அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கை பண்ணி, எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும் கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.                                                       ஆதியாகமம் 15 : 18-21

கடவுளால் வாக்களிக்கப்பட்ட இந்த மண்ணில் முதன்முதலாக இறைத்தூதர் ஜோஷுவா தலைமையில் யூதர்கள் உள் நுழைந்தனர். இது நடந்தது கி.மு 1272 ஆம் ஆண்டு. இந்த யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் தான் ஜோஷுவா (யூசா பின் நூன்) வின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்த இறைவன் சூரியனை ஒரு பொழுது தடுத்து நிறுத்தி வைத்தான். இதனை இமாம் அஹமது பின் ஹம்பல் தனது ஜலாலைனில் “புனித இல்லத்தை நோக்கி ஜோஷுவா புறப்பட்ட அந்த நாளைத் தவிர்த்து வேறு எப்போதும் யாருக்காகவும் சூரியன் தடுத்து நிறுத்தி வைக்கப்படவில்லை” என்று குறிப்பிடுகிறார். (முஸ்னத் அஹமத்). எனவே யூதர்களின் இந்த கனவுதேசத்திற்கு சமயத் தொன்மையியல் ஏராளமான சான்றாதாரங்களை அள்ளித் தருகிறது. ஆனால் அதே பழைய ஏற்பாட்டில் இறைவன் ஆசிர்வதிக்கப்பட்ட இந்த நிலம் எந்த நிபந்தனைகளின் பேரில் வாக்களிக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிவித்து விட்டான்

நீங்கள் உங்கள் தேவனாகிய  கர்த்தரிடத்தில்  அன்புகூர்ந்து, அவர் வழியில் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிறவைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர் களானால், கர்த்தர்  உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப் பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள். உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐப்பிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம் வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும்.                                                                                               (உபாகமம் 11: 22-24)

இந்த நிபந்தனைகளை மீறி நேர்வழியில் இருந்து பிறழ்ந்த போதெல்லாம் யூதர்கள் ஜெருசலேமை விட்டு துரத்தியடிக்கப்பட்டார்கள் என்பதை பைபிளும் திருக்குர்ஆனும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.அப்படி துரத்தியடித்தவர்கள் யாரும் முஸ்லிம்கள் இல்லை. இன்றைக்கு யூதர்கள் பிரச்சினைக்கு வெறும் இஸ்லாமியத்தை மட்டும் எதிரியாக தொடர்பு படுத்திக் காட்டிவிட்டு நவகாலனிய ஏகாதிபத்தியம் பாசாங்கு செய்கிறது. ஆனால் பலஸ்தீனத்தின் நீணட நெடிய வரலாறு இந்த போலித்தனங்களின் தோலை உரித்துத் தொங்க விட்டுள்ளது. ஜோஷுவாவிற்குப் பின் அவரது வழிவந்த இறைத்தூதர் தாவீது இஸ்ரவேலர்களை ஒன்றிணைத்து ஜெபுஸ் எனும் கிராமத்தை பெரிய நகரமாக நிர்மாணித்து அதற்கு ஜெருசேலம் எனப் பெயரிடுகிறார். அவர் அடிக்கல் நாட்டி அஸ்திவாரமிட்ட ஆலயத்தை அவரது புதல்வர் இறைத்தூதர் சாலமன் (சுலைமான்) கி.மு. 957ல் கட்டிமுடித்து அதனை பைத்துல் முகத்தஸ் – தூய இல்லம் (ஹீப்ரு மொழியில் பைத் ஹ மிக்தஷ்) என்று அழைக்கலாயினர். அதில் ஸ்தூபிகள், குவிமாடங்கள், வளைவுகள் என அனைத்தும் தங்கத்தால் செய்யப்பட்டு மிகச் சிறந்த வேலைப்பாடுகளுடன் அற்புதமாக நிர்மாணிக்கப்பட்டது. அன்று தொடங்கி செமட்டிய மதங்கள் மற்றும் அவற்றிற்கு எதிரான நாட்டார் (pagan) வழிபாட்டு மரபுகளுக்கும் ஏகாதிபத்திய பேரரசுகளுக்கும் இப்பகுதி ஒரு பந்தய மைதானமாகவே மாறிப் போனது. அதே சமயத்தில் தாவீதின் மோரியா மலை (இப்போது கோவில் மலை), சியோன் மலையில் உள்ள தாவீதின் மாடம், பாறைக் குவிமாடத்தில் இருக்கும் அஸ்திவாரக்கல் போன்றவை யூத நம்பிக்கைகளின் நாபியாகத் திகழ்கின்றன. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எபிபேனீஸ் எனும் பாதிரியார் இந்த இடத்தில் இருந்த பழம்பெரும் தேவாலயத்தில் தான் ஒலிவ மலையில் விட்டும் கர்த்தர் இறங்கி வந்தபோது உடன்வந்த அவரது சீடர்கள் கடவுளை வணங்கினர்” என்று குறிப்பிடுவதை ஒப்பிட்டுக் காணலாம்.

யூதர்கள் – கிருத்தவர்களின் சமய விசாரணை

மதம் அல்லது எதிர் மதம் அரசியல் கருவியாக மாறியபோது சமய விசாரணை என்பதையே அரசர்கள் தமது ஆக்கிமிப்பு நிரல்களுக்கான மேற்பூச்சு ஒப்பனைகளாக காட்டிக் கொண்டனர். எதிர் மதத்தின் விசுவாசிகளுக்கு பயம் காட்டுவதே நாடு பிடிக்கும் பேராசைகளை மறைக்கும் மூகமுடியாக மாறியிருந்தன. அப்படித்தான் பாபிலோனிய மன்னன் நெபுசட்நேசர் ஜெருசலேமை கி.மு 597ல் முற்றுகையிட்டு யூத பிரபுகுலத்தைச் சார்ந்த ஏராளமானோரை நாடு கடத்தினான். தொடர்ந்து எதிர்ப்பு வலுத்தபோது மீண்டும் படையெடுத்து நகரை நாசமாக்கி, கிமு 585ல் சாலமன் தேவாலயத்தைத் தீக்கிரையாக்கினான். யூதர்கள் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர். இங்கிருந்து கொள்ளையடித்து கொண்டு செல்லப்பட்ட தங்கச் சிலைகள் பாபிலோனின் இஸ்தார் நுழைவாயிலை அலங்கரித்தன. ஐம்பது ஆண்டு தொடர்ந்த பாபிலோனிய ஆட்சியில் பின்னால் அரியணையேறிய சைரஸ் என்ற மன்னன் யூதர்களுக்கு ஆதரவாக நடந்து கொண்டதால் மீண்டும் தேவாலாயம் எழுந்தது.

பிற்காலத்தில் ஹெராது என்ற ரோமானிய மன்னன் கிமு 37ல் ஜுதேயாவை (இன்றைய மேற்குக்கரை) கைப்பற்றி தனது ஆட்சியின் கீழ் கொண்டு வந்தார். ஹெராது யூதராக இருந்த போதும் அதிகார வெறியில் யூதர்களுக்கு பெருங் கொடுமைகளைச் செய்தார். பலஸ்தீனில் இருந்து முதல்முறையாக யூதர்கள் வெளியேறத் தொடங்கியதே ஹெராது எனும் யூத மன்னன் ஆட்சியில் தான் என்பது மிகப் பெரிய நகைமுரண். இஸ்ரவேலர்களை ஆள ஒருவன் பிறப்பான் என்கிற இயேசு கிருஸ்துவின் பிறப்பு குறித்த பழைய ஏற்பாட்டின் முன்னறிவிப்பிற்கான காலம் நெருங்கிவிட்டது என்று மதகுருமார்கள் சொன்னவுடன், இரண்டு வயதுக்குட் பட்ட குழந்தைகளைக் கொன்று குவித்தது ஒன்றே போதும் ஹெராதின் பதவி வெறியையும் அட்டூழியத்தையும் பறைசாற்ற. இவ்வளவு கொடுமைகள் செய்த போதும் சாலமன் தேவாலயத்தை விரிவுபடுத்திக் கட்டிய ஒரே காரணத்திற்காக ஹெராது மதிக்கப்பட்டார். அதே காலகட்டத்தில் எழுந்தருளிய இயேசுபிரான் சாலமன் தேவாலயம் மீண்டும் இடிக்கப்படும் என்ற முன்னறிவிப்பையும் செய்துவிட்டுப் போனார்.

சிறிதுகாலத்தில் ரோமானிய பேரரசுக்கு எதிராக ஜுதேயாவில் ஸிலாட் (Zealots) புரட்சிப்படை எழுந்தது. ரோமானியப்படையை சிதறடித்து ஜெருசலேமைக் கைபற்றியது. டைடஸ் தலைமையில் கொந்தளித்து வந்த ரோமப்படை யூதர்களை ரோமத்திற்குக் கூட மதிக்கவில்லை. ஆத்திரத்தோடு சகலத்தையும் சரித்துப் போட்டனர். ஹெராது இழைத்து இழைத்து விஸ்தரித்த தேவாலயம் வெறும் 90 ஆண்டுகளுக்குள் ரோமானியர்கள் தரைமட்டமாக்கிவிட்டனர். இப்படி இடிக்கப்பட்டது போக இன்றளவும் எஞ்சி நிற்பது மேற்குப்பக்கமுள்ள ஒற்றைச் சுவர் மட்டுமே இந்த ஒற்றைச் சுவர்தான் இன்றைக்கும் சாலமன் ஆலயம் மீண்டும் எழுப்பப்படும் என்ற நம்பிக்கையை கம்பீரமாக அறிவித்துக் கொண்டு நிற்கிறது. இரண்டாம் சாலமன் ஆலயம் நிலைத்திருந்த 585 ஆண்டு வரலாற்றில் பல்வேறு கிளர்ச்சிகளும் திசைமாற்றங்களும் சாமராஜ்ய சரிவுகளும் நடைபெற்றன. இவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எள்ளளவு தொடர்பும் இல்லை.  இன்னும் சொல்லப் போனால் தேவாலயம் தகர்க்கப்பட்ட மூன்றாண்டுகளில் யூதர்கள் ரோமானியர்களால் தேடித்தேடிக் கொல்லப்பட்டனர். ஜெருசலேமை புண்ணியத் தலமாக கருதுவதால் தானே இங்கே வசித்துக் கொண்டு குடைச்சல் கொடுக்கிறார்கள் என்ற எண்ணத்தில் அங்கிருந்து யூதர்களை அடித்து விரட்டினர். அப்போது கடலோர பகுதிகளில் வாழ்ந்து வந்த பழங்குடி அரேபியர்கள் தான் அவர்களுக்கு அபயமளித்தனர்.

சிறிது காலத்திற்கு கல்வி, கேள்விகளிலும் தங்கள் மத நம்பிக்கையை உறுதி செய்து கொள்வதிலும் சிரத்தையோடு ஈடுபட்டிருந்த யூதர்கள் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் சிமோன் பென் கொச்பா என்ற ராணுவ தளபதியின் கீழ் அணிதிரண்டனர். அர்ப்பணிப்புடன் கூடிய இரண்டு லட்சம் வீரர்களைக் கொண்ட பெரும் பட்டாளத்துடன் கிபி 132 ஆம் ஆண்டு ஜெருசலேமை வெற்றி கண்டார். கடுப்பாகிப் போன ரோமானிய அரசு பெரும்படையுடன் புறப்பட்டு வந்து இஸ்ரேலை துவம்சம் செய்தது. தங்கள் கனவு தேசத்தைப் பற்றி பேசக்கூட ஒருவரும் இல்லாமல் ஜுதேயாவைவிட்டும் யூதர்கள் துடைத்தெறியப்பட்டனர். சுமார் 580000 பேர் கொன்று குவிக்கப்பட்டனர். ஐயோ இப்படி அநியாயமாக சாகிறோமே என்று அரற்றக் கூட ஒருவரும் இல்லாமல் ஒரு பெரும் இன அழிப்பு நடந்து முடிந்து போனது.

யூதர்களின் சுயநலம்

ஒரு யூதன்தான் இயேசு கிருஸ்துவைக் காட்டிக் கொடுத்தான் என்ற ஒற்றைக் காரணம் கிருத்துவத்தின் யூத வெறுப்புக்குப் போதுமானதாக இருந்தது. மகா கான்ஸ்டன்டைன் (கிபி 306 – 337) காலம் தொடங்கி இரண்டாம் உலகப் போர் வரை ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து யூதர்கள் தொடர்ந்து வதைக்கப்பட்டனர். நிர்தாட்சண்யமின்றி வெளியேற்றப் பட்டனர். இந்த தீவிர வெறுப்பிற்கான முக்கியமான காரணம் யூதர்களின் சுயநலமும் சூழ்ச்சித் திட்டங்களும்தான். தன் இனத்துக்கு நன்மை என்றால் எதையும் செய்யத் தயாராக இருந்தனர் யூதர்கள். தாங்கள் வசிக்கும் நாட்டிற்கு எதிரான கலகங்களுக்கும் ரகசிய திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினர். அவர்களின் ஒற்றை இலக்கு தங்களின் கனவு தேசத்தைக் கட்டமைப்பது என்பது மட்டுமே. யூதர்களின் இந்த நடத்தை குறித்து 1844ல் பேசிய கார்ல் மார்க்ஸ், “யூதர்களின் உலகாயத மைய நோக்க வழிபாட்டு மரபு என்னவாக இருக்கிறது? பணம்… பணம் அது ஒன்றே இஸ்ரேலின் பொறாமை பிடித்த கடவுளாக இருக்கிறார்” என்று கூறினார். யூதர்கள் வாழப்புகுந்த உலகின் எந்த பகுதியாக இருந்தாலும் சரியே. தங்களுக்கான நாடு வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக அவர்கள் எந்த ஆட்சியையும் கவிழ்க்கத் தயாராக இருந்தனர். சதி வேலைகளில் தயங்காமல் ஈடுபட்டனர். கலிபா உமர் காலத்திலிருந்து பல இஸ்லாமிய ஆட்சியாளர்கள் யூதர்களுக்கு அனுசரணையாக நடந்த போதும் – மறுபக்கம் கிருத்துவர்கள் இவர்களை ஓட ஓட விரட்டி அடித்த போதும் – சிலுவைப் போர்களில் வெற்று பார்வையாளர்களாகவே இருந்தனர். தப்பித்தவறியும் முஸ்லிம்கள் பக்கம் நிற்கவே இல்லை. போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு தேசங்களை விட்டும் துரத்தப்பட்டு அகதிகளாக அலைந்த யூதர்களுக்கு பதினாறாம் நூற்றாண்டில் அடைக்கலம் தரும் இடமாக துருக்கிப் பேரரசு விளங்கியது. ஆனால்  பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ரஷ்யாவின் ஜார் மன்னன் போத்தம்கின் யூதர்கள் ரஷ்யாவில் வந்து குடியேறலாம் என்று சொன்னவுடன், அவன் ஆரம்பித்த இஸ்ரேலவ்ஸ்கி என்ற படைப் பிரிவில் ஆர்வத்தோடு இணைந்து துருக்கியை எதிர்த்து நின்றனர். அதே ஜார் மன்னர்களுக்கு எதிராக கம்யூனிஸ்ட்கள் கிளர்ந்தெழுந்தவுடன் புரட்சிப் படையினரோடு தம்மை இணைத்துக் கொண்டனர் யூதர்கள்.

இயல்பாக யூதர்களிடம் இருந்த உயர்நவிற்சி அகம்பாவம் பிறருக்கு அவர்கள் மீது எக்காலத்திலும் நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. மகா கான்ஸ்டன்டைன் யூதர்கள் குறித்து இப்படி அறிவிக்கிறான். ”இவர்களின் கரங்கள் இரத்தத்தில் தோய்ந்து கிடக்கிறது. கேடுகெட்ட இவர்களின் உள்ளங்கள் குருடாகிக் கிடக்கின்றன. அதனால் இந்த யூதர்களுக்கும் நமக்கும் இடையே பொதுவான அம்சங்கள் எதுவும் இருக்க வேண்டியதில்லை. அவர்கள் நமக்கு பகிரங்க விரோதிகள்.”  அதே போல் 1543 ஆம் ஆண்டு மார்ட்டின் லூதர் கிங் வெளியிட்ட  On the Jews & their Lies எனும் அறிவிக்கையில் யூதர்களை இழிந்த, முறைதவறிய மக்கள் என்றும் அவர்கள் கடவுளின் மக்களே அல்லர் என்றும் கடுமையாக சாடி, தற்பெருமை பேசி தலைதருக்கித் திரியும் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று 11 அத்தியாயங்களில் கடுமையாக அர்ச்சித்திருந்தார். இந்த பிரத்தியேக குணத்தை எப்போதும் மாற்றிக் கொள்ளாமல் தான் வரலாற்று  அவலங்களின் ஊடாக யூதர்கள் பயணித்து இருக்கிறார்கள். காலத்தின் கரடு முரடான பாதைகளில் பயணித்து யூதர்கள் 19ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்தபோது, நிம்மதியாக வாழ்வதற்கான இடம் ஏதும் இல்லாத கையறு நிலையில் தான் அவர்கள் இருந்தனர்.

  • தொடரும்

லியாகத் அலி – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *