மருத்துவக் கல்லூரி நுழைவுத்தேர்வு என்ற பெயரால் இந்திய ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு அரசு சட்டமன்றத்திலே மீண்டும் இரண்டாவது முறையாக  தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஏற்கனவே செப்டம்பர் 2021ல் நிறைவேற்றப்பட்டு  அனுப்பப்பட்ட சட்டமன்றத் தீர்மானத்தை 142 நாட்களுக்குப் பிறகு திருப்பி அனுப்பிய ஆளுநர் ஆர்.என். இரவியின் அடாவடித்தனத்தை தொடர்ந்து இந்த புதிய தீர்மானத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி உள்ளது. ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்ற அண்ணாவின் பொன்மொழியை மீண்டுமொருமுறை தமிழ்நாட்டிற்கு ஆளுநர் ரவியின் செயல்பாடு நினைவுபடுத்துகிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டத்தை ஆளுநர் கையெழுத்திடாமல் திருப்பி அனுப்பிய நிகழ்வு பெரும் விவாதத்தை அரசியல் அரங்கில் உருவாக்கியிருந்தது. இதற்கு எதிராக அதிமுக-பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளும் ஒட்டுமொத்தமாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தார்கள். நீட் எதிர்ப்பு என்பதை கடந்து மாநிலங்களின் அதிகாரம், ஒன்றிய அரசின் அதிகாரத் திணிப்பு, ஃபெடரலிசம் தொடர்பான விவாதங்களின் பக்கம் தற்போது நாடு நகர்ந்துகொண்டிருக்கிறது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட்டை இல்லாமல் செய்வோம் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியாகும். ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களை மருத்துவத்துறையில் இருந்து அகற்றி நிறுத்துவதற்கான வேலைதான் நீட்டின் மூலமாக நடைபெறுகிறது என்பதுதான் தமிழ்நாட்டின் நிலைபாடாகும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒருபோதும் நீட் உதவாது என்பது வெளிப்படையான உண்மை. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் பயிற்சி மையங்களில் பல லட்சங்களை கட்டிப் படிக்கும் பணக்கார மாணவர்களுக்கும்தான் இந்த நீட் தேர்வால் பெரும் பயன் உள்ளது என்பது தமிழ்நாடு மக்களின் அரசின் உறுதியான வாதமாகும். கூடவே இலட்சங்களை பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கும் பயிற்சி மையங்களும் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். தீண்டாமையின் நவீன வடிவமே நீட் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சொன்னது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற கருத்துக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் எழுந்துள்ளது. இவ்விஷயம் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன. முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டமன்றத்தில் சொன்னதைப்போல நீட் ஒரு புனிதப் பசு ஒன்றும் அல்ல, அது ஒன்றிய அரசால் அவசர சட்டமாக நிறைவேற்றப்பட்ட ஒன்று மட்டுமே.

நீட்டின் நன்மை தீமைகளை கடந்து, ஒரு மாநிலம் அந்த மாநிலத்தின் சமூகச் சூழலை கருத்தில் கொண்டு அம்மாநில மக்களின் நன்மைக்காக ஒரு சட்டத்தை இயற்றும் அதிகாரம் அம்மாநில அரசுக்கு இல்லையா என்பதே இப்பொழுது நாம் விவாதிக்க வேண்டிய மையமான விஷயமாகும். நீட்டுக்கு எதிராக இரண்டாவது முறையும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம்  இவ்விவாதத்தை மேலும் வலுப்படுத்துகிறது. இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டுள்ள சட்ட மசோதாவில் கையெழுத்திடுவதை தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்றே அமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்த சட்ட மசோதா ஆளுநரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட பிறகு, அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதும் முக்கியமான ஒன்றாகும்.  குடியரசுத் தலைவர் இந்த சட்ட மசோதாவிற்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என்றால் தமிழ்நாட்டில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்த தெளிவான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே நாங்கள் குறிப்பிடுவோம் என்ற தமிழ்நாடு அரசின் தீர்மானம் இந்திய ஒன்றியத்தை அசைத்துப் பார்த்த ஒன்று. நரேந்திர மோடி அதிகாரத்தில் வந்தபிறகு நாட்டின் ஃபெடரல் அமைப்பு பெரிய அளவில் சீர்குலைக்கப்பட்டு இருக்கிறது என்பது கண்கூடாக தெரிகின்றது. ஜிஎஸ்டி, NIA,  நீட் போன்ற அமைப்புகள் அதனுடைய அடையாளங்கள்தான். அமைப்புச் சட்ட திருத்தங்கள் எதுவும் செய்யாமலேயே, அவசரச் சட்டங்களின் மூலமாகவும் ஒன்றிய அரசின் அடாவடி செயல்பாடுகளின் மூலமாகவும் மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசின் புதிய நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள ‘ஒரு நாடு ஒரு நிலப்பதிவு’ என்ற கொள்கை அறிவிப்பும் அதனுடைய நீட்சிதான். சுய அதிகாரங்கள் உள்ள மாநிலங்களின் கூட்டமைப்புதான், ஒன்றியம்தான் இந்த நாடு என்ற பார்வைக்கு பதிலாக மாநிலங்களை தங்களது ஆணைகளை நிறைவேற்றும் வெறும் பஞ்சாயத்துகளாக மட்டுமே பார்க்கிறது ஒன்றிய அரசு.

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசிய பேச்சு, ஃபெடரல் தத்துவங்களுக்கு எதிராக ஒன்றிய அரசு நடத்திக் கொண்டிருக்கும் செயல்பாடுகளின் மீது நடத்தப்பட்ட பெரும் தாக்குதல் ஆகும். ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒன்றுபட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.  தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நாட்டுக்கு புதியதொரு அமைப்புச் சட்டமே தேவையென கூறியுள்ளார். இந்திய ஒன்றிய அரசால் தத்தமது மாநிலங்கள் மீது நடத்தப்படும் புறக்கணிப்புக்கு எதிரான கோபங்கள் வட கிழக்கு மாநிலங்களிலும் தென்னிந்திய மாநிலங்களிலும் எழத் தொடங்கியுள்ளது.

அதனால்தான் தமிழ்நாடு அரசால் சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள நீட்டுக்கு எதிரான சட்ட மசோதா, நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான ஒரு நகர்வு மட்டும் அல்ல. மாநிலங்களின் தனித்துவத்தை காப்பாற்றுவதற்கும் இந்திய நாட்டின் பெடரல் கலாச்சாரத்தை நிலை நிறுத்துவதற்கும் வேண்டி எடுக்கப்பட்டுள்ள பரந்துபட்ட போராட்டத்தின் ஒரு பகுதியாகவே இதை நாம் பார்க்க வேண்டும். இதை ஆதரிக்க வேண்டிய கடமை அனைத்து ஜனநாயகவாதிகளுக்கும் உண்டு.

ஒற்றை கலாச்சாரம், ஒற்றைவரி, ஒற்றை கல்வி முறை, ஒற்றை காவல் முறை, ஒற்றை நிலப்பதிவு… எனத் தொடர்ந்து தற்போது ‘ஒரு நாடு ஒற்றைத் தேர்தல்’ என்ற பாசிச நடவடிக்கைகள் பக்கம் பாஜக அரசு சென்று கொண்டிருக்கிறது. நாட்டை குறித்த கவலையை விட தங்களது வருமானத்தைக் குறித்து மட்டுமே கவலை கொள்ளும் அதிமுக தலைமை, இது போன்ற நடவடிக்கைகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்துக் கொண்டிருப்பது மாநிலங்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். அதிமுக பாஜகவின் இந்த மக்கள் விரோத, மாநில விரோத செயல்பாடுகளுக்கு எதிராக வாக்கு மூலம் நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அதற்கான நேரம்தான் இப்போது நமக்கு முன்னால் உள்ளது. வடமாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலிலும் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் பாசிச பாஜகவிற்கு நாம் அளிக்கும் பெரும் தோல்வி அவர்களைப் பின்வாங்கச் செய்யும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *