‘ஒரு நாடு.. ஒரு வரி..’ என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தை முன்வைத்து ஐந்து வருடங்களுக்கு முன்னால் – ஜூலை 1 2017 அன்று – நரேந்திர மோடி அரசு நடைமுறைப்படுத்திய சரக்கு சேவை வரி (GST) முறைமை பெரும் தோல்வியாக மாறிவிட்டது. பெரும் தோல்வி மட்டுமல்ல, அது இந்த நாட்டுக்கு சுமையாகவும் சூழ்ச்சியாகவும் மாறிவிட்டது என்பதை நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள தொடங்கிவிட்டார்கள். ஒரு பக்கம் ஜி எஸ் டியை நடைமுறைப்படுத்துவதில் பெரும் குழப்பங்கள் நிலவிக் கொண்டிருக்கிறது. பல ஆடிட்டர்களும் தெளிவில்லாமல் புலம்பி கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் அறிவுபூர்வமற்ற பல முடிவுகள் எடுக்கப்பட்டு மக்களின் மீது ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சண்டிகரில் நடைபெற்ற 47 வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும் மாநில அரசுகளையும் மக்களையும் பெரும் சிக்கலில் ஆழ்த்தியுள்ளது.

எவ்வித அடிப்படை காரணங்களும் இல்லாமல் வரி கட்டமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சில உணவுப் பொருட்களும் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வரி கட்டமைப்பில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை மேலோட்டமாக நோக்கினாலே, வரும் காலகட்டங்களில் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கும் பெரும் விலை உயர்வு உருவாகும் என்பது உறுதியாக தெரிகிறது. ஒன்றிய அரசிடமிருந்து பல மாநிலங்களுக்கும் கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு கிடைக்காது என்ற குறியீடுகளும் மாநாட்டில் வெளிப்பட்டுள்ளது. மாநிலங்களின் பொருளாதார நிலைமையை மென்மேலும் சிக்கலில் ஆழ்த்தும் இந்த நடவடிக்கையால், நாட்டையும் நாட்டு மக்களையும் நடுத்தெருவில் நிறுத்தும் நாட்களாகவே வரும் நாட்கள் அமையும்.

மாமிசம், மீன், பன்னீர், மோர், தயிர், கோதுமை மாவு, தேன் மற்றும் பப்படம் போன்ற உணவுப் பொருள்கள் மீதெல்லாம் 5% வரி போடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொப்பரை தேங்காய், நறுமணப் பொருட்கள், முந்திரிப் பருப்பு போன்றவற்றை சேமிப்பதற்கும் அவற்றை பாதுகாப்பதற்கும் ஜிஎஸ்டி சுமத்தப்படும். பேனா மை, அச்சு மை, மோட்டார் பம்ப் செட்டுகள், முட்டை, பழங்களை தரம் பிரிக்கும் இயந்திரங்கள், விவசாய இயந்திரங்கள், சுகாதார இயந்திரங்கள், எல்இடி விளக்குகள் போன்றவற்றின் வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து சதவீத வரி மட்டுமே வசூலிக்கப்பட்டு இருந்த விதைகளை தரம் பிரிக்கும் இயந்திரத்திற்கான வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தோல் பொருட்கள் மீதான வரி ஏழு சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி கட்டமைப்பில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்கள் மட்டுமே மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஒருதலைபட்சமாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு. இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள், அச்சடி பொருட்கள், நோட்டு – புத்தகங்கள் – பேனா போன்ற மாணாக்கர்களின் கல்வி சார்ந்த பொருட்கள் உட்பட அனைத்தின் விளையும் தாறுமாறாக உயரும் என்பதை மோடி அரசு ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. அதே வேளையில் பூணூல், பூஜை பொருட்கள் போன்றவற்றுக்கு விலக்குகளையும் அளித்து இந்திய பொதுச் சமூகத்தை கேலி செய்துள்ளது பாசிச பாஜக அரசு.

வரி கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டு நாட்டு மக்கள் வதைக்கப்படும் அதே நேரத்தில் பெரு முதலாளித்துவ கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை அளிக்கவும் ஒன்றிய அரசு மறக்கவில்லை. சரக்கு போக்குவரத்திற்கான வரி ஆறு சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது என்பதை புதிய வரி மாற்றத்தின் உயர்வாக, சிறப்பாக ஆளும் கட்சி அடையாளப்படுத்துகிறது. இந்த வரி குறைவு நுகர்வோருக்கு எவ்விதத்திலாவது பயன் அளிக்குமா என்பதை காத்திருந்துதான் காண வேண்டும். சாதாரணமாக இவ்வாறான சில வரிகள் குறைக்கப்பட்டாலும் உற்பத்தி பொருட்களின், சேவை பொருட்களின் விலைகளில் எவ்வித குறைவோ, மாற்றமோ ஏற்படுவதில்லை. வரி சலுகையின் பலன்களை இடைத்தரகர்களும் முதலாளிகளும் கார்ப்பரேட்டர்களும்தான் அனுபவிப்பார்கள்.

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு கைமேற்கொண்டு வரும் பொருளாதார பாசிசத்தின் இறுதியான அடையாளம்தான் இப்போது செய்யப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி மாற்றங்கள். ஜி எஸ் டிக்கு பின்னால் இருக்கும் அரசியல் அஜெண்டாக்கள் வெளிப்படையானவைதான். அரசியல் ரீதியாக தங்களுக்கு எதிராக நிற்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களின் மீது பொருளாதாரத் தடை ஏற்படுத்துவதற்கு இணையான தண்டனைச் செயல்பாடுகளைதான் ஜிஎஸ்டி என்ற ஆயுதத்தை பயன்படுத்தி ஒன்றிய அரசு இப்போது செய்துள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் அன்றாடச் செலவினங்களுக்கு கூட பல நேரங்களில் ஒன்றிய அரசுக்கு முன்னால் கையேந்தி நிற்கும் அவலநிலைதான் இப்போது உள்ளது. உண்மையில் மாநிலங்களின் வரி உரிமைகளை திருடித்தான் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்பட்டது. மாநிலங்களின் வரி வருவாயில் 44% ஜிஎஸ்டி மூலமாக ஒன்றிய அரசுக்கு செல்லுகின்ற பொழுது ஒன்றிய அரசின் வருமானத்திலிருந்து 28%தான் திருப்பி அளிக்கப்படுகிறது. இது ஒரு வெளிப்படையான நஷ்ட வியாபாரமாகும். அதுமட்டுமல்ல, வரி முறைகளை தீர்மானிப்பதில் மாநிலங்களின் கருத்துக்களை பல பொழுதும் கவனத்தில் கொள்வதே இல்லை. இது ஒரு பெரும் சிக்கலாக மாறிய நிலையில்தான் உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் இதில் தலையிட்டது.

வரியை தீர்மானிப்பதில் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் சம உரிமை உள்ளது என்பதுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிப்படுத்திய உண்மை. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமையாக புறக்கணித்தும், சிறிதளவு கூட மதிக்காமலும் ஒன்றிய அரசு புதிய வரி கட்டமைப்பை தீர்மானித்துள்ளது. இந்த புதிய வரி உயர்வானது, ஏற்கனவே பொருளாதார சிக்கல்களில் உழன்று கொண்டிருக்கும் நாட்டு மக்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்தவே உதவும். ஒன்றிய அரசின் இம்மக்கள் விரோத போக்குக்கு எதிராக சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் போராட வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு உள்ளது. அதற்கு பதிலாக, பல மாநிலங்களும் வேறு வருமான வழிமுறைகளை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளனர். மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு போன்ற மக்களை மென்மேலும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கும் செயல்பாடுகளின் பக்கமே மாநில அரசுகளும் பயணிக்கின்றன.

ஒன்றிய அரசு என்பது மாநிலங்களின் தொகுப்பு அல்லாமல் ஒரு தனி அரசு அல்ல என்பதை பாசிச பாஜக அரசுக்கு உணர்த்த வேண்டிய தேவை உருவாகியுள்ளது. மாநில அரசுக்கு சேர வேண்டிய உரிமைகளை முறைப்படி அளிக்க ஒன்றிய அரசு தவறினால் அவற்றை முனைப்போடு எடுத்துக் கொள்ள வேண்டிய கடமை மாநில அரசுகளுக்கு உள்ளது. கல்வி, வரி, சுகாதாரம் போன்ற மாநில செயல்பாடுகளில் தலையிட்டு ஒன்றிய அரசு கொள்ளையடிக்கின்ற பொழுது வெறும் பார்வையாளராகவோ கோரிக்கை வைப்பவர்களாகவோ இல்லாமல் செயல்பாட்டு ரீதியில் மாற்றத்தை உருவாக்க வேண்டும். கல்வி உரிமைகளை விட்டுத்தர மாட்டோம், எங்கள் வரி எங்களுக்கு, எங்கள் வருமானம் எம் மக்களுக்கு என்ற முழக்கங்கள் உயர்ந்து எழ வேண்டும். சுயமரியாதை சிந்தனைகளை உரத்துப் பேசும் தமிழ் மண் அதற்கான துவக்கமாக அமைய வேண்டும். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அதை முன்னெடுக்க வேண்டும்.

  • K.S. அப்துல் ரஹ்மான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *