உலகமறிந்த ஆன்மீகம் என்பது பொது வாழ்வை முற்றாகத் துறந்து; சமூகப் பிரச்சினைகளில் ஈடுபடுவதை விட்டு முழுமையாக விலகி; இறையோறுமை, தியானம், அமைதி, அன்பு போன்ற கருத்துகளை பரவச் செய்வது தான். ஆனால் கடந்த டிசம்பரில் டெல்லி, உத்தரகாண்ட் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற ஹிந்து சாமியார்களின் மாநாட்டில் சாமியார்களின் பேச்சு இதற்கு நேர் எதிராக இருந்தது.

உத்தரகாண்டில் நடைபெற்ற இந்து சாமியார்களின் மாநாட்டின் மையக்கருத்து, “இஸ்லாமிய இந்தியாவில் தர்மத்தின் எதிர்காலம்: சவால்களும்- தீர்வுகளும்” என்பதுதான். மையக்கருத்தே தேச ஒற்றுமையையும் அமைதியையும் துண்டாடும் வகையில் இருக்கிறது. இதை தொடர்ந்து அங்கு பேசிய ஒவ்வொரு சாமியார்களும் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்- கிறிஸ்தவர்களின் வாழ்வையும் உயிரையும் அச்சுறுத்தும் வகையில் இருந்தது. அந்த மாநாட்டில் பேசிய ஒரு சாமியார் இப்படி கூறுகிறார், “நூறு பேர் இருந்தால் போதும் அவர்களில் 20 லட்சம் பேரை கொன்று விடலாம்” மற்றொரு சாமியார் இவ்வாறு கூறுகிறார், “அவர்களை கொலை செய்ய நமது ஆயுதங்களை ஒன்று சேர்ப்போம்”. இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிறைந்த பேச்சுக்கள் இந்திய இறையாண்மையை அசைத்துப் பார்க்க முயன்றிருக்கிறது.

இந்தியா போன்ற பல சமய, சமூக மக்கள் வாழும் இடத்தில், பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படும் இந்து மதத்தின் இதயமான சாமியார் இப்படி பேசுவது சமூக ஒற்றுமையை அழிக்கக்கூடிய இனதூவேஷ உணர்வை தூண்டக்கூடிய பேச்சுக்கள் கண்டிக்கத்தக்கதாகும்.

மேலும் விஷம் வாய்ந்த சொற்பொழிவுகளை இந்திய அரசாங்கமும் மாநில அரசுகளும் கேட்டும் கேட்காத செவிடர்களாய்க் கடந்து செல்வது வேதனையளிக்கிறது. இந்திய நாட்டில் தன் இருப்பை தக்க வைக்க போராடும் மக்கள் மீதும் சமூகப் போராளிகள் மீதும் யு ஏ பி ஏ தேசவிரோத வழக்கு போன்றவைகளால் சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் நேரடியாகவும் வெளிப்படையாகவும் நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் சீர்குலைக்கும் இன தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடுக்காமல் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அமைதி காப்பதும் கடந்து செல்வதும் இவர்கள் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அதே நேரத்தில் இவர்கள் இது போன்ற பிரச்சினைகளுக்கு அமைதி காப்பதும் கடந்து செல்வதும் முதல் முறையும் அல்ல. இந்திய அரசும் மாநில அரசும் வேண்டுமானால் கடந்து செல்லலாம். அமைதி காக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்டவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் இதற்கான விளைவுகளை காட்ட தேர்தல் வரைக்கும் பொறுத்து இருக்க மாட்டார்கள் என்பதை எண்ணி ஒன்றிய அரசும் மாநில அரசும் செயல்பட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *