இஸ்ரேல் – அமெரிக்காவின் நெருக்கடிகள் 

ஹமாஸின் தலைமையில் அமைந்த ஆட்சியை (அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், ஐநா சபை ஆகியவை இணைந்த)  Quartet என்று வழங்கப்படும் நவீன சர்வதேச சதுர்வேதி மங்கலத்தினரால் ஜீரணிக்கவே முடியவில்லை. இஸ்ரேலின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளுதல், ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுதல், முந்தைய இஸ்ரேலிய – பலஸ்தீன ஒப்பந்தங்களுக்கு ஒழுங்காற்றுதல் ஆகிய மூன்று நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ஹமாஸ் ஆட்சிக்கு ஆதரவளிக்க முடியும் என்று சொல்லியிருந்த சர்வதேச தரப்பு, ஹமாஸ் இதற்கு உடன்படாத காரணத்தைக் காட்டியே பொருளாதார தடைகளை விதித்தது. இதே மூன்று நிபந்தனைகளை இஸ்ரேல் மீது திணித்து, ஒத்துவராத பட்சத்தில் பொருளாதார தடைகளை விதிக்க ஒருநாளும் சர்வதேச நீதி அமைப்புகள் துணிந்ததில்லை. அவ்வளவு ஏன் பலஸ்தீனம் எனும் நாடு இஸ்ரேலுக்காகவே துண்டாடப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டது என்ற உண்மையை ஒப்புக்கொண்டு அதன் இறையாண்மையை இஸ்ரேல் ஏற்க வேண்டும் என்பதைக் கூட இதுவரை சர்வதேச சனநாயகம் கண்டிப்புடன் சொன்னதில்லை. இப்படியொரு உலகளாவிய நெருக்கடிக்கிடையில் பதவியேற்ற ஹமாஸ் உள்நாட்டிலும் ஏகப்பட்ட சிக்கலை சமாளிக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஹமாஸின் தேர்தல் வெற்றி சமாதான முயற்சிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற Quartetன் எண்ணத்தைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்ட இஸ்ரேல், 2006 செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் ஹமாஸ் உறுப்பினர், ஆதரவாளர்களுக்கு எதிரான வேட்டையை முடுக்கிவிட்டது. இந்த இரண்டு மாதங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இமாம்கள், பத்திரிகையாளர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 700 பலஸ்தீனர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் ஹமாஸ் அதிகாரத்தை புறந்தள்ளி அதிபர் அப்பாஸ் நேரடியாக பயனடையும் வகையில் சர்வதேச நிதி உதவிகளைத் திருப்பிவிடும் புதிய முறையையும் உருவாக்கி செயல்படுத்தினார்கள். இதற்கிடையில் நிதிப் பற்றாக்குறையால் சம்பளம் வழங்கப்படாத காரணத்தில் செப்டம்பர் 2006 முதல் தொடர்ந்து நடந்த அரசுத்துறையினரின் வேலை நிறுத்தம், பத்தாஹ் – ஹமாஸ் ஆதரவாளர்களுக்கிடையில் அவ்வப்போது நடந்த மோதல்கள், அலுவலகங்களில் தாக்குதல்கள் என்று சகலத்தையும் ஹமாஸ் அரசு எதிர்கொள்ள வேண்டிவந்தது.

ஊழலற்ற திறமையான நிர்வாகம் என்ற முழக்கத்துடன் ஆட்சியைப் பிடித்த ஹமாஸ், நிர்வாகத்தையையும் பாதுகாப்பு அமைப்பகளையும் சீரமைக்க புதிய நிருவாக கட்டமைப்பை உருவாக்கத் தலைப்பட்டது. ஏற்கனவே இவற்றில் தாங்கள் செலுத்திய கணிசமான செல்வாக்குக்கு ஆபத்து என்று அஞ்சிய பத்தாஹ்விற்கு இது எரிச்சலைக் கிளப்பியது. அதிபர் அப்பாஸின் கட்டுப்பாட்டில் இருந்த பாதுகாப்புப் படையின் மீது புதிய ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் பத்தாஹ் குற்றம் சாட்டியது. பாதுகாப்புப் படை, பலஸ்தீன ஆட்சி மன்றம், பலஸ்தீன விடுதலை இயக்கம் ஆகியவற்றில் தனது கரம் ஓங்க வேண்டும் என்று ஹமாஸும், தனது பிடியைத் தளர்த்தி விடக் கூடாது என்று பத்தாஹ்வும் கங்கணம் கட்டி செயல்பட்டன. இதில் ஹமாஸ் ஆட்சியை திறம்பட பயன்படுத்திக் கொண்டு அதிகார மட்டங்களில் வேகமாக ஊடுருவியது. .உதாரணமாக 2007ல் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் என பல்வேறு துறைகளில் 10000 புதிய ஆட்களை ஹமாஸ் நியமித்ததாக உலக வங்கி குற்றம் சாட்டியது. இந்த உள் முரண்பாடுகள் பலஸ்தீன நலனுக்கு எந்த விதத்திலும் உகந்ததாக இல்லாமல் போய் சீயோனிஸ நோக்கங்களையே மறைமுகமாக நிறைவேற்றிக் கொண்டிருந்தது.

பொருளாதார ரீதியிலும் புதிய ஆட்சி பெரும் நெருக்கடியில் சிக்கியிருந்தது. முந்தைய ஆட்சி விட்டுப்போயிருந்த 120 கோடி டாலர் கடன்சுமை சர்வதேச பொருளாதார தடை காலத்தில் கழுத்தை நெறிக்கத் தொடங்கியிருந்தது. மேலும் பலஸ்தீன பகுதியில் வசூலிக்கப்பட்ட 6 கோடி டாலர் வரிவருவாயையும் இஸ்ரேல் அரசு தராமல் தடுத்து நிறுத்திக்கொண்டது. அரபு நாடுகளில் இருந்து வந்த நிதி உதவியும் அமெரிக்காவின் எச்சரிக்கையால் நின்றுபோனது. இந்த கட்டத்தில் ஹமாஸ் தலைமையிலான அரசுக்கு எந்த ஆதரவும் அரபு தேசங்களிலிருந்து எழுந்து விடக்கூடாது என்பதற்காக தனது அரசியல், பொருளாதார செல்வாக்கை பிரயோகித்து ஹமாஸ் அரசை முடக்கிப் போட்டது அமெரிக்கா. பலஸ்தீன அரசின் இந்த செயலற்றத் தன்மையைக் காட்டியே அரபு தேசங்களை இஸ்ரேலிய வழிக்குக் கொண்டு வரவும் அமெரிக்கா வேலை பார்த்தது. பலஸ்தீன ஆதார நோக்கத்திற்கே விரோதமாக பம்மும் அரபு தேசங்களின் இந்த பலவீனத்தைக் கண்டு ஹமாஸ் பெரும் அதிருப்தியடைந்தது.

ஐக்கிய அரசாங்கம் எனும் அலங்கோலம்

மேற்குக்கரை ஆட்சியின் இந்த நிலையற்றத் தன்மையை பயன்படுத்தி ஏரியல் ஷரோன், கிழக்கு ஜெருசலேமில் சீயோனிஸ பிடியை மேலும் இறுக்கிக் கொண்டதுடன், யூதர்களை அதிகளவில் குடியமர்த்தி பிரிவினை சுவரைக் கட்டும் பணியையும் வேகப்படுத்தியிருந்தார். காஸாவைவிட்டு விலகிக் கொள்ளும் ஷரோனின் பாசாங்கும் இந்த விரிவான திட்டத்திற்கான ஒத்திகைதான் என்பதும் ஹமாஸுக்கு விளங்கிப்போனது. இப்படி எல்லா பக்கங்களிலும் சிக்கல்கள் அதிகரித்துக் கொண்டே போக ஆட்சியைத் தக்கவைக்கவும் செயல்பட வைக்கவும் ஹமாஸ் மீண்டும் ஐக்கிய அரசாங்கம் அமைக்கும் முயற்சிகளைத் துவக்கியது. அதிபர் அப்பாஸ் ஒத்துழைப்போடு வடிவம்பெற்ற பேச்சுவார்த்தைகள் 2007 பிப்ரவரி 8 அன்று மெக்காவில் பல்வேறு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை நல்லமுறையில் நடந்தேறியது. இதன் அடிப்படையிலான தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான முன்மொழிவை பிரதமர் இஸ்மாயில் ஹனியா நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். அந்த மசோதா 83 – 3 என்ற உறுப்பினர் ஆதரவுடன் நிறைவேறியது. ஐக்கிய அரசாங்கத்திற்கான இந்த அமோக ஆதரவு குழு முரண்களை வெளிக்காட்டவில்லை. ஆனால் இந்த ஏற்பாடு பத்தாஹ் – ஹமாஸ் பிரிவுகளில் இருந்த அடிப்படைவாதிகளின் குரலை மேலும் வலுபடுத்தின. அவர்களில் யாரும் மோதலை விடுத்து இணைவிற்குத் தயாராகவே இல்லை. இந்நிலையில் ஐக்கிய அரசாங்கத்திற்கான செயல்திட்டத்தை பிரதமர் ஹனியா அவையில் அறிவித்தார். அதன்படி பலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவது, பலஸ்தீன மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான சட்ட ஏற்பை வழங்குதல், 1967 எல்லைகளுக்குட்பட்ட சுதந்திர இறையாண்மைமிக்க பலஸ்தீன தேசத்தை அமைப்பது என்ற குறிக்கோள்கள் வலியுறுத்தப்பட்டன. இந்த அடிப்படையிலான ஐக்கிய அரசாங்கத்தை இஸ்ரேல் உடனடியாக நிராகரித்தது. இந்த ஐக்கிய அரசாங்கமும் பின்னர் 2014. 2017ல் நடந்த முயற்சிகளிலும் ஹமாஸ் அரசியல் பாதையை அங்கீகரிக்கும் போக்கை விட அதை பலவீனப்படுத்தும் நோக்கமே வெளிப்பட்டது. இது குறுங்குழு மோதல்களைத் தூண்டி அரசை திறம்பட நடத்திச் செல்லும் எல்லா வாசல்களையும் அடைத்து விட்டது. ஐக்கிய அரசாங்கம் நடந்த மூன்று மாதங்களுக்குள் ஹமாஸின் ராணுவ பிரிவான அல் காஸம் படையினர் தங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் பத்தாஹ் ஈடுபடுவதாகவும் அதற்காக அமெரிக்கா நிதி மற்றும் ஆயுத உதவிகளை பயன்படுத்துவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். பரஸ்பர ஐயப்பாடுகள் நிலவிய இந்நிலையில் ஜூன் பத்தாம் நாள், ஹமாஸின் ராணுவப்படை காஸாவில் இருந்த பத்தாஹ்வின் பாதுகாப்புப் படையினைத் தாக்கி காஸா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. இதன் காரணமாக அதிபர் அப்பாஸ் நெருக்கடி நிலையை அறிவித்து ஐக்கிய அரசாங்கத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

சர்வதேச தர நிர்ணயங்கள்

                ஹமாஸ் தலைமையிலான ஆட்சி ஒரு வருடம் இரண்டு மாத காலத்திற்கு மட்டுமே தாக்குப் பிடித்தது. அதன் வீழ்ச்சிக்கு ஹமாஸ் – பத்தாஹ் கருத்து மோதல்களை மட்டுமே காரணமாக கொள்ள முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக இஸ்ரேலுக்கான சட்டயேற்பை ஹமாஸ் வழங்கத் தயாராக இல்லையென்பதால் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சிக்கல்களையும் பொருளாதார தடைகளையும் எதிர்கொள்ளும் நிலைக்கு அது தள்ளப்பட்டது. இந்த நெருக்கடிகள் ஹமாஸை மேலும் வலுப்படுத்தியதாகவே நாம் கருத வேண்டியுள்ளது. காஸா பகுதியில் இஸ்ரேல் மற்றும் உலக நாடுகளின் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் ஹமாஸ் தாக்குப்பிடித்து வருவதே அவர்களின் எதிர்ப்புநிலைத் திட்டத்திற்கான வெற்றியாகவே நாம் பார்க்க வேண்டும். ஐக்கிய அரசாங்கத்தை ஏற்க மறுத்து கருத்துத் தெரிவித்த புஷ் அரசு, “பிரதமர் ஹனியா சர்வதேச அளவீடுகளுக்கேற்ப தன்னைத் தகுதிபடுத்திக் கொள்ள தவறிவிட்டார்” என்று குறிப்பிட்டது. அதே சமயத்தில் ஹமாஸ் காஸா பகுதியில் தன்னை நிலைபடுத்திக் கொண்டதைப் பொறுக்காமல், டிசம்பர் 2008ல் இஸ்ரேலிய யூத அரசு 22 நாட்கள் மேற்கொண்ட கடுந் தாக்குதலில் நிராயுதபாணியான மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதையும் ஏறத்தாழ 60000 வீடுகளை தரைமட்டமாக்கியதையும் அம்னெஸ்டி அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானவர்கள் ஐநா உதவியில் ஜீவித்துக் கொண்டிருந்த பரம ஏழைகள் என்பது மேலும் கொடுமையான செய்தி. ஒரு போராளிக் குழு சனநாயக பாதைக்குத் திரும்பி அமைத்த ஆட்சியில் சர்வதேச தரத்தை” எதிர்பார்த்து உபதேசிக்கும் அமெரிக்க ஏகாதிபத்திய அரசு, நவீன தொழில் நுட்பங்களுடன் அசுர பலத்தோடு சவட்டி நடக்கும் இஸ்ரேலிய அரசுக்குக் குற்றவேல் செய்ய கிளம்பி விடுவதுதான் பலஸ்தீன சிக்கலுக்கான நிரந்தர தடைச்சுவராக எழும்பி நிற்கிறது.   

            இஸ்லாமிய ஒற்றுமை எங்கும் துளிர்த்துவிடாத படி பார்த்துக் கொள்வதுதான் மேற்கின் ஒற்றை குறிக்கோள். அது பலஸ்தீன போராளிக் குழுக்களுக்கு இடையே வந்துவிட்டாலும் யூத வல்லாதிக்க அரசுக்கு ஆபத்துதான் என்பதால் ஐக்கிய அரசாங்கத்தை சர்வதேச சக்திகள் அங்கீகரிக்கவில்லை. மேற்கின் அரசியல் மேலாதிக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டதில் உலகெங்கும் முஸ்லிம்கள் தான் அதிகம். “உலகத்தால் தாக்குதலுக்கு உள்ளானது மேற்கல்ல; சொல்லப்போனால் மேற்குலகினால் தான் உலகம் மிகப்பெரும் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. நவீன காலத்தின் பெரும் வல்லாதிக்கம் மேற்கினுடையது மட்டுமே” என்ற அர்னால்டு தொய்பி அவர்களின் கூற்றில் தான எத்தனை உண்மை. இந்த ஆட்டங்கள் அனைத்தையும் மேற்குலகம் மதச்சார்பின்மை, நவீன சிந்தனை, தாராளவாதம், மனித உரிமைகள் ஆகிய போர்வைகளைப் போர்த்திக் கொண்டே சிறிய தேசங்களின் மீது கட்டவிழ்த்து விட்டு தனது பசிக்கு இரை தேடிக் கொள்கிறது என்பது எப்பேர்ப்பட்ட முரண்.      

லியாகத் அலி – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *