நாம் வாழும் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. இந்நாட்டில் வாழும் குடிமக்கள் அனைவரும் தான் விரும்பிய மதத்தை தேர்ந்தெடுக்கவும் தான் விரும்பிய மனிதரை திருமணம் செய்யவும். நம் அரசியல் சாசனம் உரிமை வழங்கியுள்ளது.

அப்படிப்பட்ட இந்நாட்டில் ஒரு பெண் தான் விரும்பிய மதத்தை தேர்ந்தெடுத்ததற்காகவும். தான் விரும்பிய மனிதரை திருமணம் செய்தார் என்ற காரணத்திற்காகவும் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டு மனநோயாளி என்று முத்திரைகுத்தப்பட்டார் என்று கூறினால் நம்புவதற்கு சற்று கடினமாகத்தான் இருக்கும்.

ஆம். உன்மைதான். இவ்வாறு பாதிக்கப்பட்டவர் தான் சகோதரி அகிலா அசோகன் (எ) ஹாதியா ஷப்பீன்‌.
இவர் டிசம்-9-1991 அன்று கேரளாவில் உள்ள கோட்டயத்தில் அசோகன் மற்றும் போன்னம்மாள் தம்பதியினருக்கு பிறந்தார்.

இவரின் தந்தை நாத்திகவாதியாகவும் தாய் இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றுள்ளவராகவும் இருந்தனர்.
இளம் வயதிலேயே இவர் தன் தாயுடன் சேர்ந்து இந்து மதத்தை வழிபட்டு வந்தார். இவர் கடவுள் கொள்கையில் மிகுந்த நம்பிக்கை உள்ளவராக இருந்தார். தன் சிறு வயதில் தன் தாயுடன் கோயிலுக்கு செல்லும் போது அங்கே நிறைய கடவுள்கள் இருப்பதை கண்டு குழப்பம் அடைவார். அப்போது தன் தாயிடம் இந்த கோயிலில் எந்த கடவுள் அதிக சக்தி வாய்ந்தது என்று கேட்டு அதிகம் சிவனையே வழிபட்டுவந்தார்‌.

கேரளா மாநிலத்தை சேர்ந்த இவர் தனது மருத்துவ படிப்பை படிப்பதற்காக தமிழகத்திலுள்ள சேலம் சிவராஜ் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.
சில காரணங்களால் விடுதியிலிருந்து வெளியேறி தன்னுடைய தோழிகளுடன் தனி வீடு எடுத்து சேலத்தில் தங்கி தன் கல்லூரிப் படிப்பை தொடர்ந்து வந்தார். அவ்வாறு அவ்வீட்டில் உடன் தங்கிய இரு தோழிகள் தான் ஜெசீனா மற்றும் பசீனா.
முஸ்லிம்களாகிய இவர்கள் இருவரும் தினமும் ஐவேளை தொழுபவர்கள் ஆகவும் ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பவர்கள் ஆகவும் இருந்தனர். இவ்வாறு ஏன் இவர்கள் தொழுகிறார்கள், நோன்பு நொற்கின்றார்கள் என்ற ஆர்வம் ஹாதியாவை பற்றிக்கொள்ள.
அவர் கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாத்தைக் குறித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்தார். அவ்வப்போது தன் மனதில் எழும் சந்தேகங்களை தன் சக தோழியான ஜெசீனாவிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்வார். ஜெசீனாவும் இவருக்கு இஸ்லாம் குறித்த புத்தகங்களை வழங்கிக் கொண்டிருந்தார். இவ்வாறு இஸ்லாத்திற்கும் இவருக்கும் இருந்த தொடர்பு நெருங்கிக் கொண்டே போனது.

இவ்வாறு ஹாதியாவின் தேடல்கள்அவரை ஓரிறைக் கொள்கையை நோக்கி நகர்த்தியது. மேலும் இஸ்லாமியர்களை பற்றி சினிமா மற்றும் ஊடகங்கள் மூலம் தெரிந்து வைத்திருந்த தவறான பார்வைகள் அவரின் உள்ளத்திலிருந்து நீங்க ஆரம்பித்தன.
அவர் தனது கல்லூரியின் இரண்டாம் ஆண்டிலேயே இஸ்லாத்தை நேசிக்க தொடங்கி விட்டார் பின் நோன்புநோற்பதையும், ஹிஜாப் அணிவதையும், தொழுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார். இவ்வாறு இவர் தனது கல்லூரி வாழ்வு ஆண்டுகள் சென்ற பிறகு. இவரின் பாட்டனார் 2015-ல் காலமானார். உடனே இவர் கல்லூரியில் விடுப்பு எடுத்து வீட்டிற்கு திரும்பினார்.

அப்போது அவரின் உள்ளத்தில் இனிமேல் இஸ்லாத்தின் வழிமுறையை மட்டும்தான் பின்பற்றுவேன் என்ற உறுதி ஏற்பட்டது.
இந்துமதச்சடங்குகளில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட அவர் உடனே தன் வீட்டிலிருந்து புறப்பட்டு தன் தோழியான ஜெஸீனாவின் வீட்டை அடைந்தார்.

இவ்வாறு அவர் மதம் மாறியது வீட்டிற்கு தெரியவே ஹாதியாவின் தந்தை 18 ஜனவரி 2016ல் முதல் ஆட்கொணர்வு மனுவை கேரள உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்தார். அவரது தந்தைக்கு இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்து தவறான எண்ணங்களே இருந்தன. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்ற பொய் பிரச்சாரம் அவரின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அவரின் தந்தை சார்பில் வாதாடிய வக்கீல் ஆர்எஸ்எஸ் ஐ சார்ந்த மோகனன். இவர் இஸ்லாத்தை தீவிரவாதம், பயங்கரவாதம் என்றும் அவருடைய மதமாற்றத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் எனும் அமைப்பையும் காரணமாக்கினார் மேலும் பல அர்த்தமில்லாத வாதங்களையும் முன்வைத்தார். ஆனால் நீதிமன்றம் ஹாதியாயாவிற்கு சாதகமாக அவர் தான் விரும்பிய மதத்தை பின்பற்றலாம் என்ற தீர்ப்பை வழங்கியது. இவரின் விருப்பப்படி மாங்சேரியில் உள்ள சத்யசரணி எனும் இஸ்லாமிய நிறுவனத்தில் தங்கி இஸ்லாத்தை குறித்து படிக்க அனுமதியும் வழங்கியது மேலும் சைனாபா எனும் டீச்சரை இவருக்கு கார்டியனாகவும் நியமித்தது.

2016 ஜனவரி 20ல் இவரின் படிப்பு சத்யசரணியில் தொடங்கியது.
தன் பெற்றோரின் மீது பாசத்தை இழக்காத ஹாதியா தன் பெற்றோருக்கு தொடர்ந்து கால் செய்துவந்தார் ஆனால் பெற்றோருக்கு அவர் மீது பாசம் இல்லாத காரணத்தால் அவரின் அழைப்புகளை அவர்கள் எடுக்கவில்லை.
இதற்கிடையில் இவரின் மதமாற்றத்திற்கு சத்தியசரணி தான் காரணம் என்று கூறி அந்நிறுவனத்தை தகர்ப்பதற்கான முயற்சிகளும் நடத்தப்பட்டன.
இரண்டு மாத படிப்பிற்கு பிறகு அவர் சென்றது சைனபா அவர்களின் வீட்டிற்கு தான். சைனபா அவர்களின் வீட்டில் அவரும் அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் இருந்தனர். மிக விரைவிலேயே ஹாதியா அவர்களின் குடும்பத்தில் ஒருத்தியாக மாறிவிட்டார் அவர் மிகவும் சந்தோஷமாகவும் இருந்தார்.

இரண்டு மாத இஸ்லாமிய படிப்பிற்கு பிறகு அவர் தனது ஹவுஸ் சர்ஜன் படிப்பைத் தொடர்வதற்காக சேலத்திற்கு திரும்பினார். ஆனால் நாள் அவர் வருவதற்கு முன்பே அவரின் தந்தை அசோகன் ஹாதியாவின் அனைத்து சான்றிதழ்களையும் கல்லூரியிலிருந்து வாங்கி சென்று விட்டார்.
இதனால் அவரின் ஹவுஸ் சர்ஜன் படிப்பு தடைபட்டது.

இவ்வாறு அவர் தனது படிப்பை தொடர முடியாமல் டீச்சரின் வீட்டில் வாழ்ந்து வந்தார் இதனிடையே தன் தந்தையிடம் இரண்டு மூன்று முறை தொலைபேசியில் உரையாடியுள்ளார். ஆகஸ்ட் 17 2016 அன்று திடீரென டீச்சரின் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது. ஹாதியாவின் தந்தை மீண்டும் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் என்றுதான்.

அன்றுதான் ஹாதியா தன் தந்தையிடம் தொலைபேசியில் உரையாடி இருந்தார். உரையாடல் மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தது. அப்போதுதான் ஹாதியாவிற்கு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது அவரின் தந்தை இல்லை என்றும் அவர் பின்னால் யாரோ இருந்து இயக்குகின்றார்கள் என்றும் அவருக்கு தெரியவந்தது.

அப்போது ஹாதியா தன் தந்தையை பயன்படுத்தி சங்பரிவார சக்திகள் தன்னை மிரட்டுவதற்காக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தது குறித்து அவர் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார் அந்த கடிதத்தில்.
அவர் இஸ்லாத்தில் இருப்பதற்கே விரும்புவதாகவும், அரசியலமைப்பு சட்டம் அனுமதித்திருக்கும் மத சுதந்திரம் எனக்கு தடுக்கப்படக் கூடாது, கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சிக்கும் என் தந்தையிடம் இருந்து என்னை பாதுகாக்க வேண்டும், ஹிந்துத்துவ தீவிரவாதிகள் என் தந்தையை பயன்படுத்தி என்னை கொல்ல முயற்சிக்கின்றனர். என்னை வாழ அனுமதிக்க வேண்டும் என்றும்
காவல்துறையின் ஒருதலை பட்சமான நடவடிக்கைக்கு நான் அஞ்சுகிறேன். காவல்துறை அச்சுறுத்தலில் இருந்தும் அவமானப்படுத்தலில் இருந்தும் என்னை காக்க வேண்டும், மேற்கூறிய காரியங்களில் தாங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என்று அவர் கூறியிருந்தார் ஆனால் முதலமைச்சர் கூட அவர் குரலுக்கு செவிசாய்க்கவில்லை.

இந்த வழக்கு ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது ஆனால் அப்போது ஹாதியாவின் குரல் எதையும் நீதிமன்றம் கேட்கவில்லை. பிறகு அவரின் விருப்பத்திற்கு மாறாக 35 நாட்கள் ஹாஸ்டலில் சிறைவாசம் வைத்தனர்.
பிறகு அவர் விடுதலை ஆகினார். அவரின் அந்த ஹாஸ்டல் அனுபவம் அவருக்கு திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை துரிதப்படுத்தியது.

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அவருக்கு ஷாப்பீன் ஜஹான் என்பவரின் திருமண ஆலோசனை வந்தது.
பின்பு டிசம்பர் 19 2016 ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. மிகுந்த சந்தோஷத்தில் இருந்த ஹாயாவிற்கு அதிர்ச்சி 20ம் தேதி மாலையில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவு வந்தது.

நீதிமன்றத்தில் அவருடைய திருமணம் செல்லாது எனவும் அது போலியானது எனவும் கூறி ஹாதியாவை டிசம்பர் 21 முதல் ஹாஸ்டலில்சிறைக்கு மீண்டும் அனுப்பியது. ஹாஸ்டலில் அவருக்கு புத்தகம் படிப்பது அவருக்கு தடை செய்யப்பட்டிருந்தது அடிக்கடி கோர்ட்டிற்கு விசாரணைக்காக சென்று வந்துகொண்டிருந்தார். அவர் தங்கியிருந்த ஹாஸ்டலில் அவரை தீவிரவாதி என்றும் ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பில் இருக்கிறார் என்று கூறியும் தனிமை படுத்தப்பட்டார்.
இவ்வாறு அவர் 2017 ஆம் ஆண்டு மே 26 வரை ஹாஸ்டலிலேயே இருந்தார். அங்கு பல முறை அவரை இஸ்லாம் மார்க்கத்திலிருந்து மாற்ற முயற்சிகள் நடைபெற்றும் வந்தது.

பிறகு மே 24 ஆம் தேதி அன்று சட்டபூர்வமாக நடைபெற்ற ஹாதியாவின் திருமணம் செல்லாது எனவும் மேலும் விருப்பமின்றி அவரின் பெற்றோரின் வீட்டில் தங்க அனுப்பி வைத்தது நீதிமன்றம்.
முதலில் 35 நாளும் 156 நாளும் பிறகு வீட்டு காவலிலும் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றத்தை பார்த்து ஹாதியாவிற்கு தோன்றியது ஒரே ஒரு விஷயம்தான். ரிமாண்டில் இருக்கும் கைதிகளுக்கு கூட இந்த அளவு கட்டுபாடுகள் இல்லை. ஏன் எனக்கு மட்டும் நான் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுவதாலா? இந்த இந்திய நாட்டில் நான் விரும்பிய மதத்தை பின்பற்றுவது அவ்வளவு பெரிய சட்டவிரோதமான விஷயமா? போன்ற பல கேள்விகள் அவரின் உள்ளத்தில் எழுந்தன.

அவர் வீட்டில் இருக்கும் போது அவருக்கு பல உண்மைகள் தெரிய வந்தது தன்னை கல்லூரிக்கு அனுப்பும் போது நாத்திகராக இருந்த தன் தந்தை தற்போது ஆர்எஸ்எஸ்ஸி ன் கைப்பாவையாக மாறி இருக்கிறார் என்று. அவர் தந்தையின் மாற்றம் அவருக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. ஆரம்பத்தில் மனதிற்குள் தொழுது வந்த ஹாதியா பகிரங்கமாக வீட்டில் தொழ ஆரம்பித்தார் அப்போதிலிருந்து அவருக்கு பிரச்சனைகள் வர ஆரம்பித்தன அவரை ஒரு இருட்டு அறையில் அவரின் வீட்டினர் பூட்டினர். அவரது தந்தையின் தலைமையில் வீட்டில் பல பூஜைகளும் நடந்தது இவர் மீண்டும் இந்துமதம் திரும்ப வேண்டும் என்பதற்காக. பிறகு 6 மாதம் வீட்டிலேயே அடைபட்டு இருந்தார். அவ்வப்போது கவுன்சிலிங்களையும், மிரட்டல்களையும், பெற்றோர்களின் கண்டிப்பினையும் மேலும் பல சித்திரவதைகளையும் அனுபவித்தார் ஹாதியா. மேலும் கர்வாபாசிகள் இருவரால் மதம் மாற்றும் முயற்சியும் இவருக்கு மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையில் ஹாதியாவின் திருமணம் லவ்ஜிகாத் ஆகவும். கட்டாய மத மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டார் என்றும் என்று கூறி வழக்கு தொடரப்பட்டு வந்தது. ஹாதியா மற்றும் ஷஃபீனின் திருமணம் கேரள உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டதை தொடர்ந்து. ஷஃபின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரின் திருமணத்தை விசாரிக்க நீதிமன்றம் (NIA) நேஷனல் இன்வெஸ்டிகேஷன் ஏஜன்ஸியை நியமித்தது உச்ச நீதிமன்றம்.

இவ்வாறு வழக்கு ஒருபுறம் நடந்து கொண்டிருக்க ஓணம் பண்டிகையின் போது ஹாதியாவை சந்திக்க ஒரு பெண்களின் குழு பூக்கள் மற்றும் இனிப்புகளை எடுத்துக்கொண்டு அவரின் வீட்டிற்கு சென்றது. ஆனால் தந்தை அசோகன் அந்த பெண்களின் குழுவை வீட்டிற்குள் அனுமதிக்க வில்லை. என்னுடைய மகளுக்கு நாங்கள் கொடுப்பதே போதுமானது நீங்கள் ஒன்றும் கொடுக்க வேண்டாம் என்று கூறி அவர்களை வெளியே அனுப்பிவிட்டார். அப்போது விஷயம் தெரிந்த ஹாதியா வீட்டினுள் இருந்து “என்னை இங்கிருந்து காப்பாற்றுங்கள் என்னை சித்திரவதை படுத்துகின்றனர் என்னை கொலையும் செய்வார்கள் என்று எனக்கு அச்சமாக இருக்கின்றது” என அந்த குழுவை நோக்கி சத்தமிட்டார். இதனைக் கேட்ட அந்த குழு வீட்டு வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போதும் அவர்களால் பார்க்க முடியவில்லை.

பிறகு சமூக ஆர்வலர் ராகுல் ஈஸ்வர் என்பவரால் ஹாதியா பேசும் வீடியோ 1 வெளியிடப்பட்டது. அதில் ஹாதியா தனது நிலை குறித்து விளக்கியுள்ளார். அதில், “என்னை இங்கிருந்து நீங்கள் வெளியில் எடுக்க வேண்டும். நாளையோ நாளை மறுநாளோ நான் கொலை செய்யப்படலாம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். என் தந்தை மிகவும் கோபமுற்று இருக்கிறார். நான் நடக்கும் போது அவர் என்னை தள்ளியும் உதைத்தும் துன்புறுத்துகிறார். எனது தலையோ அல்லது உடலில் எதாவது ஒரு பாகமோ எங்காவது மோதி நான் இறந்தால்…” என்று அந்த வீடியோ முடிவடையும். இவ்வாறு இவரின் கஷ்டங்களை இந்த வீடியோவில் பகிர்ந்தார்.

வீட்டில் அவர் அடைபட்டிருந்த காலத்தில் பலமுறை உண்ணா விரதங்களையும் மேற்கொண்டிருக்கிறார் ஆனால் அவை அனைத்தும் பயனற்றதாகவே போயின.

பிறகு நவம்பர் மாதம் அவர் நீதிமன்ற விசாரணைக்காக அழைக்கப்பட்டார்.
அங்கே ஹாதியா தன் நிலைமை பற்றி எடுத்துக் கூறினார். நான் இப்பொழுது படிக்க வேண்டும். என் கணவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்கிற தன் கோரிக்கையை முன்வைத்தார்.
ஆனால் நீதிமன்றம் உங்கள் திருமணத்தை பற்றி இப்போது எதுவும் கூற முடியாது. என்று கூறி உங்கள் படிப்பை நீங்கள் தொடரலாம் என்று உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் இவர் நவம்பர் 28ஆம் தேதி மீண்டும் சேலம் சிவராஜ் ஹோமியோ கல்லூரியில் சேர்ந்து தன் ஹவுஸ் சர்ஜன் படிப்பை தொடங்கினார்.

தொடர்ந்து நடந்து கொண்டிருந்த ஹாதியாவின் வழக்கு ஒரு வழியாக 2018 மார்ச் மாதம் 3ஆம் தேதி முடிவை நோக்கி நகர்ந்தது. டெல்லி உயர்நீதிமன்றம் அவர் வழக்கில் NIA மற்றும் அரசு வழக்கறிஞரின் (லவ் ஜிஹாத் கட்டாய மதமாற்றம் மற்றும் தீவிரவாதம்) போன்ற வாதங்களை தள்ளுபடி செய்து ஹாதியாவை தன் விருப்பப்படி வாழ அனுமதித்து தீர்ப்பளித்தது.

பல போராட்டங்களுக்கு பிறகு ஹாதியா தன் விருப்பப்படி தன் வாழ்க்கையை வாழ தொடங்கியிருந்தாலும்.
ஏன் அவர் அவர் இவ்வளவு கஷ்டத்தை அனுபவித்தார். மற்ற நாடுகளின் உளவுத்துறை எல்லாம் பற்பல முக்கியமான விஷயங்களை விசாரித்துக் கொண்டிருக்கும் வேளையில் ஏன் இந்தியா மட்டும் தன் மிகப்பெரிய உளவுத்துறையை ஒரு பெண்ணின் திருமணத்தை விசாரணை செய்வதற்காக ஏவியது?
இந்த இந்தியாவில் ஒரு பெண் தான் விரும்பிய மார்க்கத்தையும் தான் விரும்பிய நபரையும் செய்துகொள்ள வேண்டுமென்றால் இவ்வளவு போராட்டங்களை சந்திக்க வேண்டும்?
ஏன் நாத்திகவாதியாக இருந்த அசோகன் ஹாதியாவின் விஷயத்திற்காக தீவிர இந்துத்துவவாதி ஆக மாற வேண்டும்?
ஏன் அவள் பெண் என்ற ஒரு காரணத்தினாலா? இஸ்லாத்தை தேர்ந்தெடுத்தாள் என்ற காரணத்தினால?.

இதற்கெல்லாம் காரணம் இந்தியாவில் உள்ள சங்பரிவார சக்திகள் செய்யும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரமே மேலும் இதற்கு உறுதுணையாக இருப்பது இன்றைய சினிமாவும் இன்றைய ஊடகமும்.
இந்த பொய் பிரச்சாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது. இந்தியாவில் இதுபோன்ற இஸ்லாமிய வெறுப்பின் காரணமாக ஹாதியாவை போல் மேலும் பலர் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால்.
இந்திய அரசாங்கம் கண்டிப்பாக இஸ்லாமியவெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிரான தனிச்சட்டம் கொண்டுவந்தே தீரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் பலரின் ஒருமித்த கருத்தாக இருக்கின்றது.

  • சகோதரன் ஹபீப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *