ஆர் எஸ் எஸ், பாஜகவினர் போன்ற காவி கும்பல் கூறக்கூடிய வளர்ச்சி என்பதை சற்று உற்று நோக்கினால் ஒரு விஷயம் நமக்கு தானாகவே புரியும். இவர்கள் தனியார்மயத்தை ஊக்குவிப்பதுடன் அதனுடன் ஹிந்துத்துவத்தையும் கலந்து அதனை ‘வளர்ச்சி’ என்ற பெயரில் மக்களுக்கு முன் எடுத்து வைக்கும் போது அந்த பெயர், சிந்தனை ரீதியாக, சித்தாந்த கருத்தைப் போல வீரியம் பெற்றுவிடுகிறது.

குஜராத் மக்கள் மீண்டும், மீண்டும் மோடி அரசை பதவியில் அமர்த்துவதற்கான காரணம் அம்மாநிலத்தின் பெரும்பான்மையான இந்து மக்கள் ஹிந்துத்துவ கருத்தியலுக்கு அடிமையாக இருப்பதாலாகும், ஆனால் இந்த ஹிந்துத்துவ கருத்தியலை மட்டுமே நம்பி இருப்பது தகுந்ததல்ல என்பதை புரிந்து கொண்ட மோடி அரசு தன் மீதோ தன் அரசின் மீதோ வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் ‘குஜராத் உடைய கௌரவத்தின் மீதான தாக்குதல்’ என்றும், ‘குஜராத் சாதித்திருக்கும் வளர்ச்சியின் மீதான தாக்குதல்’ என்றும் ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் கட்டமைத்திருக்கின்றனர்.
குஜராத்தை குறித்து ஏதேனும் ஒரு குற்றச்சாட்டை வைத்தாலும் அது குஜராத்திகளை தாக்குவதாக குஜராத்திய வளர்ச்சியை தாக்குவதாக மக்கள் நினைத்துக் கொண்டால் என்ன செய்ய?
எவ்வளவு அழகாக காயை நகர்த்தி உள்ளார்கள் பார்த்தீர்களா?

ஒரு இனத்தின் மீது குறி வைக்கப்பட்டு, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்த அதிலும், பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நினைத்துப் பார்க்க முடியாத அளவு ஹிந்துத்துவ வாதிகளும், சங்பரிவார்களும் நடத்திய கோரத் தாண்டவ நிகழ்வை, “நடந்தது நடந்து முடிந்துவிட்டது!” “மறப்போம், முன்னேறுவோம்” என்று வாயால் மட்டுமே கூறி இனப்படுகொலைக்கு முக்கிய காரணமான ஒருவனை தூக்கு மேடையில் ஏற்றாமல் தலைவனாக ஏற்றுக் கொண்டு இவர்களால் முன்னேற முடிகிறது என்றால் இவர்களது மனமும், மூளையும் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது என்பதை வியக்காமல் இருக்க முடியவில்லை.

சரி, விஷயத்திற்கு வருவோம்.

பின்தங்கிய மாநிலங்களை கண்டறிவதற்கு உண்டான அளவீட்டு முறையை (MDI) பரிந்துரை செய்ய மத்திய அரசு முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது.


பின்வரும் 10 காரணிகளை சமமான முக்கியத்துவம் உடையதாக கொண்டு மாநிலங்களை வரிசைப்படுத்த வேண்டும் என்று ரகுராம் ராஜன் குழுவும் பரிந்துரை செய்திருந்தது. அதில்,
i) தனிநபர் மாத நுகர்வு
ii) கல்வி
iii) மருத்துவம் சுகாதாரம்
iv) வீட்டு உபயோகப் பொருட்கள்
v) பெண்களின் கல்வியறிவு
vi) ஆதிதிராவிடர் பழங்குடியினர் சதவீதம்
vii) வறுமை வீதம்
viii) நகரமயமாக்கல் வீதம்
xi) நிதி சேவைகள் பரவலாக கிடைத்தல்
x) சாலை இணைப்புகள்

இவற்றைக்கொண்டு மாநிலங்கள் 0 புள்ளி முதல் 1 புள்ளி வரை (மல்ட்டி டைமென்ஸனல் இன்டெக்ஸ்- MDI) குறிக்கப்பட்டு வரிசைப் படுத்தப்பட்டன. அதில் 0.6 க்கு அதிகமாக மதிப்பீடு செய்யப்பட்ட 10 மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய மாநிலங்கள் என்றும், 0.4 க்கும் 0.6 க்கும் இடையில் உள்ள 11 மாநிலங்கள் பின்தங்கியவை என்றும், 0.4 க்கு குறைவாக உள்ள 7 மாநிலங்கள் ஒப்பீட்டளவில் முன்னேறிய மாநிலங்கள் என்றும் கருதப்படவேண்டும் என்று குழு பரிந்துரைத்திருந்தது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு என்பது மாநிலங்களின் தேவையின் அடிப்படையில் தான் செய்யப்பட வேண்டும் என்றும் குழு அறிவுறுத்திருந்தது. இதன்படி பின்தங்கியிருப்பதற்கான மாநிலங்கள் தரவரிசையில் குறைவான புள்ளிகளைப் பெற்று கோவா மிக அதிகம் வளர்ச்சி பெற்ற மாநிலமாகவும், கேரளா இரண்டாம் இடத்திலும், தமிழ்நாடு மூன்றாம் இடத்திலும், மிகவும் பின்தங்கிய மாநிலமாக ஒடிசா கடைசி இடத்திலும் உள்ளதாக முடிவு செய்யப்பட்டது.


குஜராத் 0.491 மதிப்பீடு பெற்று மாநிலங்களின் வரிசையில் 12வது இடத்தில் உள்ளது. இது வளர்ச்சி குறைந்த மாநிலம் என்ற பிரிவில் வருகிறது.
(தி இந்தியன் எக்ஸ்பிரஸ் 2013, ஃபர்ஸ்ட் போஸ்ட்.காம் 2013)

குஜராத் பின்தங்கிய மாநிலமா? வளர்ச்சியடைந்த மாநிலமா? என்பதற்கு இந்த ஒரு புள்ளிவிவரம் போதாதா? மேலும்

சமூகத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 18 பெரிய மாநிலங்களின் தரவரிசையில் குஜராத் பெற்றிருப்பது 17வது இடம்.

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை பொறுத்தவரை மோடியின் ஆட்சியில் 39.06 % அதிகரிக்கவே செய்திருக்கிறது.
    (ரிசர்வ் வங்கி அறிக்கை 2015)

கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியில் குஜராத் பெற்றிருக்கும் இடம் 11.

ஏன், இவர்களுக்கு மிகவும் பிடித்த அன்னிய முதலீடுகள் விஷயத்தில் பார்ப்போமே.
‘தி இந்து’ கட்டுரையின் ஒரு புள்ளிவிவரம் இதனை தெளிவாக புட்டு புட்டு வைக்கிறது.
குஜராத் அரசின் புள்ளிவிபரங்களின்படி பார்த்தால் 2003 முதல் 2011 வரை நடைபெற்ற  ‘துடிப்புமிக்க குஜராத் உலக முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு’களில் வாக்களிக்கப்பட்ட மொத்த அந்நிய முதலீடுகளின் மதிப்பு $ 876 பில்லியன் (சுமார் ₹48.18 இலட்சம் கோடி) ஆகும். அவற்றில் பெரும்பகுதி 84 சதவீதம் (அதாவது சுமார் ₹38.54 இலட்சம் கோடி) ஏற்கனவே வந்து சேர்ந்து விட்டன அல்லது வந்து கொண்டிருக்கின்றன என்பதை குறிப்பிட்டிருக்கின்றனர்.

துடிப்பு மிக்க குஜராத்தின் கணக்குப்படி வாக்களிக்கப்பட்ட முதலீடுகளில் 60% வந்திருந்தால் கூட குஜராத் சீனா என்ற பொருளாதார டிராகனையே பின்னால் தள்ளி முன்னேறி இருக்கிறது என்று பொருளாகும். உலகிலேயே வளரும் நாடுகளின் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் சீனாதான் முதலிடத்தில் இருக்கிறது. 2003-2011 காலகட்டம் வரை சீனா ஈர்த்த மொத்த அன்னிய முதலீட்டின் மதிப்பு $ 600 பில்லியன் டாலர் (₹33 இலட்சம் கோடி).

இந்திய ரிசர்வ் வங்கியின் 2000 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் அந்நிய நேரடி முதலீடு குறித்த புள்ளிவிவரங்கள் குஜராத் $ 7.2 பில்லியன் ( சுமார் ₹39,600 கோடி) அளவிலான அந்நிய முதலீட்டை மட்டுமே பெற்றது என்று தெரிவிக்கின்றன. மகாராஷ்டிரா $ 45.8 பில்லியன் (₹2.4 லட்சம் கோடி), டெல்லி $ 26 பில்லியன் ( ₹1.5 லட்சம் கோடி) அன்னிய முதலீட்டை ஈர்த்து இருந்தன. கர்நாடகமும் தமிழ்நாடும் முறையே $ 8.3 பில்லியன் (₹45,650 கோடி), $ 7.3 பில்லியன் (₹40,150 கோடி) அந்நிய முதலீடுகளுடன் குஜராத் மாடலை விட முன்னிலை வகித்தன.
(தி இந்து 2016)

2012-2013 நிதி ஆண்டில் ஜனவரி வரையிலான அன்னிய நேரடி முதலீட்டுக்கான புள்ளிவிபரங்களின்படி குஜராத் ₹ 2,470 கோடி மதிப்பிலான முதலீடுகளைப் பெற்று நாட்டின் மொத்த முதலீட்டில் 2.38 சதவீதத்துடன் மாநிலங்களிடையே ஆறாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. அதே நிதியாண்டில் ₹40,999 கோடி அன்னிய முதலீடுடன் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடமும் டில்லி, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மாநிலங்களும் அதற்கு அடுத்த வரிசையில் வருகின்றன.  ₹1,934 அன்னிய முதலீட்டை பெற்ற இவர்கள் எதற்கெடுத்தாலும் வசைபாடும் மேற்கு வங்கத்தை விடவும் குஜராத் சிறிதளவே முன்னணியில் இருக்கிறது.
(எக்கானமிக் டைம்ஸ் 2014)

அந்நிய முதலீடுகளில் கூட குஜராத் முதலிடம் பிடிக்க முடியவில்லை என்றால் இது எப்படி முன்மாதிரி மாநிலமாக இருக்க முடியும்?!

இதுபோன்ற புள்ளிவிவரங்கள் தொடர்ச்சியாக குஜராத்தின் உண்மை நிலையை அம்பலப்படுத்தினாலும் மேட்டுக்குடி மக்களும், ஹிந்துத்துவ ஊடகங்களும் நினைத்தால் எப்பேர்ப்பட்ட பொய்யையும் உண்மையாக மாற்ற முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

இதுமட்டுமா என்ன?

2013 ஆம் ஆண்டு நடந்த உத்தரகாண்ட் வெள்ளத்தின் போது ராணுவமும், மீட்புக்குழுவினரும் இணைந்து 10க்கும் மேற்பட்ட நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு மாட்டிக்கொண்ட 15,000 குஜராத் யாத்ரீகர்களை நரேந்திர மோடி அவர்கள் இரண்டே நாட்களில் 80 இன்னோவா கார்கள் மூலமாக காப்பாற்றி பாதுகாப்பாக உத்தரகாண்டில் இருந்து குஜராத்திற்கு அழைத்து வந்து விட்டார் என மிகப் பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டது. ஒரு இன்னோவா காரில் 20 பேரை ஏற்றினாலும் கூட 1,600 பேரை தானே காப்பாற்றியிருக்க முடியும். அதுவும் கார் என்றால் சாதாரணமா? அங்கு ஏற்பட்டிருப்பது வெள்ளம், போக்குவரத்து அவ்வளவு எளிதாக இருக்குமா என்ன? அந்த மொத்த கும்பலுக்கும் சாப்பிடுவதற்கு உணவு எப்படி வழங்கி இருப்பார்கள், அவர்களுக்கு தேவையான அத்தியாவசியங்களை எப்படி வழங்கி இருப்பார்கள்? அதுவும் இது அனைத்தும் இரண்டே நாட்களில் செய்து விட்டாராம் நமது மோடி!!! என்ன ஒரு பிதற்றல். இதைப்போன்ற கெட்டிக்கார புளுகை எங்காவது கேட்க முடியுமா? இவர் என்ன அனுமாருக்கே டஃப் கொடுக்கிறாரா? ஒரு கையில் 7,500 நபர்களும் மறு கையில் 7,500 நபர்களும் எனத் தூக்கி கொண்டு வருவதற்கு.
(டைம்ஸ் ஆஃப் இந்தியா 2013)

இது மாதிரி கதை எல்லாம் கால் சட்டை கும்பலால் தான் பரப்ப முடியும்.

கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் நரேந்திர மோடிக்குமான நட்பு என்பது அளவிட முடியாதது என்பதற்கு இன்னொரு உதாரணம் கீழ்காணும் புள்ளிவிபரம் ஆகும். இந்தியாவின் முன்னணி கார்ப்பரேட் நிறுவனங்களின் 55 சிஇஓக்கள் நரேந்திர மோடி அரசில் நல்லாட்சி நடைபெறுவதாகவும், ஊழல் குறைந்துவிட்டது மற்றும் வியாபாரம் செய்ய எளிதாக உள்ளது முதலிய காரணங்களால் 10 இற்கு 7 மதிப்பெண்கள் கொடுத்திருக்கின்றனர்.
    (எக்கானமிக் டைம்ஸ் 2015)

இதை பொறுத்தவரை நமக்கு ஆச்சரியமே ஏற்படப் போவதில்லை. ஏனென்றால், நரேந்திரமோடி இருந்தால்தானே கார்ப்பரேட்டுகளுக்கு அவர்களது வாழ்க்கையை எந்தவித தடங்கலும் இல்லாமல் இங்கே ஓட்ட முடியும்.

கார்ப்பரேட்டுகளின் வாழ்க்கை ஒளிமயமாக ஆகிறது என்றால் விவசாயிகளின் வாழ்க்கை இருள்மயமாக ஆகிவிட்டிருக்கிறது.

2003-2007 வரையிலுமான காலகட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட 500 விவசாயிகள் வாங்கிய கடனை செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என தகவல் அறியும் உரிமை சட்டம் கணக்கு கொடுக்கிறது.
    (ஹிந்துஸ்தான் டைம்ஸ் 2007)

அம்மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் குஜராத் மாடலை எதிர்த்து போராட்டம் செய்வதும் நடக்காமல் இல்லை, ஏனெனில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விவசாயிகளின் நிலம் தானே பிடுங்கி கொடுக்கப்படுகிறது!?
    (ஸ்க்ரோல்.இன் 2014)

வளர்ச்சி என்பது ஒழுக்கம், நீதி, அறம் ஆகியவற்றுக்கு பொருந்தியதாக இருக்க வேண்டும் என்பதை கூட புரிந்து கொள்ளாமல் அல்லது வேண்டுமென்றே மறைத்து முதலாளித்துவத்துக்கு சாதகமாக அனைத்தையும் செய்து கார்ப்பரேட்களுக்கு மத்தியில் நட்பையும், ஓட்டுப் போட்ட மக்களுக்கு மத்தியில் நடிப்பையும் காட்டிக்கொண்டிருக்கிறார். தன்னுடைய உண்மை முகத்தை மறைப்பதற்கு மோடி அணிந்துள்ள முகமூடி தான் வளர்ச்சி. அவருடைய வளர்ச்சி என்னவென்பதை மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்கள் படி பார்த்தாலே தெரிந்துவிடும்.
குஜராத்தின் சாதனைகள், உத்தரகாண்ட்டின் சாதனைகள், அன்னிய முதலீட்டில் சாதனைகள், பொருளாதார வளர்ச்சி சாதனைகள் போன்ற இம்மாதிரி வளர்ச்சி விளம்பரங்கள் அனைத்துமே பாஜகவை ஆட்சியில் அமர்த்தி மோடியை பிரதமராக உட்கார வைக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஏனெனில் 1980 களில் பாஜகவினருக்கு ஆட்சியமைக்க ‘ராமரின் தயவு’ தேவைப்பட்டது. ஆனால் அது மட்டுமே இந்தியாவை பிடிப்பதற்கு போதுமானதல்ல என்பது அவர்களுக்கு தெரியும்.

அதன் காரணமாகவே பாஜக, ஆர்எஸ்எஸ் கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் எப்படி பிரியாணி செய்ய மசாலா தேவைப்படுமோ அதுபோல தனியார்மயத்தையும், தேச பாதுகாப்பு-தீவிரவாதம்-ஹிந்துத்துவம் (மூன்று மகா உருட்டுகள்) போன்ற கலவைகளையும் இணைத்து மக்களை முட்டாளாக்க இந்த ஃபார்முலாவை பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் இதுவும் சில காலம் தான். ஏனெனில் எந்த ஒரு பொய்யும் அதிக நாட்கள் தாக்குப்பிடிக்க முடியாது. உலக வரலாற்றில் பாசிஸ்டுகளின் நிலையை பார்த்தோமானால் எந்த ஒரு நாட்டிலும் பாசிஸ்டுகள் தான் ஆட்சி செய்ய பெரும்பான்மையான மக்கள் எந்த மதத்தையும், மொழியையும் பேசுகிறார்களோ அந்த மதத்திற்கும், மொழிக்கும் ஆதரவு தெரிவித்து சிறுபான்மையாக உள்ள மதத்தினரையும் அவர்களது மொழியையும் அடக்க அல்லது ஒழிக்க நினைப்பர். அதன்படியே மக்கள் அனைவரையும் ‘இந்து, இந்தி, இந்தியா’ என்ற பெயரில் ஒன்றுபடுத்தி சாதிய- இன- மத- வர்க்க- பாலின பிரிவுகளாக மனுதர்ம கோட்பாட்டில் கூறப்பட்டுள்ளவற்றை செயல்படுத்தி ஆட்சியை தக்கவைக்க துடிக்கின்றனர். அவர்களுக்கு உதவி செய்வது கார்ப்பரேட்டுகள் தான். ஆதலால் கார்ப்பரேட்டுகளின் தயவு ஹிந்துத்துவ சங்பரிவார சக்திகளுக்கு தேவையானது மட்டுமல்ல இன்றியமையாததும் கூட.

குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை நாம் இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தோமானால் குஜராத் வளர்ச்சி எவ்வாறு குறுகிய காலத்தில் ஏற்படுத்தப்பட்டது என்பதும் எந்த ஒரு துறையிலும் முதல் இடம் பெறாத ஒரு மாநிலம் எப்படி ‘முன்மாதிரி’ என்ற தகுதியை அடைந்தது என்பதும் தெளிவாகப் புரிந்துவிடும்.

குஜராத்தின் வளர்ச்சியை சிறுவயதில் நாம் கேட்ட ‘அம்புலிமாமா’ கதைகளோடு ஒப்பிடலாம். குழந்தையாக இருக்கும்போது அக்கதைகள் உண்மையை போல தோன்றினாலும், வளர்ந்த பின் தான் அக்கதைகள் வெறும் கற்பனையும், பொய்யும் கலந்த ‘காவியம்’ என்பது புரியும். குஜராத் காவியத்தை பொறுத்தவரை நாம் குழந்தையா அல்லது வளர்ந்த மேதையா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்.

குஜராத்தை முன்மாதிரியாகக் காட்டுவதன் தேவை என்னவென்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

  - முகமது சாதிக் இப்னு ஷாஜஹான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *