அரசியல் என்பது சமூகங்களின் இயங்கியலோடு தொடர்புடைய அன்றாட நடைமுறை. சமூகக் குழுக்கள் வளங்களைத் தங்களுக்குள் நியாயமாக பங்கிட்டுக் கொள்ள மேற்கொள்ளும் இடையறாத செயல்பாடுகளே அரசியலாகிறது. நிறுவனப்படுத்தப்பட்ட அமைவனங்களின் மூலம் மக்கள் குழுக்கள் தங்களின் வேறுபாடுகளை சரிசெய்து கொள்ளும் முனைப்பே அரசியல் வடிவம் என்கிறார் அரசியல் கோட்பாட்டாளர் பெர்னார்ட் கிரிக். சமூகங்களுக்கிடையில் உள்ளும் புறமுமாக எழுச்சி பெறும் கூட்டு முயற்சிகள்,  உடன்பாடுகள் மற்றும் முரண்பாடுகள் உள்ளிட்டவையே அரசியல் என்பார் செயல்பாட்டாளர் அத்ரியன் லெப்ட்விட்ச். எனவே மக்கள் குழுக்களின்  முடிவெடுக்கும் முறைமையே அரசியல் என்றாகிறது. சமூகக் குழுக்களின் அபிலாஷைகளுக்கும் உராய்வுகளுக்கும் ஊடாக நடக்கும் இந்த அரசியல், குறிப்பிட்ட இன, மத, நிற, பாலின, வர்க்க அடையாளத்தை முன்னிறுத்தி நடந்தால் அது அடையாள அரசியல் எனப்படுகிறது.

இந்த சொல்லாடல் 1977 ஆம் ஆண்டு  Combahee River Collective என்ற கருப்பின பெண்கள் குழுவினரால் புழக்கத்துக்கு வந்தது. 80களில் பல்வேறு குழுக்கள் தங்கள் அடையாளங்களை முன்வைத்து தங்களுக்கான அரசியலை உரக்கப்பேச ஆரம்பித்தனர். கறுப்பர்கள், மத மொழி சிறுபான்மையினர், பெண்ணியவாதிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என பல்வேறு பிரிவினர் தங்களுக்கான அரசியலைப் பேசி இருக்கின்றனர். தங்களுக்கு எதிராக என்னவிதமான அரசியல் முன்னெடுக்கப்படுகிறதோ அதற்கு எதிர்வினை ஆற்றுவதைத் தவிர இந்த சிறுபான்மைக் குழுக்களுக்கு வேறு அரசியல் சுதந்திரம் இல்லை. அப்படி பேசும் பொழுதெல்லாம்நீங்கள் இப்படி உங்கள் தனி அடையாளத்தோடு உரிமை கோருவதால் தான் பெரும்பான்மையினர் செல்வாக்கு பெறுகின்றனர். அவர்களின் மேலாதிக்கவாதம் வலுப்பெறுகின்றதுஎன்று யாரும் பேசுவதில்லை. உதாரணமாக கருப்பர்கள் தங்கள் நிற அடையாளத்தோடு அரசியல் செய்தால் அது வெள்ளை அணி திரட்டலை இலகுவாக்குகிறது என்ற குரல் எழுவதில்லை. அவர்கள் நிறவெறி மைய அரசியலிலேயே வீழ்ந்து கிடப்பதாக யாரும் குற்றம் சாட்டுவதில்லை. ஆனால் இந்தியாவில் முஸ்லிம் மற்றும் தலித். அணி சேர்க்கைகள் வேகம் பெறும்போது மட்டும் அது இந்துத்துவத்தை அரியணை ஏற்றுவதாக கதையாடுகிறார்கள். இதில் தற்போது தலித்களுக்கு ஓரு சில அரசியல் சுதந்திரம் இருப்பதாக தோற்றமளிக்கலாம். முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்படும் நிலை ஏற்பட்டால், தலித்களின் இந்த சுதந்திரம் பறிபோகும். முஸ்லிம்கள் குறிவைக்கப்படும் இன்றைய காலச் சூழலுக்கான சிறப்பு சலுகையாகவே தலித்களின் சொற்ப அரசியல் சுதந்திரங்களைப் பார்க்க வேண்டியள்ளது. அதனால்தான் தமிழகத்தில் கூட தலித் தலைவர்கள் பாஜகவுடன் உறவு கொள்கிறார்கள்.  

எந்த ஒரு சாராரின் இருப்பிற்கும் தினப்படி நடவடிக்கைகளுக்கும் எவையெல்லாம் சவாலாக அமைகிறதோ அதுவே அவர்களின் அரசியலாகவும் பரிணமிக்கிறது. அவ்வாறு பார்க்குமிடத்து முஸ்லிம் அரசியலுக்கு இங்கு தேர்வுகளே இல்லை. ஒரு பக்கம் அவர்கள் நகரவே முடியாத அளவுக்கு பெரும் பாதாளமாக இருக்கிறது. அந்த பக்கமாக அவர்களை நகர்த்துவது விதிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மறைமுகமாக நிர்பந்திப்பதற்கு சமமாகும். ஆகவே சொத்தையோ சொள்ளையோ மதச்சார்பற்ற கட்சிகளின் பின்னால் நகர வேண்டிய கட்டாயம் மட்டுமே முஸ்லிம்களுக்கு இருக்கிறது. அப்படிபட்ட மதச்சார்பற்ற கட்சிகள் எழுபதாண்டுகளுக்கு மேலாக இந்திய முஸ்லிம்களை நிர்க்கதியாய் நிறுத்தியிருக்கிறது என்றால் அந்த பழியையும் பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீதே சுமத்துவீர்களா? மதசார்பின்மையைக் காப்பது மட்டும் இங்கே முஸ்லிம்களின் மீது நேர்ந்து விடப்பட்ட கடமையல்ல. நேர்மையான காத்திரமான அரசியலும் முஸ்லிம்களுக்கு மட்டுமே பரிந்துரைக்கப் படுகிறது. மத சார்பற்ற கட்சிகளே மதரீதியான அணிதிரட்டல்களில் ஈடுபடும் போது எல்லா நிலைகளிலும் பலிகொள்ளப்படும் ஒரு சிறுபான்மை சமூகத்திற்கு தனது அடையாளத்தை கலைந்து அரசியல் செய்யும் சாத்தியங்கள் ஏதும் இருக்க முடியுமா?

முஸ்லிம் அரசியல் குறித்த பொதுவான வறட்டுத்தனமான பார்வை மட்டுமே இங்கு இருக்கிறது. சமீப காலமாக நிறைய பேர் முஸ்லிம்கள் மத மைய அரசியலை விட்டு வெளியில் வர வேண்டும் என்று அறிவுரைப்பவர்களாக இருக்கிறார்கள். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மதத்தைத் தூக்கிவைத்து நீ இப்படி நடந்துகி.. அதனாலத்தான் நீ இதையெல்லாம் இழந்துட்ட’ என்று முஸ்லிம்களின் இயலாமையை கேலி பேசுபவர்களாக இருக்கிறார்கள். அடையாள அரசியலை விட்டு விலகி, மைய அரசியலில் முற்றிலும் ஐக்கியமாவது சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானது என்பது சிலரின் சிந்தனாவாதம். கட்சி அரசியலையும் மக்கள் அரசியலையும் வேறுபடுத்திப் பார்க்காத மனநிலையின் எச்சம் இது. சிறுபான்மை சமூகங்களை அடையாள அரசியலைவிட்டு புறந் தள்ளும் முயற்சிகள் அனைத்தும் அவர்களைத் தின்று செரித்துவிடும் நோக்கங்களின் பாற்பட்டதே ஆகும். அப்படி வலுக்கட்டாயமாக அரசியலை விட்டு முஸ்லிம் சமூகத்தை விலக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், முஸ்லிம்களை மேலும் அடையாளங்களின் பால் உள்ளொடுங்கத்தான் செய்துள்ளன.  எந்த நாட்டிலும் ஒடுக்கப்பட்ட பிரிவினர் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்களாக (apolitical) ஆக இயங்க முடியாது. நடைமுறையில் சொல்வதெனில் /நமக்கு ஏன் வீண் பிரச்சினை? இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிடுவோம்/ என்கிற அளவில் தான் சிறுபான்மை இயங்கியலை இவர்கள் நகர்த்த முயற்சிக்கிறார்கள். அப்படியான அரசியல் நீக்கம் (apolitical) என்பதே மேலாதிக்க பெரும்பான்மைவாத அரசியலை ஏற்று சரணடைவது என்பதாகவே இருக்கும். கழுத்தை நெறிக்கும் பல பிரச்சினைகளில் கருத்தற்ற உள்ளுக்குள் முரண்படும் ஒரு சமூகமாக (ambivalent & warring) முஸ்லிம்களை வளர்த்தெடுப்பதே இதன் மறைமுக நோக்கம். சமதள வாய்ப்பில்லாத ஆடுகளத்தில் பாதுகாப்பின்மையும் சஞ்சலமும் தொடர்ந்து வாட்டி வதைத்தபோதும் இச்சமூகம் மனஉறுதியை இழக்காமல் தாக்குப்பிடித்து தனது அரசியலில் (தவறோசரியோ) ஓடிக்கொண்டே இருப்பது உண்மையில் ஆச்சரியமில்லையா?

முஸ்லிம் மைய அரசியலுக்கு பதிலியாக இவர்கள் தேசிய மைய நீரோட்டத்தை சுட்டுகிறார்கள். ஒன்றிய அளவில் தேசிய மைய நீரோட்டம் என்று சொல்லும்போது மாநில அளவில் மைய நீரோட்ட அரசியல் என்கிறார்கள். இதில் ஒரு சாதுர்யம் அப்பட்டமாக தெரியவரும். ஒரு காலத்தில் இங்கே முன்னெடுக்கப்பட்ட திராவிட அடையாள அரசியலே தேசியத்துக்கு எதிரானதுதான். தலித் அரசியல், மொழி அரசியல் எல்லாவற்றிற்கும் என்ன நியாயங்கள், உரிமைகள் இருக்கிறதோ அவையனைத்தும் அவற்றை விட கூடுதலாகவும் முஸ்லிம் அடையாள அரசியலுக்கு இருக்கின்றன என்பதை மறுதலித்து விட்டே மைய நீரோட்ட அரசியலை முஸ்லிம்களுக்கு பரிந்துரைக்கிறார்கள். இந்த மைய நீரோட்டத்தில் தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்ட கஷ்மீர் சிங்கம் ஷேக் அப்துல்லாவைத்தான் இங்கே நாம் உதாரணமாக காட்ட முடியும்.

 • ஷேக் அப்துல்லா 1937 ஆம் ஆண்டு நேருவை முதன்முதலாக சந்தித்தார்.. இருவரும் தத்தம் நாடுகள் (கவனிக்கவும்) சுதந்திரம் பெற வேண்டும் என்று ஷேக் அப்துல்லா மன்னர் ஹரிசிங்கையும் நேரு பிரிட்டிஷ் அரசை எதிர்த்தும் போராடியதால் இருவரும் நட்பு கொண்டனர்.. அரசியல் கூட்டாளிகள் ஆனார்கள்..
 • ஷேக் அப்துல்லா, மௌலவி அப்துர்ரஹீம் போன்றோருடன் இணைந்து 1932ல் தொடங்கிய முஸ்லிம் மாநாட்டு கட்சியை, நேரு போன்றோரின் ஆலோசனையின் பேரில் மத அடையாளத்தைத் துறந்து தேசிய மாநாட்டுக் கட்சிஎன்று 1938ல் கட்சியினரின் ஒருமித்த ஆதரவுடன் பெயர் மாற்றம் செய்து அறிவித்தார்.
 • ஷேக் அப்துல்லா தனது முஸ்லிம் அல்லாத நண்பர்களான காஷ்யப் பந்து, ஜியா லால் கிலாம், பண்டிட் சுதாமா சித்தா, பிரேம்நாத் போன்றோருடன் இணைந்து இந்து – முஸ்லிம் – சீக்கிய காஷ்மீரிகளுக்கான தேசிய கோரிக்கைகளை வரைவு செய்தார். இதுவே பிற்காலத்திய நயா காஷ்மீர் பிரகடனத்திற்கான முன்னோடியாக விளங்கியது..
 • 1946ல் ஷேக் அப்துல்லா மன்னர் ஹரிசிங்கை எதிர்த்து “காஷ்மீரை விட்டு வெளியேறு” போராட்டத்தை முன்னெடுத்து கைதானார்.
 • 1947 அக்டோபரில் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்ட இந்தியாவுடனான இணைப்பு சாசனத்தை மதச்சார்பற்ற நாடு என்ற ஒற்றை காரணத்திற்காகவே வரவேற்றார்.
 • பிரிவினை சமயத்தில் தனது நெருங்கிய நண்பரான சாதிக் சாஹிபை பாகிஸ்தானுக்கு அனுப்பி அதன் நாடித்துடிப்பைப் பார்த்தார். பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய அரசாக அமையும் என்பது தெரிந்தவுடன், தனது மதச்சார்பின்மை கொள்கைக்கு ஒவ்வாத எந்த சமரசத்துக்கும் இடங்கொடாமல் இந்தியாவின் பக்கம் சாய்ந்தார்.
 • 1948ல் ஐநா காஷ்மீரை சர்ச்சைக்குரிய பிரதேசமாக ஏற்று அதன் தீர்வு இந்தியா – பாகிஸ்தான் – காஷ்மீர் என்ற முத்தரப்பையும் சார்ந்தது என்பதை வலியுறுத்தி நிறைவேற்றிய தீர்மானத்தை இந்தியா ஏற்றுக் கொண்டதால், இந்த பிரச்சினையை முடிந்தளவு காலங் கடத்த வேண்டும் என்பதே இந்தியாவுக்கு இருந்த ஒரே வழி.. அதற்கு நேருவின் நெருங்கிய நண்பரான ஷேக் அப்துல்லாவை விட பொருத்தமான நபர் வேறு ஒருவரும் இல்லை.. ஷேக்கும் அதனை செவ்வனே செய்து முடித்தார்.
 • இந்திய அரசு காஷ்மீருக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி தனது அதிகாரத்தை எதேச்சையாக நிறுவிக் கொண்டே சென்றதை எதிர்த்த போது, அவருடைய அரசு பெரும்பான்மையை இழந்தது என்று காரணங்காட்டி, பலத்தை நிரூபிக்க எந்த வாய்ப்பும் தராமல் அன்றைய சத்ர் -இ- ரியாசத் கரண்சிங் அவர்களால் பதவி நீக்கம் செய்யப்பட்டு 1953 ஆம் ஆண்டு கைதாகி 11 ஆண்டுகள் கொடைக்கானல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 • மைய அரசின் விருப்பத்தின் பேரில் மகாராஜா ஹரிசிங்கின் புதல்வரான டாக்டர் கரண்சிங்கையே சத்ர் – இ – ரியாசத்தாக (காஷ்மீரின் ஜனாதிபதி) பதவி வகிக்க ஒப்புக் கொண்டார்.. ஆனால் அவர் நேரு அரசின் கையாளாக மாறி ஷேக்கின் கழுத்தையறுத்தார்..
 • அவரைத் தொடர்ந்து சிறையில் வைத்திருப்பதற்காக அவரது நீண்ட நாளைய நண்பர் நேரு ஜோடிக்கப்பட்ட காஷ்மீர் சதி வழக்கை 1958ல் அவர் மீது ஏவி, வழக்கில் விசாரணை ஏதும் நடத்தாமல் ஒரு கட்டத்தில் வழக்கை நல்லெண்ணநடவடிக்கையாக கைவிட்டார்.
 • விடுதலைக்கு பின் மீண்டும் முதலமைச்சராக வந்த ஷேக் அப்துல்லாவை பாகிஸ்தான் அதிபர் அய்யூப் கானுடனான பேச்சுவார்த்தைக்கு தூதுவராக நேரு அனுப்பிவைத்தார். இதையும் மனமுவந்து ஏற்று பாகிஸ்தான் சென்று அய்யூப்கானுடன் இந்திய நலனை முன்வைத்து பேசினார் ஷேக்.
 • வங்கதேச போருக்குப் பிறகு காஷ்மீரில் தொடர்ந்து அமைதி நிலவ மைய அரசுடன் ஒத்துப் போவதே சரியாக இருக்கும் என்று பல சமரசங்கள் செய்து கொண்டார்.
 • பொம்மை அரசுகள் இல்லாமல் தன்னாட்சிப் பெற்ற மாநில அரசு அமைவதற்காக காஷ்மீர் மக்களின் முக்கிய உரிமையான மக்கள் கருத்துக் கேட்புஎன்பதையும் இந்திராவுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் கைவிட்டார். அதற்காக காஷ்மீரில் எள்ளி நகையாடப்பட்டார்.
 • ந்திய அரசை திருப்திப்படுத்த காஷ்மீர் அரசுக்கு அளவற்ற அதிகாரம் கொடுக்கும் பல சட்டங்கள் தொடர்வதற்கும் புதிய சட்டங்களைப் பிறப்பிப்பதற்கும் வழி வகுத்தார். அப்படி 1978ல் மரக் கடத்தலைத் தடுக்க அவர் பிறப்பித்த காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் அவரது மகனும் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவருமான பரூக் அப்துல்லாவை காலக் கிரகத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறது மோடி அரசு..

இது எல்லாமே காலம் முழுவதும் மைய அரசு நலனில் பக்கமே நின்ற ஒரு குடும்பத்திற்கான பரிசாகவே இந்திய வல்லாண்மை அரசு கொடுத்திருக்கிறது. மைய நீரோட்ட முஸ்லிம்களையும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் நிறுத்தி, சனநாயக சில்லறைகளை இந்திய ஆதிக்க அரசு தூக்கி வீசுகிறது.. வட்டத்துக்குள் விழும் சில்லறைகள் எல்லாமே முஸ்லிமுக்குத்தான்.. அதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக  உய்யலாலா பாடிக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் தேசிய நீரோட்ட சிறைக் கதவுகள் அவர்களை வாஞ்சையோடு அரவணைத்துக் கொள்ளும் என்பதுதான் முஸ்லிம்களைப் பொறுத்தவரை மைய அரசியல். இதற்கு கமலஹாசனின் மையம் எவ்வளவோ தேவலாம்.

முஸ்லிம் அரசியலை நீங்கள் ஏற்கிறீர்கள் – மறுக்கிறீர்கள் என்பது வேறு விசயம்.. ஆனால் முஸ்லிம் அரசியலின் போக்கை அறிந்து கொள்வது விளிம்பு நிலை மக்களின் அரசியலை சரியாகப் புரிந்திட வழிவகுக்கும். சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல், “முஸ்லிம்கள் தங்கள் பாத்தியதையைப் பெற்றுக் கொண்டார்கள். இனி அவர்கள்  உரிமைக் கோருவதற்கு ஏதுமில்லைஎன்று இந்த மத அரசியலை ஆரம்பித்து வைத்தார். அன்றிலிருந்து இந்தியா தான் தங்கள் நாடு என்று முடிவுசெய்த முஸ்லிம்களின் ஒரு குறிப்பிட்ட சதமானத்தினரை சந்தேகத்தோடு பார்த்த்தைத் தவிர இந்த தேசம் வேறு என்ன அரசியலை அவர்கள் மீது திணித்திருக்கிறதுநியாயம் பேசும் பாவனையில் ஒவ்வொரு குழுவாக அரசியல் நீக்கம் செய்ய எத்தனிக்கும்  கொடுங்கரங்களை எதிர்கொள்ளும் மக்கள் அரசியலைப் பேசாமல், உவைஸி போன்றவர்களைத் தூற்றுவதன் மூலமே நாம் அரசியல் இளைப்பாறலாம் என்ற எண்ணங்கொண்டாலும் அதுவும் அவரவர் விருப்பமே! ஆனால் இந்திய முஸ்லிம் அரசியலின் திசை மாற்றங்கள் நுட்பமான வரலாறாக நம் கண்முன்னே நிற்கிறது. இந்தியாவில் அதிகமாக அரசியல்பட்ட சமூகம் முஸ்லிம் சமூம். அதனை நேர்மையாக  அலசியிருக்கும் சேகர் குப்தாவின் ஒரு கட்டுரையில். இருக்கும் சில முக்கியமான புள்ளிகளைக் கோடிட்டு இதை நிறைவு செய்கிறேன்.

¶ இந்திய முஸ்லிம்கள் எந்த நாளிலும் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் தலைமையின் பின் அணிவகுக்கவில்லை..

¶ அவர்கள் மதச்சார்பற்ற தலைவர்களைத் தான் பெரிதும் விரும்பியிருக்கிறார்கள்.. பிரிவினை கசப்புகளுக்குப் பின் காங்கிரஸைத் தான் தங்களின் அரசியல் கேந்திரமாக தெரிவு செய்தனர்.

¶ காங்கிரஸின் தொடர் முஸ்லிம் துரோகங்கள் பாபர் மசூதி இடிப்பில் முழுமை அடைகிறது. அப்போதும் முலாயம், லல்லு, பாஸ்வான், நிதிஷ் போன்ற மதச்சார்பற்ற தலைவர்கள் பக்கம் தான் அவர்கள் சாய்கிறார்கள். அப்படி இல்லாத இடங்களில் காங்கிரஸுக்கே வாக்களிக்கிறார்கள். (உ.ம்: குஜராத், மகாராஷ்டிரா, அஸ்ஸாம்)

¶ இப்படி முஸ்லிம்கள் வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவை இக்கட்சிகள் சகாயமாக வழங்கப்பட்டதாகவே எடுத்துக் கொண்டன.. அப்படியே நடந்து கொண்டன. முஸ்லிம் நலன்களைப் பேணுவதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ளவே இல்லை.

¶ இந்த சூழ்நிலையில் அடையாள அரசியலை முன்னெடுத்து சிலர் வருகின்றனர். ஹைதராபாத்தின் உவைசி, அஸ்ஸாமின் பத்ருதீன் போன்றோர் இளைஞர்களை ஈர்க்கிறார்கள்.. முஸ்லிம் சமூகம் சத்திக்கும் பிரச்சினைகளின் பால் அவர்கள் முகங்கொடுக்கிறார்கள்.. ஆனாலும் இவர்கள் முதல் முறை தேர்தலில் நிற்கும்போதும் முஸ்லிம்கள் வாக்களிக்க வில்லை.. வைப்புத் தொகையை இழக்கிறார்கள்.. பிறகே இவர்கள் சமூகம் கவனம் கொள்கிறது. வெற்றி பெறுகிறார்கள்.. இந்த வெற்றி மதச்சார்பற்ற கட்சிகளாக கதைப் படித்துக் கொண்டிருந்தவர்களைக் கலக்கமடையச் செய்கிறது. அவர்கள் தூற்றத் தொடங்குகிறார்கள்.

¶ இப்போதும் முஸ்லிம் ஆதரவை எங்கு எப்படி நாம் இழந்தோம் என்ற சிந்தனைக்குள் போக அவர்கள் மறுக்கிறார்கள்.. மீண்டும் அதை தக்க வைக்க அவர்களுடன் கைகோர்க்க காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தயங்குகின்றன. அதன் மூலம் தாங்கள் இந்து விரோத கட்சிகளாக அடையாளம் காணப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் முடங்கிப் போகிறார்கள்..

¶ நீண்டநாள் காங்கிரஸோடு இருக்கும் முஸ்லிம் லீகோடு கூட தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள காங்கிரஸ் தயங்குகிறது. கேரளாவில் மட்டும்தான் முழுமையாக இணைத்துக் கொள்கிறது.. அதுவும் தென்கோடி மாநிலம் என்பதால் ஹிந்தி பிரதேசங்களில் அதன் வீச்சு இருக்காது என்ற நம்பிக்கையில்..

¶ ஒன்றை மட்டும் மதச்சார்பற்ற இயக்கங்கள் மறந்து போகிறார்கள்.. இவர்கள் என்னதான் தலையால் தண்ணி குடித்தாலும் பாஜகவைக் காட்டிலும் கூடுதல் இந்து கட்சியாக தங்களை நிறுவ முடியாது.. ஆனால் நிச்சயம் கூடுதல் மதச்சார்பற்ற சக்தியாக தம்மை கட்டமைக்க முடியும்..

செய்வார்களா என்பதுதான் கேள்வி.. செய்யாமல் முஸ்லிம்கள் மைய அரசியலுக்கு வராமல் போகிறார்கள் என்று பழி கூறுவது வெற்றுக் கூப்பாடு.. ஒருவர் மீது ஒருவர் குற்றம் சொல்ல வேண்டுமானால் தோதாக இருக்கும்.

கோட்டை கலீம் –  எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *