எதிர்ப்பின் அடையாளங்கள்

அரிதாரம் பூசும் தருணத்தில்

வெறுப்பின் அவதாரங்கள்

அரியணை ஏறுகின்றன..

அகமதாபாத் பற்றி எரிந்தது.

வாரணாசி பற்றி எரிந்தது.

டெல்லி பற்றி எரிந்தது..

குஜராத் குடுவையில்

மீண்டும் ஒரு முறை

செந்நீர் அமிலம் ஊற்றி

எரிசோதனை நடக்கிறது..

சனநாயக காட்சிப் பேழைகளில்

கலைநய ஒப்பனையோடு

நேர்த்தியான அலங்கோலங்கள்..

காரணங்கள் புதிது.. களம் புதிது..

பிண்டம்வைத்து நடக்கும் காரியங்கள்

எந்நாளும் அழியாத அரதப்பழசு..

மக்களை பிளவுபடுத்தி விட்டால், வாய்ச்சவடால் டெல்லிவரை பேசும் என் மந்திரத்தை உச்சாடனம் செய்தே  குறைந்தபட்சம் பத்து தேர்தலுக்கு வெற்றியைப் பறிக்கும் தந்திரத்தைக் கற்றவர்கள் உத்திரபிரதேச தேர்தலை முன்னிறுத்தி களமாடத் தொடங்கி விட்டார்கள். ஓட்டுப் பொறுக்குவதில் பல்வேறு வரிசை மாற்றங்களையும் அணி சேர்க்கைகளையும் (permutations and combinations) சாத்தியப்படுத்த, சமூகம் செங்குத்தாக  உயிரோடு  பிளக்கப்படும் வேளையில், படுகளத்தில் ஒப்பாரி எதற்கு என்று மட்டுமே சாமானியன் தன்னைத் தேற்றிக் கொள்ள முடியும். எந்தவொரு சித்தாந்தமும் முரட்டுத்தனமாக அதன் எல்லைகளுக்கு விரட்டிச் செல்லப்படும்போது அது தீவிர மன நோயாகவே உருவெடுக்கும். அத்தகைய அபாயத்தின் சான்றாதாரங்களே கலாச்சார தேசபக்தர்கள் “தங்களது வீட்டிலேயே குண்டு வைப்பது, தங்களது வாகனத்தையே கொளுத்துவது, தங்களது ஆட்களையே கடத்துவது, தாக்குவது, கொல்வது”  போன்ற தீவிர வெறிச்செயல்கள் ஆகும். தன் பசிக்கு தன் குட்டியையே சாப்பிடும் அளவிற்கு ஒரு கூட்டம் வெறியேற்றப்பட்டு மூளைச்சலவை செய்யப்படுகிறது. அப்படி விழுங்கப்படுபவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள் என்று கருதி பெருஞ்சமூகம் கடந்து போகிறது. ஆனால் அவர்களின் பாசக் கயிறில் அப்படிப்பட்ட எந்த பாராபட்சமும் இல்லை. அவர்களின் சொல், செயல், கட்டளைகள் எதிரொலிக்கும் அறைகளின் (Echo Chambers) அலப்பறைகளைத் தாண்டி கேட்கும் முணுமுணுப்புகளைக் கூட அவர்கள் சகிக்க மாட்டாமல் சுருக்குக் கயிறை இறுக்கத் தயாராகி விடுகிறார்கள். ஹத்ராஸ் வன்புணர்வு குறித்து செய்தி திரட்டப்போன சித்தீக் கப்பான் உள்ளிட்ட மூன்று பத்திரிகையாளர்கள் UAPA ஆள்தூக்கி சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ளியது யோகி அரசு. இலாகிம்பூரில் விவசாயிகள் மேல் காரை ஏற்றி கொன்றுபோட்ட சம்பவத்தை காணொளி காட்சியாக எடுத்த ராமன் காஷ்யப் என்ற பத்திரிகையாளர் சம்பவ இடத்திலேயே துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகி இருப்பதாக குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கை இது விஷயத்தில் மௌனம் சாதிக்கிறது. அதே போல் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக சொல்லப்படும் குர்விந்தர் சிங் என்ற விவசாயியின் பிரேதப் பரிசோதனை (இருமுறை பிரேதப் பரிசோதனை கோரியும்) சான்றிதழும் உண்மையை வெளிப்படுத்தாமல் இறுக்கமாகவே இருக்கிறது. முன்னாள் ஆர்எஸ்எஸ் ஊழியரும் எழுத்தாளருமான சதிஷ் மின்னி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். எனவே முஸ்லிம் x முஸ்லிமல்லாதவர் என்ற பார்வை குறைந்தபட்சம் அவர்கள் கரங்களில் இருக்கும் கொலைவாளுக்கு இல்லை எனக் கொள்ளலாம். இத்தகைய மனநோயாளிகளை கண்டும் காணாமல் விடுவதற்கான ஒரு அமைப்பு – அதனை இயக்கும் ஒரு அதிகார வர்க்கம் ஆகியவை முயன்று நுட்பமாகக்  கட்டமைக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஐஏஎஸ், ஐபிஎஸ் இதற்காகவே தயாரிக்கப்படுகிறார்கள். நாட்டைப் பிடிக்க (கவனிக்க: காக்க அல்ல) ஒரு வீட்டை பலி கொடுக்கலாம் என்கிற குருட்டு சிந்தனையால் காயடிக்கப்பட்டவர்கள் இவர்கள். “பாகிஸ்தானை அழித்தொழிக்க பத்து கோடி இந்தியர்களை பலிகொடுத்தாலும் கவலையில்லை” என்று சுப்ரமணிய சாமி சொன்னதையும் இந்த சிந்தனை கிடங்கின் நீட்சியாகவே பார்க்க முடியும். கிடைக்கும் இடைவெளிகளில் எல்லாம் அறிவார்ந்த மூளைகளும் தங்கள் விஷக் கொடுக்குகளைத் தாமதிக்காமல் உள் நுழைக்கின்றன.

  சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டு சரித்திரத்தில் இரண்டு அம்சங்களின் ஊடாக இத்தகைய மன நோய் தீவிரமாக பரவி இருக்கிறது. அவை சாதியவாதம், வகுப்புவாதம்.. இந்த இரு காரணங்களுக்காகவே ஆயிரக்கணக்கான கலவரங்கள் எல்லா ஆட்சிகளிலும் அரங்கேறியிருக்கின்றன. சாதியம் குறித்து பேசுகையில் பொதுவுடமை தலைவர் பி.ராமமூர்த்தி, “எந்த ஆதாரமும் அடித்தளமும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் சாதிமுறை, மக்கள் மனங்களில் ஆழமாக வேரூன்றி நிலைத்து வருவது இந்து மதத்தின் விநோதம் மட்டுமல்ல; இந்தியாவின் சாபக்கேடும் ஆகும்” என்றார். இந்தியாவில் வசிக்கும் சுமார் 17 கோடி  தாழ்த்தப்பட்ட மக்களில்  72% பேர் விவசாயம் சார்ந்த தொழில்களையே இன்றளவும் நம்பியுள்ளனர். அவர்களில் 12% பேர்  நிலமற்ற கூலிகளாக உள்ளனர். 53% பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்ந்து வருகின்றனர். உத்திர பிரதேசத்தைப் பொறுத்தவரை இந்த விகிதாச்சாரமும் ஏற்றத் தாழ்வும் கூடுதலாகவே இருக்கிறது. இவர்களின் மீது எவ்வித கேள்விக் கணக்குமின்றி தொடர்ந்து வன்முறை ஏவிவிடப்படுகிறது. சராசரியாக 18 நிமிடத்திற்கு ஒருமுறை ஒரு குற்றச்செயலை தலித்கள் இந்தியாவில் எதிர்கொள்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் 5 வீடுகள் எரிக்கப்படுகின்றன; 6 பேர் கடத்தப்படுகின்றனர்; 21 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். நில உடமை அமைப்பில் சாமான்ய மக்களிடமிருந்து நிலத்தைப் பறித்து அவர்களை ஏதிலிகளாக ஆக்க எத்தனையோ உபாயங்களை கார்ப்பரேட் அரசு கையாண்டு வருகிறது. சமீபத்தில் அஸ்ஸாமில் காலங்காலமாக விவசாயம் செய்துவந்த முஸ்லிம்களிடமிருந்து பறிக்கத் துணிந்த நிலம் 4500 பிகா (நில அளவை) ஆகும் – ஒரு பிகா 26910 சதுர அடி என்றால் மொத்த கணக்கைப் போட்டுக் கொள்ளுங்கள். விவசாயிகளை நிலத்தை விட்டும் விரட்டும் மற்றொரு திட்டம் புதிய விவசாயக் கொள்கை. இதை எதிர்க்கும் வேளாண் குடிகள் அரசின் கண்களை உறுத்துகின்றன. சமுதாயத்தின் கீழ்மட்டத்தில் வைத்து தொடர்ந்து நசுக்கப்படும் அடிதட்டு மக்களை திட்டமிட்ட வன்முறைக்கு இலக்காக்கிவிட்டு, அதன் பலனை அறுவடை செய்யும்  ஆதிக்க சக்திகள், பழியைத் திரும்பவும் ஒடுக்கப்படுபவர் மீது போட்டு சாதுர்யமாக தப்பித்துக்கொள்கின்றன. இவர்கள் வன்முறையை அடித்தட்டு மக்களோடு – விளிம்புநிலை மக்களோடு – சிறுபான்மை இனங்களோடு மட்டும் இணைத்துக் கட்டமைப்பதில் கில்லிகளாக இருக்கிறார்கள். ஒரு பக்கம் மந்திரி பிரதானிகள் மெல்லிய குரலில் பூசி மெழுக, சாத்வி, சாக்‌ஷி, ஆதித்யநாத் போன்றவர்கள் நடந்த கொடூரத்தை நியாயப்படுத்தி வெறுப்பை உமிழ்வதுடன் பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக சித்தரிக்கும் வேலையையும் செவ்வனே செய்கின்றனர். இங்கே சைவ பசுக்களே புலித்தோலை போர்த்திக் கொண்டுதான் அலைகின்றன.

  அக்லாக் கொலையுண்ட கொடூர தாக்குதலுக்கு வக்காலத்து வாங்கிய “திருக்குறள்” தருண் விஜய் எம்பி /பொது அமைதியைக் காக்கும் பொறுப்பு இந்துக்களிடம் மட்டும்தானா? முஸ்லிம்களுக்கு அதில் பங்கு இல்லையா?/ என்று நேர்முரணான அறம் பேசினார். ஷாஹின் பாக் போராட்டம் குறித்து பாஜக எம்பி பர்வேஷ் வர்மா இப்படி திருவாய் மலர்ந்தார்: “டெல்லி மக்கள் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அவர்கள் இப்போது அமைதியாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. விரைவில் உங்கள் வீடுகளில் அவர்கள் நுழைவார்கள். உங்கள் பெண்களை வன்புணர்வார்கள்.. கொலை செய்வார்கள்.. மோடி, அமித்ஷா உள்ளிட்ட நாங்க யாரும் ஏன் என்னான்னு யாரையும் பாதுகாக்கமாட்டோம்”. சிகப்பு மொசாம்பிக் நாகம் மனிதனின் கண்களைக் குறிபார்த்து துல்லியமாக நஞ்சைத் துப்பக் கூடியது. என்ன கொடுமை என்றால் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்புகளை இந்த சமூகத்தில் இருந்தே பிடித்துக் கொண்டு போய் கண்களைக் குறிபார்த்து துப்பப் பழக்கி நம்மின் மீதே ஏவுகிறார்கள். அப்படிபட்டவர்களில் ஒருவர் முக்தர் அப்பாஸ் நக்வி. எப்போதும் விஷத்தைக் கக்குவதற்காக மட்டுமே வாயைத் திறப்பார். 

   முஸ்லீம் என்பதற்காக, தலித் என்பதற்காக, சமூக ஆர்வலர் என்பதற்காக, போராட்டக்காரர்கள் என்பதற்காக இங்கு யார் கொல்லப்பட்டாலும் அதை தட்டிக் கேட்க நாதியில்லை என்பதில், இந்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்ளும் யாருக்கும் பெருமை இருக்கமுடியாது. “ஆளும் கருத்தியலோடு ஒத்துப் போகாவிட்டால், அப்படிப்பட்ட மக்கள் இங்கே கொல்லப்படுகிறார்கள்” என்று எழுத்தாளர் நயன்தாரா சேகல் 2015 ஆம் ஆண்டே சொல்லிவிட்டார். கலவர அரசியலை நிறுவனமயமாக்கும் ஒரு அரசு அமைந்து, அதற்கு நீங்கள் துணைபோய்விட்டால், எந்த புனிதப்பசுவையும் கொல்லலாம்.. உட் கொள்ளலாம்.. ஏற்றுமதி செய்து கொள்ளை அடிக்கலாம். நில்.. கவனி.. கொல் எனும் அரசியல் சமிக்ஞையையும் நீங்கள் வரிந்து கொள்வது எளிமையாகிறது. இப்படிபட்ட பின்புலத்தில் (தலித்கள் உள்ளிட்ட) விவசாயிகள் போராடுவதையும் ஒரு வருடகாலத்திற்கு மேலாக களத்தில் தாக்குப் பிடிப்பதையும் இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளுக்குப் பரவுவதையும் மேலாதிக்க வர்க்க நலன்களுக்காகவே செயல்படும் சர்க்காரால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்? நிலப் பிரபுத்துவ அமைப்பில் இத்தகைய உரிமை போராட்டத்தின் வெற்றி நில உடமையை குறிவைத்து பாரதூ விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆதிக்க சக்திகள் கண்டு கொள்ளாமல் போகாது. அத்தகைய விளைவுகள் உள்ளூர் ஜமீன் சாம்ராஜ்யங்களையும் காலப்போக்கில் சரித்துப் போடும். எனவே தான் எல்லா அரசியல் லாபங்களைக் கணக்குப் போட்ட, ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் அருமந்த புத்திரர் ஆஷிஷ் மிஸ்ரா  தனது ரதத்தை விவசாயிகள் மேல் செலுத்தி ரத்தத்தை ஓட்டியிருக்கிறார். போனால் உ(ம)சுரு; வந்தால் மலை என்பதுதான் சூத்திரம்.  

  சமீபத்திய சம்பவங்கள் அவருக்கு இதற்கான அளவிலா தைரியத்தையும் துணிச்சலையும் தந்திருக்கும் என்று தாராளமாக நம்பலாம். சென்ற வருடம் இதே செப்டம்பரில் நடத்தப்பட்ட ஹத்ராஸ் கூட்டு வன்புணர்வில் தாக்கூர் இனத்தின் உட்கைகளாக காவல்துறை நடந்து கொண்டதும் அதனால் தருக்கித் திரியும் தாக்கூர் விடலைகள், குளிர்விட்டுப் போய் பாதிக்கப்பட்ட ஆஷாவின் தோழிகளுக்கும் தொல்லை கொடுப்பதும் தொடர்கிறது. அதே போன்று நான்கு வருடங்களுக்கு முன்பு பாஜக எம்எல்ஏவால் பாலியல் வன்புணர்வுக்கு இலக்கான உன்னாவ் சிறுமியின் தந்தை சிறைக் கொட்டடியில் பிராணனை விடுகிறார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட பெண் உட்பட அவரது குடும்பத்தினர் மீது லாரி ஏற்றி இரண்டு பேரை சாகடிக்கிறார்கள். இந்த காட்சிகளெல்லாம் ஆஷிஷ் கண்ணுக்கு முன்னாலே வருமா.. இல்லையா? பார்த்துக்கலாம்டா என்று நினைக்கத் தானே செய்வான்? அவ்வளவு பின்னோக்கி எதற்கு போவானேன்? சில நாட்களுக்கு முன் அஸ்ஸாமில் நில உரிமை கோரிய முஸ்லிம்களின் மீது வெறித்தனமான தாக்குதலைத் தொடுத்து மொய்னுல் ஹக் என்ற இளைஞனை அடித்தே கொன்று போடுகிறார்கள். உயிருக்கு போராடுபவன் மீது, வன்மம் பிடித்த ஒரு அரசு புகைப்படக்காரன் எகிறி குதிக்கிறான். வங்காளி முஸ்லிம்களைத் துடைத்தெறிய அரசு நிலம் என்று காரணங்காட்டி 800 குடும்பங்களை விரட்டியடிக்க, மெஷின் கன்களோடு களத்தில் இறங்கிய காவல்துறையையே எதிர்த்து நின்றால் விடுவார்களா? ஆவேசமாக சுட்டும், கொடூரமாகத் தாக்கியும் மூன்று பேர்களைக் கொன்று போட்டதால் அஸ்ஸாம் முதல்வர் ஹேமந்த் பிஸ்வா சர்மா நிரம்ப சந்தோஷமாக இருக்கிறார்.
காவல்துறை தனது கடமையை சரிவர செய்கிறது என்றும், வன்முறைக்குப் பிறகு மீண்டும் நிலம் கையகப்படுத்தும் பணி ஜரூராக நடைபெறுவதாகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்
. எல்லாவற்றையும் இந்த நாடு பார்த்துக் கொண்டு தானே இருக்கிறது?

  மாட்டுக்காக எத்தனையோ பேர் அடித்துக் கொல்லப் பட்டார்கள். அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததற்காக சமூக ஆர்வலர்கள் பலர் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இது எதுவும் ஆட்சியை – ஆள்பவர்களை அசைத்துப் பார்க்கும் பிரச்சினையாக மாறவில்லையே? சொல்லப் போனால் சாதிய, மத வன்முறைகள் ஆட்சியதிகாரத்தை அறுதியிடுகின்றன. எனவே இந்த வன்முறைகளால் ஊட்டம் பெறும் அராஜக பேர்வழிகள், அதிகார மையங்களின் ஒட்டுண்ணிகளாக மாறுகிறார்கள். இந்த நச்சு சுழலைத்தான் ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார் வெளிப்படையாக அறிவித்துவிட்டார். “அரசுக்கு எதிரான போராட்டம் நடக்கும் இடங்களுக்கு ஆயுதங்களுடன் செல்லுங்கள். அடித்து நொறுக்குங்கள்.. ஜெயிலுக்குப் போவதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.. திரும்ப வரும்போது மிகப் பெரிய தலைவராக வர வாய்ப்புண்டு” என்ற சூட்சமத்தை திருஷ்டி பூசணிக்காயாகத் தெருவில் போட்டு உடைத்திருக்கிறார். இவ்வாறானவர்களை கணக்கில் வராதவர்களாக (fringe elements) கருத வேண்டுகிறது பாஜக.. எச்சரிக்கை! பல ஆண்டுகளுக்கு முன் வி.எச்.பி, பஜ்ரங்தள் போன்றவை இப்படியாகத் தான் முன்னிறுத்தப்பட்டன. எனவே உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் அரசியல் நகரும் திசை தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இங்கே அறிவுஜீவிகள், அரசியல் ஞானிகள் என பலரும் தீவிரவாதம், பயங்கரவாதம் என்றால் வடிவேலு கணக்காய் “அது எங்கிட்டோ சிரியா, பலஸ்தீன், ஆப்கன் பக்கம் இருக்குது” என்று சாய்வு நாற்காலியில் சரிந்து உட்காருகிறார்கள். அரசு நிறுவன பாதுகாப்போடு மூக்குக்குக் கீழ் நடக்கும் அடாவடித் தனங்கள், கொடூர கொலைகள், வன்புணர்வுகள் ஆகியவற்றை விட்டு விலகி அவர்கள் பார்வை எங்கோ நிலைகுத்தி நிற்கிறது. உலக அமைதி குறித்துதான் அவர்களுக்குக் கவலை.. உள்ளூர் அமைதி? அது கிடக்கட்டும் வெங்காயம்!

  போராட்டக் களங்களில்  துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு கலவரம் செய்ய எத்தனிக்கும் கண்டவனையெல்லாம்,  தூத்துக்குடியில் குறிபார்த்து சுடும் மஞ்சள் சட்டை ஆசாமியைப் போல் போலீஸின் கையாளாக, கொடுங்கரமாகத் தான் பார்க்க முடியும். போராட்டத்தை ஒடுக்குபவர்கள், வன்முறை வெறியாட்டம் ஆடுபவர்கள் அனைவரையும் ஒரே ஆதிக்க வர்க்கத்தின் தொகுதியாகத்தான் பார்க்க வேண்டும். ஒருவேளை இப்படிப்பட்ட மர்ம ஆசாமிகளை போராட்டக்காரர்கள் தாக்கிவிட்டால், போலீஸைத் தாக்கியதாகத் தான் திருப்பிவிட்டு ஆவேசமாக பாய்ந்து அடித்து நொறுக்குவார்கள். அவ்வாறின்றி இத்தகைய நபர்கள் கும்பலாக பிடிபட்டுவிட்டால், “சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள்” என்றோ, தனியாக சிக்கிக் கொண்டால் “அவன் ஒரு பைத்தியம்” என்றோ கதையை முடிப்பார்கள். அவர்களின் அடையாளத்தை தனித்தனியாகப் பிரித்துப் பரப்பும் குயுக்திக்கு பலியாவது அவர்கள் தொடர்ந்து  நாடகமாடும் தப்பித்தலுக்கே சிகப்புக் கம்பளம் விரிக்கும்.  அரசின் கண்ஜாடையும் ஒப்புகையும் இல்லாமல் ஆயுதங்கள் சகிதமாய் போலீஸோடு ஒருவராலும் ஒன்றிணைய முடியாது. “நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு இந்த நாடு அடியாட்கள் வசம் செல்லும்” என்று வின்ஸ்டன் சர்ச்சில் எழுபது ஆண்டுகளுக்கு முன் கொக்கரித்தது இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது. ஏபிவிபியோ, பஜ்ரங்கோ யாராக இருந்தாலும் ஏவல் படைகளின் அங்கம்தான் என்ற பார்வை தெளிவு நமக்கு வேண்டும்.

  துரதிர்ஷ்டவசமாக, நமது நீதி அமைப்புகளுக்கே அப்படிபட்ட பார்வை இல்லை. கடந்த டிசம்பரில் டெல்லி ஜாமிஆவில் இரவோடிரவாக குண்டர்கள் உட்புகுந்து மாணவர்களைக் கொடூரமாகத் தாக்கி, பெருங்கலவரத்தை நடத்திய போது நிதானமாக, ‘மார்ச் 23 ஆம் தேதி விசாரிக்கிறோம்’ என்றது உச்ச நீதிமன்றம். அதே சமயத்தில் CAA போராட்டங்களை எப்படியாவது முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு அழுத்தங்களை நீதிமன்றங்கள் கொடுத்தன. ஷாஹின் பாக் போராட்டகளத்தில் ஒரு மழலையின் மரணத்தை தன்னிச்சையாக விசாரிக்கப் போந்தது உச்சநீதிமன்றம். அடுத்ததாக போக்குவரத்து பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு வழக்காக நடத்தியது. ஆனால் போலீஸ் தாக்குதலில் மரணமடைந்த 25 போராட்டக்காரர்கள் குறித்து வாயே திறக்கவில்லை. தேசம் முழுவதும் கொரோனா பரவியதற்கு தப்லீக் ஜமாத்தான் காரணம் என்று வெறுப்பு பிரச்சாரம், காது, மூக்கு, கண் வைத்து பரப்பப்பட்ட போது அமைதியாக வேடிக்கை பார்த்த நீதிமன்றங்கள், ஒரு வருடம் கழித்து சாவகாசமாக “அநாவசியமாக இப்படி ஒரு கருத்தை மக்களிடையே உருவாக்கியது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் வருத்தமும் குற்றவுணர்ச்சியும் கொள்வார்கள் என்று எதிரபார்க்கிறோம்,’ என்று ஒரு உத்தரவில் குறிப்பிட்டு தமது கடமையை முடித்துக் கொண்டது. அப்பவும் இப்படி ஒரு அநியாயத்தை செய்தவர்கள் தாங்களாக முன்வந்து வருந்தத்தான் நமது நீதிமன்ற பெஞ்சு எதிர்பார்க்கிறது. திட்டமிட்டு சுமத்தப்பட்ட அந்த இழிவு, வேதனை, அவமானம், குமைச்சல், சமூக நிராகரிப்பிற்கும், அவற்றால் ஏற்பட்ட இழப்பிற்கும் மன உளைச்சலுக்கும் ஏதும் தண்டனையோ, அல்லது இனியொரு காலத்தில் அதே மாதிரி ஏற்படாது என்பதற்கான உத்திரவாதமோ, அரசுக்கான வழிகாட்டு நெறிகளோ நீதிமன்றங்களிடம் இல்லை. நிறுவனப்படுத்தப்படும் வன்முறையை தடுத்து நிறுத்தும் ஆற்றலை நமது சனநாயக அமைப்புகள் இழந்து கொண்டிருப்பது இவற்றின் மூலம் தெளிவாகிறது.  முஸ்லிம் சம்பந்தப்பட்டதில் எதை விசாரிப்பது – எதை கிடப்பில் போடுவது என்கிற இந்த வழமையான நீதிபரிபாலன செயல்பாடுகளை அவுட்லுக் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் வரிசைபடுத்தித் தொகுத்து தந்துள்ளார் ஆகார் பட்டேல். முஸ்லிம் மாதிரியில் பரிட்சித்து பார்க்கப்பட்ட இந்த வகைமையைத்தான், உரிமைக்காக குரல் எழுப்பும் விவசாயிகள் உள்ளிட்ட அனைவர்மீதும் தேச விரோத, பிரிவினைவாத முத்திரை குத்தி இந்துத்துவர்களால் இலகுவாக கடக்க முடிகிறது. அப்போதெல்லாம் அலறியடித்து இந்த கண்றாவியை நிறுத்தித் தொலையுங்கள் என்று கண்டிக்காத நீதிமான்கள் தாம், வழக்கு நிலுவையில் இருக்கும்போது ஏன் போராட வருகிறீர்கள் என்று அதட்டலாக கேட்கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் வன்மத்தை மட்டும் எந்த தடையுமின்றி தொடர்வதற்கான ஏற்பாடுகளை இந்த அமைப்பு பிரகாசமாகவே நீட்டித்து வைத்திருக்கிறது.

  அரசியல் புலத்தில் கேட்கும் ஆதரவு குரல்கள் கூட இந்திய அரசியலின் திசை மாற்றத்தை உள்வாங்கித்தான் வெளிப்படுகிறது. இலாகிம்பூரில் விவசாயிகளின் மேல் கார் ஏற்றிக் கொன்று போட்ட கொடுமைக்கு குரலெழுப்பிய காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்திக்கு ஆதரவளித்து தங்களின் சாம்னா பத்திரிகையில் தலையங்கம் தீட்டிய காங்கிரஸின் புதிய கூட்டாளி சிவசேனா, “பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பதால், அவர் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படலாம். ஆனால் அவர் நாட்டிற்காக பெரும் தியாகம் செய்து, பாகிஸ்தானை இரண்டாக (பங்களாதேஷ் உதயம்) பிரித்த சிறந்த தலைவர் இந்திரா காந்தியின் பேத்தி ஆவார். சட்டவிரோதமாக அவரை சிறையில் அடைத்தவர்கள் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும். பிரியங்கா காந்தி தீ போன்ற தலைவர் மற்றும் போராளி. அவரது கண்களிலும், குரலிலும், தனது பாட்டி, இந்திரா காந்தியின் அதே நெருப்பு உள்ளது”. என்று எழுதியது. வெளிப்பார்வைக்கு பாராட்டு போல் தோற்றமளிக்கும் இந்த வாசகங்கள் அந்நிய தேச பிரிவினையை உள்நாட்டு மக்கள் பிரச்சினையோடு லாவகமாக கோர்த்து விடுகிறது. போராட்டக் களத்தில் நிற்கும் அனைவருக்கும் பிரிவினை நோக்கம் உண்டு என்ற சங்பரிவாரங்களின் தொனி வெளிப்படுவதை கூர்மையாக உணரமுடியும். உண்மையில் சிவசேனாவிற்கு மக்கள் நலன் தான் பிரதானம் என்றால் பிரியங்கா காந்தியுடன் களத்திற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் நடக்காது என்பதை நாம் உறுதியாக சொல்ல முடியும்.

  ஏனெனில் 1947ல் தொடங்கி இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆயிரக்கணக்கான கலவரங்கள், கீழ்மட்ட சமூகங்களின் உயிர் – உடமைகளை சூறையாடி, அவர்களை அத்துக்கூலிகளாக – உள்ளூர் மேலாதிக்கத்திற்கான சேவகர்களாக மாற்ற தோதான சூழல்களை நிறுவவே நடத்தப்பட்டுள்ளன. இலாகிம்பூர் செய்கையிலும் பிராமண – தலித் அணிதிரட்டலைக் குறிவைத்து காய் நகர்த்தும் மாயாவதி ரொம்பவும் எச்சரிக்கையாக இதனை கையாள்வதையும், சமாஜ்வாதி கட்சி நழுவுற மீனாக வழுக்கிச் செல்வதையும் பார்க்க முடிகிறது. ராகேஷ் தெகாயித் என்ற விவசாய சங்கத் தலைவர், கொலை சம்பவம் நடத்தப்பட்ட பிறகு ஓடோடி சென்று யோகி அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசமாகிறார். இந்துத்துவ பாசிசத்தை எதிர்க்க வேண்டும் எனில், அவர்களின் செயல்பாட்டு வழிமுறையை (modus operandi) நன்கு விளங்கி, அவர்களின் வலையில் வீழாமல் சுதாரிப்பாக இருப்பதையே ஆதாரமான அரசியல் குணமாகக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயம். இந்துத்துவ அரசியல் முதன்மையான இரண்டு விதமான நிர்மூலக் கோட்பாடுகளை முன்னிறுத்தி இயங்குகிறது. ஒன்று எதிர் சித்தாந்த கட்சிகளை கபளீகரம் செய்வது, இரண்டாவது முஸ்லிம்களை எதிரிகளாக நிறுத்தி அவர்களை அழித்தொழிப்பதற்காக எல்லா வன்முறைகளையும் நிரல்படுத்துவது. இந்தியாவின் எதிர்கட்சிகள் இதற்கு எதிர்வினையாற்றுவதில் மோசமாக சோடை போயிருக்கின்றன. பல சமயங்களில் உறுதியுடன் எதிர்த்து நிற்பதில் தடுமாறி சங்பரிவார வலையில் வீழ்ந்து பேரிழப்புகளை சந்தித்துள்ளன. சில கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன. இதற்கு சரியான உதாரணம் பாஸ்வானின் லோக்சக்தி கட்சி.. சமீபத்திய தேர்தலில் ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது அக்கட்சி. எப்படி இருந்த நான், இப்படியாயிட்டேன் எனும் நிலை! முதலை வாயில் அகப்பட்ட கடல் ஆமைகளின் கதி! ஒருகாலத்தில் அம்பேத்கரைப் பின்பற்றி பட்டியலினத்தவர் சேனையை எல்லாம் துவக்கி தலித் ஆற்றலின் அடையாளமாக வீறுகொண்டு எழுந்த பாஸ்வானின் அரசியல் வீழ்ச்சியில் (இபிஎஸ், ஓபிஎஸ், என்ஆர் உள்ளிட்ட) இன்றைய விளிம்பு நிலை அரசியல் கட்சி தலைவர்களுக்கு அநேக படிப்பினைகள் உண்டு.. நிதிஷ்குமாரை டம்மியாக்க பாஸ்வான் கட்சியை மம்மியாக்கி பாடம் பண்ணியிருக்கிறது பாஜக! நிதிஷ் இழந்தது 28 இடங்களென்றால் பாஜக அதிகரித்துக் கொண்டது 21 இடங்கள். பகையாளி குடியைத்தான் உறவாடி கெடுப்பதாக சொல்வார்கள். இவர்கள் நண்பனின் குடும்பத்தையும் உறவாடிக் கெடுப்போம் வாங்க என்று ஆங்காங்கே அறைகூவி அழைக்கிறார்கள். பலே! முக்கியமாக நிதிஷ் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்ட 15 முஸ்லிம் வேட்பாளர்களைத் திட்டமிட்டுத் தோற்கடித்தது பாஜக. நிதிஷின் மீது முஸ்லிம்கள் வைத்த சிறுநம்பிக்கையும் காற்றுப்போன பலூனாக சூம்பிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் உவைஸிகளின் அடையாள அரசியல் களை கட்டுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

  இந்துத்துவத்தின் மொழி எப்பொழுதும் வேறு வேறு குரல்களில் ஒலிக்கும். அது கருத்தியல் தீவிரவாதத்தின் தாரக மந்திரம். பாஜக அரசின் அடிப்படை குணபாவங்களான வெறுப்பையும் பொய்மையையும் உடைத்தெறியாமல் பாசிசத்தை வெற்றிகொள்ளவே முடியாது. மக்களைக் கலவரக்காடுகளில் அலையவிட்டு, உயிர் வாழும் வேட்கையையே (Survival Instinct) முதன்மை இருத்தல் பிரச்சினையாக மாற்றிவிட்டால்  தேசத்தின் வளங்களை யாருக்குத் தாரை வார்த்தாலும் யாரும் கவலைப்படப்போவதே இல்லை. பெட்ரோல், டீசல் மேல் வரி என்கிற பெயரில் கடந்த 6 ஆண்டுகளில் மோடி அரசு இந்திய மக்களிடம் உருவிக்கொண்ட பணம் மட்டும் சுமார் ரூ.20 லட்சம் கோடி. சாமானியன் மண்டை வெடிக்கும் அளவுக்கு தலைவலி பிரச்சினைகளைத் தொடர்ந்து கொடுப்பதுதான் பிரதான திட்டம். பணமதிப்பிழப்பு, குடியுரிமை பறிப்பு, நான்கு மணிநேர அவகாசத்தில் ஊரடங்கு என்று ஒவ்வொரு மனிதனின் வாழ்வே கேள்விக்குறியாகும்போது, கலவரங்கள் ஏன், எதற்காக நடத்தப்படுகிறது என்று அவனால் எங்ஙனம் சிந்திக்க முடியும்? குறிப்பிட்ட ஆட்சி, குறிப்பிட்ட காலம் எனும் வரையறைகளைக் கடந்து பரவலாக திட்டமிடப்பட்ட கலவரங்கள் அரசியல் அணிதிரட்டல்களையே நோக்கமாகக் கொண்டவை. ஆரம்பத்தில் முஸ்லிம்களைக் குறிவைத்து இவை நிரல்படுத்தப் பட்டாலும் காலப் போக்கில் வழக்கமான செயல்பாடுகளாக மாறி, அவற்றின் வழியாக விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை சீர்குலைத்து போடுகின்றன. உதாரணமாக 1992-93 மும்பை கலவரங்களில் ஆசியாவின் மாபெரும் குடிசைப் பகுதியான தாராவியில் முஸ்லிம்கள் இழந்த சொத்துக்களின் மதிப்பு 4000 கோடி, வர்த்தக நட்டம் 1000 கோடி, சேவை மற்றும் உற்பத்தி பாதிப்பு 1250 கோடி, ஏற்றுமதி இழப்பு 2000 கோடி, அரசுக்கு சேரவேண்டிய வரி இழப்பு 150 கோடி. இது 1993ம் ஆண்டின் மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டதாகும். அதேபோல் குஜராத் இனப் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் நீங்கலாக ஒன்றரை லட்சம் பேர் மூன்று நாட்களில் அகதிகளாக்கப்பட்டு வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர்.. 45000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இவ்வளவு பெரிய பொருளாதார இழப்பில் அரசியல் ஆதாயம் அடைந்தவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். திட்டமிட்ட கலவரங்கள் மக்களின் அதிருப்தியை மடைமாற்றும் போக்கிடமாகவும், ஆதிக்க சக்திகள் தங்கள் நெருக்கடிகளிலிருந்து விடுபட்டு சற்றே மூச்சுவிடும் வாய்ப்பாகவும், அரசியல் எண்ணிக்கை விளையாட்டில் வெற்றியை எட்டிப் பிடிக்கும் தந்திரமாகவும் அமைந்து விடுகிறது. “நிறுவனப்படுத்தப்பட்ட வன்முறை அதன் விளைபொருளான இழப்புகளைப் பயன்படுத்தி சிறுபான்மையினரை இந்து சமயத்தின் கீழ்நிலை சாதிகளுடன் இணைத்துக்கொள்ள எத்தனிக்கிறது” என்கிறார் சமூகவியல் ஆய்வறிஞர் உமர் காலிதி. பொருளாதாரத்தை இயன்றளவுக்கு நாசம் செய்து தக்கவைத்த ஆட்சியில் தான் குஜராத் மாநிலம் ஆஹா .ஓஹோ ..என்று வளர்ந்துவிட்டதாக கட்டமைக்கப்பட்ட ஒரு மாய பிம்பத்தை நம்பி இவர் தகுதியானவர் என்று தாண்டி குதித்தவர்கள் பலர். பாஜகவின் அடிப்படை குணாம்சங்களான வெறுப்பையும் பொய்மையையும் உடைத்தெறியாமல் பாசிச இயக்கவியலை வெற்றிகொள்ளவே முடியாது.

  கலவரம் என்ற ஒற்றை ஆயுதத்தைக் கொண்டே தனக்கான ஆதரவு சக்திகளை ஒருமுகமாக திரட்டும் ஆதாய அரசியலின் முழு பரிணாமத்தை செயல்வடிவில் காட்டியது குஜராத். வன்முறை வரைமுறையின்றி கட்டவிழ்த்துவிடப்பட்ட அந்த காலகட்டத்தில் குஜராத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றியவர். ஹர்ஷ் மந்தர். நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த அவர், குஜராத்தில் இந்து மதவெறியர்களுடன் போலீசும், அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து நடத்திய இனப்படுகொலையை நேரில் கண்டபின் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அவர் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டில்  எழுதியுள்ள கட்டுரையில், ”குஜராத்தில் நடந்தது கலவரமல்ல; ஒரு பயங்கரவாதத் தாக்குதல், திட்டமிட்ட இனப் படுகொலை. ஒரு இராணுவத் தாக்குதலைப் போல எல்லாமே திட்டமிட்டு நடத்தப்பட்டது. வெறியூட்டும்படியான கோஷங்களை ஒலிபரப்பியபடியே முதலில் ஒரு லாரி வரும். பின்னாலேயே வரிசை வரிசையாக வரும் லாரிகளில் காக்கி டவுசரும், நெற்றியில் காவித்துணியும் கட்டிய ஆட்களைக் கும்பல் கும்பலாக இறக்கிவிடுவார்கள். வெடி பொருட்கள், திரிசூலம், கோடரி போன்ற ஆயுதங்களுடன் களைப்பைப் போக்கிக் கொள்ள தண்ணீர் பாட்டில்களையும் அவர்கள் கையில் கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு கும்பலின் தலைவன் கையிலும் செல்போன். உத்திரவுகள் போனில் வந்து கொண்டிருந்தன கைகளில் முஸ்லீம் குடும்பங்களின் பெயர்கள், சொத்து விவரம் அடங்கிய கம்ப்யூட்டர் காகிதங்களை அவர்கள் வைத்திருந்தார்கள். யாரைத் தாக்க வேண்டும் உட்பட அனைத்து துல்லியமான விவரங்களும் அவர்கள் கையில் இருந்தன இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் கலவர முகத்தை அங்குதான் மாற்றினார்கள். அதன் பிறகு அது உபி, டெல்லியிலும் இன்னும் கோரமாக தன் முகத்தைக் காட்டியது. கலவர உத்தியில் அரசும் காத்திரமாக பங்கேற்பதினால் ஏற்படும் கொடும் பாதிப்புகளை சென்னை மீனவ பகுதிகளிலும் துாத்துக்குடியிலும் பொள்ளாச்சியிலும் நாம் அனைவரும் பார்த்தோம். அவ்வாறு அரசும் கைகோர்த்துக் கொள்ளும்போது நியாயம் என்பது பூதக்கண்ணாடி வைத்து தேடினாலும் கிடைக்காது. அதுதான் இன்று உத்திர பிரதேசத்தில் நடக்கிறது. சோன்பத்ரா என்ற ஊரில் ஏற்பட்ட ஒரு நிலத் தகராறில் பத்து மலைவாழ் மக்கள் கொல்லப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திப்பதற்கு எந்த அரசியல் தலைவரையும் அனுமதிக்க மறுத்துவிட்டது யோகி அரசு. அதே போல் கோராக்பூர் பாபா ராகவ்தாஸ் மருத்துவ மனையில் 60 குழந்தைகள் பிராணவாயு இல்லாமல் இறந்த போதும் இதே வழிமுறையைத்தான் கையாண்டது.. அப்போதே உபியில் காட்டாட்சி நடக்கிறது என்றார் பிரியங்கா. அந்த வழிமுறை இன்று பிரியங்கா காந்தியின் மீது காவலர்கள் கைவைக்கிற அளவுக்கு வளர்ந்துள்ளது.

  எல்லாவற்றிற்கும் மேலாக குஜராத் மாடலின் குரூரத்தைப் பார்த்த ஹர்ஷ் மந்தர் சொல்கிறார். “எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்பது சாரே ஜஹான் ஸே அச்சா.. இந்துஸ்தான் ஹமாரா! சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் இந்த பாடலை பாடுவேன். இனி ஒரு போதும் என்னால் இந்தப் பாடலை பாட முடியாது” பசித்த பஞ்சை பராரிகள் ஒரு துண்டு ரொட்டிக்காக காத்துக் கிடக்கையில், பிரெஞ்சு பிரபுக்கள் சில்லறைகளை விட்டெறிந்து அதை பொறுக்க ஒடிவரும் அந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் மேல் தங்கள் சேரட் வண்டியை ஓட்டச் செய்வார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம். பண்டைய நிலபிரபுத்துவ மமதை பெரும் உக்கிரத்தோடு சனநாயக நாட்டு குடிகளின் முகத்தில் அறைவதைக் கண்ட பிறகு நம்மாலும் இனி அந்த பாடலை பாடமுடியாது.

– கோட்டை கலீம் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *