நெப்போலியனின் கனவு திட்டம்

19ஆம் நூற்றாண்டின் வாசலில் அவர்களுக்கு ஒரு அருமையான வரவேற்பு காத்துக் கிடந்தது. 1799ல் பலஸ்தீன சிற்றரசாக விளங்கிய ஏக்ர் (அரபியில் அக்கா) பிரதேசத்தை கைப்பற்ற படை நடத்தி சென்ற சமயத்தில் ரமல்லா என்ற இடத்தில் முகாமிட்டுத் தங்கி அங்கே இருந்த யூதர்களைத் திரட்டி நிதி கேட்கும் ஊர்வலத்தை நடத்திய மாவீரன் நெப்போலியன், “துருக்கியரை வீழ்த்த நீங்கள் உதவி செய்தால் பலஸ்தீனத்தைக் கைப்பற்றி உங்களிடமே ஒப்படைப்பேன்” என்று வாக்குறுதி அளித்தான். “பரந்த நிலபரப்பைக் கொண்ட வலிமையான பேரரசுகள் மதத்திலிருந்தே தோற்றுவிக்கப்படுகின்றன” என்று குறிப்பிட்டார் இஸ்லாமிய பேரறிஞர் இப்னு கல்தூன் (முக்கதிம்மா). உலகமகா சக்கரவர்த்திக்கான உந்துதலும் ஆற்றலும் அதிகம் பெற்றிருந்த நெப்போலியனுக்கும் மத முரண்களை தன் ஆதிக்க நலன்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் சாதுர்யம் இருந்ததில் வியப்பேதுமில்லை. இதன் மூலம் அவர் பிரெஞ்சு புரட்சியின் நவீன முற்போக்குக் கொள்கைகளான சமத்துவம், மத சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றைப் பரப்பும் உத்தியாகவும் இதனை கையாண்டார். உண்மையில் பழங்கால ஜெருசலேமைக் கைப்பற்றி இஸ்ரவேலர்களுக்கு வழங்குவதற்காக அவர் ஆப்பிரிக்கா, ஆசியாவில் வாழ்ந்த யூதர்களுக்கு விடுத்த அழைப்பில் முற்றிலும் அரசியல் நலன்களே ஒளிந்திருந்தது 1799ல் ஏக்ரின் மீது அவர் படையெடுத்தபோது, அப்பகுதியின் ஆட்சியாளர் அஹமது அல் ஜாஜரின ஆலோசகராக இருந்த யூதர் ஹாயிம் ஃபார்ஹியின் ஆதரவை தனது யூத நல்லெண்ணத்தின் வாயிலாகப் பெற்று மத்திய கிழக்கில் தனது ஆக்கிரமிப்பு நிரல்களை விரிவுபடுத்திக் கொள்வதே அவரின் தலையாய நோக்கமாக இருந்தது. இதனை நாதன் ஸ்ச்சர் போன்ற யூத வரலாற்றறிஞர்களே குறிப்பிட்டு பேசுவதைக் காணலாம். ஏனெனில் சரிந்துக் கொண்டிருந்த ஓட்டோமன் பேரரசின் அதிகாரத்தை தன்வயப்படுத்த ஐரோப்பியாவின் பல தேச அரசுகள் மத்திய கிழக்கை மையப்படுத்தி காய்களை நகர்த்திக் கொண்டிருந்தன. அதே எண்ணம் நெப்போலியனுக்கு வந்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அதே சமயத்தில் நெப்போலியனை தடுத்து நிறுத்த பிரிட்டன் ஸ்டீவ் ஸ்மித் எனும் தளபதியின் தலைமையில் தன் கப்பற்படையை அனுப்பி துருக்கி அரசுக்கு உதவி புரிந்தது. அவர் முற்றுகையிட்ட ஏக்ர் பிரதேசம் புவியியல் ரீதியாக துருக்கி மற்றும் சிரியாவிற்கு நடுவில் அநுகூல முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியமாகும். இந்த இடத்தில் தனது தோல்வி குறித்து குறிப்பிட்ட நெப்போலியன், “ஒருவேளை ஏக்ரில் எனக்கு வெற்றிக் கிட்டியிருந்தால், துருக்கியர்களுக்கு எதிரான போரில் நான வாகை சூடியிருப்பேன். கிழக்கின் சக்கரவர்த்தியாக முடிசூட்டிக் கொண்டு கான்ஸ்டான்ட்டிநோபிளில் வழியாக பாரீஸுக்குள் கம்பீரமாக நுழைந்திருப்பேன்” என்றான் (J. Christopher Herald, On Religions – in the mind of Napolean).

தோல்விக்குப் பின்னர் யூதர்களால் தனக்கு பெரிய பலன் ஏதுமில்லை என்று தெரிந்தபோது நெப்போலியனின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது. 1808க்குப் பிறகு யூதர்கள் விஷயத்தில் அதிக கெடுபிடிகளைக் காட்டத் தொடங்கினார். முக்கியமாக யூதர்களின் பொருளாதார ஆதாரமான வட்டித் தொழிலைத் தடைசெய்து ஆணையிட்டதன் மூலம் அவர்களின் சமூக நகர்வை முடக்கி வைத்தார். இருப்பினும் ஐரோப்ப வரலாற்றிலேயே முதல்முறையாக தேசியளவிலான யூத திருச்சபைக்கு (Consistory) அனுமதி வழங்கியதால் யூத மத மற்றும் சமுதாய வாழ்வு பெருமளவு முன்னேறத் தொடங்கியது இந்த நடவடிக்கை ஐரோப்பா முழுவதிலும் யூதர்களின் சமூக கலாச்சார இருப்பை உறுதி செய்தது. மேலும் தனது அரசவையில் பங்கேற்க யூத அறிஞர் குழுவினை (Snehardin) அங்கீகரிக்கவும் தவறவில்லை. மேலும் நவீன காலத்தில் முதன்முதலாக பலஸ்தீனத்தின் மீதான யூதர்களின் உரிமைக்கு நெப்போலியன் செய்த பிரகடனம் பிற்காலத்தில் யூதர்கள் ஐரோப்பாவில் நடத்திய இஸ்ரேல் மன்றாட்டங்களுக்கான வித்தாக அழுத்தமாக முளைத்தெழுந்திருந்தது. எப்படியிருந்தாலும் நெப்போலியனின் திட்டம் அவரது அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யாது போனாலும் இஸ்ரவேலர்களின் சீயோனிச இயக்கத்திற்கு பெரும் அனுகூலங்களைத் தந்தது என்றே சொல்ல முடியும் .

19ஆம் நூற்றாண்டின் யூத நகர்வுகள்

இந்த நூற்றாண்டில் ஒரு புதிய அரசு ஜனநாயக சுதந்திர உணர்வுகளுக்கு பெருமதிப்பளித்து தன்னை நவதாராளவாத அரசாக நிலைநிறுத்திக் கொள்ளும் செய்தி ஜெர்மனி, ரஷ்யா மற்றும் மத்திய ஐரோப்பாவில் அடியும் உதையும் வாங்கி அல்லல்பட்டுக் கொண்டிருந்த யூதர்களின் வயிற்றில் பாயசத்தையே வார்த்தது. எங்காவது கால் நீட்டிப் படுக்கத் திண்ணை கிடைக்காதா என்று அலைபவனுக்கு வாடகைக்கு வீடு எடுத்துக் கொடுத்தால் திண்டு – தலையணை கேட்கத் தானே செய்வான்? அப்படித் தான் இந்த பொன்னு விளையும் மண்ணுக்கு யூதர்கள் பெட்டி படுக்கை கட்டிக் கொண்டு புறப்பட்டனர். தங்கள் உரிமைகள் குறித்துப் பேசுவதற்கு எல்லா வாய்ப்பும் சலுகையும் வழங்கப்பட்ட ஒரு நாட்டில், தங்களை கல்வி – பொருளாதார – அரசியல் என்று சகல துறைகளிலும் அபாரமாக வளர்த்துக் கொண்டனர். 1850ல் 17000 என்ற எண்ணிக்கையில் இருந்த யூதர்கள் 30 வருடங்களில் 2,70,000மாக உயர்ந்தனர். (அடுத்த நூறு ஆண்டுகளில் 1950ல் அவர்களின் ஜனத்தொகை 50 லட்சமாக அதிகரித்தது). இவர்கள் வங்கி உள்ளிட்ட பெருந்தொழில்களில் கால்பதித்து தங்களின் பொருளாதார நிலையையும் அபரிமிதமாக உயர்த்திக் கொண்டனர். யூதர்கள் தொடங்கிய வங்கிகள் பிற்காலத்தில் அமெரிக்காவின் பிரதான வங்கிகளாக மாறி பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 1980களில் ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 400 பணக்காரர்களின் பட்டியலில் நூறு பேர் யூதர்களாக இருந்தனர். அமெரிக்க அரசின் கொள்கை மற்றும் நிர்வாகங்களிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய யூத அறிஞர்கள், விஞ்ஞானிகள், பொருளாதார மேதைகள், பெருமுதலாளிகள் கூட்டம் பெருகி வளர்ந்தது. கூடவே யூதர்களின் பேர சக்தியும் அதிகரித்தது. இது குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் பேசிய ஜனாதிபதி ட்ருமேன், “அமெரிக்கா முழுவதிலும் அரசின் முடிவுகளில் இடையிடும் இயக்கங்கள் பரவலாக இருந்தாலும் வெள்ளை மாளிகையும் தொடர் அழுத்தத்தில் வைக்கப்படும் அளவுக்கு மோசமாக இருக்கும் நிலையை ஒத்துக் கொண்டே ஆக வேண்டும். குறிப்பாக தீவிர சியோனிஸ தலைவர்களின் அரசியல் ரீதியான மிரட்டல்கள் என்னை ரொம்பவும் கடுப்பேற்றி இருக்கிறது” என்றார். (George Lenczowski – American Presidents & the Middle East). இன்றைக்கு நம்மை வியப்பில் ஆழ்த்தும் நவீன இஸ்ரேலிய – அமெரிக்க புனித உறவு சர்வதேச அரசியல் களத்தில் சக்திமிக்க வெளிப்பாடாக இருப்பதை இந்த பின்புலத்தில் புரிந்துகொள்வது கட்டாயமாகிறது.

 இதற்கிடையில் ஐரோப்பாவில் தொடர்ந்து மலரத் தொடங்கிய தேசிய ஜனநாயக அரசுகளில் யூதர்கள் தங்களின் பங்கேற்பை உறுதி செய்யத் தொடங்கினர். 1848ல் பிரான்ஸில் அமைந்த முதல் நாடாளுமன்றத்தில் அடால்ப் கிரெமிக் என்ற யூதர் நீதித்துறைக்கு அமைச்சரானார். இவர்தான் முதன்முதலில் சர்வதேச இஸ்ரேலிய சம்மேளனத்தை (Universal Israelite Alliance -1863) துவக்கி அதன் நிறுவனத் தலைவராக இருந்தவர். 1874ல் பெஞ்சமின் டி இஸ்ரேலி தேர்தலில் வெற்றி பெற்று இங்கிலாந்தின் பிரதமராகவே ஆனார். அதிகாரம் என்ன செய்யும்; அதிகாரம் கைவரப் பெற்றால் என்ன செய்யலாம் என்பதையெல்லாம் பிசகறக் கற்றுத் தெளிந்தனர் யூதர்கள். அவர்களின் பணம் பாதாளம் வரைப் பாயத் தொடங்கியது. அதிகாரத்தின் ஒட்டுண்ணியாக மாறி ஆங்காங்கே கோலோச்சிய ஆட்சியாளர்களைத் தங்களின் ஆதரவாளர்களாக மாற்றுவதில் முனைப்புடன் செயல்பட்டனர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1881) ரஷ்யாவின் ஜார் மன்னர் இரண்டாம் அலெக்ஸானடர் கொல்லப்பட்ட பழி யூதர்கள் மேல் விழுந்ததால் ரஷ்யர்கள் அவர்கள் மேல் ஆத்திரத்தோடு விழத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் ரஷ்யாவில் நடந்த இனச் சுத்திகரிப்பு வேட்டை யூதர்களிடம் மீண்டும் தனி தேச கனவை வீரியத்துடன் கிளப்பிவிட்டது. யூத எதிர்காலம் குறித்த கேள்விக்கு விரைவான, நடைமுறை சாத்தியமான தீர்வை எட்டியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தை சீயோனிசர்களிடம் உருவாக்கியது. அப்போது ரஷ்யாவை விட்டு வெளியேறிய 20 லட்சம் யூதர்களில் பெரும் பகுதியினர் அமெரிக்காவிலும் பிட்டனிலும் தஞ்சம் புகுந்தனர். அதில் சில நூறு பேர்கள் பலஸ்தீனை நோக்கிப் புறப்பட்டார்கள்.

பலஸ்தீனில் முதல் குடியேற்றம்

அரசியல் குறிநோக்கால் உந்தப்பட்டு நவீன சியோனிஸ திட்டத்திற்கான ஊக்கியாக அமைந்த 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த இந்த புலப்பெயர்வு தான் முதல் ஆலியாவின் (மேலெழுதல் – ஆசிர்வதிக்கப்பட்ட நிலத்திற்கு திரும்புதல்) முதல் கட்டமாக சரித்திரத்தில் இடம்பெறுகிறது. ஹொவவி சீயோன் (சீயோனின் காதலர்கள்) எனும் பெயரில் அமைப்பாக்கப்பட்ட இந்த புலப்பெயர்வுக்கு எட்மனட் தி ரோத்ஸ்சைல்டு எனும் பிரெஞ்சு பிரபுவின் வங்கி நிறுவனம் நிதியளிக்கத் தொடங்கியது. இந்த முதற்கட்ட மொஷாவா (யூதக் குடியிருப்பு) விற்கான கலீபாவின் ஆதரவை தனது அதிகாரிகளின் மூலம் பெற்று, தொடர்ந்து இரு மொஷாவாக்களையும் ரோத்ஸ்சைல்டு ஏற்படுத்தினார். ஆரம்பக்கட்ட இஸ்ரேலிய குடியிருப்புகளைப் பொருத்தவரை நிலம் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் தனிநபர்கள் பெயரிலேயே பணம் கொடுத்து வாங்கப்பட்டன என்பதும் இந்த குடியிருப்புவாசிகளின் வருமானத்திற்கு வழிவகுக்கும் வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளையும் செவ்வனே ஏற்படுத்திக் கொடுத்து அந்த மக்கள் பொருளாதார தன்னிறைவோடு குடியமர்த்தப்பட்டார்கள் என்பதும் கூர்ந்து கவனிக்க வேண்டியவை.   தங்களது கனவு தேச நகர்வின் எல்லா கட்டத்திலும் யூதர்களிடம் துல்லியமான செயல்திட்டம் இருந்தது. மொஷாவா குடியேற்றங்களுக்கும் தெளிவான வரையறைகளும் குடியேறிகளைக் கட்டுபடுத்தும் உடன்படிக்கையும் கொண்ட சாசனம் ஒன்று இருந்தது. அதற்கு உடன்பட்டுத்தான் யாராக இருந்தாலும் குடிபுக முடியும். இதேபோல் ஹொவவி சீயோன் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டவும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறவும் ரஷ்ய அரசிடம் அனுமதி கோரினார்கள். யூதர்களை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட்டுவந்த காலகட்டத்திலும் ஹொவவி சீயோன் அமைப்பிற்கான அங்கீகாரத்தை 1890ல் ரஷ்ய அரசு வழங்கியது. யூதர்கள் பிரச்சினையில் இந்த இரட்டை அணுகுமுறையைத்தான் ஐரோப்பாவின் அனைத்து அரசுகளும் தொடர்ந்து கையாண்டு வந்தன. இன்றைக்கு இஸ்ரேலை அங்கீகரித்து செல்லங் கொஞ்சும் நாடுகள் ஒவ்வொன்றும் ஒருகாலத்தில் யூதர்களை ஓட ஓட விரட்டியவையே. இருந்தாலும் வெட்ட வெட்ட முள்ளாகத் தழைத்து உறுத்தும் வேலிக் காத்தானைப் போல் விரவிய யூத குடைச்சலை சமாளிக்கும் எளிய வழியாக – அவர்களை ஒரு மூலைக்கு தள்ளிவிடும் வாய்ப்பாக – பலஸ்தீனத்தை நவீன மதச் சார்பற்ற மையவாத அரசுகள் கருதின… செயல்பட்டன.

ஹொவவி சீயோனின் முதல் ஆலியாவிற்கு வெகுகாலம் முன்பாகவே பலருக்கு சீயோனிஸ காதல் பகலெல்லாம் போதாகி, இரவுகளில் தூங்கவிடாமல் வாட்டி வதைத்தது. பிரிட்டனின் வங்கி முதலாளியான சர் மோசஸ் மொன்டிஃபேர் என்ற யூதர் 1839லேயே பலஸ்தீனத்தில் தனி அதிகாரம் பெற்ற யூத பிரதேசத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையை எகிப்தின் ஆளுநர் முஹம்மது அலி பாஷாவுடன் நடத்தினார். இப்படி வேர்கொண்ட சீயோனிஸம் (சீயோன் என்பது ஜெருசேலத்தில் மலைக் கோவில் அமைந்திருக்கும் மலையின் பெயர்) என்பது நிஜத்தில் மதச் சார்பற்ற, நாத்திகவாத யூதர்களால் உருவாக்கப்பட்ட ஆதிக்க நலன்சார்ந்த இனவாத தேசியமாகும். “பழமைவாத சனாதன யூத மதத்திற்கு எதிரான கலகக்குரலே சீயோனிஸம்” என்று வரையறுக்கிறார் யூத அறிஞர் பரூச் கிம்மர்லிங். 1875 ஆம் ஆண்டுத் தொடங்கி யூத இளைஞர்கள் ஆங்காங்கே ரகசியமாக இந்த சீயோனிஸ திட்டம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தார்கள். உலகின் பல பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த யூதர்களை தங்கள் கனவு தேசம் என்ற ஒற்றைப் புள்ளியை நோக்கி இழுக்கும் திட்டம் அது. இந்த கனவு தேசத்தை எங்கே அமைப்பது என்பதில் ஆளாளுக்கு ஒரு கருத்து இருந்தது. அர்ஜென்டினா, மொரீஷியஸ். சிலி, உகான்டா, கென்யா என சாதகமான பல பிரதேசங்கள் கணக்கில் கொள்ளப்பட்டன. யூதர்களுக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர்களுள் முற்றிலும் வித்தியாசமான ஒருவர் இருந்தார். அவருக்கு குழப்பம் ஏதுமில்லை. யூதர்களின் நாடு எது என்றும் அதை அடைவதற்கான செயல்திட்டமும் அவரிடம் இருந்தன. பலஸ்தீனத்தை நோக்கியே நமது எண்ணம் குவிய வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அவர் பெயர் தியோடர் ஹெசில்.

தியோடர் ஹெசிலும் சியோனிஸ இயக்கமும்

தனது திட்டத்தை செயல்படுத்த ஆறு பணக்காரர்களைத் தெரிவு செய்தார் ஹெசில்.  அந்த பணக்காரர்களுள் நாம் மேற்குறிப்பிட்ட எட்மனட் தி ரோத்ஸ்சைல்டு மற்றும் மாரீஸ் தி ஹிர்ஷ் ஆகியோரும் இருந்தனர். இவர்கள் இருவரும் முதல் ஆலியாவில் பலஸ்தீன் மற்றும் அர்ஜென்டீனாவில் யூத குடியிருப்புகளை உருவாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டவர்கள். ஆறு பேரும் ஹெசிலின் திட்டத்தைக் கேட்டு சிலிர்த்துப் போய் நிபந்தனையற்ற ஆதரவையும் தேவையான பணத்தையும் வழங்க முன் வந்தார்கள். இரண்டு வருட காலத்திற்குள் ரோத்ஸ்சைல்டு தான் ஏற்படுத்திய காலனிகளின் நிர்வாகத்தை ஹெசிலின் “யூத குடியிருப்பு சங்க”த்திடம் ஒப்படைத்து விட்டார். தனது திட்டம் பற்றி ஹெசில் இப்படி சொல்கிறார். “நான் எதையும் புதியதாக சொல்ல வரவில்லை. இந்த திட்டம் ரொம்பவும் பழமையானது. இது ஒரு உலகளாவிய எண்ணம். அதில் தான் அதன் ஆற்றலும் ஒளிந்திருக்கிறது. நமது மக்களைப் போல் இந்த திட்டமும் புராதானமானது. கொடும் துயரமான காலகட்டங்களிலும் நமது மக்கள் இந்த கனவைக் கைவிடவில்லை. அந்த எண்ணம் யூதர்களின் தேசத்தை உருவாக்குவதே”.

சரி.. இதற்கு என்ன செய்யலாம்? ஒவ்வொரு நாடாகப் போய் உதை வாங்கி கொண்டிருக்க முடியுமா? நமக்கான நாடு என்பது வெறும் நிலம்தானே? அதை நாம் பணம் கொடுத்து வாங்கி விடுவது, அதற்கு ஒரு சர்வதேச சட்ட அங்கீகாரத்தைப் பெற்று விடுவது அதற்காக எந்த இழப்புகளையும் சந்திக்கத் தயாராக இருப்பது, இந்த உணர்வை உலகத்தில் வாழும் ஒவ்வொரு யூதனிடமும் விதைப்பது என்பது தான் ஹெசிலின் திட்டம். இந்த எண்ணமே யூதர்களின் கற்பனையைக் கிளறிவிட்டது. தங்கள் லட்சியக் கனவை நனவாக்க அவர்கள் மிகக் கடுமையாக உழைக்கத் தயாரானார்கள். பணக்காரர்கள் ஒத்துழைக்கத் தயாரானார்கள். ஹெசில் ரஷியா, போலாந்து, ரூமானியா என பல்வேறு நாடுகளில் பெரும் இன்னல்களில் வாழ்ந்து வந்த யூதர்களை சந்தித்துப் பேசினார். ஏழை எளிய யூதர்களே நெருப்பாற்றில் நீந்தியாவது தனது திட்டத்தை நடைமுறைப் படுத்துவார்கள் என்று உறுதியாக நம்பினார் ஹெசில். அவர்களும் உற்சாகத்தோடு அவரின் சொற்படி நடக்க ஆயத்தமானார்கள். எல்லோரது இலக்கும் பலஸ்தீனத்தை – கடவுள் தங்களுக்கென்று வாக்களித்த நிலத்தை – நோக்கி குவிய ஆரம்பித்தது. அரசியல் ரீதியாகவும் சமய ரீதியாகவும் அங்குதான் இளிச்சவாயர்கள் இருந்தார்கள் என்பதும் யூதர்களுக்கு வசதியாகப் போனது.

  • தொடரும்

லியாஹத் அலி

எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *