தன் எஜமானர்கள் கைகாட்டும் நபர்கள் மீது பாய்ந்து குதறும் நாய்களைப் போல் இன்றைக்கு இந்திய அமைப்பு சட்ட நிறுவனங்கள் மாறி இருக்கிறது.

பாஜக அல்லாத அரசுகளையும் கட்சிகளையும் அமைப்புகளையும் மிரட்டுவதற்குண்டான ஆயுதமாக அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறை விசாரித்து வரும் வழக்குகளும் அவர்களுடைய விசாரணை முறைமைகளும் பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்துள்ளது. அரசுக்கும் ஆளும் கட்சிக்கும் எதிராக குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்களின், அரசியல், சமூக, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்களில் அமலாக்கத்துறையின் ரெய்டுகள் நிரந்தரமாகி விட்டது. திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம் உட்பட பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் அமலாக்கத் துறையின் வேட்டைக்கு பலியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் முதன்மையான அரசியல் கட்சித் தலைவர்களின்  வீடுகளில் அமலாக்கத்துறையின் ரெய்டுகள் அன்றாடக் காட்சிகளாகிவிட்டது. இந்தியாவில் உள்ள மனித உரிமை அமைப்புகளின் அலுவலகங்களிலும் அரசின் திட்டங்களை மக்களிடத்தில் வெளிச்சம் போட்டு காட்டும் ஊடக நிறுவனங்களிலும் ஒன்றிய அரசிற்கு ஒத்துவராத தொழிலதிபர்களின் நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை கும்பல் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, அச்சுறுத்தி அவர்களின் செயல்பாட்டுச் சுதந்திரத்தை பறித்து வருகிறது. அதற்கும் அப்பால் அவர்களைக் குறித்த தவறான தகவல்களை உருவாக்கி, பரப்பி அவர்களை மக்களிடத்தில் குற்றவாளிகளாக மாற்றுவதற்குத்தான் அமலாக்கத்துறை படாதபாடு படுகிறது.

அமைப்புச் சட்ட நிறுவனங்களும் சட்டங்களும் சிலருக்கு எதிராக மட்டுமே செயல்படும் ஒரு  அபாய கட்டத்தில்தான் நாடு உள்ளது என்பதைத்தான் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளின் செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகிறது. உரிமைப் போராட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களை வலிமைப்படுத்தும் திட்டங்கள், சிறுபான்மை சமூகங்களின் சமூக, கல்வி வளர்ச்சி போன்றவற்றை எல்லாம் கவனப்படுத்தி செயல்படும் அரசு சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் (NGO) செயல்பாடுகளையும் நிதி ஆதாரங்களையும் தடை செய்வதற்கு முனைப்புடன் இயங்கும் ஒன்றிய அரசின் அணுகுமுறைகளையும் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமலாக்கத்துறை வேட்டைகளுடன் நாம் இணைத்தே வாசிக்க வேண்டும்.

நேஷனல் ஹெரால்டு, ஆம்னஸ்டி இன்டர்நேஷனல், ஹர்ஸ் மந்திர், டீஸ்டா செடால்வாட், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சேவை அமைப்பான ரிஹாப் இந்தியா பவுண்டேசன் ஆகியவற்றின் வங்கிக் கணக்குகளை முடக்குவதன் மூலமாக  ஒன்றிய அரசு சட்டத்தை நடைமுறைப் படுத்தவில்லை. மாறாக இந்த நாட்டின் சட்டங்கள் சிலருக்கு எதிராக மட்டுமே செயல்படும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் வலுவிழக்கும் முன்பாகவே கடன் சுமையின் காரணமாக நிறுத்தப்பட்ட பத்திரிக்கைதான் நேஷனல் ஹெரால்டு. 1938ல் ஜவஹர்லால் நேரு உருவாக்கியது என்ற பெருமையும் காங்கிரசின் பத்திரிக்கை என்ற கண்ணியமும் 2008இல் அதற்கு இல்லை. நேஷனல் ஹெரால்டுக்கு புத்துயிர் அளிப்பதற்காக காங்கிரஸ் கட்சி அளித்த 90 கோடி ரூபாய் கடன் உட்பட பொருளாதார உதவிகளும் பல சீர்திருத்தங்களும் பத்திரிக்கை மீண்டும் புத்துயிர் பெற எவ்விதத்திலும் பயன்படவில்லை. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசிற்கு  காங்கிரசை வேட்டையாடுவதற்கு உண்டான ஆயுதமாகவும் அப்பத்திரிகை மாறியது. தீவிர சங்பரிவார் ஆளாக தன்னை காட்டிக் கொள்ளும் சுப்பிரமணி சுவாமி கொடுத்த வழக்கை ஏற்றுக்கொண்ட வருமான வரி துறை, மேற்படி பத்திரிக்கையின் வெளியீட்டாளர்களான அசோசியேட் ஜேர்ணல் லிமிடெடின் கடன்களையும் பங்குகளையும் சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக உள்ள எங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஏற்றுக் கொண்டதில் முறைகேடு இருக்கிறதா என கடந்த 8 வருடங்களாக விசாரித்துக் கொண்டிருக்கிறது.

மோடி அதிகாரத்தில் ஏறிய நாள் முதல் தொடங்கிய விசாரணை அரசுக்கு சிக்கல்கள் ஏற்படும் போதெல்லாம் புத்துயிர் பெறும். அதன்மூலம் காங்கிரசிற்கு சிக்கல்கள் ஏற்படுத்தவும் செய்வார்கள். இதோ இப்போது மீண்டும் அமலாக்கத்துறை இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் சம்மன் அனுப்பியுள்ளது. 2024ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த நாடகம் நடந்து கொண்டே இருக்கும்.

நாட்டில் நீதி என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது சட்டமும் சட்ட அமைப்புகளும் ஒன்றிய அரசுக்கும் சங்பரிவார் கும்பல்களுக்கும் எதிரானவர்கள் என்று கருதப்படும் அமைப்புகளையும் ஆளுமைகளையும் வேட்டையாடுவதற்குண்டான ஆயுதமாகவே பயன்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை தோலுரித்து காட்டுபவர்களை அமலாக்கத்துறை வேட்டையாடும் அதே காலகட்டத்தில்தான், கோடீஸ்வர கேடிகள் இருபத்தி எட்டு பேர் சட்டத்தின் எல்லா ஓட்டைகளையும் பயன்படுத்தி பல லட்சம் கோடி ரூபாயை இந்த நாட்டிலிருந்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளார்கள்.

 28 வங்கிகளில் இருந்து கடன் வாங்கி ஏமாற்றி 22,842 கோடி கொள்ளையடித்த குஜராத் நிறுவனமான ஏபிஜே ஷிப்பிங் போன்ற நிறுவனங்களை குறித்த தகவல்கள் அன்றாடச் செய்திகள் ஆகிவிட்டன. அமலாக்கத்துறை நியாயமாக செயல்பட்டிருக்குமானால் இதுபோன்ற கொள்ளையர்களிடம் இருந்து நாடு காப்பாற்றப்பட்டிருக்கும்.  வெளிநாட்டிலிருந்து பெறப்பட்ட நன்கொடையில் இருந்து சில ஆயிரம் ரூபாய்களை தங்களது சுய தேவைக்காக பயன்படுத்திக் கொண்டார்கள் எனக் குற்றம் சுமத்தி ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் பொறுப்பாளர் ஆகார் பட்டேலுக்கும் பத்திரிக்கையாளர் ராணா அய்யூபுக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கும் சட்டங்கள், வங்கிகளில் உள்ள மக்களின் பல லட்சம் கோடி ரூபாயை  கொள்ளையடித்த நீரவ் மோடி முதல் ஏபிஜே உரிமையாளர் ரிஷி அகர்வால் வரையிலான கார்ப்பரேட் பெரும் கொள்ளையர்களிடம்  விசுவாசமுள்ள நாய்களைப் போல வாலைச் சுருட்டி ஒதுங்கிக் கிடக்கிறது. 

வெளிநாடுகளிலிருந்து பெருமளவு நிதியை பெறும் அமைப்புகள் இந்துத்துவ அமைப்புகள்தான். மடங்களின், மனித தெய்வங்களின், கார்ப்பரேட் சாமியார்களின் ஊடாக பல லட்சம் கோடிகள் நன்கொடையாக பெறப்படுகின்றன. வெள்ளையாக்கப்படுகின்றன. பகல் வெளிச்சத்தில் நடைபெறும் இம்மோசடிகளை கண்மூடி கடந்து செல்கிறது அமலாக்கத் துறையும் பிற நிறுவனங்களும். 

சட்டங்களும் சட்ட அமைப்புகளும் சிலர் மீது மட்டுமே பாயும் காலகட்டத்தை  பாசிசத்தின் காலகட்டம் என்றே வரலாறு அடையாளப்படுத்தி வைத்திருக்கிறது.

K.S அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *