நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தலைமை ஏற்ற பிறகு அவர்களுக்கு பின்னால் இருந்து இயக்கும் சங்க பரிவாரின் அஜண்டாக்கள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற பாஜக அகில இந்திய செயற்குழுவில் அமித்ஷா சொன்னதைப் போன்று, இந்தியாவில் அடுத்த 40 வருடங்களுக்கு பாஜகவின் ஆட்சிதான்  என்ற பேச்சை நிரூபிக்கும் வண்ணம்தான் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த செயல்பாட்டின் ஒரு பகுதியாகத்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன் துவக்கமாக அசோக ஸ்தூபி நரேந்திர மோடியால் திறக்கப்பட்டுள்ளது.

அசோக ஸ்தூபி திறப்பு விழா என்பது ஒரு நிகழ்வு மட்டும் அல்ல. இந்த நாட்டிற்கு பல்வேறு குறியீடுகளை, செய்திகளை அதன் ஊடாக பாரதிய ஜனதா அரசு அளித்துள்ளது.

காந்தியின் இந்தியாவின் அடையாளமாக இருந்த அசோக ஸ்தூபி அல்ல இப்போதுள்ளது. அமைதியின் வடிவமாக இருந்த சிங்க உருவங்கள் இப்பொழுது ஆக்ரோஷ முகத்தோடும் கூறிய நகங்களோடும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முகநூலில் சிலர் பதிவிட்டது போல் உருவாக்கத் தவறல்ல. தாங்கள் எதுவாக இருக்கப் போகிறோம் என்பதை சொல்லுவதன் அடையாளம் அந்த சிங்க உருவங்கள். காந்தியின் இந்தியா, கோட்சேவின் இந்தியாவாக மாறியதின் அடையாளக் குறியீடுதான் புதிய அசோக ஸ்தூபி.

நாடாளுமன்ற ஜனநாயக மரபு தான் இந்திய அரசியல் மரபு. நாடாளுமன்றத்தின் முழு முதல் அதிகாரம் சபாநாயகருக்குத்தான். ஆனால் அசோக ஸ்தூபி திறப்பு விழாவில் சபாநாயகர் வெறுமனே பார்வையாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அதன் எல்லா நிகழ்வுகளிலும் முதன்மையாக பிரதமர் நரேந்திர மோடி முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அவர்தான் அசோக ஸ்தூபியை திறந்து வைத்துள்ளார். குடியரசுத் தலைவர் எங்கும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. நாடாளுமன்றத்தின், சபாநாயகரின் கண்ணியம் களங்கப்படுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் படிகளை கும்பிட்டு உள்ளே நுழைந்த நரேந்திர மோடி நாடாளுமன்றத்தின், நாடாளுமன்ற ஜனநாயக முறைமைகளின் காதகனாக மாறிவிட்டார்.

இந்திய நாடு என்பது பன்முக சமூக கட்டமைப்பை கொண்டுள்ள நாடு. இந்திய அரசின் வருமானம் என்பது அனைத்து சமூக மக்களின் பங்களிப்புடன் கூடியதுதான். 0.4 சதவீத மக்கள் தொகை கொண்ட ஜைனர்கள் முதல் கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என அனைத்து தரப்பு மக்களின் வருமான பங்களிப்பும் இந்திய வருவாயில் உள்ளது. இந்துக்கள் என்று சொன்னால் ஒரு தரப்பு அல்ல, அந்தக் கட்டமைப்பிற்குள் ஆயிரம் சாதிய குழுக்களும் கலாச்சார மாறுபாடுகளும் உண்டு. அத்தனை சமூக குழுக்கள் உடைய வரி வருவாயிலிருந்து கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடம் சென்ட்ரல் விஸ்டாவிக்கு மேல் கட்டப்பட்டுள்ள அசோக ஸ்தூபியின் திறப்பு விழா நிகழ்வு பிராமணிய பூஜை புனஸ்காரங்களின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ளது. இது ஒரு மத விழா அல்ல, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் அசோக ஸ்தூபியின் திறப்பு விழா நாட்டில் உள்ள ஒரு மதப் பிரிவினரின் சடங்குகளின்படி  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 இது ஒட்டுமொத்த இந்திய சமூகத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலாகும். அதுமட்டுமல்ல, வரும் கால இந்தியா இந்து மதத்தின் அடிப்படையில் அல்ல இந்துத்துவம் முன்வைக்கும் பிராமணிய கலாச்சாரத்தின் அடிப்படையில்தான் இயங்கும் என்பதை சொல்லாமல் சொல்லுகிறது பாசிச பாஜக அரசு.  பிராமணிய மேலாதிக்கத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவான ஆர் எஸ் எஸ்ஸின் நோக்கத்தை ஆர் எஸ் எஸ் அடைந்து விட்டது என்றே சொல்லலாம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒவ்வொரு கணமும் இந்தியா தனது கட்டமைப்பு, உள்ளடக்கம் மற்றும் கலாச்சாரத்தில் ஒரு உயர் சாதி நாடாக மாறி வருகிறது.

இது ஒரு அறிவிப்பு.  அரசியல் சாசனத்தில் இருந்து மதச்சார்பின்மையை நீக்க வேண்டும், அரசியலமைப்பை இந்துத்துவமயமாக்க வேண்டும், மனுஸ்மிருதியை அரசியலமைப்பாக ஆக்க வேண்டும் என்று வாதிடும் மேலாதிக்க சக்திகளின் இன அரசுப் பிரகடன விழாவின் ஒரு அங்கமாகவே இதைப் பார்க்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு என்றிருந்தாலும், சில இனக்குழுக்களுக்கு மட்டுமே அரசு பிரதிநிதித்துவம் அளித்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்பு உரைகளை மாற்ற வேண்டுமென்ற சங்பரிவார் சக்திகளின் கோரிக்கை இனிவரும் காலங்களில் கோரிக்கையாக மட்டுமே நிற்காது.

புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஆயிரம் இருக்கைகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை 500 ஜென்மத்துகளாக மாற்ற வேண்டும் என்றும் நாடாளுமன்ற தொகுதிகளை 800க்கு அதிகமாக உருவாக்க வேண்டும் என்ற ஆர்எஸ்எஸ் திட்டத்தின் வெளிப்பாடுதான் புதிய நாடாளுமன்ற இருக்கைகள். நாடாளுமன்ற தொகுதி மறுவறையீடு என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது. நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அதன் முடிவுகள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறான நடைமுறைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் தாங்களாகவே தீர்மானித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தையும் அதன் இருக்கைகளையும் உருவாக்கியுள்ளது பாசிச பாஜக அரசு.

அதுமட்டுமல்ல அதிகரிக்கப்படும் நாடாளுமன்ற தொகுதிகள் இப்போதுள்ள மக்கள்தொகை அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படும். மக்கள் தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து மக்கள் தொகையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள தென்னிந்திய மாநிலங்கள் குறைவான தொகுதிகளையும், மக்கள் தொகை கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல் உள்ள வட இந்திய மாநிலங்கள் அதிக தொகுதிகளையும் பெரும் பேரபாயம் உள்ளது. இதன் மூலம் தங்கள் பிடியை மேலும் வலுவாக பாஜக முனைகிறது. அதாவது, வரும் காலகட்டங்களில் ஆட்சி தங்கள் கையை விட்டு போகாமல் இருப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை இதன் மூலம் பாஜக செய்கிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிக முக்கியமான அங்கங்கள் எதிர்க்கட்சிகள். எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா ஜனநாயகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் பாஜக அசோக ஸ்தூபி திறப்பு விழாவிலும் அதை வெளிப்படையாக அடையாளப்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத்தின் மிக முக்கிய நிகழ்வில் எதிர்க்கட்சிகள் யாருக்குமே பாசிச பாஜக அரசு அழைப்பு கொடுக்கவில்லை. பாஜக அழைப்பு கொடுக்கவில்லை என்பது எவ்வளவு துயர நிகழ்வோ அதைவிட துயரமானது எதிர்க்கட்சிகளின் பொடுபோக்குத்தனம். பாசிச பாஜக அரசு கைமேற்கொண்டு வரும் இவ்வாறான சர்வாதிகாரத்தனங்களை கடுமையாக எதிர்க்க வேண்டிய எதிர்கட்சிகள், தங்களுக்குள் ஒற்றுமை இல்லாமல் பலவீனமான குரல்களில் முணங்கி கொண்டிருக்கின்றார்கள்.

எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தலைமையில்லாத்தனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சிகளை இழிவு படுத்தி வருகிறது பாச பாஜக அரசு. பாஜக உடனான போராட்டத்தை வெறும் ஒரு அதிகாரப் போராட்டமாக மட்டுமே காங்கிரஸும் கம்யூனிஸ்ட் கட்சியும் கருதுகின்றது. நடைபெற்றுக் கொண்டிருப்பது பிராமணிய மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான செயல்பாடுகள் என்பதை உணர்ந்து கொள்ள காங்கிரஸ் கட்சி மறுக்கிறது. பாசிச பாஜகவின் இந்த சர்வாதிகார, ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டபூர்வமாகவும் அரசியல் பூர்வமாகவும் எதிர்க்கட்சிகள் தேவையான செயல்பாடுகளை விரைவாக முன்னெடுக்க வேண்டும்.

வரலாற்றில் இது போன்ற கட்டங்கள் நிறைய உள்ளன. அந்தக் காலகட்டங்களில் சர்வாதிகாரத்தையும் பாசிசத்தையும் தோற்கடித்து நீதியை மீட்டெடுத்தது  வெகுமக்களும் அவர்களை வழிநடத்திய துணிச்சலான தலைவர்களும்தான்.  இந்திய தெருக்கள் அத்தகைய மக்களுக்காகவும் தலைவர்களுக்காகவும் காத்திருக்கின்றன.

K.S. அப்துல் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *