கர்நாடக மாநிலத்தில் எழுந்துள்ள தலைமுக்காடுப் பிரச்சினை வேறு வேறு விவாதங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரச்சனை திசை விரும்புவதை உணர்ந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தலைமை அதிலிருந்து பின்வாங்கும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. முஸ்லிம் சமூகமும் போராடுவதற்கு தங்களுக்குக் கிடைத்து இருக்கக்கூடிய புதிய ஒரு வாய்ப்பை பயன்படுத்தி போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல இயக்கங்களுக்கு தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதற்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு. அவ்வளவுதான்.

இதன் மறுபக்கம் முற்போக்கு கருத்தாளர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளக்கூடியவர்கள், தாராளவாத சிந்தனையாளர்கள் என்று தங்களை முன்னிலைப்படுத்த கூடிய நபர்கள் முக்காடு என்பது முஸ்லிம் பெண்களை அடிமைப்படுத்தும் ஆணாதிக்கத்தின் அடையாளம். தனது ஆடை எது என்பதை தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதை ஆண்கள் தீர்மானிக்கக் கூடாது. ஆகவே ஹிஜாப் என்பது பெண்ணடிமைத்தனத்தை போதிக்கக்கூடிய ஒரு ஆடை அடையாளம். ஆகவே, அதை முஸ்லிம் பெண்கள் தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் தங்களின் பெயர்களில் மட்டும் இஸ்லாத்தை வைத்திருக்கும் நபர்களும் உண்டு.

இங்கே நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தின் அடிப்படையே கருத்துச் சுதந்திரம்தான். மனிதனை இறைவன் முழுமையான சுதந்திரமானவனாக படைத்திருக்கின்றான். அவன் கண்கள் இதைத்தான் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை இறைவன் விதிக்கவில்லை. அவன் காதுகள் இதைத்தான் கேட்க வேண்டும் என்று இறைவன் அடைத்து விடவில்லை. அவன் நாக்கு இதைத்தான் பேசவேண்டும் என்றும் இறைவன் தடை செய்யவில்லை. அவன் மூளை இவற்றைத்தான் சிந்திக்க வேண்டும் என்று முடக்கிப் போடவும் இல்லை. அவைகள் அனைத்தும் ஆதிமனிதன் முதல் சுதந்திரமாக இயங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து விஷயங்களும் இறைவனின் நியதிப்படி இயங்குகிறபோது மனிதன் மட்டும் ஏன் இறைவனின் விதிகளுக்கு ஏற்ப இயங்குவது இல்லை என்பதிலிருந்தே அந்த சுதந்திரத்தின் உண்மையை நம்மால் உணர முடியும். இவர்கள் சொல்வதைப்போல் சுய சிந்தனை உரிமை மனிதர்களுக்கு அளிக்கப்படாமல் இருந்திருந்தால் அத்தனை மனிதர்களும் ஆத்திகர்களாகவே இருந்திருப்பார்கள்.. இதுவே இறைவன் மனிதர்களுக்கு அளித்திருக்கக்கூடிய சுதந்திர சிந்தனைக்கு அத்தாட்சியாகும்.

இனி ஹிஜாபின் விஷயத்திற்கு வருவோம். இஸ்லாமிய கருத்தியல்களை, கலாச்சாரங்களை, சித்தாந்தங்களை விமர்சிப்பதற்குண்டான உரிமை எல்லோருக்கும் உண்டு. ஆதிமனிதன் படைப்பு முதல் அந்த சுதந்திரத்தை இறைவன் அளித்துள்ளதை சாத்தான் உடனான உரையாடல்கள் தெளிவுபடுத்தும். அப்படி விமர்சிப்பவர்களை கடினமாக எதிர்கொள்ள வேண்டிய தேவை இல்லை என்பதுதான் எனது தனிப்பட்ட கருத்து. இஸ்லாமிய அடிப்படையில் நின்று கொண்டு அவற்றை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு. அதேவேளையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் அரசியலை குறித்து விவாதிக்க வேண்டிய தேவையும் உண்டு.
இங்கே சோ கால்டு முற்போக்காளர்கள் திரும்பத் திரும்ப சொல்லக்கூடிய விஷயம் தேர்வு சுதந்திரம் குறித்துதான். எது தேர்வு என்பதுதான் நாம் விவாதிக்க வேண்டிய விஷயம். உதாரணமாக ஒரு மனிதன் தன்னுடைய நோய்க்கு தீர்வுகளைத் தேடி ஒரு மருத்துவரை தேர்ந்தெடுத்து சந்திக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அந்த மருத்துவர் அவனது நோய்களை ஆராய்ந்து அவனுக்கான சிகிச்சை முறைகளை பரிந்துரைக்கிறார் எனில், அங்கே அந்த மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் அந்த மனிதன் ஏற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும். அவர் அளிக்கும் சிகிச்சை முறைகளிலும் மருந்துகளிலும் சில இலகுவான விஷயங்களை நாம் கோரலாமே ஒழிய, நாமே மருந்துகளை பரிந்துரைக்க முடியாது. அறுவை சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டால், அவற்றில் சில மாற்றங்களை செய்ய நாம் கோரலாம். சிறு பிள்ளைகள் ஊசி போடுவதற்கு பதிலாக மருந்துகளை கோருவதைப் போல. இங்கே தேர்வு என்பது மருத்துவர்தான், மருந்துகள் அல்ல. நான் ஒரு மருத்துவர் மீது முழுமையான நம்பிக்கை கொண்டு அவரை எனது நோய்க்கான தீர்வாக ஏற்றுக் கொண்டேன் எனில் அவர் அளிக்கும் மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். இது மனிதன் தொடர்புடைய அனைத்து விஷயங்களுக்கும் ஒரே போலத்தான்.

அதுபோன்றுதான் ஒரு முஸ்லிம் தன்னைப் படைத்த இறைவனின் மீது நம்பிக்கை கொள்கிறார். அவன் அளிக்கும் வழிகாட்டுதல்களே தனக்கு தீர்வுகளை அளிக்கும் என்று நம்புகிறார். அதனடிப்படையில் தனது வாழ்வியலை அமைத்துக் கொள்கிறார் எனில் அதற்கான 100 சதவீத உரிமை அவருக்கு உண்டு.

தந்தை பெரியாரின் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு ஒருவர் அதனடிப்படையில் இயங்குகிறார் எனில் அவருக்கு அந்த உரிமை உண்டு. காரல் மார்க்சை தனது பிரச்சினைகளுக்கான தீர்வாளராக ஒருவர் தேர்வு செய்து அவரது கருத்துக்களின் அடிப்படையில் செயல்படுகிறார் எனில் அதற்கான உரிமை அவருக்கு உண்டு. ஆனால் அவற்றை சரியில்லை என்று சொல்வதற்கும் அவர்களது கருத்துக்களை புறக்கணிப்பதற்கும் அவர்களது கருத்துக்களுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுப்பதற்கும் மற்றவர்களுக்கும் உரிமை உண்டு என்பதை ஏற்கவும் வேண்டும். திருமணம், பெண்ணுரிமை, கர்ப்பம், ஆடை, கடவுள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பெரியார் சொல்லிய கருத்துக்கள் முற்றிலும் நடைமுறைக்கு ஒவ்வாதவை என்ற நிலைப்பாட்டோடுதான் பெரியாரின் சமூகநீதி கருத்துக்களோடு நாம் கைகோற்கின்றோம். பெரியாரையும் காரல்மார்க்ஸையும் தங்களுக்கான தீர்வாளர்களாக தேர்வு செய்வதற்கும், அவர்களது கருத்துக்களின் அடிப்படையில் தங்கள் வாழ்வியலை கட்டமைப்பதற்கும் உள்ள உரிமைகளை போன்றே, இறை வழிகாட்டுதல்களாக முஸ்லிம்கள் நம்பக்கூடிய இஸ்லாமிய வழிகாட்டுதல்களை நம்புவதற்கும் ஏற்றுக் கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் உண்டான முழுமையான உரிமைகள் முஸ்லிம்களுக்கும் உண்டு. அதில் நிகழக்கூடிய சிரமங்களை சகித்துக் கொள்வதற்கும் முஸ்லிம்கள் தயாராகவே இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் முஸ்லிம்கள் தொழுகிறார்கள், ஸகாத் கொடுக்கிறார்கள். இன்னபிற வழிபாடுகளைச் செய்கிறார்கள். அந்த நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் சமூகப் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கிறார்கள். ஏழைகளின் பசியை ஆற்றுகிறார்கள். அனாதைகளை ஆதரிக்கிறார்கள். தீமைகளுக்கு எதிராக அணிவகுத்து நிற்கிறார்கள். முஸ்லிம்கள் சமூகப் பிரச்சினைகளில் குரல் கொடுப்பதும் போராடுவதும் பெரியாரும் காரல் மார்க்சும் சொல்லித்தந்ததன் அடிப்படையில் அல்ல என்பதை எல்லோரும் புரிந்து இருப்பார்கள் என்றே எண்ணுகிறேன். வழிபாடுகளுக்கு உள்ள வழிகாட்டுதல்களை போலவே சமூக பிரச்சினைகளுக்கும் இறைவனால் வழிகாட்டுதல்கள், தீர்வுகள் தரப்பட்டுள்ளது என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். முஸ்லிம்களின் வழிபாடான நோன்பு ஏழைகளின் பசியை உணர செய்கிறது, ஜக்காத்தின் மூலம் ஏழ்மை ஒழிக்கப்படுகிறது என்பதைப் போன்று ஹிஜாபின் மூலம் பெண்மையை இறைவன் பாதுகாக்கிறான் என்ற உணர்தலின் அடிப்படையில்தான் முஸ்லிம் பெண்கள் ஹிஜாபை பேணுகிறார்கள். அதில் சிரமங்கள் இருப்பினும் அவற்றை சகிப்பதற்கும் முஸ்லிம் பெண்கள் தயங்குவதில்லை. ஹிஜாபின் முறைமைகளில் வேறுபாடுகள் இருக்கிறது. காலங்களும் நிலங்களும் சூழல்களும் ஆண்களின் உடைகளில் மாற்றங்களை கொணர்ந்ததை போல ஹிஜாபிலும் மாற்றங்களை உருவாக்கியுள்ளது. ஆனால் அது முஸ்லிம்களின் உள்ளீடான பிரச்சனை.

நாம் தீர்வுகளுக்கு தேர்ந்தெடுத்த தேர்வாளர்கள் அளிக்கும் தீர்வுகளே நமது தேர்வாகவும் இருக்கும் என்ற பொதுவான தத்துவத்திற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. அந்த அடிப்படையில் முஸ்லிம்களுக்கான தேர்வு சுதந்திரத்தையும் முற்போக்காளர்கள் அங்கீகரிப்பார்கள் என்று நல்லெண்ணத்துடன் நம்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *