வன்மம் கொப்பளிக்கும் வெறுப்பு பேச்சு, வகுப்புவாத தூண்டல்  எனச் சிறுபான்மையினரை அழித்தொழிக்க அழைப்புவிடுத்த இந்துத்துவ சாமியார்களின் ‘தரம் சன்சத்’  என்ற கூட்டம் சமீபத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் தொடர் செயல்பாடுகளைப்  பார்த்து வருபவர்களுக்கு இது திடீரென்று நடந்த நிகழ்வாகவோ அல்லது வியப்பளிக்கும் தனித்த நிகழ்வாகவோ தெரியாது.

மதவாத கூட்டமைப்பு என்ற  பெயரில் யாத்ரி  நர்சிஞானந்த்,  பிரபோதானந்தா கிரி,  சுவாமி சிந்து மகாராஜ்,  சாத்வி அன்னபூர்னா போன்ற பல இந்து பிரச்சாரகர்கள் ஐந்து மாநில தேர்தலில் பாஜகவை வெல்ல வைப்பதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெயரளவிலான இந்துத் தலைவர்கள் ‘சுவாமி, மகாராஜ்’  போன்ற பெயர்களை இட்டுக்கொண்டு அதிகாரத்தோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவர்கள். உபி முதலமைச்சர்  ஆதித்யநாத், உத்தரகாண்டின்  புஷ்கர் சிங்  தாமி மற்றும் பாஜகவின் அமைச்சர்கள்,  எம்பி,  எம்எல்ஏ-க்கள்  இத்தகைய சாமியார்களிடம் அடிபணிந்து வணங்கும்  வீடியோக்களை  காணலாம்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசும் பாஜக உறுப்பினர்களும் முஸ்லிம்களை  தகாத வார்த்தையில் தாக்குவது,  காந்தியைக் கொன்ற கோட்ஸேவை  புகழ்வது,  ஆதித்யநாத்  உருதுவை  அவமதிப்பது போன்றவையின் நீட்சியாக நடந்த ‘தரம் சன்சத்’  கூட்டம் நம்பமுடியாத அளவிற்கு முஸ்லிம்களுக்கு எதிரான  வன்முறையைத்  தூண்டியுள்ளது. இது ஒரு விஷயமல்ல,  பாஜகவின்  பெருவாரியான  வாக்கு வங்கியான பார்ப்பன மற்றும் தாக்கூர்  ஆதிக்க சாதியினர் அரசியல் அதிகாரத்தையும் தனி பாதுகாப்பையும் கொண்டுள்ளனர். ‘யோகி-மோடி  ராஜ்யா’  என்ற பெயரில் இந்த மதவாதத்தினர்  உபியின் தெருக்கள் முழுக்க இஸ்லாமிய வெறுப்பை விதைத்துள்ளனர். 

லகிம்பூர்  விவசாயிகளின் பேரணியில் அப்பாவி விவசாயிகளை  கார்  ஏற்றி கொலை  செய்தவர்களைக்  காக்கக்  குளறுபடியான அறிக்கையைத் தயார் செய்த உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவை,  எதிர்க்கட்சிகள் பதவி விலக வேண்டும் என்று கோரியும் பிடிவாதமாக இருந்தார். பார்ப்பனர்களின் அதிகார பலத்தினை அரசு மட்டும் காக்கவில்லை,  புலனாய்வு மற்றும் நீதி நிறுவனங்களும் துணை நிற்கின்றன என்பதே யதார்த்தம். 

ஹரித்வார்  நிகழ்வுக்குத்  தாமதமாக வேண்டா வெறுப்பாக காவல்துறை  வழக்குப் பதிவு செய்தது கண்துடைப்பு என்று சொல்லத் தேவையில்லை. ஏனெனில்,  அவர்கள் பாதுகாப்பாக உள்ளார்கள். இதைவிட மோசமாக  வெறுப்பைக்  கக்க ஜனவரியில் விருந்தாவனில் அடுத்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். உண்மையில்,  கல்வி,  மருத்துவம்,  வாழ்வாதாரம் என அனைத்திலும் மக்களின் வாழ்வைச் சீரழித்த யோகி  ஆதித்யநாத்த்தின்  ஆட்சியைத்  தக்கவைக்கத்  தூண்டப்படவுள்ள வகுப்புவாதத்தின் ஓர் தொடக்கமே  ஹரித்வார்  நிகழ்வு.

கொரோனா  இரண்டாம் அலையின் தோல்வியின்  காரணமாகக்  கங்கையில் மிதந்த மற்றும் கங்கைக் கரையில் கிடந்த பிணக்குவியல்களின் காட்சியும், தற்போது பரவும் ஓமிக்ரானை எதிர்க்க போதிய செயலின்மையும்,  பெட்ரோல்,  டீசல்,  காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வு, வேலையின்மையால் இளைஞர்கள் மத்தியில் எழுந்துள்ள கோபம் போன்றவை  ஆதித்யனாத்திற்கு பெரும் சவாலாக நிற்கிறது. இந்நிலையில்தான் உபி துணை முதலமைச்சர்  கேசவ்  பிரசாத்  மயூராவும்,  சலீம்பூர்  எம் பி  ரவீந்திர  குஷ்வஹாவும்  ‘வழிபாட்டிட  உரிமைச்  சட்டம் 1991’ ஐ திரும்பப்  பெற முயலுகிறார்கள்.  மதுராவில்  உள்ள  ஷஹி  இத்கா  மசூதிக்கு எதிராக இந்து மகாசபை அரசியலைத் தொடங்கியுள்ளது. காசி விஸ்வநாத ஆலய கட்டுமான தொடக்க விழாவில் ஒளரங்கசீப் – சிவாஜி முரணைக் கிளப்புகிறார் நரேந்திர மோடி. ஆர்எஸ்எஸ் – இந்து மகாசபை – பாஜக அரசு என தங்களை வெவ்வேறானவர்கள் எனக் காட்டிக்கொண்டாலும் முஸ்லிம்களுக்கு எதிரான வகுப்புவாதம் என்ற ஒற்றை நோக்கத்திலேயே இவர்கள் செயல்படுகிறார்கள்.

டிச.26 ஜலாவூனில் நடந்த பேரணியில் ‘அகிலேஷ் யாதவ் ஆட்சியைப் பிடித்து ராமர் கோவில் கட்டுமானத்தை நிறுத்திவிடலாம் என்று கனவு காண்கிறார். பூமியிலுள்ள எந்த சக்தியாலும் ராமர் கோவிலினை தடுத்து நிறுத்த முடியாது’  என்று  கூறுகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அகிலேஷ் யாதவ்  ராமர் கோவிலுக்கு எதிராக எந்த வார்த்தையும் கூறாதபோது, அவர் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவில் கட்டுமானத்தை நிறுத்திவிடுவார் என்று அமித்ஷா கூறுவது, அகிலேஷுக்கு எதிராக நியாயமான வாதங்களை வைக்க முடியாமல்  மதத்திற்குப்  பின்  மறைந்து கொள்ளும் கொச்சை அரசியலாகவே காணமுடிகிறது.

Courtesy : The Wire.

அஜ்மீ – மொழிபெயர்ப்பாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *