ஆயுதப்படை (சிறப்பு அதிகாரம்) சட்டத்தை (Armed Forces (Special Power) Act 1958- AFSA) வடகிழக்கு பகுதியில் இருந்து திரும்பப் பெறுவதற்காக எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் முயற்சிகள் வரவேற்புக்குரியது. அப்பகுதிகளில் நிலைமைகளை மேம்படுத்த அரசு எடுத்துவரும் முயற்சிகள் பலனளிக்கும் பட்சத்தில் இப்பகுதிகள்  முழுமையாகப் அஃப்சாவிலிருந்து விடுவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ‘பிரச்சினைக்குரிய பகுதிகள்’ என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் ஆயுதப்படைக்கு கட்டுப்பாடில்லாத அதிகாரத்தை அளிக்கும் அஃப்சா சட்டம் செயல்படுத்தப்பட்டதால் சொல்லணா அக்கிரமங்களும் மனித உரிமை மீறல்களும் அரங்கேறின. இதற்கு எதிராக பெரும் விமர்சனங்களும் எழுந்தன. ‘சட்டங்களுக்கு கட்டுப்படாத சட்டம்’ என குறிப்பிடப்பட்ட அஃப்சா சட்டத்தை திரும்ப பெற பலமுறை முயற்சிகள் நடந்த போதிலும் ராணுவத்தில் உள்ள லாபிகளும், அரசியல் தலைமைகளின் சுயநல விருப்பங்களுமே இதற்கு  இதுவரை பெரும் தடையாக இருந்தது. நான்கு மாதங்களுக்கு முன்பு நாகாலாந்தில் லோன் மாவட்டத்தில் ராணுவத்தால் 15 பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட நிகழ்வு பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகள் என தவறாக எண்ணியதன் காரணத்தினால் இப்படுகொலை நிகழ்ந்து விட்டது என  அதிகார வட்டத்தால் இதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. ஆயுதப் படையின் வரலாற்றில் இது ஒன்றும் புதிய நிகழ்வு அல்ல. பிரிவினைவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் என்ற பெயரில் குற்றவாளிகளை விட பொதுமக்கள்தான் ஆயுதப் படையால் அதிகமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதி கொடூரமான சித்திரவதை கதைகளும் வெளியாகி உள்ளன. நாகாலாந்தின் மலைப்பிரதேசங்களில் உருவான பிரிவினைவாதத்தை தடுப்பதற்காக  என்ற பெயரிலே, குறுகிய கால பயன்பாட்டிற்கு மட்டுமே என்று சொல்லப்பட்டு உருவாக்கப்பட்ட அஃப்சா சட்டம், அதன் பிறகு அறுபத்தி நான்கு ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி அருணாச்சல் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், திரிபுரா உள்ளிட்ட பிற வடகிழக்கு மாநிலங்களிலும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் இச்சட்டம் பரவலாக்கப்பட்டதைத்தான் நாம் பார்த்தோம். தாங்கள் விரும்பியது போல கைது செய்வது, கொடுமைப்படுத்துவது, பாலியல் வன்புணர்வு செய்வது, கொலை செய்வது, வாரண்ட் இல்லாமல் வீடுகளுக்குள் தேடுதல் வேட்டை நடத்துவது, சொத்துக்களை சேதப்படுத்துவது என்று எண்ணிலடங்கா குற்றங்களை இந்திய ராணுவ வீரர்கள் நடத்தியதாக அறிக்கைகள் வெளியான பிறகும் மேற்படி சட்டத்தின் பாதுகாப்பில் பெரும்பான்மையானவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். அரசியல்  ஆலோசனைகளின் அடிப்படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக,   இராணுவ பலத்தை அரசு நம்பியதன் விளைவுதான் இவ்வாறான கொடூரங்கள் அரங்கேரிங்கியது.

1994 இல் பஞ்சாபிலிருந்து அஃப்சா சட்டம் திரும்பப் பெறப் பெற்றது. ஆனால் மற்ற இடங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. இச்சட்டத்தின் மூலம் காஷ்மீரில் பிரச்சினைகள் மென்மேலும் அதிகரித்துக் கொண்டேதான் சென்றது. அஃப்சா சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ‘பிரச்சினைக்குரிய பகுதிகள்’ என அரசு அறிவிக்கையை வெளியிட்டால் அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது என்பதுதான் நிலைமை. இராணுவ வீரர்கள் பொதுமக்களை கொலை செய்தால் கூட ஒன்றிய அரசின் எழுத்து மூலமான அனுமதி இல்லாமல் ராணுவத்தில் உள்ள குற்றவாளிகளுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாது என்பதும் இச்சட்டத்தில் உள்ள மோசமான பிரிவாகும். அஃப்சா சட்டத்திலுள்ள  பிரிவு 4A அமைப்புச் சட்டம் நமக்கு அளித்துள்ள உயிர் வாழும் அதிகாரத்தை பறிக்கிறது.  இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்த நாட்டின் குடிமக்களுக்கு அளித்துள்ள சுதந்திரம், பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளை இச்சட்டத்தின் பிரிவு 4சி அபகரிக்கிறது.  நவீன ஜனநாயக சமூகத்திற்கு ஒத்துவராத, இச்சட்டத்தில் உள்ள கொடுமையான பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புகள் உண்டு என இச்சட்டம் உருவாக்கப்படும் நேரத்திலேயே பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனித உரிமை அமைப்புகளும் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை செய்தனர். அஃப்சா சட்டத்தின் கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் அந்த எச்சரிக்கைகள் நிஜமானதை இந்தியா பார்த்தது. போலி என்கவுண்டர்கள், குடிமக்களை கடத்திக் கொண்டு போய் ‘காணாமல் ஆக்குவது’, பாதி விதவைகள், கன்னித் தாய்கள்  போன்ற சொல்லாடல்கள் அரச பயங்கரவாதத்தின் பட்டியலில் நிரந்தரமாக இடம் பிடித்தது. மணிப்பூரில் உருவாக்கப்பட்ட சட்டவிரோதமாக கொலை செய்யப்பட்ட குடும்பங்களின் அமைப்பு ( Extra Judicial Execution Victim Families Association Manipur – EEVFAM) உச்சநீதிமன்றத்தில் அளித்த மனுவில் ராணுவ வீரர்கள் கொலை செய்த 1528 நபர்களை குறித்த பட்டியல் அளிக்கப்பட்டது. இதைக் குறித்து ஆய்வு செய்வதற்காக உச்சநீதிமன்றம் நியமித்த ஆணையம் பலியானவர்களில் யாரும் குற்றப் பின்னணி உள்ளவர்கள் இல்லை என கண்டறிந்தனர். அஃப்சா சட்டத்தின் பயங்கரவாத வரலாற்றில் ஒரு சிறு குறிப்பு மட்டுமே இது.

எல்லையற்ற அதிகாரத்திற்கும், நீதி நியாயங்களை மீறுவதற்கும் ஒன்றிய அரசு சுயமே அணிந்து கொண்ட மக்கள் விரோத ஆயுதம்தான் அஃப்சா சட்டம். நாகாலாந்து, மணிப்பூர், அசாம் போன்ற மாநிலங்களில் உள்ள சில பகுதிகள் இப்போது இச்சட்டத்தின் எல்லையில் இருந்து விடுவிக்கப்படும் என்பது சற்று நிம்மதி அளிக்கக்கூடிய விஷயம் தான். ஆனால், காஷ்மீர் உள்பட  அனைத்து பகுதிகளும் இச்சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். சிறிய அளவில் அல்ல, முழுமையாகவே இச்சட்டம் திரும்பப்பெற வேண்டும். அதுதான் இந்த நாட்டின் குடிமக்களுக்கு அரசு அளிக்கும் நீதியாக இருக்கும்.  பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜனநாயக அடிப்படையிலான ஆலோசனைகளும்   உள்ளூர்வாசிகள் உடனான கருத்தியல் பரிமாற்றங்களும்தான் தேவை. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் பொதுமக்களின் உயிருக்கும் உரிமைகளுக்கும் உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும். இதுவரை எழுந்துள்ள புகார்கள் குறித்து விசாரிக்க நீதிமன்ற  விசாரணை ஆணையம் அமைத்து மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டும். சொந்த குடிமக்களிடம்  ராணுவ பலத்தின் மூலம் பேசுவது என்ற இழிவான நிலைமை ஒருபோதும் நாட்டில் உருவாகக் கூடாது. அஃப்சா சட்டத்தை அரசு முழுமையாக திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *