இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்த கோவாக்சின் தடுப்பூசியின் தரம், செயல்திறன் ஆகியவற்றைக்காரணங் காட்டி அதனை வாங்கி விநியோகிக்கும் ஒப்பந்தம் பெற்ற நாடுகளில் மேற்படி தடுப்பூசி உபயோகத்துக்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது உலக சுகாதார நிறுவனம். கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதியன்று தான் அவசரகால அனுமதியை கோவாக்சினுக்கு வழங்கியது உலக சுகாதார நிறுவனம். ஆனாலும் கோவாக்சின் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனங்களால் அங்கீகரிக்கப்படவில்லை. ஏனெனில் ஆரம்பம் முதலே கோவாக்சின் முறையான ஆராய்ச்சி படிநிலைகளைக் கடந்து வரவில்லை.

மூன்று கட்டப் பரிசோதனைகளின் முடிவு வெளிவருவதற்கு முன்பாகவே அவசரகால தேவை, தேசபக்தி கூச்சல்களுக்கிடையே இந்திய தயாரிப்பு என்ற மார்தட்டலுடன் கொல்லைப் புற வழியாக உள்ளே நுழைந்த மருந்து இது. மருத்துவர்கள், தொற்றுநோய் நிபுணர்கள் ஆகியோரின் பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடியின் ‘ஆத்மநிர்பர்’ பெருமைப் பீற்றலுக்காக இந்திய மக்கள் மீது உரியதேசபக்த அழுத்தத்துடன் திணிக்கப்பட்டது.

தற்போது நிறுவனத்தின்  ஆய்வுக்கும் ஒத்துழைப்புத் தரும் அதே வேளையில் தயாரிப்புப் பணிகளின் வேகத்தையும் குறைத்துள்ளது பாரத் பயோடெக் .எல்லாம் சரி.. ஆனால் இந்த தடுப்பூசியின் செயல்திறன் – தரக்கட்டுப்பாடு ஆகியவைக் குறித்து கேள்வி எழுப்பியவர்களையே ஏதோ தேச விரோதி, விஞ்ஞான விரோதி அளவுக்கு அலங்கோலமாக்கிக் கிழித்துத் தொங்க விட்ட அறிஞர்கள் இப்போது அதே காரணத்திற்காக மொக்கை ஆகியிருக்கும் பாரத் பயோடெக்கை என்ன சொல்லப் போகிறீர்கள்..?

கோவாக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் நிர்வாக இயக்குநர் கிருஷ்ணா எல்லா 2020 ஆகஸ்ட் மாதம் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது கோவாக்சின் தடுப்பூசிஒரு தண்ணீர் பாட்டில் விலையில் ஐந்தில் ஒருபங்கே இருக்கும் என்றார். கிட்டத்தட்ட ஐந்து ரூபாய்க்கும் குறைவாகவே கிடைத்திருக்க வேண்டிய மருந்தின் விலை 1200 ரூபாயாக ஏன் நிர்ணயிக்கப்பட்டது? அப்படி நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தற்போது அதிரடியாக ₹225 என குறைத்து அறிவித்துள்ளது பாரத் பயோடெக்.

ஆக மக்கள் உழலும் துயரக் குட்டைகளிலேயே மீன் பிடித்துப் பழகியவர்களுக்கு, அதையே உணவாக்கித் தின்று கொழுத்தவர்களுக்கு காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்ளும் இப்படியான எண்ணம் தோன்றாமல் இருந்தால் தான் ஆச்சரியம்! சீரம் இன்ஸ்டிட்யூட்டின் நிர்வாக இயக்குநர் ஆதம்பூனாவாலா தமது நிறுவனத்தயாரிப்பான கோவிஷீல்டை ரூபாய் 150க்கு விற்றாலே நல்ல லாபம் கிடைக்கும் என்று அறிவித்தபோது அவருக்கு ஏகப்பட்ட அழுத்தங்கள் வந்தன. அதைத் தொடர்ந்து அவர் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் தங்கிவிட்டதாக டைம்ஸ் இதழுக்கு பேட்டியளித்தார். இதன்பிறகு சீரம்இன்ஸ்டிட்யூட் அறிவித்தவிலையில் 300 ரூபாய் கூடுதலாக விற்றுக்கொள்ள அனுமதி வழங்கியது மக்கள்நல அரசு.

தடுப்பூசி வாங்குவதில் தொடங்கி அவற்றை விதியோகிப்பது, அதற்கான ஏற்பாடுகளை செய்வது என்பது வரை கோடிகள் புரளும் ஒரு திட்டம் ஏராளமானவர்களுக்கு திருவிழாவாகத்தான் இருந்திருக்கும் என்பதால் இந்த அரசும் தடுப்பூசி திருவிழா என்றே மூலை முடுக்கெல்லாம் நடத்திக் கொண்டாடியது.

ஆக, இப்போதுநாம் என்ன சொன்னாலும் யார்யாரோ கல்லா கட்டிய கோடிகளில் இருந்து நமக்கு அம்மஞ்சல்லி தேறாது. அந்த கோடிகளைத் தான் வரி, வரியா நம்முதுகில் விழுற அளவுக்கு அடியோ அடின்னு யார்யாரோ அடிக்கிறார்கள். அடுத்தவன் வீட்டு நெய்யே.. என் பெண்டாட்டி கையே என்ற ரீதியில் ஒரு அல்வாகிண்டி ஆளாளுக்கு வழித்து சாப்பிட்டுவிட்டார்கள். இனி கோவாக்சின் ஊசி போட்டவன் எப்பாடுபட்டால் யாருக்கென்ன.

லியாக்கத் அலி – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *