திருமறைக் குர்ஆனுடைய 46வது அத்தியாயத்தின் 15 ஆவது வசனம், “ 40 வயதடைந்த ஒருவனை முழு பலம் உடையவன்…”  என்று கூறுகிறது. அதாவது 40 ஆண்டுகால வாழ்க்கையைக் கழித்த ஒரு மனிதன், தன் முதிர்ச்சியினுடைய உச்சகட்டத்தை எட்டி இருக்கின்றான். எது சரி? எது தவறு? என்பதை தன் 40 ஆண்டு கால அனுபவத்தின் மூலமாக துல்லியமாக கணிக்கும் அறிவுக்கூர்மையை அவன் பெற்றிருக்கிறான். அது மட்டுமல்ல தன்னுடைய 40 ஆண்டுகால அந்த வாழ்க்கையிலே ஒரு மிகப்பெரும் நெட்வொர்க் ஒன்று அவனைச் சுற்றி உருவாகின்றது.

 அவனுடைய பெற்றோர்கள், உறவினர்கள், மனைவி, குழந்தைகள், நண்பர்கள், அரசு என அவனுடைய இந்த வாழ்நாள் என்பது அவனைச் சுற்றி ஒரு மிகப்பெரிய ஒரு சமூகத்தை உருவாக்குகின்றது . ஆகையால் திருமறைக் குர்ஆன் 40 ஆண்டுகாலம் என்பதை, ஒரு முதிற்சியினுடைய அடையாளமாக காட்டுகின்றது. இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு இந்த 40 ஆண்டுகால பயணத்தில் பலவிதமான அனுபவங்களை பெற்றுக் கொண்டு, எப்படி ஒரு தனி மனிதன் தனக்கென ஒரு மிகப்பெரிய நெட்வொர்க்கை உருவாக்கி இருக்கின்றானோ அப்படியாக இந்த 40 ஆண்டுகளிலே தன்னுடைய மக்கள் சேவையின் மூலமாக, தன்னுடைய இஸ்லாமிய பணிகளின் மூலமாக, இந்த தேசத்தில் ஒரு மிகப்பெரிய நெட்வொர்க் ஒன்றை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு உருவாக்கி இருக்கின்றது.

அதேபோன்று,  40 ஆண்டு காலம் சீராக எந்த விதமான தொய்வுகளும் இன்றி தொடர்ச்சியாக நிலை குலையாமல், முஸ்லிம் மாணவ இளைஞர்கள் மத்தியில் சித்தாந்த வழிகாட்டுதல்களை, பணிகளை செய்யக்கூடிய ஒரே அமைப்பாக இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு மாத்திரமே விளங்கி வருகிறது.

சித்தாந்த பின்னணி கொண்ட அமைப்புகள் அனைத்தும் தனக்கான மாணவர் அமைப்புகளை உருவாக்கி அரை நூற்றாண்டுகளைக் கடந்து விட்டன. இந்துத்துவா சித்தாந்தத்தின் மாணவர் அமைப்பான ABVP, 1949 ஆவது ஆண்டும், கம்யூனிஸ்டுகளினுடைய மாணவரமைப்பாக இருக்கக்கூடிய AISF, 1936 ஆம் ஆண்டும், SFI 1970 ஆம் ஆண்டும், காங்கிரசினுடைய இளைஞர் அமைப்பு, 1960 ஆம் ஆண்டு என மற்ற சித்தாந்தங்களுடைய மாணவர் அமைப்புகள் ஏறத்தாழ அரை நூற்றாண்டுகளை கடந்துவிட்டன. இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்புதான் முதல் மாணவர் அமைப்பாக தேசிய அளவில் உருவாக்கப்பட்டு, இன்றுவரை தான் எடுத்த சித்தாந்தத்தில் எந்தவிதமான சமரசங்களும் இன்றி இன்றுவரை துடிதுடிப்போடு இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகிறது.

இந்திய தலைநகரம் டெல்லியில், அமைப்பின் தலைவர் தும்மிவிட்டு, அல்ஹம்துலில்லாஹ் கூறினால் யரஹமகுமுல்லாஹ் கூறுவதற்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் தன்னுடைய ஊழியர்களை உருவாக்கி வைத்திருக்கிறது SIO.  ஆசிய கண்டத்தினுடைய மிகப்பெரிய மாணவர் அமைப்பு SIO என்று கூறினால், அது மிகையல்ல . முஹம்மது பின் காசிம், தாரிக் பின் ஜியாது, முஹம்மது ஃபாத்திஹ், போன்ற முப்பது வயதிற்குக் குறைவாக வரலாற்றில் சாதனை படைத்தவர்களை நாம் படித்து இருக்கின்றோம். இத்தனை பெரிய பிரம்மாண்டமான ஒரு அமைப்பை, அதனுடைய நிறுவன காலத்திலிருந்து இன்று வரை அதனை வழி நடத்துவது அதனை நிர்வகிப்பது முழுக்க முழுக்க 30 வயதிற்கு குறைவான இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமே.

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு 40 ஆண்டுகால தொடர்ச்சியான பயணத்திற்கு இரண்டு மிக முக்கியமான காரணங்கள் உண்டு. அதில் முதலாவது சித்தாந்தம் ஆம், எந்த அமைப்பு சித்தாந்த பின்னணி இல்லாமல் பணியாற்றுகின்றதோ அதனுடைய குறுகிய தேவைகள் பூர்த்தி செய்ததற்கு பிறகு, அதனுடைய பணிகள் நீர்த்துப் போய்விடும். காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போய்விடும். இஸ்லாம் என்ற சித்தாந்தத்தை இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு எந்தவிதமான சமரசங்களும் இன்றி தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ததே அதனுடைய வெற்றிக்கு முதல் முக்கிய காரணமாக இருக்கின்றது.

இரண்டாவது காரணம், இறுக்கமான மனநிலை இல்லாமல், கால சூழலுக்கு தகுந்தாற்போன்று அதனுடைய திட்டங்களை, செயல்முறைகளை மாற்றி அமைப்பது. இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தன்னுடைய செயல் திட்டத்தை மாற்றி அமைக்கின்றது. இந்த செயல் திட்டம் என்பது கால சூழலுக்கு தகுந்தார் போன்று எந்த பணிகளை நாம் முன் நிறுத்தி பணியாற்ற வேண்டும் என்பதை அந்த பாலிசி நமக்கு வழி காட்டுகின்றது.

புரட்சி என்பது மக்களுக்கு உபதேசம் செய்வது, அரசுக்குப் பாடம் எடுப்பதன் மூலமாக நிகழ்வதல்ல. புரட்சி என்ற வார்த்தைக்கு SIO மறு வரையறையைக் கொடுத்தது. தனிமனித சீர்திருத்தத்தின் துவக்கம் தான் நீதி மிக்க ஒரு அரசை நிறுவுவதற்கான துவக்க புள்ளி என்பதை மிகவும் ஆழமாகவும் அழுத்தமாகவும் நம்பியது. அதன் காரணமாகவே தன்னோடு இணைத்துக் கொண்ட தனது ஊழியர்களுக்கு தனியாக பாடத்திட்டம் ஒன்றையும் வகுத்து வைத்திருந்தது. அந்தப் பாடத்திட்டத்தின் வாயிலாக இஸ்லாத்தினுடைய அடிப்படை செய்திகளை அந்த மாணவர் இளைஞர்களுக்கு போதித்தது.

இஸ்லாத்தினுடைய அடிப்படை தத்துவங்களை விளங்கிக் கொண்ட மாணவ இளைஞர்கள், சமூகத்திலே நடைபெறும் பிரச்சனைகளுக்கெல்லாம் மார்க்கத்தின் அடிப்படையில் தீர்வு வழங்க முடியும் என்பதை புரிந்து கொண்டனர். SIO அகில இந்திய அளவிலே பல பரப்புரைகளை அதன் அடிப்படையில் மேற்கொண்டது. கல்வியில் காலணி ஆதிக்கம், ஷரியா தொடர் பிரச்சாரம். , அடிமை விலங்குடைத்த அண்ணலார் போன்ற இஸ்லாமிய சித்தாந்தங்களை மக்கள் மத்தியிலே பரப்பக்கூடிய பரப்புரைகளை அது எடுத்துச் சென்றது.

அன்பார்ந்த மாணவர்களே! 40 ஆண்டு காலம் பலருடைய தியாகங்களைத்  தாண்டி இந்த அமைப்பு உங்கள் கைகளிலே தவழ்ந்து கொண்டிருக்கின்றது. இது ஒரு மிகப்பெரிய அமானிதம்!. 40 ஆண்டு காலம் வளர்ச்சியுற்ற ஒரு அமைப்பை நிர்வகிப்பதற்கான தகுதிகளும், திறமைகளும் நம்மிடத்தில் உள்ளனவா? என்பதை நாம் அறிந்து ஆராய வேண்டும். அதற்கான தகுதியுள்ள நபர்களாக நம்மை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். சித்தாந்த புரிதல் என்பது தான் இந்த அமைப்பினுடைய நீண்டகால பணிகளுக்கு மிக முக்கியமான காரணம் என்பதை நாம் பார்த்தோம். அந்த சித்தாந்த புரிதல் நம்மிடத்திலே இருக்கின்றதா? என்பதை நாம் நம்மை நாமே சுய ஆய்வு செய்ய வேண்டும். அதேபோன்று, நாம் இந்தப் பணியை சுமந்து கொண்டிருக்கும் வேலையில், எந்த விதமான தோய்வுகளுமின்றி, சோம்பலுமின்றி நமக்கு அடுத்து வரக்கூடிய தலைமுறையினரிடத்திலே இன்னமும் முதிர்ச்சி அடைந்த அமைப்பாக, இயக்கமாக அவர்களிடத்திலே நாம் வழங்க வேண்டும், அல்லாஹு ரப்புல் ஆலமீன் அப்படியான வாக்கியங்களை வழங்குவானாக ஆமீன்.

பீர் முஹம்மது (SIO முன்னாள் மாநில செயலாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *