இந்தியாவின் கல்வி பெருமையின் அடையாளமாக திகழ்ந்து வருவது டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம். மிகச் சிறந்த கல்வியாளர்களை, சமூகவியல் நிபுணர்களை, தத்துவவாதிகளை உலகுக்கு அளித்த ஆகச் சிறந்த கல்வி நிறுவனம். உலக அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் நிறுவனமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அபுல்கலாம் ஆசாத்தின் கனவுகளை சுமந்து பெரும்பெரும் கல்வியாளர்களால் வடிவமைக்கப்பட்ட நிறுவனம் அது.

ஆனால் இன்றைக்கு அந்நிறுவனம் சங்பரிவார்க் கும்பலால் பெரும் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அதனுடைய நிர்வாகக் கட்டமைப்பிலும் கல்விக் கட்டமைப்பிலும் இந்துத்துவவாதிகளை புகுத்துவது முதல் தாக்குதல். இரண்டாவதாக அதனுடைய கல்வி அமைப்பில் மாற்றங்களை புகுத்துவது. சமூகத்தின் அடித்தட்டில் உள்ள திறமையான மாணவர்களும் படிப்பதற்கான வாய்ப்பு JNUவில் இருந்து வருகிறது. அதை தடுக்கும் வண்ணமாக நுழைவுத் தேர்வை புகுத்தியதுடன் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைகளில் பெறும் குறைவை ஏற்படுத்தியது மூன்றாவது தாக்குதல். அதையும் கடந்து பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள், குறிப்பாக இந்துத்துவ கொள்கைகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது ஏபிவிபி குண்டர்களை வைத்து தாக்குதல்  தாக்குதல் நடத்தி அச்சுறுத்துவது நான்காவது தாக்குதல்.

இன்றைக்கு இந்துத்துவ கருத்தியலுக்கு எதிராக களத்தில் உள்ள பல்வேறு செயல்பாட்டாளர்களை உருவாக்கியதில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு பெரும் பங்கு உண்டு என்பதை சங்பரிவார்க் கும்பல் நன்கு அறியும். ஆகவேதான் மேற்படி நிறுவனத்திற்கு எதிராக பெரும் வன்மத்தோடு சங்பரிவார் கும்பல் செயல்பட்டு வருகிறது. அதனுடைய புதிய எபிசோடுதான் ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதல்.

குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்ற காலகட்டத்தில் அங்கு படித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் மற்றும் இடதுசாரி சிந்தனை கொண்ட மாணவர்கள் மீது இரவு நேரத்தில் காவல்துறையின் உதவியோடு ஏபிவிபி கும்பல் கடும் தாக்குதலை நடத்தியது. அதற்கெதிராக இன்றளவும் முறையான எவ்வித நடவடிக்கைகளையும் டெல்லி காவல்துறை எடுக்கவில்லை என்பதோடு மட்டுமல்ல, அதற்கு எதிராக முனகல் சத்தத்தை கூட ஒன்றிய பாசிச பாஜக அரசு எழுப்பவில்லை. ஆட்சி அதிகாரம் தங்களிடத்தில் உள்ளது என்ற திமிர்த்தனத்தை சங்பரிவார் கும்பல் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்து ஹிந்தி இந்தியா என்ற ஒற்றை கலாச்சாரம், ஒற்றை மொழி, ஒற்றை தேசியம் என்ற நோக்கோடு ஒன்றிய பாசிச பாஜக அரசு சென்று கொண்டிருக்கிறது. இது பார்ப்பனியம் வழிநடத்தும் ஆர்எஸ்எஸ் கும்பலின் மைய அஜண்டா என்பது எல்லோரும் அறிந்தது. மேற்படி பார்ப்பனிய அஜண்டாவின் ஒரு பகுதிதான் அசைவத்திற்கு எதிரான செயல்பாடுகள். முதலில் பசுவைக் கொல்லக் கூடாது என்றார்கள். பிறகு மாட்டுக்கறி வைத்திருந்தவர்களையும் தாக்கினார்கள். அதன் பிறகு ஆட்டுக்கறி வைத்திருந்தவர்களையும் மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று தாக்கினார்கள். அதன் தொடர்ச்சியாக அசைவ உணவே கூடாது என்ற எல்லைக்கு சென்றிருக்கின்றார்கள். ராமநவமியின் போது டெல்லியில் யாரும் அசைவம் உண்ணக்கூடாது என்ற உத்தரவைப் போட்டிருக்கிறார் டெல்லி மேயர். இவைகளெல்லாம் பார்ப்பனிய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாகும். அதனுடைய ஒரு பகுதிதான் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அரங்கேறி உள்ளது.

எல்லா ஞாயிற்றுக்கிழமையும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் விடுதிகளில் அசைவ உணவு பரிமாறப்படுவது வழமையான ஒன்று. அதனடிப்படையில்  10-04-22 அன்று காலை 3.30 மணி அளவில் கோழிக்கறியை தருவதற்காக அங்கு வந்த கோழிக்கறி விற்பனையாளர் மீது முதல் தாக்குதல் நடைபெற்று இருக்கிறது. அதன் பிறகு அங்கு அசைவ உணவு அளிக்கப்படக் கூடாது என பிரச்சினையை எழுப்பி இருக்கிறார்கள் ஏபிவிபி குண்டர்கள். ஆனால், அங்கு அசைவ உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்பட்ட நிலையில் அதை சாப்பிடுவதற்காக சென்ற மாணவர்கள் மீதும் ஏபிவிபியின் திமிர்த்தனத்தை, அடக்குமுறையை எதிர்த்த இடதுசாரி தொண்டர்கள் மீதும் கடுமையான வன்முறை தாக்குதலை நடத்தியிருக்கிறது ஏபிவிபி குண்டர்கள் படை. கடுமையான தாக்குதல் நடத்திய ஏபிவிபி குண்டர்கள் மீது டெல்லி காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்துவது கடுமையான கண்டனத்திற்குரியது.

இங்கே இரண்டு விஷயங்களை நாம் முக்கியத்துவப்படுத்தி முனைப்பு காட்ட வேண்டும். ஒன்று கருத்தியல் ரீதியிலானது. இரண்டாவது களத்தில் எதிர் கொள்ள வேண்டியது.

ராமனின் பெயரால் அசைவ உணவு உண்ணக்கூடாது என பார்ப்பனியம் பரப்புரை செய்கிறது. தன்னுடைய கலாச்சாரத்தை பிறர்மீது திணிப்பதாக பார்ப்பனியம் எடுக்கும் முயற்சிகளை அதன் கருத்தியல் அடிப்படையிலேயே முறியடிக்க வேண்டியது நமது கடமையாகும். வேதகாலம் என்று பார்ப்பனியம் அல்லது சனாதனம் குறிப்பிடும் காலகட்டத்தில் பார்ப்பனர்கள் அசைவ உண்ணிகளாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை அவர்களுடைய புராணங்கள் சுட்டிக்காட்டுகிறது. இராமன் பெயரால் அசைவத்தை தடுக்கக்கூடிய இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், இராமன் ஒரு அசைவம் என்பதை.

ராமாயணத்தில் இரண்டு நிகழ்வுகள் அதை சுட்டிக் காட்டுகிறது. ஒன்று காட்டுக்குள் இருந்த இராமன், சீதை இலட்சுமணன் ஆகியோருக்கு அங்கு இருந்த முனிவரால் மான் மற்றும் பசு இறைச்சி விருந்தாக படைக்கப்பட்டது. அதுமட்டுமல்ல இந்து வேதங்களில் விருந்தினர்களுக்கு படைக்கப்படும் உணவுகளில் ஆகச் சிறந்தது பசு இறைச்சிதான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாடுகளையும் குதிரைகளையும் காளைகளையும் கொன்று தின்ற, ஆயிரக்கணக்கான கால்நடைகளை யாகத்தின் பெயரால் கொன்று குவித்த சனாதனத்தின், பார்ப்பனியத்தின் கொடுமைகளுக்கு எதிராக எழுந்த புத்தனின் வருகைக்குப் பின்னால், புத்தனால் முன்னெடுக்கப்பட்ட கொல்லாமை கோட்பாடால் தங்களுடைய இருப்பை இழந்தது பார்ப்பனியம். ஆகவே தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக புத்தனை கடந்து தங்களை முழுதாக சைவர்களாகவே பார்ப்பனியம் அடையாளப்படுத்தி தங்களை தக்க வைத்துக் கொண்டது.

 பார்ப்பனியம் சிறந்தது, ஆகவே பார்ப்பனியம் உட்கொள்ளும் சைவ உணவு முறையும் சிறந்தது என்ற கோட்பாட்டை இந்திய மண்ணில் அவர்கள் நிறுவ முயற்சிக்கின்றார்கள். ஆனால் இந்தியாவின் பெரும்பான்மை மக்களின் உணவுமுறை என்பது அசைவம் என்பதை சங்பரிவார் கும்பல் புரிந்துகொள்ளவேண்டும். பார்ப்பனியத்தின் உணவு திணிப்பிற்கு எதிராக அவர்களை அடையாளப்படுத்திக் கொண்டு கருத்தியல் ரீதியாக அவர்களின் பொய்மையை தோலுரிக்க வேண்டும்.

இரண்டாவதாக வன்முறைத் தாக்குதலை நடத்தி மாணவர்களை அச்சுறுத்தும் வன்முறை செயல்பாடுகளுக்கு எதிராக உறுதியான களம் காண வேண்டும். நமது அச்சமே அவர்களது ஆயுதம். ஆகவே இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் ஒருங்கிணைய வேண்டும். பல்வேறு குழுக்களாக இருப்பதில் தவறில்லை. ஒன்றை ஒன்று புறக்கணிக்கவும் மிகைக்கவும் செய்வதற்காக எடுக்கப்படும் செயல்பாடுகள் நம்மை பலவீனப்படுத்தும். நாடு முழுவதும் பலவீனப்பட்டு கொண்டிருக்கும் இடதுசாரி இயக்கம் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஓரளவு பத்திரமாக இருக்கிறது. அது தொடர வேண்டும் என்று சொன்னால், அங்குள்ள அனைத்து தரப்பு மாணவ இயக்கங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு சங்பரிவார் வன்முறைகளுக்கு எதிரான வலிமையான போராட்டங்களை தைரியமாக முன்னெடுக்கவேண்டும்.

சங்பரிவார் கும்பலுக்கு ஒத்தூதிக் கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெல்லி காவல்துறைக்கு எதிரான வலிமையான சட்டப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *