோதமாக அதிகமாக குடியேறி வாழ்கிறார்கள் என்றும் அப்பகுதிகளை உடனடியாக இடித்துத் தள்ள வேண்டும் என்றும் அவர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அதனது தொடர்ச்சியாகத்தான் புதன்கிழமை இந்த அக்கிரமம் அரங்கேறியது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவினால் சிலரது வீடுகளும் பொருள்களும் தப்பித்தது. ஆனால், அதற்கு முன்பாகவே ஏராளமானவர்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து விட்டார்கள்.

சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை காலி செய்வதுதான் தங்களது நோக்கமென பாஜகவினர் வாதிடுகிறார்கள். சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை காலி செய்வதற்கு சட்டப்பூர்வமான வழிமுறைகள் உண்டு. ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அவர்களது வாதங்களை கேட்க வேண்டும். இதுபோன்ற எதையும் செய்யாமல் திடீரென ஒரு நாள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களது இருப்பிடங்களை, வியாபார நிறுவனங்களை இடித்துத் தள்ளுவது பாசிசம் ஆகும். இவற்றுக்கெல்லாம் மின்சாரத்தையும் குடிநீரையும் அரசுதான் அளித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏராளமான ஏழைகள், அப்பாவி மக்கள் கஷ்டப்பட்டு உருவாக்கிய வாழ்க்கைச் சூழலிலிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுதான் நோக்கம் என்று சொன்னால், அது ஏன் முஸ்லிம்களின் இருப்பிடங்களை நோக்கி மட்டும் செல்கிறது என்பதுதான் முதன்மையான கேள்வி. டெல்லியில் ஏராளமான அப்பார்ட்மெண்ட்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பல கோவில்கள் அரசு நிலத்தில்தான் உள்ளது. இவற்றையெல்லாம் கையகப்படுத்த சொல்லி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு காலங்கள் பல கடந்து விட்டது. அவற்றை குறித்தெல்லாம் கண்டும் காணாமலும் கடந்து செல்லும் பாஜக அரசு இப்போது முஸ்லீம்களின் இருப்பிடங்களின் மீது மட்டும் கை வைக்கிறது என்று சொன்னால், அதன் நோக்கம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்பதல்ல. முஸ்லிம்களின் வாழ்வியல் சூழலை சிதைப்பதும் அவர்களை இழிவுபடுத்துவதும்தான் பாசிச பாஜக அரசின் முதன்மை நோக்கம்.

‘நீங்கள் இழிபிறவிகள், கேவலமானவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள். நீங்கள் எங்களுடைய தயவில்தான் முன்னே செல்ல வேண்டும். அவ்வாறு அடிமைப்பட்டு வாழ்வதுதான் உங்களுக்கு சிறந்தது’ என்ற செய்தியைத்தான் பாசிச சங்பரிவார் கும்பல் நிரந்தரம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சங்பரிவாரக் கும்பல்களின் தாக்குதலுக்கு எதிராக சிறிய அளவிலான எதிர்ப்புகளை முஸ்லிம் சமூகம் தற்போது காட்டுகிறது. அவ்வாறான எதிர்ப்புகளை முளையிலேயே கிள்ளி எறிவது என்ற நோக்கம்தான் இந்த புல்டோசர் தாக்குதல்களுக்கான காரணம். தன்மானத்தோடும் கண்ணியத்தோடும் ஒருபோதும் உங்களை வாழ அனுமதிக்க மாட்டோம் என்ற செய்தியைத்தான் இதன்மூலம் சங்பரிவார் கும்பல் பாசிச பாஜக அரசு முஸ்லிம்களுக்கு அளித்துக் கொண்டுள்ளது.

ஆனால், முஸ்லிம் சமூகம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் அச்ச நிலையிலேயே இருக்கவேண்டும் என்றுதான் அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், எவர்கள் தைரியத்தோடு எதிரிகளை எதிர்த்து நிற்கின்றார்களோ அந்த சமூகங்கள் மட்டும்தான் கண்ணியத்தோடு வாழ முடியும். நீங்கள் சிரம் குனிந்து அடிமைகளாக அவர்களிடத்தில் வாழவேண்டுமென்ற அவர்களது நோக்கத்தை ஒருபோதும் வெற்றிபெற செய்யக்கூடாது.  தைரியத்தோடு தலைநிமிர்ந்து அவர்கள் முன்னால் நிற்க வேண்டும். பல்லாண்டுகள் துப்பாக்கியின், வெடிகுண்டுகளின் முனையில் நிறுத்தப்பட்ட போதும் தலைநிமிர்ந்து நிற்கும் பாலஸ்தீனியர்கள் நமக்கு முன்னால் முன்மாதிரியாக நிற்கின்றார்கள். இஸ்ரேலின் முன்மாதிரியை கை மேற்கொண்டுதான் பார்ப்பன பாசிசம் இங்கே முஸ்லிம்களின் மீது தாக்குதல்களை தொடுத்து வருகிறது. அதை தீரத்தோடும் அறிவு தீட்சண்யத்தோடும் முஸ்லிம் தலைமை எதிர்கொள்ளவேண்டும். சமூகத்தை தைரியப்படுத்த வேண்டும் முன் நிற்க வேண்டும்.

K.S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *