தேசிய அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்ட ஹிஜாப் வழக்கில் கடந்த செவ்வாய் கிழமை(15/03/2022) அன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. கர்நாடக அரசு பள்ளிகளில் ஹிஜாப் அணிய விதித்த தடையை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கு ஒரு மாத காலத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் அவசியமாக பின்பற்றப்பட வேண்டிய கடமை அல்ல என்று முடிவெடுத்துள்ள நீதிமன்றம். அவசிய கடமையாக இல்லாதவற்றை அரசு கட்டுப்படுத்துவது செல்லும் என்ற அடிப்படையில் கர்நாடக மாநில அரசு கல்வி வளாகங்களில் ஹிஜாபை தடை செய்து பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடப்போவதாக அறிவித்துள்ளது.

பொதுவாக நீதிமன்றங்கள், இதுபோன்ற விவகாகரங்களில் தனிநபர் உரிமையையும், மத சுதந்திரத்தையுமே பாதுகாக்கும். ஆனால் ஹிஜாப் விவகாரத்தில் பெரும்பான்மைவாதத்தை கட்டமைத்து முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து ஒடுக்குமுறைகளை மத்தியிலும் மாநிலத்திலும் ஏவிவரும் பாஜக அரசு முஸ்லிம் பெண்களின் மதச்சுதந்திரத்தில் தலையிடுவதை அனுமதித்தது மட்டுமல்லாமல் கல்விக்கூடங்களில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக வலிந்து வாதாடுவது நீதிமன்றத்தின் இந்துத்துவ பக்கச்சார்பை அம்பலப்படுத்துகிறது.

இத்தீர்ப்பிலுள்ள பிரச்சனைகள் சிலவற்றை பார்ப்போம். இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21 ஒவ்வொரு இந்திய குடிமகனும் கண்ணியத்தோடு வாழ்வதை (Live with Dignity) பாதுகாப்பதோடு அதனை குடிமக்களின் அடிப்படை உரிமையாக வரையறுக்கிறது. இதனை பல வழக்குகளில் உச்சநீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளது. சமத்துவமே கண்ணியத்தை பெற்றுக்கொள்வதற்கான அடிப்படை. ஒருவரது ஆடையும் செயல்பாடுகளும் அவரது கண்ணியத்தை பறைசாற்றும் வழிமுறைகளில் பார்க்கப்படுபவை. கர்நாடக அரசு பிற மாணவிகள் தவிர்த்து, முஸ்லிம் மாணவிகளை மட்டும் தமது ஆடையின் ஒரு பகுதியை (ஹிஜாபை)கட்டாயமாக அகற்ற நிர்பந்திக்கும் போது, ஹிஜாபுடன் சேர்த்து அவர்களது கண்ணியத்தையும் அகற்ற முனைகிறது. அவர்களை சமமாக நடத்த மறுக்கிறது. இதன் மூலம் அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதுடன், முஸ்லிம் பெண்களை மனரீதியாகவும் வதைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவிகள் ஹிஜாப் தடையின் மூலம் தாங்கள் கடுமையான மன நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டிவருகின்றனர். இத்தீர்ப்பு முஸ்லிம் மாணவிகளை அரசு மேலும் துன்புறுத்தவும், அவர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும் கண்ணியத்தோடும் வாழும் உரிமையை பறிக்கவும் சட்டப்பாதுகாப்பை தந்துள்ளது.

இரண்டாவதாக, அவசியம் பின்பற்றப்பட வேண்டிய மத நடைமுறைகள் (Essential Religious Practice) தொடர்பானது. அவசியம் பின்பற்றப்பட வேண்டிய மத நடைமுறைகளை தவிர்த்து ஏனையவற்றை அரசு தடுக்கலாம் என்று கூறும் நீதிமன்றம். ஹிஜாப் இஸ்லாமில் அவசியம் பின்பற்றப்பட வேண்டிய அம்சமல்ல எனவும் அது தொடர்பான குர்ஆன் வசனம் அறிவுரை மட்டுமே அன்றி கட்டளை அல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளது. இதனால் அரசு இவ்விவகாரத்தில் தலையீடுவது செல்லும் என்று அறிவித்திருக்கிறது.
இங்கு அடிப்படையாக எழும் கேள்வி, ஒரு மத விவகாரத்தில் அவசியம் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் எவை என்று யார் தீர்மானிப்பது? மார்க்கம் குறித்து எவ்வித ஞானமும் அல்லாத நீதிபதிகள் இதனை தீர்மானிக்க முடியுமா? ஒருபோதும் இவர்கள் இந்த இவ்விவகாரத்தை தீர்மானிக்க முடியாது. இதற்குரிய மார்க்க/மத அறிஞர்கள் தாம் அதனை கூற தகுதி படைத்தவர்கள். குறைந்தபட்ச நடவடிக்கையாக இவ்வழக்கில் இதுதொடர்பாக மார்க்க அறிஞர்களிடம் கருத்து கேட்டிருக்கலாம். அதையும் இந்நீதிமன்றம் செய்யவில்லை. சமஸ்கீருத ஸ்லோகங்களை தமது தீர்ப்புகளில் நீட்டி முழங்கும் நீதிபதிகள், அரபியில் குர்ஆனை படிக்கக்கூட தெரியாதவர்கள். அதன் மொழிப்பெயர்ப்பையே சார்ந்து அவர்கள் கருத்து கூறுகின்றனர். குர்ஆன் ஹிஜாபை கட்டாயமாக்கி இருந்தால் அதனை பின்பற்றாதவர்களுக்கு தண்டனையை விதித்திருக்கும். ஆனால் அப்படி எதையும் குர்ஆன் விதிக்கவில்லை. எனவே ஹிஜாப் கட்டாயமல்ல; அது பெண்களுக்கான அறிவுரை மட்டுமே என்று தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள் குறைந்தபட்ச இஸ்லாமிய உலகுநோக்கு குறித்த அறிவு அற்றவர்கள். இஸ்லாம் எல்லா விவகாரத்திலும் உலகிலேயே தண்டணையை விதிப்பது இல்லை. மறுமை நாளின் மீதான நம்பிக்கையை அது தன்னை பின்பற்றும் மக்களின் உள்ளத்தில் ஆழமாக விதைக்கிறது. மனிதர்கள் தமது செயல்களுக்குரிய முழுமையான கூலியும் தண்டனையும் அங்கையே வழங்கப்படும் என அறிவுறுத்துகிறது. நீதிபதிகளின் கூற்றுப்படி பார்த்தால் ஐவேளை தொழுகைக்கூட இஸ்லாத்தில் அவசியல் பின்பற்றப்பட வேண்டியவை ஆகாது. ஏனெனில் தொழுகையை முறையாக பேணாதவருக்கான தண்டனையை குர்ஆன் பரிந்துரைக்கவில்லை எனவும் ஒருவர் முட்டாள் தனமாக வாதிடலாம். இஸ்லாத்தில் நற்கூலி தண்டனை தொடர்பான அம்சங்கள் இவ்வுலகோடு முடிபவை அல்ல அவை மறுமையில் மட்டும் முற்றுப்பெறுபவை.
மொழி அறிவும், துறைசார் அறிவும் கொஞ்சமுமின்றி இஸ்லாத்தின் Essential Religious Practice-ஐ குறித்து அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு நீதிமன்ற கண்ணியத்தை குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது.

மூன்றாவதாக, ஹிஜாப் என்பதை பெண் அடிமைத்தனத்தின் வெளிப்பாடாக நீதிபதிகள் கருதுகின்றனர். பெண் முன்னேற்றம், பெண் விடுதலை நோக்கிய பயணத்தில் ஹிஜாப் போன்றவற்றை நீக்குவது என்பது சரியான செயல். பெண் விடுதலை நோக்கில் கர்நாடக அரசின் ஹிஜாப் தடை செல்லும் என்று பிதற்றியுள்ளனர். இதில் அப்பட்டமாக நீதிபதிகளின் இந்துத்துவ மனசாட்சி வெளிப்படுகிறது. ஹிஜாப் என்பதே ஒடுக்குமுறை கருவி என்ற இந்துத்துவ முன்முடிவின் மீது நின்றே இத்தீர்ப்பை அவர்கள் வழங்கியுள்ளது தெளிவாகிறது. ஹிஜாப் பெண் விடுதலைக்கு தடை என்று நினைக்கும் நீதிபதிகள் அதற்கான காரணங்களை பட்டியலிடவில்லை. பட்டியலிட வில்லை என்பதை விட பட்டியலிட ஒன்றுமில்லை என்பதே உண்மை. நீதிபதிகள் தங்களது உச்சிகுடுமியையும் இஸ்லாமிய வெறுப்பையும் மறைக்க அம்பேத்கரின் சில வரிகளில் புகலிடம் தேடுகின்றனர். மற்ற பெண்களை போலவே முஸ்லிம் பெண்களும் தங்களது ஆடையை அவர்களே முடிவு செய்துக் கொள்வர். அவர்களின் ஆடையின் மீது வன்மத்தை கக்குவதற்கு நீதிபதிகள் உள்ளிட்ட எவருக்கும் உரிமையில்லை.

பார்ப்பனியத்திற்கு சேவகம் செய்யும் இத்தகைய தீர்ப்புகள் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை. முஸ்லிம்கள் மட்டுமின்றி நாட்டின் பன்முக கலாச்சாரத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரும் முஸ்லிம்களின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும். முஸ்லிம்களின் அடையாளங்கள் மீதும் நம்பிக்கையின் மீதும் நடத்தப்படும் இத்தகைய சட்டப்பூர்வ தாக்குதல்களை முஸ்லிம்கள் உறுதியோடு எதிர்கொள்வர். முஸ்லிம் பெண்களின் போராட்டகுணத்தின் முன்பு பார்ப்பனியம் அம்மணமாக மண்டியிடும் நாள் வெகுதொலைவில் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *