பலநாடுகளில் மக்கள் பொறுப்புணர்வோடு நடந்திருக்கிறார்கள். அங்கே கொரானா கட்டுப்பாட்டுக்குள் வந்திருக்கிறது. இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை.. ஒரே காரணம்! இங்கே ஆட்சியாளர்களுக்குப் பொறுப்பில்லை.. போன ஆண்டு இதே காலகட்டத்தில்

* புலம்பெயர் தொழிலாளர்களை சோறு தண்ணியில்லாம அலையவிட்டது..

* ஒரு வழியாக அவர்கள் ஊர்திரும்ப ரயில் விட்ட பிறகும் அதற்கான கட்டணத்தைத் தர மாட்டேன் என்று நீதிமன்றத்திலேயே அழிச்சாட்டியமாக சொன்னது.

* வெளியில் அலைந்து திரியும் தொழிலாளர்களுக்கு உணவு தானியங்களைக் கூட கொடுக்கக் கூடாதா? அதெல்லாம் மாநில அரசுகள் தர வேண்டும்.

* அதே போன்று நோய் பரிசோதனை தொடங்கி தடுப்பூசி வரை வரும்.. ஆனா வராது நிலை தான் எங்கும்.

.* ஊரடங்கு காலத்தில் எந்த நிவாரணத்தையும் மத்திய அரசு வழங்கவில்லை..

* பெருந்தொற்றையே காரணமாக கொண்டு ஓரளவுக்கேனும் நமக்கு வசமாகிக் கொண்டிருந்த பிற மருத்துவ வசதிகளைக் கூட உச்சாணிக் கொம்பில் கொண்டு வைத்துவிட்டு மற்ற நோய்களின் தாக்கத்தால் மரணங்கள் அதிகரித்து வருவதை வேடிக்கைப் பார்ப்பது.

* கொரானா காலத்தின் பிற விபரீதங்களைக் கருத்தில் கொள்ளாமல் முழு ஊரடங்கு, தனிமைப்படுதல் போன்றவற்றால் மட்டுமே எல்லாத்தையும் கிழிச்சுடுவோம் என்று சொல்லித் திரிவது

* மாத சம்பளக்காரர்கள், பெரு நிறுவன உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவை எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க, மற்றவர்கள் குறித்து விட்டேத்தியாய் இருக்கும் அணுகுமுறை..

இவையனைத்தும் ஒரு வருடத்திற்கு பிறகு இப்போதும் தொடர்கிறது. இந்த அலட்சியம் சாமான்ய மக்களை அரசு அமைப்பை விட்டும் விலகி நிற்கச் செய்கிறது. இங்கே அவனை அவன் தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அளவில் ஒட்டுமொத்த அமைப்பும் அவனை பரிதாபமாய்க் கைவிட்டுள்ளன. அவனிடம் நீங்கள், “பொறுப்போடு நடந்துகொள்.. தனித்திரு.. பாதுகாப்பாய் இரு.. நோய்த் தொற்று பரவலுக்குக் காரணமாக இருக்காதே” என்றெல்லாம் உபதேசிக்கிறீர்கள். கேட்பதற்கு தித்திக்கிறது. ஆனால் பலன்? இப்படியெல்லாம் நாட்டுக்காக – அதன் மக்களுக்காக அவன் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும்.. ஆனால் நீங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள மாட்டீர்கள்..

இப்ப அவனென்ன செய்கிறான்.. காய்ச்சல் அடிக்கிறது.. மருந்து வாங்கிப் போடுகிறான்.. சரியாப் போகிறது.. அவன் பாட்டுக்கு வேலை பார்க்கப் போகிறான். இதை அவன் வேண்டுமென்று செய்யவில்லை.. வேறு வழியே இல்லை. நீங்கள் சொல்லும் வழிகாட்டுதல்களுக்கான எந்த சிஸ்டமும் இங்கில்லை. அதை ஏற்படுத்தாமல் பழியைத் தூக்கி சாமான்யன் தலையில் தூக்கிப் போட்டு ஒய்யாரமாய் ஓய்வெடுக்கிறீர்கள்.

சாமானியனுக்கு தேவை நோயை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை.. உண்மையில் அதுதான் மருத்துவர்களையும் மருத்துவத்தையும் காப்பாற்றுகிறது.. உங்களது எந்த சிகிச்சையும் விட இதுவே பலனளிக்கும். நீங்கள் எல்லாம் வேலைக்கு ஆகமாட்டீர்கள் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டால், சாவை எதிர்கொள்வதே தனக்கு மாண்பு என்றிருந்து விட்டால் – அது மருத்துவத் துறையின் அப்பட்டமான தோல்வியாகத்தானே மாறும்.. அப்படி ஒரு நிலையில் இதுநாள் வரை நீங்கள் பெருமை பீற்றிக் கொண்ட சாதனைகள் என்னாவது?!

முன்னை மணிபால் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் B.M. Hegde கூறுவது என்னவென்றால் – “மனிதர்களின் ஆரோக்கியம் தான் முக்கியம்.. அதைப் பேணிக் காப்பாற்றுங்கள்.. அவர்களின் நோய்த் தடுப்பாற்றலை (immune) அதிகப் படுத்துங்கள்.. நோயை எதிர்கொள்ளும் வல்லமையை – நம்பிக்கையை அவர்களுக்கு ஊட்டுங்கள்.. சத்தான உணவுக்கு உத்திரவாதம் அளியுங்கள். அதுவே வைரஸ்களை வெற்றி கொள்ளும் ஒரே வழி!..” என்று பேசுகிறார்.

இதைவிடுத்து இதோ அங்கே வந்துடுச்சு.. இங்கே வந்துடுச்சு.. இவ்ளோ பேர் செத்துப் போயிட்டான்.. அவ்ளோ பேர் செத்துப் போயிட்டான்னு தானும் பயந்து பொதுமக்களையும் பயமுறுத்தி வழக்கமான வியாதிகளுக்கும் சிகிச்சையளிப்பதில் சுணக்கம் காட்டி ஒரு பான்டோரா பெட்டியைத் திறந்து வைத்திருக்கிறது மருத்துவ உலகம்.. சித்ரகுப்தன், விசித்திர குப்தன் கணக்காக மத்திய அரசு இன்றைய நோய்த் தொற்று இவ்வளவு.. இறப்பு இவ்வளவு.. குணமடைந்தவர் இவ்வளவு என்ற புள்ளி விவரத்தை வழங்க, புளங்காகிதம் அடைந்திருக்கிறார் எமதர்மராஜா..

லியாகத் அலி கான்

எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *