தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) அறிவித்துள்ள குரூப்-2 தேர்வு மே மாதம் 21-ம் தேதி நடைப்பெற இருக்கின்றது. தேர்வுக்கு விண்ணப்பித்த போது முஸ்லிம் போட்டியாளர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயம் தமது மதத்தை முஸ்லிம் என்று தேர்வு செய்தவுடன் பிறப்பால் முஸ்லிமா அல்லது முஸ்லிமாக மதமாறியவரா என கேட்க்கப்பட்டது தான். பலரும் இந்த கேள்வி எதற்காக என குழம்பினர். வேறு சிலரோ முஸ்லிம்களுக்கு எதிராக ஏதோ ஒரு சதி வேலை TNPSC-ல் நடக்க வாய்ப்புள்ளதாக சமூகவளைத்தளங்களில் பரப்பினர். தேவையற்ற குழப்பங்களுக்கு வித்திட்ட இக்கேள்வி தொடர்பாக அரசு அதிகாரிகளோ வேறு விதமான விளக்கங்களை அளிக்கின்றனர்.

இந்திய அரசியலமைப்பின் படி ஒரு சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை சாதியின் அடிப்படையிலேயே தரமுடியும்(பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு இதுவரை ஏற்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும்). பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடும் (BC-Muslim) கூட முஸ்லிம் சமூகத்தில் பின்தங்கியிருக்கும் ‘ஏழு சாதியினருக்கே’ வழங்கப்பட்டுள்ளது. அவர்களை தவிர்த்த பிற சாதியினருக்கு இடஒதுக்கீடு கிடையாது. வேறு மதங்களிலிருந்து இஸ்லாத்திற்கு மதம் மாறுபவர்களுக்கு BCM- ஒதுக்கீட்டின் கீழ் இடஒதுக்கீடு கிடையாது. ஏனெனில் அவர்களை குறிப்பிடப்படிருக்கும் ஏழு சாதிகளில் ஒன்றாக சேர்க்க இயலாது.! பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் முடிவாகவும் அரசின் அரசாணைகளின் வழியாகவும் பிறப்பால் குறிப்பிட்ட ஏழு சாதிகளில் பிறந்த முஸ்லிம்களுக்கு மட்டுமே BCM பிரிவில் இடஒதுக்கீடு சாத்தியம்.

ஒருவர் ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதியிலிருந்தோ(SC), பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்தோ(BC) அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியிலிருந்தோ (MBC), இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமாக மாறினால் அவர் தமது பிறப்பின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டு உரிமையை இழப்பதுடன் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீட்டின் கீழும் எந்த பலனையும் அனுபவிக்க முடியாது. இவ்வாறு மதம் மாறியவர்கள் பொது பிரிவிலேயே(OC-General) போட்டி போட முடியும் என்று விவரிக்கின்றனர் அதிகாரிகள். இடஒதுக்கீட்டு பலனை முடிவு செய்வதற்கே முஸ்லிமாக இருப்பவர்களை பிறப்பினால் முஸ்லிமா அல்லது மதம் மாறியதால் முஸ்லிமா என்று TNPSC கேட்பதாகவும் காரணம் கூறப்படுகிறது.

பெரும்பாலானா தேர்வுகளுக்கு பொது பிரிவினருக்கான வயதுவரம்பு 30-32 ஆக இருக்கின்றது. ஆனால் இந்த வயதுவரம்பிலிருந்து இடஒதுக்கீட்டின் கீழ் வரும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதியினருக்கு விலக்கு அளிக்கப்படுகின்றது.இவர்கள் வயதுவரம்பு ஏதுமின்றி போட்டித் தேர்வுகளை எழுத முடியும். முஸ்லிமாக மாறும் ஒருவர்
எத்தகைய சமூக சூழலிருந்து பிறந்து வளர்ந்திருப்பினும் அவர் முஸ்லிமாக மதம் மாறிய ஒரே காரணத்தினால் அவரது சமூக-அரசியல் உரிமை பறிக்கப்படுகிறது. இடஒதுக்கீடும் வயதுவரம்பின்மையும் மறுக்கப்படுக்கப்படுவது கொஞ்சமும் நியாயமற்றது,அநீதமானது. மேலும் இது முஸ்லிம்களாக மாற விரும்புவோரை மறைமுகமாக அச்சுறுத்தி அவர்களுக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும் மதச்சுதந்திர உரிமையை பறிக்கவும் செய்கிறது. சமத்துவம் சமூக நீதி போன்ற கோட்பாடுகளை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் முஸ்லிமாக மதம் மாறியவர்களுக்கு எதிரான இத்தகைய பாரபட்சமான போக்குகள் உடனடியாக களையப்பட வேண்டும்.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியிருப்பினும் முஸ்லிம்கள் அரசு துறைகளில் மிகவும் சொற்ப விகிதத்திலேயே பணியமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாட்டில் 3.5% விழுக்காடு இடஒதுக்கீடு பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருந்தாலும் முஸ்லிம்களுக்கு முழுமையான நீதியை அது பெற்றுத்தரவில்லை. இதனை கருத்தில் கொண்டே முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வருவதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். இத்துடன் புதிதாக முஸ்லிம்களாக மதம் மாறுபவர்களுக்கு இழைக்கப்படும் இடஒதுக்கீடு மறுப்பையும் சேர்த்து தீர்வு காண்பது அவசியமாகிறது. புதிய முஸ்லிம் தேர்வர்களை இடஒதுக்கீட்டின் பெயரால் தொடர்ந்து அச்சுறுத்தும் போக்கு தமிழகத்திலிருந்து மறைய வேண்டும். திமுக அரசு இதில் உடனடியாக தீர்வு காண முனைய வேண்டும்.

முஸ்லிம்களாக மதம் மாறுபவர்களை ஏற்கனவே முஸ்லிம்களுக்கு வழங்கப்படிருக்கும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்(BCM) இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டு வருவதும் முஸ்லிம்களின் ஏழு பிரிவினரோடு எட்டாம் பிரிவாக முஸ்லிமாக மாறியவர்ளையும் (Converted Muslims) சேர்த்து இடஒதுக்கீட்டு பட்டியலை திருத்துவதே நியாயமாகும். இவற்றை சாத்தியப்படுத்த முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 3.5% சதவீதத்திலிருந்து 4% சதவீதமாக உடனடியாக உயர்த்த வேண்டும். சமத்துவத்தையும் சமூகநீதியையும் காப்பதற்கு இதுவே பொருத்தமான வழி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *