காஷ்மீரில் ஆட்சியைக் கைப்பற்ற தொகுதி மறு நிர்ணயம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொகுதி மறு நிர்ணய ஆணையம் சமர்ப்பித்த தலைகீழான தொகுதி நிர்ணய பரிந்துரைகள் கஷ்மீரில் பரவலான எதிர்ப்பை உருவாக்கியுள்ளதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.  இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 370ஐ நீக்கி, மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை முடக்கியதுடன் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மூன்றாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியது மட்டுமின்றி, மாநிலத்தின் சட்ட மற்றும் கலாச்சார தனித்துவத்தை அழிக்கவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமைப்பு சட்டபூர்வமான அந்தஸ்தை ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்காமல் இருக்க முடியாது என்பதை நன்றாக அறிந்து கொண்டுள்ள ஒன்றிய அரசு ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீண்டும் தருகின்ற பொழுது அதன் ஆட்சி கட்டிலில் பாஜக அமர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட தொகுதி மறுசீரமைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. 2011 மக்கள் தொகை  கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டுதான் மறுசீரமைப்பு  செய்யப்படுகிறது என மறுசீரமைப்பு ஆணையம் கூறினாலும் அது முற்றிலும் தவறாகும் என முன்னால் ஒன்றிய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சைபுதீன் சோஸ் சுட்டிக்காட்டுகிறார்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காஷ்மீரின் மக்கள் தொகை 69,07,623 ஆக இருந்தது. இது ஜம்முவில் 50,50,811 ஆகவும், லடாக்கில் 2,10,492 ஆகவும் இருந்தது. ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் காஷ்மீரின் மக்கள் தொகை தொடர்பான பட்டியலில் 16 லட்சம் பேர்களுடைய எண்ணிக்கை விடுபட்டுள்ளது ஆனால் அதே வேளையில் ஜம்முவில் 69,07,623 ஆக அதிகப்படுத்தியும் காட்டி இருக்கின்றார்கள். தொகுதி பித்தலாட்டங்களுக்கான  முதற்படியாகவே இந்த ஏமாற்று வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் காஷ்மீரில் தற்போது உள்ள 46 தொகுதிகளுக்கு பகரமாக ஒன்றை சேர்த்து 47 ஆக மாற்றியுள்ள  அதேவேளையில் ஜம்முவில் தற்போதுள்ள 37 தொகுதிகள் 43 தொகுதிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதன்படி ஜம்முவில்  ஒரு தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1,25,082 எனில்  காஷ்மீரில் அது 1,46, 543 வாக்களர்களுக்கு ஒரு தொகுதியாக பிரிக்கப்படுகிறது. அதே நேரத்தில், பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கு 16 இடங்களை ஒதுக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது.

பாஜகவின் பெரும்பான்மையை அதிகரித்தும் மற்ற கட்சிகளை பலவீனப்படுத்தியும் காஷ்மீரில் இந்துத்துவ ஆட்சியை உருவாக்கும் நோக்கில்தான் நோக்கில் இந்த சதிகள் செய்யப்படுவது தெளிவாகிறது. பாஜகவின் இந்த சதியை தெளிவாக புரிந்து கொண்டதில் காரணத்தினால்தான் பி.டி.பி யின் தலைவர் மெகபூபா முப்தியின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்திய குப்கர் கூட்டணி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததுள்ளது. ஆணையத்தின் பரிந்துரையை யாராலும் ஏற்க முடியாது என்று கூறிய சி.பி.எம் தலைவர் ஏ.ஐ.தாரிகாமி இது ஜம்மு காஷ்மீரை மேலும் பிளவுபடுத்தவே உதவும் என சுட்டிக்காட்டியுள்ளார். 2019 ஆம் ஆண்டின் தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தின் அடிப்படையில்தான் தற்போதைய தொகுதி மறுசீரமைப்பு நடைபெறுகிறது. இருப்பினும், மறுசீரமைப்புச் சட்டத்தையே ரத்து செய்யக் கோரி பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்தியா சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டாக தீர்க்கப்படாத காஷ்மீர் பிரச்சினையை அமைதியாகவும், சுமுகமாகவும் தீர்த்து வைப்பதற்குப் பதிலாக, பெரும்பான்மை பலத்துடன் நாட்டை ஆளும் இந்துத்துவா அரசு, எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றி கலவர நெருப்பை மூட்டி வருகிறது. காங்கிரஸ் மற்றும் பிற மதச்சார்பற்ற கட்சிகளின் தவறான கொள்கைகள்தான் தீவிரவாத, பிரிவினைவாத செயல்பாடுகள் அதிகரிப்பதற்கு காரணம் என குற்றம் சாட்டிய மோடி-அமித்ஷா அணியினரின் சர்வாதிகார ஆட்சியில்தான், பயங்கரவாதமும், தீவிரவாதமும் பன்மடங்கு அதிகரித்துள்ளதுடன் மக்களால் ஒரு நாள் கூட நிம்மதியா தூங்க தூங்கமுடியவில்லை. மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் லட்சக்கணக்கான துருப்புக்கள் குவிக்கப்பட்டு, சர்வ அதிகாரங்களும் கொடுக்கப்பட்டிருந்தாலும் எல்லாவித செயல்பாடுகள் அதிகரித்திருந்தாலும் காஷ்மீரில் அமைதி ஏற்படவில்லை.

எல்லையில் இருந்து மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன. எந்த ஒரு மக்களின் அடிப்படை உரிமைகளை அபகரித்து துப்பாக்கி முனையில் அடிபணியச் செய்து அடக்கி ஆளலாம் என்ற கனவு ஒரு போதும் நனவாகாது. தகவல் தொழில் நுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்தில் இன்டர்நெட்  அமைப்புகள் அனைத்தையும் முடக்குவது என்ற முடக்க நிலை காஷ்மீரில் எத்தனை முறை  ஏற்படுத்தப்பட்டிருக்கிறது?  அவர்களின் நியாயமான, நீதியமான கோரிக்கைகளுக்கு அனுதாப அணுகுமுறையை கடைப்பிடிக்காமல் எதிர்ப்பவர்கள் அனைவரையும் துரோகிகளாகவும் தேசப்பட்டற்றவர்களாகவும்  அதிகாரத்தை பயன்படுத்தி முத்திரை குத்துவது அரசாங்கத்தின் பகுத்தறிவற்ற கொள்கையாகும். அதன் இயல்பான தொடர்ச்சியே தொகுதி மறுவரையறை மூலம் குறுக்குவழியில் ஆட்சிக்கு நகர்வது. ஆனால் இதுபோன்ற தந்திரோபாயங்களால் காஷ்மீரை முன்னெப்போதையும் விட நிலைமை மோசமாக்குமே தவிர காஷ்மீர் மக்களின் மனதை வெல்ல முடியாது என்பது இதுவரையான அனுபவம்.

அப்துர் ரஹ்மான் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *