அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அதாவது தலை முக்காடு அணிந்து வருவதற்கு தடை விதித்த கர்நாடக அரசின் உத்தரவிற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இதை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ருதுராஜ் அவஸ்தி தலைமையிலான குழு தள்ளுபடி செய்திருக்கிறது. மேலும் ஹிஜாப் என்பது இஸ்லாம் மதத்தில் கட்டாயமல்ல என்றும் கூறியிருக்கிறார். இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இது இயல்பானதும் கூட.

இறைத்தூதரின் காலகட்டம் முதல் இன்று வரை உள்ள இஸ்லாமிய மத தலைமையும் அறிஞர்களும் கட்டாயம் என்று சொல்லியுள்ள ஒரு செயல்பாட்டை, ஹிஜாபை இஸ்லாத்தின் தவிர்க்கவியலாத ஒரு செயல்பாடு அல்ல என பத்வா கொடுத்துள்ளார் மௌலானா அஸ்வதி. மத நம்பிக்கைகளுக்கும் அதன் அடிப்படையிலான செயல்பாடுகளுக்கும் ஆச்சாரங்களுக்கும் முழுமையான சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்யக்கூடிய இந்திய அரசியலமைப்புச் சட்டம் 25ஆம் பிரிவுக்கு எதிரானது கர்நாடக அரசின் உத்தரவு என மனுதாரர்கள் சுட்டிக் காட்டிய பிறகும் நீதிமன்றம் அதை புறக்கணித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

முஸ்லிம் பெண்கள் அணியும் தலை முக்காடு என்பது மதத்தின் அடிப்படையிலானது அல்ல என்று வாதப்பிரதிவாதங்களுக்கு பிறகு உயர் நீதிமன்றம் புரிந்து கொண்டதாம். ஆனால் அதே நேரத்தில் வகுப்பறைகளில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளங்களை பழக்கவழக்கங்களை அனுமதிக்க முடியாது என்று கொக்கரித்து கொண்டுதான் இந்துத்துவவாதிகள் இதற்கு எதிராக கும்பலாக கோஷங்களை எழுப்பினார்கள். அதைத் தொடர்ந்துதான் அரசு கல்லூரி அதிகாரிகள் அவர்களின் கோரிக்கையை அங்கீகரித்து ஹிஜாப் அணிந்த முஸ்லிம் மாணவிகளையும் பெற்றோர்களையும் வளாகத்திற்குள் விட மறுத்தார்கள். ஹிஜாப் என்பது இஸ்லாமிய முறைமை இல்லை எனின் பிறகு எதற்காக இந்துத்துவவாதிகள் அதை எதிர்த்தார்கள்? ஹிஜாப் என்பது இஸ்லாமிய அடையாளம் என்பதால்தான் இந்துத்துவவாதிகள் அதற்கெதிராக கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தார்கள். ஆனால் இப்போது கர்நாடக உயர்நீதிமன்றமோ ஹிஜாப் என்பது இஸ்லாமிய வழிபாட்டு முறையில் உட்படாதது என்பதால் ஹிஜாபை அணிய முஸ்லிம் மாணவிகளுக்கு தடை விதித்தது சரிதான் என்கிறது. அதுமட்டுமல்ல, முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்துத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தியது அவர்களது மத அடையாளமாக அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் காவி துண்டு அணிந்து கொண்டுதான். போராட்டம் நடத்தியவர்கள் சொன்ன காரணங்களுக்கும் தடைவிதித்த அரசு சொன்ன காரணங்களுக்கும் அதற்கு துணை போகின்ற உயர்நீதிமன்றம் சொல்லும் காரணங்களுக்கும் எவ்வளவு முரண்பாடு.

இங்கே முக்கியமாக விவாதிக்கப்பட வேண்டியதும் தீர்மானிக்கப்பட வேண்டியதும் ஒரு மதத்தின் வழிபாட்டு முறைகளை, சடங்கு சம்பிரதாயங்களை தீர்மானிப்பதும் அதில் தீர்ப்புகளை அளிக்க வேண்டியதும் யார் என்பதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற ஜனநாயக முறைமைகளின் நீதிமன்றங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளின் அடிப்படையில் அதற்கான அதிகாரமும் உரிமையும் அந்தந்த மத ஆன்மீக தலைவர்களுக்குதான் உள்ளது. 1937இல் உருவாக்கப்பட்ட ஷரியத் சட்டங்கள் இன்னும் நடைமுறையில்தான் உள்ளது.

 அதனடிப்படையில் தனிநபர் சட்டங்களுடன் தொடர்புடைய திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்ற விஷயங்களில் சுன்னத் ஜமாஅத் மத்ஹபுகள், ஷியா மத்ஹபுகளின் மூல மத புத்தகங்களின் அடிப்படையில்தான் நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்க வேண்டும். சுயமாக முடிவெடுக்கவோ தீர்ப்பளிக்கவோ  நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை. கேரளாவில் சபரிமலையில் பெண்கள் செல்லலாம் என அனுமதி அளித்த உச்சநீதிமன்றம், தற்போது அதை உச்சநீதிமன்றத்தின் விரிவான பெஞ்சுக்கு அதை கொடுத்துள்ளது. பல்வேறு மத சமூகங்கள் வாழும் இந்தியாவில் எடுத்தேன் கவிழ்த்தேன் என தீர்ப்பு அளிக்க இயலாது என்று பொருள். ஆகவே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இனி உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்த வேண்டும்.

முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தின் தனித்துவத்தையும் இருப்பையும் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக வேண்டி இந்துத்துவ தீவிரவாதிகளின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல்கள் அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கும் காலகட்டத்தில் இதைப் போன்ற சவால்கள் நிரந்தரம் வந்து கொண்டுதான் இருக்கும். இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் இந்துக்கள்தான். அவர்கள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அல்லது இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அழைக்கப்படமாட்டார்கள். நாட்டுப்பற்றை அடிப்படையாக வைத்து நான்கு விதமாக அவர்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்புதான் ஆர்எஸ்எஸ் தலைவர் கூறினார்.

 தங்களது தனிப்பட்ட நம்பிக்கையின், கலாச்சாரத்தின் அடிப்படையில் வாழ்பவர்களை உள்வாங்க அவர்கள் தயாராக இல்லை. காலகாலமாக தலை முக்காடு அணிந்து கொண்டு பள்ளிக்கூடங்களுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று படித்து தங்களுடைய துறைகளில் துடிப்புடன் செயல்பட்டு கொண்டிருக்கும் முஸ்லிம் மாணவிகளை சிரமத்திற்கு உள்ளாக்கி, அவர்களுடைய கல்வியையும் எதிர்காலத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் செயல்படுவது அதன் அடிப்படையில்தான். சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் இந்த தீர்ப்பின் மூலம் முஸ்லீம் மாணவிகள் மைய நீரோட்டத்தில் பயணிக்க பெரும் வாய்ப்பு உருவாகியுள்ளது என கூறுகிறார்கள். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்திலும் ஜாமியா மில்லியா இஸ்லாமியாவிலும் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் முஸ்லிம் மாணவிகளின் களப்பணிகளை கண்ட பின்பும் என்ன மைய நீரோட்டத்தை இந்த பெயர் தாங்கிகள் எதிர்பார்க்கிறார்கள்? இஸ்லாமிய அடையாளங்களை துறந்துகொண்டு இந்தியா எனும் கருத்தாக்கத்தை ஆதரிக்க இயலாது என்ற அஃப்ரின் பாத்திமாவின் கருத்தையே நாம் ஆதரிக்கிறோம்.

அவரவர் சுய மத அடையாளங்களோடும் கலாச்சாரங்களோடும் வாழ்வதுடன் ஒரு இந்தியனாகவும் வாழ்வதற்குண்டான அதிகாரத்தை, உரிமையை இந்திய அமைப்புச் சட்டம் ஒவ்வொரு இந்தியனுக்கும் வழங்கியுள்ளது எனில் அதை பாதுகாக்க வேண்டியதும் இந்திய அமைப்பு சட்டத்தின் கடமையாகும். இங்கே ஒரு முஸ்லிமுக்கு அமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் வாழ இயலவில்லை எனில் அது அமைப்பு சட்டத்தின் தோல்வியாகும்.

K.S. அப்துல் ரஹ்மான்எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *