தஞ்சாவூர் மைக்கேல் பட்டியில் கிறுஸ்துவ பள்ளி ஒன்றில் படித்து வந்த அரியலூரின் மாணவி பள்ளியின் நிர்வாகி மதம்மாறவேண்டும் என்று வலியுறுத்தியதால் தான் தற்கொலை செய்து கொண்டார். எனவே தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்தனர் இதே கோரிக்கை மீண்டும் வேறு நிகழ்ச்சிகளை காரணம் காட்டி எழுப்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கு முன் திருமதி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் (அக்டோபர் 2002) ‘கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்’  கொண்டுவரப்பட்டது. கடும் எதிர்ப்புகளினால் அச்சட்டத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஓராண்டிற்குப் பிறகு திரும்ப பெற்றுக் கொண்டார். மூன்று மாதங்களுக்கு முன்புதான் கர்நாடக மாநிலத்தில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இத்துடன் ஒன்பது மாநிலங்களில் இச்சட்டம் நடைமுறையில் உள்ளது.

மதமாற்றத்திற்கு தடை வேண்டும் என்று கோறுபவர்கள் கூறும் காரணம் கட்டாயப்படுத்துகிறார்கள் என்பதுதான். சட்டம் இருந்தால் தான் மதமாற்றத்தை தடுத்து நிறுத்த முடியும் என்கிறார்கள். பாஜக கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களில் இச்சட்டத்தை கொண்டு வருவதற்கு அவர்களுக்கு சிக்கல் இருக்காது. சட்டத்தை கொண்டுவந்து விட்டார்கள். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இத்தகைய சட்டத்தை கொண்டுவர தந்திரங்களை கையாண்டு வருகிறார்கள். அதில் ஒன்றுதான் தஞ்சாவூர் பள்ளியின் நிகழ்வை வைத்து பெரும் கூச்சல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. இதைவிட இந்தியா முழுவதும் தடை சட்டம் கொண்டுவரலாமே…? அதற்கு அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்க வில்லை என்பதுதான் அதற்கான காரணம். கடந்த ஐந்தாண்டில் பாஜக ஆதரவு கட்சி தானே தமிழகத்தில் இருந்தது அவர்கள் மூலம் தடைச்சட்டம் கொண்டு வந்து இருக்கலாமே…! ஜெயலலிதா அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை அக்கட்சியினர் மறக்கவில்லை என்பதுதான் உண்மை.

இப்போது மதமாற்ற தடைச்சட்டம் வேண்டும் என்று கோருபவர்கள் “கட்டாயம்” என்பதை சேர்த்துக்கொள்கிறார்கள். கட்டாயம் என்பதற்கு அவர்கள் கூறும் ஆதாரங்கள் பலவீனமானது. அறிவிற்கு புறம்பானது கேலிக்குரியது. ஒரு மதத்தையோ ஒரு கொள்கையோ ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என வற்புறுத்துவதற்கு பலம்மிக்க அதிகாரம் தேவை இருக்கிறது. ஒரு பலம்மிக்க அரசரைபோன்று போன்று இவ்வாறு சில அரசர்கள் மூலம் நடந்திருக்கிறது. கட்டாயப்படுத்த பட்டவர்கள் ஆதரவில்லாதவர்களாக, ஒடுக்கப்பட்டவர்களாக, அச்சம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கட்டாய படுத்துபவர்கள் வெளியே செய்தி பரவ விடாமல் தடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஊடகம் பன்னாட்டு தொடர்பு சட்ட விழிப்புணர்வு அதிகரித்து வரும் இக்காலத்தில் கட்டாயப்படுத்துவதை மறைக்க முடியும் என்பதற்கு வாய்ப்பில்லை.

கட்டாய படுத்தியதால் ஒரு மதத்தையோ ஒரு கொள்கையோ ஏற்றுக்கொண்டவர்கள் அம்மதத்தில் எப்படி நிம்மதியாக இருப்பார்கள். மனதிற்குப் பிடிக்காத மதத்தை விரும்பி செயல்படுத்துவார்களா? வெறுப்பிற்குரிய மதத்தை ஏற்றுக்கொண்டு அதே மதத்தை சேர்ந்தவர்களுடன் எப்படி சுமூகமாக வாழ்வார்கள். கட்டாயப்படுத்தியவர்களின் அதிகாரபலம் முடிவுக்கு வந்துவிட்டப்பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மாட்டார்களா என்ன? நாங்கள் கட்டாயப்படுத்தப் பட்டோம் இப்போது திரும்ப வந்துவிட்டோம் என்று உலகிற்கு அறிவிக்க மாட்டார்களா?  திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் விரும்பி இஸ்லாமை  ஏற்றுக்கொண்டவர்கள் கட்டாயப் படுத்தப் பட்டவர்கள் என்று கூற வைப்பதற்காக மாநில அரசும், மத்திய அரசும் முயற்சி செய்ததே. ஆனால் அம்மக்கள் உறுதியுடன் இருந்து இரண்டாம் தலைமுறையினருடன் வாழ்கிறார்கள்.

பணம், பொருள், பதவி போன்ற ஆசைகளை கூறி மதம் மாற்றினால் அது நீடித்து இருக்குமா? பணம் கரையும் வரை பாசாங்கு செய்து கொண்டிருப்பார்கள் பிறகு பணம் வேண்டும் என்பார்கள். எவ்வளவு நாட்கள் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். விவகாரம் ஒரு நாள் வெளியே வந்துதானே ஆகவேண்டும். ஆசைக்கு மதம் மாறியவர்களின் தலைமுறையினர் எப்படி இருப்பார்கள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். தங்கள் மதத்திற்கு ஒரு கொள்கை உண்டு என்று நம்புகிறவர்கள் கொள்கையை சொல்லி அழைக்கட்டும் தங்கள் கொள்கையை விட்டு. வேறு மதத்தை தேர்ந்தெடுத்துக்கொள்வார்கள் என்று ஏன் அஞ்சவேண்டும்.

மதம் தவிர சில இடங்களில் கட்சி கொள்கைகளும் கட்டாயப்படுத்தப் படுகின்றன நிர்ப்பந்திக்கப்படுகின்றன. கட்சி கொள்கைகளின்படி தாங்கள் விரும்பும் அரசு அமைந்த பிறகு தங்களின் கொள்கையை ஏற்காத பிற மதத்தினர் அரசின் சட்டங்களால், துன்புறுத்தல்களால் நிர்பந்திக்கப்படுகிறார்கள். அரசு அதிகாரத்தின் பிடியில் இருந்தாலும் தங்கள் மதத்தை மறைத்து வைத்துக்கொண்டு சிரமங்களைத் தாங்கிக்கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

இந்திய அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கையின் பக்கம் பிற கட்சியினரை அழைக்கவே செய்கிறார்கள். இதிலும் அதிகாரத்தில் அமர்ந்த கட்சி மாற்றுவதை வேகமாகவே செய்கிறார்கள். நேர்மையாக சிலபோது அழைத்தாலும் பணம், பதவி கொடுப்பதாக வாக்குறுதியளித்து அழைப்பதும் வெளிப்படையாகவே நடக்கிறது. கட்சியின் பக்கமும் மதத்தின் பக்கமும் அழைப்பதில் என்ன வித்தியாசம் இருக்கிறது. ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் வெள்ளையர்களை குறியாக்கி பகவத் கீதை கொடுத்து மதத்தின் பக்கம் அழைக்கிறார்கள். கருப்பர்களை அழைப்பதை தவிர்க்கிறார்கள். சில வெள்ளையர்கள் இவர்களால் கவரப்பட்டு மதம் மாறி விட்டோம் என்பதாக தலை முடியையும் உடையையும் மாற்றிக்கொள்கிறார்கள் என்பதை பார்க்க முடிகிறது. வெள்ளையர்களே இந்தியாவின் தொன்மையான மதத்தை ஏற்றுக்கொண்டார்கள் என்று இங்கு பெருமை பேசுகிறார்கள்.

கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் மதம் மாற்றுவதற்காகவே சுத்தி இயக்கம் என்ற ஒன்றை சுவாமி சச்சிதானந்த் என்பவர் 1923ஆம் ஆண்டு துவங்கினார். இவரும் இவரை சார்ந்தவர்களும் 1900ஆம் ஆண்டில் பஞ்சாப் பகுதியில் செயல்பட்ட ஆர்யசமாஜ் அமைப்பைச்சார்ந்தவர்கள்.

2014ஆம் ஆண்டு வாக்கில் ‘கர் வாபசி’ என்ற அமைப்பை துவக்கி இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக மதமாற்றும் பணியை செய்து வந்தார்கள். தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கோவா போன்ற மாநிலங்களில் இவ்வமைப்பினர் பெரும் நிகழ்ச்சிகளை நடத்தினர். இதைத்தவிர ‘இந்து ஜாக்ரன் மன்ச்’  ‘இந்து ஜாக்ரன் சமிதி’ ‘இந்து ஜாக்ரன் சமாஜ்’ போன்ற அமைப்புகளும் செயல்பட்டன. இதன் மூலம் ‘அச்சுறுத்தல் மதமாற்றம்’ செய்ய முற்பட்டனர். விளைவு தோல்வியிலேயே முடிந்தது.

உத்திரப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் இருபது முப்பது பேர் ஒருவரை சூழ்ந்துகொண்டு ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் விடுத்தவாறு ஜெய் ஸ்ரீராம் சொல்லு என வற்புறுத்துகிறார்கள். அப்படி கூற மறுக்கும் அவரை அடித்தே கொன்ற நிகழ்வையும் பார்த்துவிட்டோம். அல்லாஹ் என்னுடைய இறைவன் என்பது ஒரு கொள்கை ஒரு மதம். ஸ்ரீராம் கடவுள் என்பது இன்னொரு மதம். அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவரை நிர்பந்தித்து இன்னொரு கொள்கையை ஏற்கவேண்டும் என வற்புறுத்துவது ‘பலவந்த மதமாற்றம்’.

யூதர்கள் தங்கள் மதத்தின் பக்கம் அழைப்பதில்லை. யூத குடும்பத்தில் பிறந்தவரே யூதர் ஆகமுடியும். கிறிஸ்துவ, பௌத்த, கான்பூசியஸ் மதத்தினர் தங்கள் பக்கம் மக்களை அழைக்கிறார்கள். இம்மதங்களின் பிறப்பிடம் அதன் தலைவர்கள், அதன் வரலாறு என்பதை தெரிந்து கொண்டே சிலர் அம்மதங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து கொள்கிறார்கள். கற்பனையாக உருவாக்கப்பட்ட மதத்திற்கு தான் அதன் பிறப்பிடம் வரலாறு தலைவர்கள் என்று எதுவே சான்றாக இருக்காது.

கொள்கை பிறந்த இடம் அதன் தலைவர் அவரை ஏற்றுக் கொண்ட தோழர்கள், அவர்களின் வரலாறு வசிப்பிடம். அவர்களின் சந்ததியினர் என்பதற்கான ஆழமான அழுத்தமான சான்று இஸ்லாமிற்கு உண்டு. முகம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்வு, அவரின் கொள்கை, வரலாறு, தோழர்கள் அனைத்தும் பதிக்கப்பட்ட வரலாறு இதுபோன்ற வரலாற்று நூல்கள் வேறு எந்த கொள்கைக்கும் காண முடியாது அவரின் வாழ்விடம் சம்பவம் நிகழ்ந்த இடங்கள் யாவும் பார்வைக்குள்ளது. உலகின் பெரும்பாலான மொழிகளில் இதன் நூல்கள் கிடைக்கின்றன.

கம்யூனிச ஆட்சி ரஷ்யாவில் 1917-ஆம் ஆண்டு ஏற்பட்டபின் அங்கிருந்த மதங்களை குறிப்பாக இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம் பின்பற்றுவதற்கு தடைசெய்யப்பட்டன. வணக்கத் தளங்கள் மூடப்பட்டன. மத நூல்கள் தடை செய்யப்பட்டன. இவர்களின் அடுத்த தலைமுறையினர் மதத்தை மறந்துவிட்டு கம்யூனிசத்தை ஏற்றுக்கொள்வார்கள் என அரசும் அரசு சார்ந்த கட்சியினரும் நம்பினார்கள். இதே நிலைதான் பிற கம்யூனிச நாடுகளான சீனா அல்ஜீரியா யுகோஸ்லோவேகியா போன்ற நாடுகளிலும் இருந்தது. ரஷ்யாவில் 1970க்குப் பின் கம்யூனிசத்தின் பிடி தளர்ந்த பிறகு முஸ்லிம்களில் இரண்டாவது மற்றும் மூன்றாம் தலைமுறையினர் தங்களின் பெற்றோர்களின் மதமான இஸ்லாம் மதத்திலே நீடித்தனர். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இஸ்லாமிய நம்பிக்கை மறைத்து வைத்திருந்தார்கள் கம்யூனிச நாடுகளில் இது ஒரு அடக்குமுறை மதமாற்றமாகவே இருந்தது.

வெள்ளையர்களின் ஆட்சிக்கு முன் இந்தியாவில் முகலாயர்கள் ஆண்டுவந்தனர். அப்போது நாட்டின் பல பகுதிகளில் தங்களுடைய சொந்த மதங்களையே மக்கள் பின்பற்றி வந்தனர். இந்தியா முழுவதும் ஒரே மதம் என்பது இருந்ததே இல்லை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சிவமதம், சைவமதம் போன்ற மதங்கள் தான் இந்நாட்டின் சொந்த மதம். பஞ்சாபில் சீக்கிய மதம் வடகிழக்கு மாநிலங்களில் அவர்களுக்கென்று சொந்த மதங்கள் இருந்தன. பங்காளிகளுக்கு தனி மதம் லிங்காயத்து மக்களுக்கு தனி மதம் இதுதான் உண்மையான நிலை. முகலாயர்கள் இடம் இருந்த ஆட்சி ஆங்கிலேயர்களிடம் சென்றபோது போடப்பட்ட பல சட்ட திருத்தங்களில் ஒன்று

முஸ்லிமல்லாதவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லாதவர்கள் அனைவரும் ‘இந்துக்கள்’  என்று புதிதாக ஒன்றை பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் வெள்ளையர்களை கொண்டு எழுத வைத்தார்கள்.

இல்லாதிருந்த ஒரு மதத்தை அன்னிய ஆட்சியாளர்களை பயன்படுத்தி இம் மக்களுக்கு தன்மீது எது திணிக்கப் படுகிறது என்பதை தெரிவிக்காமலேயே அவர்களை வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்குள் அடைத்து விட்டார்கள். இலவசமாக பெரும் மக்கள் தொகையை தம் மதத்தினர் என்று கூறிக் கொண்டார்கள். இது ஒரு ‘சூழ்ச்சி மதமாற்றம்’ என்றே கூறவேண்டும். இதையே பிற்காலத்தில் சீக்கியர்கள், தமிழர்கள், லிங்காயத்துகள் புறக்கணித்து நாங்கள் இந்துக்கள் அல்ல. எங்கள் மீது திணிக்கப்பட்டது இதனை ஏற்க முடியாது என்று அறிவித்தார்கள். இன்னும் இதுபோன்ற அறிவிப்புகள் இந்நாட்டில் இனி ஒலிக்கத்தான் போகிறது.

விரும்பும் கட்சியை, மதத்தை, கொள்கையை ஏற்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளது. தங்கள் கொள்கை சரியானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லலாமே? பிற மதத்தை தாக்குவதால் தங்கள் மதத்தை விட்டு போக மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், ஐக்கிய நாடுகளின் சபை மனித உரிமை பிரகடனத்திலும் மதத்தை ஏற்பது மனிதனின் அடிப்படை உரிமை என்று உள்ளது இதனை மறுப்பதும் குறை கூறுவதும் தான் குற்றம்.

இஸ்லாம் தன் பக்கம் மக்களை அழைப்பது அழகிய முறையில் அறிவார்ந்த முறையில் இருக்கவேண்டும் நிர்பந்தம் என்பது எவ்வகையிலும் கூடாது என்பதை தெளிவாக கூறியுள்ளது. ஆரம்பகாலம் முதல் இதே கொள்கை தான். குர்ஆனின் வழிகாட்டுதலிலும் நபியின் அறிவுரைகளிலும் இதுதான் கூறப்பட்டுள்ளது.

•             ‘மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி திண்ணமாக தெளிவாகிவிட்டது’ (2:256)

கோ. அப்துல் ரஹிம் – எழுத்தாளர்

அஃப்ஸலுல் உலமா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *