குற்றவாளிகளின் இறுதி அடைக்கலம் (resort) அரசியல் என்ற சொல்வழக்கு உள்ளது. இது இந்திய அரசியலை மையப்படுத்தி சொல்லப்பட்ட ஒன்றல்ல எனினும், சமீப காலத்தில் இந்திய அரசியல் என்பது மிகவும் கேவலமான ஒன்றாக மாறி கொண்டுள்ளது என்பது உண்மை. அதிகாரத்தை அடைவதற்காக குறுக்கு வழிகளின் ஊடான பயணமும், ஆட்களை கவிழ்ப்பதும் குதிரை வியாபாரமும் தொடர்கதையாகி விட்டன. இந்திய அரசியலின் புதிய அடையாளமாக ரிசார்ட் அரசியல் மாறிவிட்டது. தங்களது கட்சியின் கொள்கை கோட்பாடுகளை, செயல்திட்டங்களை மக்களிடத்தில் சொல்லி வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், பிறகு தங்களுடைய சுய நலன்களுக்காக, அதிகார மோகத்திற்காக பிற கட்சிகளுக்கு தாவும் போக்கு அதிகரித்து வருகிறது. தாவுபவர்களை தக்க வைப்பதற்காகவும் தங்களிடம் இருப்பவர்கள் பிற கட்சிகளுக்கு தாவி விடாமல் இருப்பதற்காகவும் ரிசார்ட்டுகள் பயன்பட ஆரம்பித்துள்ளன. தமிழ்நாடு அரசியலின் கூவத்தூர் மாடல் ரிசார்ட் அரசியல், இப்போது தேசிய மாடலாக மாறிவிட்டது. இதோ, இப்போது அந்த வரிசையில் மஹாராஷ்டிரா இணைந்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே தலைமையில் நடக்கும் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி அரசை  கவிழ்ப்பதற்கான பணி ஆரம்பமாகிவிட்டது. அம்மாநில அரசின் நகர வளர்ச்சித்துறை அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுத்துள்ளதும் இதே வழியைத்தான். தாக்கரேவுக்கு எதிராக இந்த எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு ஷிண்டே சென்றுள்ளது பாசிச பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்திற்குதான். சமீப காலமாக பிற கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியும் ஆசை வார்த்தைகள் காட்டியும் ஆட்சி  அமைக்கும் பாஜகதான் இதற்குப் பின்னாலும் செயல்படுகிறது என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அவர்களிடமிருந்து உத்தவ் தாக்கரே ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் தப்பித்து வந்ததன் விளைவு மற்றவர்கள் அனைவரும் அசாமிற்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டனர். பாஜகவின் செயல்பாடுகளை ஆதரிக்காமல் பிற கட்சிகளுக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்கின்ற பொழுது மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளித்து எதிர்கட்சியாக செயல்படாமல், பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைக்கும் கேவலமான அரசியலை பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. பீகார், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஜார்கண்ட், கோவா, வடகிழக்கு மாநிலங்கள் உட்பட அனைத்திலும் இந்த கேவலமான வழிமுறைகளை  பாசிச பாஜக பயன்படுத்தியுள்ளது. மக்களின் தீர்ப்பு தங்களுக்கு எதிராக இருந்தாலும் தங்களது திட்டத்திற்கு ஏற்ப அதிகாரத்தைக் கைப்பற்ற அனைத்து விதமான கேவலமான செயல்பாடுகளையும் செய்யலாம் என்ற ஈனச் சிந்தனையின்  பகுதிதான் இப்போது மகாராஷ்டிராவிலும் நடந்து வருகிறது. ஏனெனில், தங்களது சனாதன தர்மத்தை நிலைநாட்ட அனைத்து விதமான சூதுகளையும் சூழ்ச்சிகளையும் செய்யலாம் என்ற மனுதர்ம, சாணக்கிய தத்துவங்களைத்தானே இந்த சங்பரிவார் கும்பல்களும் பின்பற்றுகிறது.

பாஜகவையும் சங்பரிவாரையும் மக்கள் நிராகரித்த போதும் பிற கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி அதிகாரத்தைக் கைப்பற்றும் விபரீத அரசியலுக்கு பெயர்தான் ‘ஆபரேஷன் தாமரை’ (Operation Kamal).  ஆளும் கட்சியிலும் கூட்டணியிலும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளுக்காக காத்திருந்து, அதை ஊதிப் பெரிதாக்கி உள்ளே நுழைந்து தங்கள் காரியங்களை சாதிப்பதுதான் இதன் வழிமுறை. இது கர்நாடகாவில் தொடங்கி நாடு முழுவதும் வியாபித்து வருகிறது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதை ஏக்நாத் ஷிண்டே விரும்பவில்லை. இதை உணர்ந்துகொண்ட பாஜக ஒன்றிய அமைச்சர் நாராயணன் ராணேவும் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்படி ‘ஆப்பரேஷன் தாமரையை’ ஆரம்பித்துள்ளனர் என்பதுதான் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த போதே இதன் அடையாளங்கள் வெளித் தெரிய ஆரம்பித்து விட்டன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற லேஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலிலும் மகாராஷ்டிரா மகா கூட்டணியை சேர்ந்த 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். பாஜக போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றது.  அதற்குப் பிறகுதான் அதிருப்தி எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு ஷிண்டே குஜராத்திற்கு சென்றார். 25 ஆண்டு காலமாக தொடர்ந்த சிவசேனா – பாஜக கூட்டணியை தகர்த்தவர்களுக்கு பதிலடி தர பாஜக இதன் மூலம் தயாராகிக் கொண்டிருக்கிறது. எவ்வாறாவது பழைய கூட்டணியை உருவாக்கி மகாராஷ்டிராவை ஆள வேண்டும் என்ற அவர்களின் ஆசை நனவாகப் போகிறது. நடைபெறப் போவதை உணர்ந்து கொண்ட உத்தவ் தாக்கரே தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி விட்டார்.

ஒன்றிய அரசை மட்டுமல்ல ஒட்டுமொத்த மாநிலங்களையும் ஆள்வதற்காக பாஜக தேர்ந்தெடுத்த வழிமுறையான ‘ஆபரேஷன் தாமரை’ என்பது ஜனநாயக விரோதமாகும். ஜனநாயக வழிமுறைகளின் ஊடாக மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் பின்வாசல் வழியாக அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது மக்களையும் ஜனநாயகத்தையும் இழிவுபடுத்துவதாகும். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதன் மூலம் கட்சித் தாவல் தடைச் சட்டத்தையும் நீர்த்துப் போகச் செய்கிறது பாஜக. இந்த ஜனநாயக விரோத இழிசெயல் தொடர் கதையாக மாறிவிட்டது.

ஜனநாயகத்தை பச்சையாக கற்பழிக்கும் பாஜகவின் இந்தப் போக்கைக் கண்டு நீதிமன்றங்களும் மௌனத்தை கடைபிடிக்கின்றன. சட்ட திருத்தங்களையும் சீர்திருத்தங்களையும் போதித்துக் கொண்டிருக்கின்றன. முன்பு கர்நாடகாவில் இதைப்போன்று குதிரை வியாபாரம் நடந்த பொழுது கட்சி தாவிய சட்டமன்ற  உறுப்பினர்களின் ராஜினாமாவை அங்கீகரிக்க மறுத்த சபாநாயகரின் உத்தரவை கட்சித்தாவல் தடை சட்டத்தை முன்னிறுத்தி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை காப்பாற்ற இதைப்போன்ற குதிரை வியாபாரங்களை தடைசெய்ய அமைப்புச் சட்டத்தின் 10 ஆவது பிரிவை வலுப்படுத்த வேண்டும்

என்ற அறிவுரையைத்தான் அப்போதும் நீதிமன்றம் வழங்கியது. சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திச் சென்று ரிசார்ட்டில் தங்க வைத்து ஆளும் அரசை கவிழ்க்கும் பாசிச பாஜகாவால், மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்பட்ட பொழுதும் உச்சநீதிமன்றம் இதையேதான் கூறியது. அமைப்புச் சட்டத்தின், நாட்டின் பிரகடனப்படுத்தப்பட்ட நிலைபாடுகளுக்கு எதிராக உருவாகும் தீமைகளை தடுத்து நிறுத்த கட்சித்தாவல் தடை சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று அன்று நீதிபதி டி.ஓய். சந்திரசூட் கூறினார். சட்டத்தை வலுப்படுத்துவதும் சட்ட திருத்தங்களை உருவாக்குவதும் நாடாளுமன்றம்தான். ஆனால் அந்த நாடாளுமன்ற அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்துள்ளவர்களாலேயே மாநிலங்களில் ஜனநாயக விரோதமான முறையில் ஆட்சி கவிழ்க்கப்படுகின்ற பொழுது இங்கே யார் யாரைக் காப்பாற்ற முடியும்..?

அதிகாரத் திமிரில் நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும், எதிர் குரல்களை நசுக்கிக் கொண்டிருக்கும், எதிர்க்கட்சிகளை இல்லாமல் ஆக்குவதற்கான சதி வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பாசிச பாஜகவின் சங்பரிவாரின் சதிகளை இன்னமும் பிற கட்சிகள் உணரவில்லை என்பதுதான் உண்மை. ஊழல்களால் உருவாக்கப்பட்ட தங்களது செல்வச் சாம்ராஜ்யத்தை காப்பாற்றுவதற்காக, தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக பாஜகவின் கால்களை நக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் பல அரசியல் கட்சித் தலைவர்கள். ஒரு நாள் இவர்கள் அனைவரும் அரசியல் களத்தில் இருந்து பாஜகவால் ஒழித்துக் கட்டப்படுவார்கள் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் தங்களது கட்சியை காப்பாற்றுவதற்கும் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டியதும் பாஜகவை ஒழித்துக்கட்ட வேண்டியதும் காலத்தின் தேவையாகும்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *