உலகில் மிக மோசமாக வஞ்சிக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட மக்களாக பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் வரையறுக்கப்பட்டவர்கள் ரோஹிங்கிய முஸ்லிம்கள். 2017ஆம் ஆண்டில் மட்டும் ஆயிரக்கணக்கான பேர்கள் கொல்லப்பட்டும் 7,40,000 பேர் அகதிகளாக – குற்றுயிரும் குலையுயிருமாக – விரட்டப்பட்ட பேரவலத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள். இன்றளவும் அவர்கள் அனுபவித்துவரும் துன்பங்கள் துயரங்களுக்காக உலகிலுள்ள பௌத்தர்கள் மண்டியிட்டு தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என்று யாரும் எதிர்பார்ப்பதில்லை. அப்படி நாம் எதிர்நோக்குவது கூட எந்த விதத்திலும் நியாயமாகாது. அதேதான் பலஸ்தீன, உய்குர் முஸ்லிம்களின் நிலையும். இதற்காக எல்லா யூதர்களும் சீனர்களும் கையை உயர்த்தி சரணடையப் போவதில்லை. அதே போன்று சர்வதேச அளவில் வாழ்வதற்கு அதிக ஆபத்தான நாடுகள் பட்டியலில் இருக்கும் நாடுகளான வெனசூலா, பப்பா நியு கினியா, மெக்ஸிகோ காங்கோ பற்றிய செய்திகள் அதிகம் வெளிவருவதில்லை. அப்படி வந்தாலும் இந்த பிரதேசங்களில் அமோகமாக நடக்கும் போதை மருந்து மற்றும் ஆயுத வியாபாரம், சர்வதேச கூலிப்படை, தீவிரவாதம் என்று எதுவும் இன, மத அடையாளங்கள் சார்ந்து யாரையும் நெருக்கடிக்குள்ளாக்குவதில்லை. ஆனால் உலகத்தில் எங்காவது ஒரு மூலையில்  நடைபெறும் பயங்கரச் செயலில், முஸ்லிம் என்ற ஒற்றைப் பெயர் தெரிந்துவிட்டால், எங்காவது வெளிவந்த ஒரு பத்திரிகைச் செய்தியில் சவுதியோ, சிரியாவோ, ஈரானோ கட்டம் கட்டப்பட்டு விட்டால், யாராவது ஒருவர் குர்ஆனில் அல்லது வேதக் கருத்துக்களில் பொது புரிதலுக்கு மாற்றமான ஒரு வரியையோ, சிந்தனையோ எடுத்துக் காட்டி விட்டால், உடன் உற்சாகமாகி கொள்கை பேசும் முஸ்லிம்களே! வரிசையில் வாங்க என்று கூவியழைப்பது இங்கே இயல்பான அனிச்சை செயலாகிவிட்டது. இந்த சிந்தனை மனச்சிக்கலால் இங்கே அவதிப்படாதவர்கள் ரொம்ப ரொம்ப குறைச்சல். அப்படித்தான் இன்றைக்கு தாலிபான் சாக்குப் பூச்சாண்டியைக் காட்டி, உலக முஸ்லிம்களுக்கு சனநாயக, நவீனத்துவ சோறு ஊட்ட பார்க்கிறார்கள்.

      சர்வதேச முஸ்லிம் சமூகம் இந்த நவீனத்துவ சாதத்தை சாப்பிடமாட்டேன் என்று அடம்பிடிக்கும் சண்டிக் குழந்தையல்ல. சொல்லப் போனால் பிற சமூகங்களைப் போல் எல்லா நவீனத்துவங்களையும் வரிந்து கொண்டுதான் முஸ்லிம்களும் தகவமைகிறார்கள். காலனிய ஆதிக்கமும் நவீனத்துவமும் புயல்காற்றென வந்து அவர்களின் பண்பாட்டுகலாச்சாரத் தொடர்புகளை அறுத்துப் போட்டதால் நவீனங்களை அவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். இந்த தயக்கம் குறிப்பிடத்தக்க காலதாமதத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாங்கள் ஏற்கிறோம். அந்த தயக்கத்தை மேற்குலகு தொடர்ந்து அதிகப்படுத்தியே வருகிறது என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் உலகம் அவர்களால் தொடர்ந்து இம்சிக்கப்படுகிறது. அவமானத்திற்குள்ளாகிறது. அதனால் மைய நீரோட்டத்தை விட்டும் அந்நியப்படுகிறது. ஆப்கன் விவகாரத்திலும் அங்கே சனநாயகத்தைவளர்ச்சியைமுன்னேற்றத்தைக் கொண்டு வர தொடைதட்டிப் புறப்பட்டவர்கள் திரும்பிய திசையெங்கும் விட்டு வைத்தது பெரு நாசமும்பேரழிவும் தான். தாங்களே உருவாக்கி ஆப்கன் மண்ணில் உலவவிட்ட ஒரு போராளிக் குழுவை பன்னாட்டு கூட்டுப்படைகளோடு சேர்ந்து முற்றிலும் செயலிழக்க வைக்க முடியாமல் மீண்டும் சர்வாதிகார குழுவின் வசம் அதிகாரம் போய்ச் சேருவதற்கு வழிவகுப்பதுதான் வல்லரசுகளின் வாய்ப்பச் செயலா? வர்களால் நிறுவப்பட்ட ஆட்சியைஅதற்கு அநுகூலமான பரந்துபட்ட மக்களின் மனங்களைஏன் வென்றெடுக்க இயலவில்லை? அப்படி மாற்றத்திற்காக லட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொடுத்து தோற்றுவித்த அரசு ஊழலில் திளைத்திருந்த செய்திகள் ஊடகங்களில் வரிசைகட்டி வந்ததே.. அதை எந்த கணக்கில் வைப்பது? ஆப்கனில் மட்டுமல்ல.. வியட்நாம், ஈரான், சிரியா, லிபியா என்று அமெரிக்கா கால் வைத்த எல்லா இடங்களிலும் இதுவே நிலை. பெரும்பாலான இடங்களில் ஏற்கனவே இருந்த அரசுகள் ஒழிந்து அரசற்றத் தன்மை தான் வந்து சேர்ந்திருக்கிறது. அதற்கான வேலையைத்தான் அரும்பாடுபட்டு செய்திருக்கிறார்கள்.

ஆப்கானை ஆகஸ்ட் 15ஆம் நாளில்தான் தாலிபான் கைப்பற்றியது என்று நாம் நம்புகிறோம். ஆனால் 2020 பிப்ரவரி 29ஆம் நாள் முதலே ஆப்கானிஸ்தானைத்  தாலிபானுக்கு கையளிக்கும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டது அமெரிக்கா.  அன்றுதான் அமெரிக்காவுக்கும் ஆப்கன் இஸ்லாமிய அமீரகத்துக்கும் (தாலிபானுக்கும்) இடையே கத்தாரில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்படியானால் ஆப்கானிஸ்தானில் ஒரு ஜனநாயக அரசை ஏற்படுத்துவதில் அமெரிக்கா தோல்வி அடைந்துள்ளது என்பதே இதில் உள்ள அடிப்படையான பிரச்சினை. ஒரு தீவிரவாதக் குழுவை அழிக்கப் போகிறோம் என்று கங்கணம் கட்டி, இரண்டு லட்சம் கோடி டாலர்களுக்கும் அதிகமாக செலவு செய்து மீண்டும் அந்த குழுவிடமே பேச்சுவார்த்தை நடத்தி அதிகாரத்தை விட்டுத்தரும் முடிவுக்கு வருவதில் ஏற்பட்ட அரசியல் தோல்வியை தாலிபான் அவலஆட்சியை வைத்தே துடைத்துவிட  பார்க்கிறார்கள். அமெரிக்கா வெளியேறிய உடன் ஆப்கனின் பொம்மை அரசு உயிருக்கு பயந்து ஓடிவிட்டதைப் போன்ற ஒரு சித்திரத்தை ஊடகங்கள் வரைந்து காட்டுகின்றன. உண்மையில் தாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வேண்டுமானால், தங்கள் தலைவர் அப்துல் கனி பரதரை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை தாலிபான் தரப்பு விதித்தது. 2010ஆம் ஆண்டு பாகிஸ்தானின் கராச்சியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பரதர் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வேண்டுகோளைத் தொடர்ந்து 2018 அக்டோபர் 25ஆம் நாள் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் தொடர்ந்து பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே கடந்த ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகளின் அடிப்படையில்தான் ஆப்கானின் அதிகார பரிமாற்றங்கள் டந்திருக்கின்றன. அமெரிக்க மற்றும் கூட்டுப் படைகள் ஆப்கானைவிட்டு வெளியேறியபின் தாலிபான் அரசுதான் அமைக்கப்படும் என்ற உறுதிமொழியின் பேரில் தான் ஒவ்வொரு மாகாண ஆளுநருக்கும் சுமார் 2,3 மாதங்களுக்கு முன்பே அவர்களுடன் பேசி புரிய வைத்து, தங்கள் படையினர் வரும்போது எதிர்ப்புகள் இன்றி நடந்து கொள்ள வேண்டும் என்று தாலிபான் தரப்பில் கூறப்பட்டு வந்தது.‌ அதன்படியே ஒவ்வொரு மாகாண ஆளுநர்களும் ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். இதற்கிடையில் ஆப்கானிஸ்தான் குடியரசுத் தலைவர் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறியது குழப்பத்தை ஏற்படுத்தவே வேறு வழியின்றி தாலிபான் படையினர் காபுலுக்குள் நுழைந்துள்ளனர். ஆயுததாரிகளான போராளிக் குழுக்கள் ஆட்சியைக் கைப்பற்றும் போது இப்படி நடப்பது சர்வ சாதாரணமான ஒன்று. அவர்கள் அச்சுறுத்துவதும் அவர்களைக் கண்டு எதிரிகள்துரோகிகளாக கருதப்பட்டவர்கள் உயிர்பயம் கொள்வதும் யதார்த்தமான செயல்களே. ஈழத்தில் விடுதலைப் புலிகள் அதிகாரத்தில் கோலோச்சிய போது அவர்கள் முஸ்லிம்களை துரோகிகளாக சிங்களர்களின் கைக்கூலிகளாகத் தான் பார்த்து பலிகொண்டார்கள். இந்திய முஸ்லிம்களாகவும் மானுட நேயர்களாகவும் இதை நாம் ஏற்கவில்லை. ஆனால் இதுதான் நடந்தது. சர்வாதிகார ஆயுதப்படை அதிகாரங்களிடம் கருணையையும் நியாயத்தையும் எதிர்பார்ப்பது நமது பலவீனமே. உண்மையில் அமெரிக்கா உள்ளிட்ட கூட்டுப்படைகளால் ஏன் வீராவேசமாய் பறைசாற்றுவதை செயலில் காட்ட முடியவில்லை என்பதைத்தான் இங்கு நாம் பரிசீலிக்க வேண்டி இருக்கிறது.

அமெரிக்கா எதை விதைக்கிறது?

       அமெரிக்காவின் ஜனநாயக முகம், குட்டி நாடுகளில் அதன் வளர்ச்சி திட்டங்கள், நாகரீக ஒழுங்காற்றுதல், ஸ்திரமற்ற ஆட்சிகளை பலப்படுத்துதல், அங்கே வாழும் மக்கள் மீதான கரிசனம் ஆகியவற்றின் பின்னால் இருப்பதெல்லாம் வணிக நலன்கள், ராணுவ ஆதிக்கம், பிராந்திய மேலாண்மை ஆகியவை மட்டுமே. ஆப்கனில் ஒளிந்திருந்த பின்லேடனை கண்டுபிடித்து அழிக்கவே அமெரிக்கா ஆப்கனில் மூக்கை நுழைத்ததாக நமக்கு மீண்டும் மீண்டும் செய்தி வாசிக்கிறார்கள். இதன் மூலம் உலக மக்களின் மறதியை வைத்து மஞ்சள்குளிக்கிறார்கள். 1990களில் ஆப்கனின் பல்வேறு மாகாணங்களில் தங்களை பலப்படுத்திக் கொண்டிருந்த இனக் குழுக்களில் பாஞ்ஷிர் பள்ளத்தாக்கில் செல்வாக்கோடு இருந்த குழுவின் தலைவரான அஹமது ஷா மசூத் அவர்களும் ஒருவர். தனது கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இன்று தாலிபான் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் சாயல் ஏதுமில்லாதபெண்கல்வி, சமஉரிமை, சமாதானம், போர் நெறிகள் உள்ளிட்ட ஒரு முற்போக்கு நிர்வாகத்தை தனது எல்லைக்குள் கட்டமைத்தார். ஒரு வழியாக 1994ல் வடக்கு கூட்டணியின் தலைவராக ஆப்கானிஸ்தான் ஆட்சியைப் பிடித்தார். அதே கால கட்டத்தில் முல்லா உமர் தாலிபான் இயக்கத்தை ஆரம்பிக்கிறார். ஓரிரு வருடங்களில் பாகிஸ்தான் ஆதரவினாலும் அமெரிக்காவின் ஆயுதங்களாலும் தாலிபான் பலம் பெறுகிறது.. நிறைய இடங்களைத் தங்கள் வசப்படுத்துகிறார்கள். அப்போது அமெரிக்க உள்துறை அதிகாரியாக இருந்த ராபின் ராபேல் 1997ல் மசூதை தாலிபான்களிடம் பணிந்து போக நிர்பந்திக்கிறார். அதற்கு மசூத், தலைப்பாகை வைக்கும் இடம் என் வசம் இருந்தால் கூட நான் அதை தாலிபான்களிடம் இருந்து பாதுகாக்க போராடுவேன் என்கிறார். அவரை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைக்க கிளின்டன் அரசின் வெளியுறவுத் துறை அதிகாரிகள் குழு காபூலுக்கு விரைகிறது. அப்போதெல்லாம் அல்கொய்தா என்ற எந்த எழவும் ஆப்கனில் இல்லை. அப்புறமும் ஏன் ஆப்கனின் அரசியலில் மூக்கை நுழைத்தார்கள்? இன்று பதவியில் இருக்கும் ஆட்சியை அச்சுறுத்தி தாலிபான்கள் பதவியில் அமர்வது நியாயமா என்று கேட்பவர்கள் அமெரிக்கா எந்த அடிப்படையில் மசூதின் ஆட்சியைப் பறித்து தாலிபான் கையில் கொடுத்தது? அதிலும் ஒப்பிட்டளவில் மசூதின் ஆட்சி சிறப்பாக இருந்த ஒன்றாயிற்றே. சர்வதேச அரசியலிலும் பெரிய தாதாக்களே குட்டி தாதாக்களை உருவாக்குகிறார்கள்.

                ஆப்கனில் அமெரிக்கா மூக்கை நுழைத்து எதை நுகர்ந்தது என்பதை அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் தேசிய பாதுகாப்புப் படை தலைவராக பதவி வகித்த ஸ்பிகினியூ பிரஸ்னென்ஸ்கி (Zbigniew Brzezinski) 1998 ஆம் ஆண்டு ஜனவரியில் பிரெஞ்சு வார இதழான லே நூவல் ஒப்ஸர்வச்சூருக்கு (Le Nouvel Observateur) அளித்த பேட்டி, ஆப்கனில் சோவியத் தலையிடுவதற்கு முன்பாகவே அந்த நாட்டை மத்திய ஆசியாவின் ராணுவ தளமாக அமைத்துக் கொள்ளும் ரகசியத் திட்டத்தை அமெரிக்கா கொண்டிருந்ததைத் தெளிவாக அறிவிக்கிறது. அவரது பதில்கள் அமெரிக்காவின் தீவிரவாத தொழிற் படுதலை நுட்பமாக நமக்கு விவரிக்கிறது.

கேள்வி: சிஐஏவின் முன்னாள் இயக்குநர் ராபர்ட் சேப்ஸ், “ஆப்கனில் சோவியத் தலையீட்டுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே முஜாஹிதீன்களுக்கு அமெரிக்க உளவுப்படை உதவி செய்யத் தொடங்கியது” என்று கூறியுள்ளாரே, அப்போது நீங்கள் தேசிய பாதுகாப்புப் படை ஆலோசகராக இருந்தீர்கள். இதில் நீங்கள் வகித்த பாத்திரம் என்ன?

பிரஸ்னென்ஸ்கி: ஆம். அதிகாரப்பூர்வ வரலாற்றின் படி சோவியத் ராணுவம் ஆப்கன் மீது 24 டிசம்பர் 1979 ல் படையெடுத்தது. இதுவரை ரகசியமாக காக்கப்பட்ட நிஜம் முற்றிலும் வேறு. ஜூலை 3, 1979ல் ஜனாதிபதி கார்ட்டர் காபூலிலிருந்த சோவியத் ஆதரவு ஆட்சிக்கெதிரான சக்திகளுக்கு இரகசிய உதவியளிக்க முதல் உத்தரவில் கையெழுத்திட்டார்.

கே: ஆப்கனில் அமெரிக்கா தலையிடுவதை எதிர்க்கும் விதத்தில் தான் சோவியத் தலையிட்டது என்று சோவியத் தன்னை நியாயப்படுத்திய போது மக்கள் நம்பவில்லை. ஆனால் அதுதான் உண்மை. நீங்கள் எதற்கும் வருந்தவில்லையா?

பிர: எதற்காக வருந்துவது? அந்த இரகசிய நடவடிக்கை அருமையான திட்டம். அது சோவியத்தை ஆப்கன் வலைக்குள் இழுத்துவரும் விளைவை ஏற்படுத்தியது. அதற்கா என்னை வருந்தச் சொல்கிறீர்கள்? சோவியத் எல்லைக் கடந்த நாளில் நான் கார்ட்டருக்கு எழுதினேன்: சோவியத்துக்கு நாம் அதன் வியட்நாமை அளிக்கப் போகிறோம். நிதர்சனத்தில் பத்தாண்டுகளுக்கு மாஸ்கோ அரசு ஆதரவில்லாத போரை நடத்த வேண்டி வந்தது. அது ஊக்கமிழப்புக்கு இட்டுச்சென்று இறுதியில் சோவியத் பேரரசு நொறுவங்குவதற்கும் வழி வகுத்தது.

கே: இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு ஆதரவும் அளித்து எதிர்கால பயங்கரவாதிகளுக்கு ஆயுதமும் ஆலோசனையும் அளித்தது குறித்தும் நீங்கள் வருந்தவில்லையா?

பிர: உலக வரலாற்றுக்கு முக்கியமானது எது? தாலிபானா.. சோவியத் பேரரசின் வீழ்ச்சியா? சில பைத்தியக்கார முஸ்லிம்களா அல்லது மத்திய ஐரோப்பாவின் விடுதலை மற்றும் பனிப்போர் முடிவா?

இந்த பிரஸ்னென்ஸ்கி தான், ஆப்கனின் வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து தேசத்தின் இறையாண்மையை பாதுகாக்கக் கூடியவர்கள் முஜாஹிதீன்கள் மட்டுமே என்ற தோற்றத்தை உருவாக்கி, கைபர் கணவாயில் பஷ்தூன் தலைப்பாகையுடன் ‘அல்லாஹ் உங்களுடன் இருக்கிறார்’ என ஆவேச முழக்கமிட்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். இவர்கள் தான் உலகெங்கும் செக்யுலர் பயிற்சி பட்டறைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நமக்குள்ள கவலையும் ஆதங்கமும் இந்த நரித்தனத்தை நம்பி நாசமாகப் போகும் முஸ்லிம் ஆட்சிபீட காகங்கள் வடையை பறிகொடுத்து விட்டு பரிதாபமாய் பிராணனை விட்டுக்கொண்டிருக்கிறதே என்பதுதான். இதே பாணியில் தான் காலங்காலமாக அமெரிக்கா வியட்நாம் தொட்டு சின்னஞ்சிறு நாடுகளை தன் விரலிடுக்கில் வைத்து உருட்டி விளையாடி வருகிறது. இதில் அவர்களுக்கு எந்தவித குற்றஉணர்வோ குறைந்த பட்ச மனிதநேயமோ இதுவரை இருந்ததே இல்லை. அதனால் தான் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஆப்கன் விவகாரம் குறித்து விளக்கமளித்த ஹிலாரி கிளின்ட்டனால், காவு வாங்கப்பட்ட லட்சக்கணக்கான உயிர்கள் குறித்து கொஞ்சங்கூட அலட்டிக்கொள்ளாமல் அதனால் என்ன (So what?) என்று கேட்க முடிகிறது. தாலிபானை உருவாக்கியது அறிவார்ந்த திறன்மிக்க (brilliant) யோசனைஎன்று அப்போது திருவாய் மலர்ந்த ஹிலாரி, “தலிபானை உருவாக்கி எங்கள் வேலையை முடித்துவிட்டு மதவெறியில் ஊறித்திளைத்த ஒரு பெரும்படையிடம் ஆயுதத்தை திணித்து நாங்கள் ஒரு பெரும் களேபரத்தை (mess) ஆப்கனில் விட்டு வந்தோம்என்று குரூரப் புன்னகையை வெளிப்படுத்தவும் தவறவில்லை. பைத்தியம் பிடித்த குரங்கிற்கு கள்ளையும் ஊற்றிவிட்டு கொள்ளியையும் கையில் திணித்தவன் குரங்குகள் நிதானம் தவறலாமா என்று கேட்பதைப் போல இருக்கிறது. தனது செயற்கரிய செயலின் விளைச்சலைத் தான் இப்போது அமெரிக்கா விஷக் கதிர்கள் என்கிறது. அமிழ்தம் என்றாலும் நஞ்சு என்றாலும் அமெரிக்காவின் சொற்களையே கடன் வாங்கிப் பேசுபவர்கள் தாம், அமெரிக்காவை ஆப்கனின் வளர்ச்சியின் நாயகனாக – நாகரீகத்தின் காவலனாக உவந்தேத்துகிறார்கள். மதபோதையில் தன்னிலை தவறும் தாலிபான் கும்பல் சுயம்புவாக உருவாகி சொந்த மண்ணை சூறையாடுகிறது என்கிறார்கள். இவர்களுக்கு நமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தவிர வேறு எதையும் தருவதற்கில்லை. ஏனெனில் இது அமெரிக்காவின் பிறவிக் கோளாறு. அமெரிக்காவில், ஆஸ்திரேலியாவில் நாகரீகத்தை அறிமுகப்படுத்த கிளம்பியவர்கள் அங்கே இருந்த பழங்குடியினரை சுத்தமாக துடைத்தெறிந்துவிட்டுத் தான் தங்களை நிலை நாட்டிக் கொண்டார்கள் என்பது வரலாறு. வல்லாண்மைக்கு எதிரான ஆயுதப் போராட்டம் எந்த தீர்வும் தராதுஅகிம்சை வழியில் மட்டுமே தேசிய இனக் குழுக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்று முழங்குபவர்கள் தாலிபான், ஹமாஸ் போன்ற தீவிரக் குழுக்கள் உருவாகி மக்கள் அங்கீகாரம் பெறும் அந்தந்த தேசத்தின் அரசியல் தட்பவெட்பத்தைக் கணக்கிலெடுக்க மறுக்கிறார்கள். இஸ்லாமிய கோட்பாட்டு வாதப் பார்வையில் இந்த இயக்கங்களின் எழுச்சியை இஸ்லாமிய அடிப்படைவாத இருள் கவிழ்ந்துவிட்டதாக முரட்டடியாக நிராகரிப்பது நியாயமாகாது.

அப்படி பார்த்தால் அமெரிக்கா, நேச நாடுகளின் கூட்டுப் படைகளைச் சேர்த்துக் கொண்டு தொடுத்த ‘நாகரீங்களின் மோதல்’ போருக்கு ஆரம்பத்தில் புஷ் சூட்டிய நாமகரணம் கடவுள் ஆணையிட்ட “புதிய சிலுவைப் போர்” என்பதே. அப்போது இதனை கத்தோலிக்க அடிப்படைவாத இருள் என்று சாடியவர்கள் யாருமில்லை. அதே போல் ஈராக்கிலும் ஆப்கனிலும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களில் பைபிள் கட்டளைகள் பொறிக்கப்பட்டிருந்ததை ஜோசப் ரீ, தஹ்மன் பிராட்லி ஆகியோர் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். இதெல்லாம் இங்கே யாருக்கும் பிரச்சினையாகத் தெரியவில்லை. போர் மற்றும் பொருளாதார தடைகளால் ஐந்து லட்சம் குழந்தைகளின் சாவுக்கு காரணமாகிவிட்டு அதையும் சரியான விலைதான் என்று மேடலின் ஆல்பிரட் அவர்களால் பேச முடிகிறது.. இந்த அநீதிகள் வன்முறைக் குழுக்களை வளர்த்தெடுக்கிறது. அவர்களைக் காட்டியே நாகரீகம் என்றால் அது மேலைய நாகரீகம் தான்.. கீழைய பண்பாடு – நாகரீகம் என்று எதுவுமில்லை என்று வெள்ளை நல்லவர்களால் அளந்துவிட முடிகிறது. இங்கே சனநாயக காவலர்களும், நவீன சிந்தனாவாதிகளும் அடக்குமுறை – ஆக்கிரமிப்புக்கு ஆளாகும் மக்கள்  எல்லாவற்றையும் ஏற்று கொண்டு ஒரு கட்டத்தில் இருந்தே சுவடே தெரியாமல் அழிந்து போன அமெரிக்க செவ்விந்தியர்கள், ஆஸ்திரேலிய பழங்குடியினர் போல பொத்திக் கொண்டு போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் போலும். அப்படி  இருந்துவிட்டால் உலகில் நவீன சிந்தனாவாதம் நாகரீகங்களைக் கட்டமைத்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் அது யாருடைய இழப்பில் என்று யாருமே கேட்கமாட்டார்கள். ஒவ்வொரு நாடாக சீரழிக்கப்பட்டு ஒரு கோடி முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னரும் அமெரிக்காவின் கரங்களில் ஒளிந்திருக்கும் கட்டாரி நமக்குப் பொருட்டாகவே தெரியாது. ஆங்காங்கே பேரழிவையும் பெரு நாசத்தையும் ஏற்படுத்தி, வாழ்வதற்கே வழியற்ற – பெருங்கோபம் கொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை விரக்தியில் விட்டு, அவர்களில் ஆயுதம் தூக்கும் குழுவினரோடு நமது அறவுரைகளை முடித்துக் கொள்கிறோம். இந்த நிலைப்பாட்டை எடுத்து இளைப்பாறுவதால் தான் வாழ்வியல் உரிமைகளெல்லாம் பறிபோன பாலஸ்தீன சிறுவன் கையில் இருக்கிற உண்டிவில் பயங்கர ஆயுதமாகத் தெரிகிறது. இது எப்படி இருக்கிறது என்றால் தெருநாய்கள் கூட்டமாக குதறிக் கொண்டிருக்கும் போது கல்லெறிவது மிருகவதை என்று சொல்வதற்கு ஒப்பானதாக இருக்கிறது.

தொடரும்

கோட்டை கலீம் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *