திங்கட்கிழமை 4.1.21 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வி. “மூன்று சட்டங்களின் ஒவ்வொரு பிரிவையும் எடுத்துக்கொண்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்” என்று கேட்டிருக்கிறது மோடி அரசு.

“சட்டங்களைத் திரும்பப் பெறுவதைத் தவிர வேறு எதையும் நாங்கள் பேசத்தயாரில்லை” என்று பதிலளித்து விட்டனர் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்.

“கானூன் வாப்ஸி நஹி தோ, கர் வாப்ஸி நஹி” சட்டத்தை திரும்ப் பெறவில்லை என்றால் வீடு திரும்புவதும் இல்லை என்று மோடி அரசின் முகத்தில் அடித்திருக்கிறார்கள் விவசாயிகள்.

ஒவ்வொரு 16 மணி நேரமும் திக்ரி – சிங்கு எல்லையில் ஒரு விவசாயி இறந்து கொண்டிருக்கிறார். இதுவரை 60 பேர் இறந்திருக்கின்றனர். குளிர், மழை… எனினும் அவர்கள் பணிய மறுத்து எதிர்த்து நிற்கிறார்கள்.

6 ஆம் தேதி டிராக்டர் பேரணி. குடியரசு தினத்தன்று தில்லி நோக்கி டிராக்டர் பேரணி. 6 முதல் 26 வரை நாடு முழுவதும் விவசாயிகள் பேரணிகள் என்று போராட்டங்களை அறிவித்திருக்கின்றனர்.

இந்திய வரலாறு இதுவரை கண்டிராத இந்த மாபெரும் விவசாயிகள் போராட்டத்தின் களத்துக்கு நேரில் சென்ற அனுபவத்தை இங்கே பதிவு செய்கிறோம்.

வாருங்கள், திக்ரி – சிங்கு போராட்டக் களத்துக்கு !

*

மோடி அமித்ஷா கூட்டணியை அம்பலப்படுத்துகிறார் ஒரு விவசாயி
“இன்னும் எத்தனை நாட்கள் இங்கேயே இருந்து விட முடியும் உங்களால்?”

“நாங்கள் ஜெயிக்கும் வரை இங்கேயே தான் இருப்போம். எங்கள் முற்றுகை அதுவரை தொடரும்”

“அரசு பின்வாங்கும் அறிகுறியே இல்லையே? ஒருவேளை இராணுவத்தைக் கூட அனுப்பலாம். அல்லது உங்களை இங்கே வைத்து சோர்வாக்கி நீர்த்துப் போகச் செய்யலாம்..”

“இராணுவம் வந்தாலும் நாங்கள் பின் வாங்க மாட்டோம். சோர்வடைவது என்கிற
பேச்சுக்கே இடமில்லை. இது எங்களுக்கு வாழ்வா சாவா பிரச்சினை”

“அரசிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போகலாமே?”

“அந்தப் பேச்சுக்கே இடமில்லை”

இவை ஒன்றிரண்டு நபர்களிடமோ, சங்கத் தலைவர்களிடமோ கேட்டுப் பெற்ற விடைகள் அல்ல; ஏறத்தாழ அங்கே போராடிக் கொண்டிருக்கும் எல்லோரது பதில்களும் இவ்வாறாகவே இருந்தன.

நாங்கள் திக்ரி எல்லையில் இருந்தோம். எலும்பை ஊடுருவி இரத்தத்தை உறைய வைக்கும் தில்லியின் டிசம்பர் மாதக் குளிர், அந்த மக்களின் உறுதியை சற்றும் குலைக்கவில்லை. போதுமான கழிவறைகள் இல்லை; விரும்பிய உணவு கிடைக்காது – லங்காரில் எல்லோருக்கும் கிடைக்கும் அதே எளிய உணவு தான்; இரவு நேரங்களில் தற்காலிக கூடாரங்களின் இடுக்குகள் வழியே நுழையும் குளிர் காற்று உறக்கத்தைக் கலைக்கிறது; பகல் நேரங்களில் எல்லோரின் கண்களிலும் உறக்கமின்மையின் சோர்வு; ஊரிலோ ஆயிரம் பிரச்சினைகள்; என்றாலும் வென்றே தீர்வது என்கிற அந்த மக்களின் வேட்கையின் முன், அனைத்து பிரச்சினைகளும் நொறுங்கிச் சரிகின்றன.

புழுதி – பளபளப்பு – தில்லி

தில்லியையும் ஹரியாணாவையும் இணைக்கும் பிராதான சாலைகளில் ஒன்று தில்லி – ரோஹ்தக் நெஞ்சாலை. தில்லி இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவில் தில்லி- ரோஹ்தக் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திக்ரி எல்லை. மெட்ரோவின் பச்சை வழித் தடம் இதே நெடுஞ்சாலைக்கு மேலே ஓடிக் கொண்டிருக்கிறது. தில்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் நடத்தி வரும் போராட்டக் களங்களில் ஒன்று திக்ரி எல்லை.

பீஜிங் உள்ளிட்ட சர்வதேச தலைநகரங்களோடு போட்டியில் இறங்கியிருப்பதாக பாஜக வினரால் சொல்லிக்கொள்ளப்படும் இந்தியத் தலைநகர் தில்லி மாநகரம், தன் மீது மெட்ரோ உள்ளிட்ட மேக்கப்புகளை அள்ளிப் பூசியிருக்கிறது. நாங்கள் பயணம் செய்த சாலைகள் அனைத்திலும் இருமருங்கிலும், புழுதி. மரங்களின் இலைகளில் பச்சை நிறத்தைக் காண முடியாமல் புழுதி. கொரோனா இல்லையென்றாலும் முகக்கவசம் அணிய வைக்கும் புழுதி.

ரோஹ்தக் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது படர்ந்திருக்கும் புழுதிக் காற்றினுள் கண்களை தீட்டிப் பார்த்தால், சிதிலமான கட்டிடங்களும் நவீன மோஸ்தரிலான கட்டிடங்களும் மாறி மாறிக் கடந்து போவதைப் பார்க்க முடியும். இல்லாமையின் முன் கண்களைக் கூசச் செய்யும் பணக்காரத்திமிர், தில்லியின் அடையாளங்களில் ஒன்று. ஆரம்பத்தில் அருவெருப்பாக தெரியும் – போகப்போக அருவெருப்பின் அடர்த்தி அதிகரித்துக் கொஞ்சம் மரத்தும் போய்விடும்.

இந்தி தெரியாவிட்டாலும் கூட திக்ரி எல்லை மெட்ரோ இரயில் நிலையத்தைக் கண்டு பிடிப்பது எளிது.

ரோஹ்தக் நெடுஞ்சாலையில் செல்லும் வழியில் வலது புறம் திறந்தவெளிச் சாக்கடை ஒன்றை நீங்கள் தவற விடவே முடியாது. அந்தச் சாக்கடையின் பக்கமாக சில குடிசைகள் இருக்கும். சாக்கடையைக் கடக்க ஒரு குறுகிய மரப்பாலம் அமைக்கப்பட்டிருக்கும். அந்தப் பாலம் சாக்கடையை உரசிக் கொண்டே இருப்பதால் அதைக் கடக்கும் எவராகிலும் சாக்கடையில் கால் நனைத்தே ஆக வேண்டியிருக்கும். இது தான் அடையாளம். உங்களுக்கு வலது புறம் சாக்கடை இருக்க, நிமிர்ந்து நேரே பார்த்தால் பளபளப்பாகத் தென்படுவது தான் திக்ரி மெட்ரோ இரயில் நிலையம்.

திக்ரி மெட்ரோ இரயில் நிலையத்தின் நேர் கீழே காவல் துறையினரின் தடுப்பரண்களும் துப்பாக்கி ஏந்திய வீரர்களும் தென்படுவார்கள். அந்தத் தடுப்பரண்களை மீறி, போராடும் விவசாயிகளின் முழக்கங்களும், பாடல்களும் கேட்கின்றன. எனினும், நெடுஞ்சாலையின் வழியே நேரடியாக போராட்டக்களத்திற்கு செல்ல அனுமதித்தால், மோடி அரசு தன் தோல்வியை ஒப்புக்கொண்டதாக ஆகிவிடும் என்பதால் பக்கவாட்டில் இருக்கும் கிராமத்தினுள் நுழைந்து, சந்து பொந்துகள் வழியாகப் போகச் சொல்கிறார்கள். விவசாயிகள் போராட்டத்துக்கு செல்லும் வழி என்று ஆங்காங்கே தொங்குகின்ற அம்புக்குறி போட்ட அட்டைகளைப் பார்த்தபடி நடந்தோம் – இதோ, திக்ரி போராட்டக் களத்தின் மேடை.

போராட்டக் களத்தில் நுழைந்தவுடன் நம்மை வரவேற்க எல்லாத் திசைகளிலும் பகத் சிங் காத்துக் கொண்டிருக்கிறார்.

அங்கிங்கெனாதபடி எங்கும் பகத்சிங்.
எங்கு பார்த்தாலும் பகத்சிங்
“ஒரு மக்கள் தலைவரை ஆளும் வர்க்க ஊடங்களும் ஆளும் வர்க்கத்தின் நேரடி பிரச்சாரங்களும் உருவாக்கவே முடியாது” என்றார் உடன் வந்த தோழர்.

“என்ன சொல்கிறீர்கள்?”

“நீங்களே சுற்றிலும் பாருங்கள். எல்லா கூடாரங்களின் முகப்பிலும், டிராக்டர்களின் மீதும் பகத் சிங்கின் படங்கள் தாம் இருக்கின்றன. ஒரே ஒரு இடத்தில் கூட காந்தியின் படம் தென்படவில்லை”

“ஆமாம். அப்படித் தான் இருக்கிறது”

“காந்தியை மக்களின் நினைவுகளில் திணித்து வைக்க ஆளும் வர்க்க ஊடங்களும் சரி ஆளும் வர்க்கமும் சரி; தலையால் தண்ணீர் குடிக்கின்றனர். ஆனால், போராடும் உலகத்திற்கு தெரியும் யார் தங்களுடைய தலைவர் என்று. மக்கள் பகத் சிங்கை பற்றிக் கொண்டிருப்பதை எங்கே திரும்பினாலும் பார்க்க முடிகிறதே?” என்றார்.

நாங்கள் திக்ரியில் இரண்டு நாட்களும், சிங்கூ எல்லையில் இரண்டு நாட்களும் இருந்தோம். அவர் குறிப்பிட்டதைப் போல் எங்கே திரும்பினாலும் பகத் சிங்கின் படங்களே எதிர்ப்பட்டன.

திக்ரி எல்லையைக் கடந்து செல்லும் மெட்ரோ இரயில் பாதையின் மேம்பாலத்தின் கீழ், வரிசையாக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிளாஸ்டிக் கித்தான்களை இழுத்துக் கட்டி இந்த கூடாரங்களை அமைத்திருந்தனர். அதே போல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்களின் டிராலிகளின் மேல் பிளாஸ்டிக் கித்தான்களால் கூரை அமைக்கப்பட்டு அவை நடமாடும் கூடாரங்களாக ஆக்கப்பட்டிருந்தன.

சுமார் 15 கி.மீ தொலைவுக்கும் மேல் நீண்டு செல்கின்றன போராட்டக்காரர்களின் கூடாரங்கள். இது ஒரு தற்காலிக நகரம். ஒரு ஆங்கில நாளேடு குறிப்பிட்டது போல இது திக்ரி, சிங்கு குடியரசு. இந்தக் குடியரசின் குடிமக்களுடைய முகவரியை எப்படிக் கண்டுபிடிப்பது? மெட்ரோ பாலத்தின் தூண்கள்தான் அடையாளம். பில்லர் 540, பில்லர் 750 என்று விவசாயிகள் தங்களுக்கு புதிய கதவு எண்களை உருவாக்கிக் கொண்டு விட்டார்கள்.

தில்லி சலோ…

நவம்பர் இறுதிவாக்கில் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயிகள் “தில்லி சலோ” (தில்லி செல்வோம்) அறிவித்தனர். எனினும், திக்ரி, சிங்கூ, ஜெய்பூர் மதுரா எல்லை, காஸிபூர் எல்லை போன்ற இடங்களில் தாங்கள் தடுத்து நிறுத்தப்படுவோம் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்பரண்களைத் தாண்டி முன்னேறிய விவசாயிகள், தில்லியின் இந்த எல்லைப் பகுதிகளில் நவம்பர் இறுதி நாட்களில் கூடாரமிட்டுத் தங்கினர்.

கடுங்குளிரில் கனல் காயும் விவசாயிகள்
குளிரைச் சமாளிக்கப் போதுமான ஏற்பாடுகளோ, உணவுக் கையிருப்போ, சமைப்பதற்குரிய ஏற்பாடுகளோ, கழிவறை வசதிகளோ ஆரம்ப நாட்களில் விவசாயிகளிடம் இல்லை. எல்லைப் பகுதிகளில் முகாமிட்ட விவசாயிகள், தங்களுக்குத் தேவையான பொருட்களை ஊரிலிருந்து தருவித்துக் கொண்டனர். பால், கியாஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட சிலவற்றை அக்கம் பக்கத்திலிருக்கும் பகுதி மக்கள் தாமே முன் வந்து போராடும் மக்களுக்கு கொடுத்தனர்; இன்றளவும் கொடுத்து வருகின்றனர்.

எனினும், நடைமுறைச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. திக்ரி எல்லையில் போதுமான கழிவறைகள் கிடையாது. அக்கம் பக்கத்தில் உள்ள சிறு நிறுவன முதலாளிகளும் தொழிற்சாலைகளும் தங்களது கழிவறைகளை விவசாயிகள் பயன்பாட்டுக்காக திறந்து விட்டுள்ளனர் – என்றாலும் அவை போதுமானதாக இல்லை. எனவே பெண்களால் தொடர்ந்து போராட்ட களத்தில் தங்கி இருக்க முடிவதில்லை. அவர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் தங்கியிருந்து விட்டு ஊருக்குத் திரும்புகின்றனர்.

ஒரு அணி ஊருக்குத் திரும்பினால், அவர்களை பதிலீடு செய்ய ஊரிலிருந்து இன்னொரு அணி கிளம்பி வருகின்றது. அப்படி ஊரிலிருந்து வருகின்றவர்கள் தேவையான பொருட்களை தங்களோடு எடுத்து வருகினறனர். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை ஊருக்குச் சென்று விவசாய வேலைகளை கவனித்துக் கொண்டு திரும்பி வருகின்றனர்.

நாங்கள் கிளம்பியதற்கு ஒரு நாள் கழித்து கடும் மழை பெய்துள்ளது. கூடாரங்களின் கூரை ஒழுகியதால் எல்லா இடங்களிலும் குளிர் நீர் சூழ்ந்துள்ளது. படுக்கைகள், போர்வைகள் அனைத்தும் நனைந்திருக்கும். உறைபனிக் குளிரில் தரையெல்லாம் தண்ணீரும் சூழ்ந்திருக்கும் நிலையில் ஆயிரக்கணக்கான வயது முதிர்ந்த விவசாயிகள்… நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது. யாரும் பல நாட்களுக்கு உறங்க முடியாது.

சிறு விவசாயிகளின் நிலைமை கடும் சவாலானது. ஊரில் விவசாயத்தைப் பார்க்க வேண்டும். ஆள் வசதி இருக்காது. அதே நேரம் போராட்டக் களத்தை விட்டு விலகவும் முடியாது. எனவே மூன்று நாட்கள் இங்கும் மூன்று நாட்கள் அங்குமாக சென்று வந்து கொண்டிருக்கிறார்கள்.

கிராமக் கமிட்டிகளின் சார்பில் நூறு அல்லது இருநூறு ஆட்களை பல கிராமங்கள் அனுப்பி வைத்துள்ளன. ஒவ்வொரு குழுவும் சில நாட்கள் போராட்டக் களத்தில் தங்கி விட்டு திரும்புகின்றனர். ஒரு குழு சென்றால் அதற்கு பதிலாக இன்னொரு குழுவை ஏற்பாடு செய்து அனுப்பி வைக்கின்றன கிராம கமிட்டிகள். இவ்வாறு வேர்மட்ட அளவிலான ஒருங்கிணைப்பை, விவசாய சங்கங்களே முன்னின்று செய்கின்றன. பஞ்சாப் ஹரியானாவைப் பொறுத்தமட்டில், இந்தப் போராட்டம் அதன் சமூகத்தைப் பற்றிக் கொண்டு விட்டது. இனி அதை அணைப்பதோ நசுக்குவதோ கடினம். இரண்டில் ஒன்றைப் பார்க்காமல் அவர்கள் பின்வாங்க மாட்டார்கள்.

நாங்கள் சந்தித்த மருத்துவர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார் : “இங்கே நீங்கள் வயதானவர்களை அதிகம் பார்ப்பீர்கள். மோடி கும்பலை வீழ்த்த இவர்களே போதுமென்று தான் இவர்கள் மட்டும் வந்துள்ளனர். இளவட்டங்கள் ஊரில் விவசாயத்தைப் பார்த்துக் கொண்டு போராட்டக் களத்திற்கு தேவையான பொருட்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கிழவர்கள் தானே அடித்து விரட்டி விடலாம் என்று மோடி கும்பல் ஏதும் தவறாக முடிவெடுத்து எங்கள் மேல் கை வைத்துப் பார்க்கட்டும்…. மொத்த சீக்கிய ரெஜிமெண்ட்டும் கிளர்ந்து எழும்”

திக்ரி, சிங்கு போராட்டக் களங்களில் எவராலும் இரண்டு காட்சிகளைத் தவற விடமுடியாது.

முதல் காட்சி, எந்த நேரமும், யார் வேண்டுமானாலும் சாப்பிடுவதற்குத் தயாராக கொதித்துக் கொண்டிருக்கும் அடுப்புகள். லங்கார் எனும் பொதுச் சமையலறை செயல்பட்டுக் கொண்டேயிருக்கிறது. யாரும் அங்கே பசியோடு இருக்கவில்லை. உணவு ஏற்பாட்டாளர்கள் கடந்து செல்லும் அனைவரையும் கூவிக் கூவி அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

லங்கார்களைப் பொறுத்தவரை ‘இல்லாதவர்களுக்கு உணவளிப்பது’ என்கிற சேவை, சீக்கியர்களின் அத்தியாவசியமான மதக் கடமை. விவசாயிகளை அடிப்படையாக கொண்டு எழுந்த மதம் சீக்கியம். எளியவர்களை பாதுகாப்பது அதன் முக்கியமான கோட்பாடுகளில் ஒன்று. இவ்வாறு ஊருக்கு உணவளிப்பது, பொதுக் காரியங்களுக்காக பணம் அல்லது பொருட்களைக் கொடுப்பது ஆகியவற்றுக்கு ஆகும் தொகையை அவர்கள் ‘செலவாக’ பார்ப்பதில்லை. மாறாக அதை ஒரு மதக் கடமையாகப் பார்க்கின்றனர்.

இரண்டாவது காட்சி, ஸ்பீக்கர் மற்றும் சப்வூஃபர் கட்டிய டிராக்டர்களில் சப்தமாக ஒலிக்கும் பாடல்கள். பெரும்பாலும் பஞ்சாபி நாட்டுப்புற பாடல்கள். டிராக்டர்கள் குறுக்கும் நெடுக்குமாக சென்று கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு டிராக்டரிலும் (டிராலி இணைக்கப்படாதது) குறைந்தது பத்துப் பேர்களாவது தொற்றிக் கொண்டு செல்கின்றனர். ஸ்பீக்கர்களும் சப்வூஃபர்களும் தற்காலிகமாக கட்டப்பட்டவை என்றே நினைத்தோம். பின்னர் விசாரித்துப் பார்த்த போது தான் அவ்வாறு ஸ்பீக்கர்கள் பொருத்திக் கொள்வதும், பாட்டுக் கேட்டபடி டிராக்டர் ஓட்டுவதும், பஞ்சாப் விவசாயிகளின் வழக்கம் என்று அறிந்து கொண்டோம்.

பாடல் அலறுகிறது. தாளம் அதிர்கிறது. அவற்றுடன் போட்டி போட்டு உரத்த குரலில் அம்பானி அதானிக்கு எதிரான முழக்கங்களை எழுப்புகிறார்கள் டிராக்டர் உலா வரும் இளைஞர்கள். இளமைக்கேயுரிய கொண்டாட்ட மனோநிலை, மோடிக்கு எதிரான கோபம், மீசை முறுக்கில் தென்படும் ஜாட் தெனாவெட்டு – இவை அனைத்தும் கலந்த ஒருவிதமான பஞ்சாபி கெத்து அவர்களுடைய உடல் மொழியில் வெளிப்படுகிறது.

சீக்கிய மதம் சாதியை எதிர்க்கிறது என்ற போதிலும் பஞ்சாபின் பிரபலமான நாட்டுப்புற பாப் பாடல்களில் ஜாட், ஜட்டா, புத் ஜட்டான் தே (ஜாட்டின் பெருமைமிகு மைந்தன்) போன்ற சாதிப்பெருமையைக் கொண்டாடும் வரிகள் இடம்பெறுவதையும் இதற்கெதிராக கடுமையாகப் போராட வேண்டியிருப்பதையும் வலியுறுத்தினார் பஞ்சாப் கிசான் யூனியனைச் சேர்ந்த இளம் பெண் தோழரான முனைவர் நவகிரண் கவுர்.

பஞ்சாப் கிசான் யூனியனைச் சேர்ந்த இளம் பெண் தோழரான முனைவர் நவகிரண் கவுர்.
ஹரியாணாவின் நிலைமையும் ஏறத்தாழ இதே தான். விளைவுகளைக் கண்டு அஞ்சாத ஒருவகையான முரட்டு வீரம், எல்லோரிடமும் தென்படுகிறது. திருவாளர் மோடி முறுக்கியிருப்பது புலிவால் என்று சொன்னால் அது மிகையல்ல.

கேத் மஸ்தூர் – செங்கொடிகள்!

போராட்டக் களத்திற்கு கணிசமான அளவில் கேத் மஸ்தூர் எனப்படும் விவசாயத் தொழிலாளர்களும் வந்துள்ளனர் – இவர்கள் தலித்துகள். (கேத்தி என்றால் விவசாயம் என்று பொருள். கேத் மஸ்தூர் என்றால் விவசாயத் தொழிலாளர்கள்) திக்ரியிலும் சரி, சிங்குவிலும் சரி, சுமார் மூன்றில் ஒரு பங்கிற்கு எங்கெங்கும் செங்கொடிகள். பீம் ஆர்மி இயக்கத்தின் சந்திர சேகர் ஆசாத் போராட்டக் களத்துக்கு வந்து விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருக்கிறார். அம்பேத்கர் மாணவர் சங்கத்தினரும் அரங்கம் அமைத்திருப்பதைப் பார்த்தோம்.

பஞ்சாபின் மக்கள் தொகையில் சுமார் 34 சதவீதம் இருக்கும் தலித்துகளிடம் வெறும் 3 சதவீத நிலமே உள்ளது. இன்றளவும் சட்டப்பூர்வமாக தலித்துகளுக்குக் கிடைக்க வேண்டிய பஞ்சாயத்து விவசாய நில உரிமைக்காக போராடி வரும் ஜமீன் ப்ராப்தி சங்கர்ஷ் கமிட்டி(ZPSC) என்கிற இடதுசாரி அமைப்பு சந்தித்து வரும் சவால்கள் ஏராளம். இவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

பஞ்சாப் – ஹரியானா வின் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த சிறு – நடுத்தர விவசாயிகளிடம் பேசினோம். அவர்களிடம் சாதிய முரண்பாடுகளைக் குறித்தும், விவசாயத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி குறித்தும் கேட்டோம்.

கீர்த்தி கிசான் யூனியன் மற்றும் பஞ்சாப் கிசான் யூனியன் தோழர்களுடன் பேசினோம்.இவை குறித்து வரும் நாட்களில் எழுதுகிறோம்.

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத குளிர் என்று இந்த ஆண்டு குளிரைப் பற்றி சொல்கிறது வானிலை ஆய்வு மையம். நாங்கள் சென்றிருந்த நாட்களில் இரவு 3 டிகிரி வரை குளிர். அதே நாளில் அமிர்தசரஸில் கிட்டத்தட்ட பூச்சியம் டிகிரிக்கு (0.3) வந்து விட்டது குளிர்.

பகலில் சுமார் 10 மணிக்குத்தான் சுறுசுறுப்பான இயக்கம் தொடங்குகிறது. அதன் பின் மெல்ல வெயில் பரவுகிறது. ஆனால் மாலை 4 மணிக்கெல்லாம் மீண்டும் குளிர் தொடங்கி விடுகிறது.

டிராக்டர்கள் அனைத்தும் வீடுகளாக்கப் பட்டுவிட்டன. கொஞ்சம் வசதி இருந்தால் கீழே குளிருக்கு இதமாக குவில்ட் மெத்தைகள். ஏழை விவசாயிகளின் டிராக்டரில் வைக்கோல் படுக்கைகள். நகரத்து நடுத்தர வர்க்கத்தினர் சிறிய மொபைல் கூடாரங்களில் படுத்துறங்குகின்றனர். பெட்ரோல் பங்குகள் அனைத்திலும் மொபைல் கூடாரங்கள்.

எங்கு திரும்பினாலும் கணப்பு அடுப்புகள். விறகுகள். டின்களில் கொள்ளிகளை நிரப்பி,மொபைல் கணப்பு அடுப்புகளோடு பல முதியவர்கள் நடக்கின்றனர். அது போர்வைக்கு அடங்காத, விரல்களை விரைத்துப் போக வைக்கின்ற குளிர்.

இருப்பினும் இரவு நேரத்தில் வரும் இலவச மின்சாரத்துக்காக, கடும் குளிரிலும் வயல் வெளியில் படுத்துக் கிடப்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சகஜம் என்கிறார்கள் விவசாயிகள். 80 வயதைத் தாண்டிய முதியவர்கள் அதிகாலை வேளையில் எழுந்து நடமாடுவதைக் காணும்போது அது புரிந்தது.

பகல் முழுதும் எல்லா திசைகளிலிருந்தும் எழும் ஒலிபெருக்கியின் இரைச்சல். பேட்டியெடுக்கவோ, பதிவு செய்யவோ இயலவில்லை. உரையாடப் பொருத்தமான அமைதி இரவில்தான். நாங்கள் இரவு விவசாயிகள் சங்கத்தினரின் கூடாரத்திலேயே தங்கினோம்.

இளைஞர்கள், செயல் வீரர்கள் இரவு 12 மணிக்கு மேலேதான் உறங்கச் செல்கிறார்கள். கணப்பை சுற்றி அமர்ந்து விவாதம், அரட்டை, பாடல் என்று நேரம் கழிகிறது. பஞ்சாப் கிசான் யூனியன் என்ற இடதுசாரி சங்கத்தினர் ஒரு திறந்தவெளித் திரையரங்கை அமைத்து இரவு நேரத்தில் திரைப்படங்களைத் திரையிடுகிறார்கள். வேறொரு பக்கம் சீக்கியர் வரலாறை சித்தரிக்கும் அனிமேசன் படங்கள் சீக்கிய மத அமைப்புகளால் திரையிடப்படுகின்றன.

குளிரை சமாளிக்க தேநீர், தண்ணீரைப் போலப் புழங்குகிறது.

விரிப்புகள், போர்வைகள், மப்ளர்கள், ஸ்வெட்டர்கள், செருப்புகள் போன்றவற்றை பலர் நன்கொடையாக அளிக்கின்றனர்.

காய்கறிகள், பால், தயிர், விறகு ஆகியவை ஹரியானாவிலிருந்து அன்றாடம் வந்து இறங்குகின்றன. அனைவருக்கும் விநியோகிக்கப் படுகின்றன. இவற்றை போராட்டக் களத்துக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் என்பது ஹரியானா மாநில கிராம பஞ்சாயத்துக்களின் (காப்) முடிவு. பல இடங்களில் பொருள் விநியோகத்தை குருத்வாராக்கள் முறைப்படுத்தி நிர்வகிக்கின்றன.

அதிகாலையிலேயே லங்கார்கள் இயங்கத் தொடங்குகின்றன. அருகிலிருக்கும் நபரைக் காண முடியாத பனி மூட்டத்தின் ஊடாகத் தன்னார்வலர்கள் துப்புறவுப் பணியைத் தொடங்குகிறார்கள். 12 மணிக்கு மேல் உறங்கச் சென்ற தொண்டர்கள், அதிகாலையிலியே எழுந்து கையில் தேநீருடன் நம்மை உசுப்புகிறார்கள்.

இரவு 12 மணிக்குப் படுக்கும் போது பார்க்காத புதிய முகங்கள் மறுநாள் காலையில் கூடாரத்தில் நிறைந்திருக்கின்றன. அவர்கள் இரவு 3 மணிக்கு பஞ்சாபிலிருந்து வந்து இறங்கிய பெண்கள், குழந்தைகள். சத் ஸ்ரீ அகால் என்று ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்கிறார்கள்.

நாங்கள் திக்ரியிலிருந்து விடை பெற்றுக் கொண்டு சிங்கு எல்லை போராட்டக் களத்துக்குக் கிளம்பினோம்.

சிங்கு எல்லையில் போலீசின் தண்ணீர் பீரங்கி
பஞ்சாப் மூன்று பிராந்தியங்களாக – மால்வா, மாஜா, தியோபா – பிரிந்திருக்கிறது. திக்ரி எல்லையில் திரண்டிருப்போரில் ஆகப்பெரும்பான்மையினர் மால்வா பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். இது ஒப்பீட்டளவில் வறிய விவசாயிகளைக் கொண்ட பகுதி. கடன் தற்கொலைகளும், கான்சர் சாவுகளும் நிறைந்த பகுதி. இடது சாரி இயக்கங்கள் செல்வாக்கு செலுத்தும் பகுதி.

சிங்கு எல்லையில் திரண்டிருப்போரில் பெரும் பகுதியினர் மாஜா, தியோபா பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இரண்டு பகுதிகளிலும் பாரதிய கிசான் யூனியனின் பல்வேறு பிரிவுகளும், பல்வேறு இடதுசாரி விவசாய சங்கங்களும் கலந்தே இருக்கின்றனர். இருப்பினும் சிங்கு பார்டரில் நடுத்தர விவசாயிகள், பணக்கார விவசாயிகள் அதிகம் தென்படுகின்றனர்.

கல்சா எய்டு போன்ற சீக்கிய மதம் சார்ந்த சேவை அமைப்புகள், மருத்துவ முகாம்கள் சிங்கு பார்டர் பகுதியில் அதிகம். சாலையும் இங்கே திக்ரியைக் காட்டிலும் சற்று அகலமாக இருக்கிறது.

சற்றே வசதியான கூடாரங்கள், தற்காலிகக் கழிவறைகள், நூறு மீட்டர் இடைவெளியில் மருத்துவ முகாம், பத்து இருபது அடிக்கொரு முறை எதிர்ப்படும் சிறிதும் பெரிதுமான லங்கார்கள், ஆங்காங்கே வட்டமாக அமர்ந்து ஹூக்கா புகைத்துக் கொண்டிருக்கும் ஹரியானா விவசாயிகள், என்.ஆர்.ஐ சீக்கியர்களின் அரங்குகள், பெரிய மேடை, ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள், பஞ்சாபி பாப் பாடகர்கள் போன்ற பிரபலங்களின் பங்கேற்பு … என சிங்கு பார்டர்தான் ஊடகங்களின் காமெராக்களை அதிகம் ஈர்க்கிறது.

சிங்கு எல்லையில், போலீசார் ஏற்படுத்தியிருக்கும் தடையரண்கள்
சிங்கு எல்லையில் உள்ள போராட்டக் களத்தில் நுழைந்த உடன், போலீசார் ஏற்படுத்தியிருக்கும் தடையரண்களைத் தாண்டியதும் முதலில் தென்படுவது ஒரு குதிரை லாயம். சீக்கிய மதத்தின் கால்சா எனும் ஆயுதமேந்திய படைவீரர்கள் பயன்படுத்தும் குதிரைகள் அவை.

போராட்டக் களத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, நூற்றுக்கணக்கான ஆயுதமேந்திய வீரர்கள் வந்திறங்கியுள்ளனர். அவர்களில் சிலர் குதிரைகளில் வந்துள்ளனர். நீண்ட உறை வாட்கள், குத்தீட்டிகள், குறுங்கத்திகள் மற்றும் தேக்கினால் செய்யப்பட்ட உருட்டுக் கட்டைகள் ஏந்திய இந்த வீரர்கள், தொடர்ந்து போராட்டக் களத்தின் குறுக்கும் நெடுக்குமாக ரோந்து செல்கின்றனர்.

சிங்கு எல்லையில் கால்சா வீரர்கள் பயணிக்கும் குதிரைகள்
நான்காவது நாள், நாங்கள் சிங்கு பார்டருக்குள் நுழைந்த நேரத்தில் ஒரு சிறிய கலவரம். போலீசு உடை அணிந்த ஒரு நபரை, கையில் குத்தீட்டி ஏந்திய ஒரு கால்சா வீரர், பிடரியில் கை வைத்து இழுத்துச் சென்று கொண்டிருந்தார். விசாரித்த போது அவன் ஆர்.எஸ்.எஸ் காரன் என்றும் போலீஸ் போல மாறுவேடத்தில் வந்திருப்பதாகவும் சொன்னார்கள். சிங்கூ எல்லையில் பல இடங்களில் சி.சி.டிவி கேமராக்களை நிறுவியுள்ள போராட்டக் கமிட்டியினர், குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் ஊடுருவும் வெளியாட்களை கவனமாகக் கண்காணிக்கின்றனர்.

நிஹாங்க் என்ற சீக்கிய படைவீரர் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள், பஞ்சாபின் மலேர் கோட்லா தாலுக்காவைச் சேர்ந்த முஸ்லிம் விவசாயிகள், பாகிஸ்தான் எல்லையில் உள்ள குர்தாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த சீக்கிய நடுத்தர விவசாய சங்கத்தினர், இந்தப் போராட்டத்தில் முழுமையாக ஈடுபடுவதற்காக தனது அரசுப் பணியை ராஜினாமா செய்துவிட்டு வந்து மருத்துவ முகாம் நடத்தும் மருத்துவர், ஹரியானாவின் பெரிய காப் பஞ்சாயத்தின் இளம் பிரதிநிதிகள், பஞ்சாப் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், பஞ்சாப் ஆசிரியர் சங்கத்தினர்.. எனப் பலரை சந்தித்தோம். சிங்கு, திக்ரி மட்டுமின்றி, பகோரா சாலை சந்திப்பில் திரண்டிருக்கும் பி.கே.யு (உக்ரகான்) சங்கத்தினரை சந்திக்கவும் முயன்றோம்.

நான்கு நாட்கள் என்பது மிகக் குறுகிய காலம். போராட்டக்களம் முழுதும் நடந்தே செல்ல வேண்டியிருந்ததால் மேலும் பலரை சந்திக்க இயலவில்லை. இந்தி தெரியாது என்பது ஒரு கூடுதல் தடை. சந்திப்பில் திரட்டிய கருத்துகளை எழுதுகிறோம்.

K F C – கிசான் ஃபுட் கார்னர்

சிங்கூ எல்லையின் போராட்டக் களத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர்கள் நடந்து சென்றால் வலப்புறம் பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் எதிர்ப்படுகின்றது. ஒரு சிறிய கால்பந்து மைதானம் அளவுக்கு பார்க்கிங் வசதி கொண்டது அந்த ஷாப்பிங் மால்.

அந்த மைதானத்தின் வலது புறம் மலைமலையாக விறகுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அதற்கு பக்கத்திலேயே தற்காலிகக் கழிவறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முதலில் தரையில் பாத்தி கட்டி, அதில் இந்திய பாணி கழிப்பறைகளை பொருத்தியுள்ளனர் – அவை மண் மூடி அடைத்துக் கொண்டதால் தற்போது நடமாடும் கழிவறைகளை நிர்மாணித்துள்ளனர்.

மைதானத்தின் இடப்புறத்தில் விவசாயிகள் தங்குவதற்கு எண்ணற்ற கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீர்த்தி கிசான் யூனியன் மற்றும் பாரதிய கிசான் யூனியனின் அலுவலகங்கள் அங்கே இயங்குகின்றன.

வேடிக்கை என்னவென்றால், அந்த ஷாப்பிங் மால் பஞ்சாபின் குர்தாஸ்பூர் தொகுதி பாஜக பாராளுமன்ற உறுப்பினரும், ஹேமமாலினியின் மகனுமான நடிகர் சன்னி தியோலுக்கு சொந்தமானது. “மாலுக்கு சீல்” என்பதை சொல்லத் தேவையில்லை.

அந்தப் பல மாடிக் கட்டிடத்தின் தலை மீது KFC (Kentucky Fried Chicken) என்கிற விளம்பரப்பலகை தென்படுகிறது. KFC – Kissan Food Corner என்கிற பதாகையை அதற்கு நேர் மேலே தொங்க விட்டிருக்கிறார்கள் விவசாயிகள். கட்டிடத்தின் உச்சியில் விவசாய சங்கத்தின் பச்சைக்கொடியும், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சிவப்புக் கொடியும் படபடக்கின்றன.

உணவக வரிசையில் பகுதிக் குழந்தைகள்
அந்த “கிசான் ஃபுட் கார்னர்” இன் கீழே, பஞ்சாப் விவசாயிகளின் லங்கார் அடுப்புகள் புகைந்து கொண்டிருக்கின்றன. குடியிருக்க வீடும், ஒரு வேளை சோறும் கிடைக்காத டில்லியின் சாலையோரக் குழந்தைகளும் தாய்மார்களும், கடந்த ஒரு மாதமாக மூன்று வேளையும் அங்கே பசியாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்குலாப் ஜிந்தாபாத் – ஒற்றுமையின் புதிய இசை !

மாலை மணி 5 க்கு முன்னரே இருள் கவிகிறது. அன்றைய கூட்டம் முடிகிறது என்று அறிவிக்குமுகமாய், மேடையிலிருந்து முழக்கம் எழுகிறது.

17 ஆம் நூற்றாண்டில் குரு கோவிந்த் சிங் வழங்கிய “சத் ஸ்ரீ அகால்” முழக்கமும், 20 ஆம் நூற்றாண்டின் பாட்டாளி வர்க்கப் புரட்சிகள் வழங்கிய “விவசாயிகள் தொழிலாளர்கள் ஒற்றுமை” எனும் முழக்கமும் பகத்சிங்கின் இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கமும், ஒன்றன் மீது ஒன்று ஏறி, பண் மிசைப் பண்ணாய் ஒலிக்கின்றன.

“போலே ஸே நிஹால், சத் ஸ்ரீ அகால்” (உரத்து முழங்கு, உண்மை (இறை) காலத்திற்கு அப்பாற்பட்டது)

“கிஸான் – மஸ்தூர் ஏக்தா ஜிந்தாபாத்” (விவசாயிகள் – தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக)

“இன்குலாப் ஜிந்தாபாத்” (புரட்சி ஓங்குக)

ஒருங்கே ஒலிக்கும் இம்முழக்கங்கள் வெவ்வேறு சுருதிகள் இசைந்து ஒலிக்கும் ஹார்மனி இசையை ஒத்தவை. இது இப்போராட்டம் உருவாக்கிவரும் ஒற்றுமையின் அழகானதொரு குறியீடு.

ஜாட் பெருமிதத்தை விளக்குகிறார் இந்த தோழர்
கிசான் புட் கார்னருக்கு கீழே இயங்கும் லங்கார் – வரிசையில் நிற்கிறார்கள் டில்லியின் சாலையோரக் குழந்தைகள். மேடையிலிருந்து ஒலிக்கும் நீண்ட முழக்கங்கள் அவர்களுக்குப் பிடிபடவில்லை.

சிரித்தபடியே “இன்குலாப் ஜிந்தாபாத்” என்று மட்டும் உரத்துக் குரலெழுப்புகிறார்கள்.

மெல்லப் புன்னகைத்தபடி, ஒரு குழந்தையின் தட்டில் ரொட்டியை வைக்கிறார் வயது முதிர்ந்த ஒரு விவசாயி.

கண்கள் பனிக்க, மெல்ல அங்கிருந்து நகர்கிறோம்.

– பா. சாரதி, நாதன், மருதையன்.

நன்றி: இடைவெளி

04-01-2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *