LOADING

Type to search

கல்வி

ஊழல்மயமாகி வரும் தமிழக கல்வித்துறை..!

Share

 

சமீபத்தில் தமிழக கல்வித்துறையில் தோண்ட தோண்ட ஊழல் பூதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. மோசடியில் ஈடுபட்டவர்கள் எல்லாம்  துணைவேந்தர் போன்ற உயர்பதவியில் இருப்பவர்களும் அனுபவமிக்க பேராசியர்களாகவும், பணியாளர்களாகவும் இருப்பதுதான் வேதனை அளிப்பதாக உள்ளது.

 

கடந்த வருடத்தில் ஆசிரியப் பணியிடத்தை நிரப்புவதற்காக இலஞ்சம் பெற்றதாக கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது செய்யப்பட்டது நினைவிருக்கலாம். அதற்குப் பிறகு அதே போன்ற மோசடிகள் பிற பல்கலைக்கழகங்களிலும் வெளிவந்தது. சில மாதங்களுக்கு முன்பு  யாரோ உயர் பதவியில் இருப்பவர்களுக்காக மாணவிகளை தவறான  நடத்தைக்கு வற்புறுத்திய பேராசிரியை நிர்மலாதேவி பற்றிய சம்பவம் தமிழகத்தை உலுக்கியது. தற்போது மேலும் மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் பூதாகரமாக கிளம்பி தமிழக கல்வித்துறையின் மானம் காற்றில் பறந்து கொண்டிருக்கின்றது.

 

அண்ணா பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரி தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்வதில் மிகப் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற வைக்க 10000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. பல நூறு மாணவர்களிடம் இருநூறு கோடி ரூபாய் வரை இதுபோல பணம் பெறப்பட்டு தவறான முறையில் தேர்ச்சி பெற வைக்கப்பட்டுள்ளதும், இதற்காகவே வேண்டுமென்றே மாணவர்களை தேர்வில் தோல்வியடையச் செய்துள்ளதும் வெளிவந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உட்பட பல கல்லூரி பேராசிரியர்களுக்கு இந்த ஊழலில் தொடர்பு இருப்பதால் அனைவரும் காவல்துறை விசாரணைக்கு உள்ளாகியுள்ளனர்.

 

அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் மிகப் பெரிய முறைகேடு நடந்துள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணி ஒரு தனியார் நிறுவனத்திடம் அவுட்சோர்ஸ் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களுக்கு பதில் சரியான விடைகள் எழுதிய மாற்று விடைத்தாள்களை திருத்தும் கணிணியில் உட்செலுத்தி தகுதியில்லாதவர்களை தேர்ச்சி பெற வைத்துள்ளனர். தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட 196 பேர்கள் இந்த ஊழலில் ஆதாயம் அடைந்ததாகவும்,இன்னும் பலருக்கு இதில் தொடர்பிருப்பதாகவும் தெரிகிறது. நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

 

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் முறைகேடு நடந்துள்ளதாக மே மாதம் இலஞ்சம்,  ஊழல் தடுப்புத்துறை கண்டறிந்தது. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

 

இன்னும் பல ஊழல்கள் மக்களின் பார்வைக்கு வராமல் உள்ளன. இந்த ஊழல்கள் அனைத்தும் கடந்த சில வருடங்களில் தான் முழுவீச்சில் அரங்கேற்றப்பட்டுள்ளன. தமிழகத்தில் எந்தத் துறையை எடுத்தாலும் இலஞ்சம் இல்லாமல் காரியம் ஆவதில்லை. காசு கொடுக்கத் தயாராக இருந்தால் எவ்வித வேலையையும் சாதித்துவிட முடியும் என்ற நிலைதான் இன்று நிலவுகிறது. ஊழலை ஒழிக்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் இத்தகைய ஊழலில் அதிகம் தொடர்புடையவர்களாக இருப்பதுதான் வேதனையான முரணாக உள்ளது.

இதனைத் தடுக்க வேண்டிய அரசோ எவ்வித கவலையும் இன்றி ஆட்சியைக் காப்பாற்ற மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு மாநிலத்தின் நலன்களை அடகு வைத்து வருகின்றது. ஊழலைத் தடுக்க லோக் ஆயுக்தா அமைப்பை பல்வேறு கட்ட வலியுறுத்தல்களுக்கு பிறகு கொண்டு வந்தபோதும் பல்லைப் பிடுங்கிய பாம்பு போல எவ்வித அதிகாரமும் இல்லாத சட்டமாகவே தமிழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் அதற்கான அதிகாரியையும் நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றது தமிழக அரசு. முதல்வர், அமைச்சர்கள் மீதும் அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் சொல்லப்பட்டு வரும் சூழலில் அவர்கள் இத்தகைய ஊழல்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்று நினைப்பது பேராசையாகத் தான் இருக்க முடியும்.

 

கல்வியாளர்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் இணைந்து கல்வித்துறையில் புரையோடிப் போயிருக்கும் ஊழலுக்கு எதிராக தொடர்ச்சியாக ஆக்கப்பூர்வமான தீர்வை நோக்கிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

 

அபுல் ஹசன்

மாநில கல்வி வளாகச் செயலாளர்

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு

தமிழ்நாடு

Tags:

2 Comments

 1. Sasuke September 19, 2018

  Kaaranam….padithdhal peria idathai adaindhu vittom engira ninaippu….olukka vilumiyangal ae uyarvai nirnayikkum engira nilai samoogathil illai ..
  Varuthamikka nilai nidharsanam sagodhara

  Reply
 2. Bridie September 4, 2019

  Hi, very nice website, cheers!
  ——————————————————
  Need cheap and reliable hosting? Our shared plans start at $10 for an year and VPS plans for $6/Mo.
  ——————————————————
  Check here: https://www.good-webhosting.com/

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *