சுதந்திரமடைந்து முக்கால் நூற்றாண்டுகளைக் கண்ட பின்பும், நாம் சுதந்திர மனிதர்களாக தான் இருக்கின்றோம்? என எண்ண வைக்கும் ஏராளமான சம்பவங்களை இந்நாடு குறிப்பாக கடந்த சில பத்தாண்டுகளாகக் கண்டு வருகின்றது. மதம், இனம், மொழி என எந்த அடிப்படையிலும் பாரபட்சமற்ற சுதந்திர – சமத்துவ நாடு ‘இந்திய குடியரசு’ என்பதும், அது இங்குள்ள அனைவருக்குமான சம வாய்ப்பை எல்லா காலங்களிலும் வழங்கும் என்பதும் ஏனோ ஏட்டளவில் மட்டும் தான் என்றாகி விட்டது நடக்கும் பல நிகழ்வுகள் தரும் படிப்பினை!

சிறுபான்மையின மக்கள் அதிலும் குறிப்பாக, முஸ்லிம்கள் இன்று அவர்களின் நம்பிக்கைகளுக்காக அல்லது அவர்களின் நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளுக்காக விமர்சிக்கப்படுவதெல்லாம் தாண்டி “முஸ்லிம்” என்ற ஒற்றை காரணத்திற்காகவே இன்றைய பாசிச – இந்துத்துவவாதிகள் குறிவைக்கப் படுகின்றனர். சமய நம்பிக்கைகளைத் தாண்டி, ஏதேதோ காரணங்களும், கற்பிதங்களும் – அவை எவ்வளவு அபத்தமானவைகளாக இருந்தாலும், முஸ்லிம்களை அழித்தொழிக்க இன்று பாசிஸ்டுகளால் ஆயுதம் ஆக்கப்படுகின்றன.

இறைச்சி விவகாரத்தில் தொடங்கி, தொப்பி அணிந்து இருந்தார் என்பதற்காக கொல்லப்பட்டதில் வளர்ந்து இன்று தலையில் இடும் முக்காடுத்துனியும் கூட முஸ்லிம் அரசியலின் பேசு பொருளாக மாறி நிற்பது பெருங்கொடுமை.

கல்வி கற்பதற்கான எல்லாத் தடைகளையும், பாரபட்சங்களையும் நீக்கி – கல்வியை அனைத்து சாமானியனுக்கும் சாத்தியமாக்கும் அரசியல் சாசனத்தை கொண்டிருக்கும் நாட்டில் தான் உடையை காரணங்காட்டி கல்வியை மறுக்கும் பெரும் கொடுமை இன்று அரங்கேறி வருகின்றது. பல மாதங்களாய் வெளியில் தெரியாமல் நடந்த இந்த அநீதி கடந்த 20 நாட்களாக வகுப்பறைக்குள் விடாமல் வெளியிலேயே நிறுத்தி வைத்த நிலையில் இதுவரை சட்டபூர்வமான எந்தவித நடவடிக்கைகளும் மனிதாபிமான அடிப்படையிலுங்கூட எடுக்கப்படவில்லை என்பதில் தான் அது வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது. “தலை முகத்திற்கு எதிர் காவி துண்டு” என்பது எவ்வளவு கடைந்தெடுத்த பாசிசத் தனம். ஒரு குழு ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் இருப்பதனாலேயே ஒரு நாட்டின் நிறத்தை மாற்ற முயலும் ஆபத்தின் வெளிப்படையான சம்பவம் இதுதான்.

இந்திய அரசு என்பது மதச்சார்பற்றது.. ஆனால் அது மக்களை மத நம்பிக்கைகளை விட்டு வெளியேறிடவோ, குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் பின்பற்றவோ எங்குமே கூறவில்லை “அரசு தன்னளவில் எல்லா மதங்களுக்கும் சம உரிமை கொடுத்து நடக்கும்” என்பதுதான் இந்தியா பேசும் ‘மதச்சார்பின்மை’.

ஆனாலும் கூட இதனை அரசோ, அரசு எந்திரங்களோ ஒரு லோக்கல் டவுன் பஸ்ஸில் கூட இதுவரை நடைமுறைப்படுத்தியது இல்லை. இது குறித்து பிற மத நம்பிக்கை கொண்டவர்களோ, மத எதிர்ப்புணர்வாலளர்களோ என்றைக்குமே கேள்வி எழுப்பியதும் இல்லை. அதுதான் மத சகிப்புத் தன்மை மிக்க இந்தியா. ஒருவகையில் அதுதான் நமக்கான இந்தியாவும் கூட!.

ஆனால் இன்று? நாங்கள் X மற்றவை என்கிற மற்றமைகளை மையப்படுத்தியே அரசியல் நடக்கின்றது. அத்தகையவர்களை மட்டுமல்ல, இவர்களைக் கண்டிக்காது, கண்டும் – காணாது, வெறுமனே மௌன சாட்சிகளாகக் களைந்து செல்லும் “பொதுவானவர்கள்”, “லிபரல்கள்” என்றொரு பதுங்குக்குழியைப் பாசாங்குத்தனமாகப் பயன்படுத்துபவர்களுக்கும் சிலவற்றை இங்கே பேசித்தீர்க்க வேண்டியிருக்கின்றது. ஏனெனில், வழக்கம்போல் பொதுப் பிரச்சினைகள், மக்கள் சேவை என்ற வரிசையில் முஸ்லிம் பிரச்சினைகளை முஸ்லிம்கள் மட்டும் தான் மீண்டும் மீண்டும் இந்நாட்டில் பேச வேண்டி இருக்கின்றது.

முதலாவதாக, உடை என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கும், சமூகத்திற்கும் அவர்களது கலாச்சாரம் சார்ந்த அம்சமாகவே வெளிப்படும். இதுதான் சமூக-அறிவியல் ரீதியில் நிறுவப்பட்ட உண்மை. இங்கு கலாச்சாரம் என்பது மதம் சார்ந்தும் இருக்கலாம் அல்லது அவர்களது தனிப்பட்ட வாழ்வியல் முறைகள் சார்ந்தும் அமையலாம்.

இரண்டாவதாக, எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக் கொள்ளவும், மறுக்கவும் எல்லா மனிதர்களுக்குமே சுதந்திரம் இருக்கின்றது. ஆனால் இந்த சுதந்திரத்தின் எல்லை என்பது பிறரின் நம்பிக்கைகளில் – நடைமுறைகளில் குறுக்கீடும், இடையூறும் ஏற்படுத்தக் கூடியதாகவும் ஒருபோதும் இருந்திடக் கூடாது!

மூன்றாவதாக, பல்லின – பல்கலாச்சார சமூகம் என்பது இயற்கையானது. இன்று இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த பூவுலகும் ஒரு கிராமமாகிவிட்ட இன்றைய நிலையில், நான் – எனது என்பது போன்ற குறுங்குல வாதங்கள் பேசி, இந்த குருகுல வாதங்களின் அடிப்படையில் தம்முடைய கற்பிதங்களை பொது வழியில் நிலைநாட்டவும், மற்றமைகளை இல்லாதொழிக்கவும் பாசிசப் போக்குடன் செயல்படுவது என்பது ஒழுக்க அடிப்படையிலும், சட்ட ரீதியாகவும் மிகவும் பிற்போக்கானது என்பது மட்டுமல்ல, வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியதும் கூட!

நான்காவதாக, இன்றைக்கு இந்தியாவில் பெருகிவரும் இத்தகைய நடவடிக்கைகள் பொது சமூகத்தால் வேடிக்கை மட்டுமே பார்க்கப்பட்டு கடந்து போகும் நிகழ்வுகள் கூட பாசிச சக்திகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தவே துணைபுரியும். எல்லாவற்றையும் கருப்பு – வெள்ளையாக மட்டும் பார்க்காமல், ஒவ்வொரு இனக்குழு / சமூகத்தின் தனித்துவம் காக்கப்பட வேண்டுமெனில், பொதுமக்கள் இத்தகைய போக்குகளை மௌனமாக கடந்து செல்லாமல் அதன் தவறுகளை, ஆபத்துக்களை உணர்ந்து தட்டிக்கேட்க முன்வரவேண்டும்.

ஐந்தாவதாக, சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் கல்வி நிலையங்களில் இது போன்ற பிற்போக்கு சக்திகளின் ஆதிக்கம் வலுப்பெறுவது உண்மையில் நாளைய இந்திய தேசத்தின் பிரகாசத்தை பெருமளவில் மங்கச்செய்யும் பெருந்தீமை என்பது உணரப்பட வேண்டும். சர்வதேச அளவில் நாட்டின் கண்ணியமும். மாண்பும் இன்றும் – நாளையும் தக்க வைக்கப்பட வேண்டுமெனில், கல்வி வளாக நடவடிக்கைகளை சீர்படுத்தி – முறைப்படுத்த குறைந்தபட்ச நியாய உணர்வுள்ள கல்வியாளர்கள் முன்வந்து, வாய்திறந்து இத்தகைய கோர நிகழ்வுகளிலாவது பேச வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, எது பிரச்சனை என்று கூறப்படுகிறதோ அது – உடை – உண்மையில் பிரச்சினைக்குரிய அம்சமா? என்பதும் இங்கு விவாதிக்கப்பட வேண்டிய ஒரு முக்கியமான கூறு. ஆனால் எனது சிற்றறிவிற்கு எட்டிய வகையில் அத்தகைய ஒரு உரையாடலே இங்கு எழவில்லை, எழுப்பப்படவுமில்லை என்பது பெரும் வருத்தத்திற்குரிய ஒன்று!

இந்தியா ஒரு பல்லின – பல்கலாச்சார குடியரசு என்பதைத்தாண்டி, இங்குள்ள குடிகள் ஒவ்வொன்றும் தத்தமது நம்பிக்கைகளின்படி வாழவும், அவற்றை வெளிப்படையாக பின்பற்றவும் ஏன் பிரச்சாரம் செய்யவும் கூட அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதத்தை வழங்கியிருக்கின்றது. நடைமுறையிலும் கூட எத்தனையோ இந்திய இனங்கள் தத்தமது மத கலாச்சார நடைமுறைகளின் அடிப்படையில் திருநீரு, தாடி திலகம், கைகாப்பு, சிறுகத்திகள், தலைப்பாகை, மத குறியீடுகளைத் தாங்கிய அழகிய கழுத்தணிகள் என தங்களது அன்றாட வாழ்வை வாழ்வதோடு, அதே கலாச்சார உடையில் அரசுப் பணிகளிலும் செயல்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம்.

இந்தியா என்றில்லை அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட உலகின் ஏனைய நாடுகளிலும் சட்டப்பூர்வமாகவே கூட இத்தகைய மத அடையாளங்களோடு கல்வி மற்றும் தொழிற்கூடங்களில் பணியாற்றுவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை. இன்றைக்கு சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே இங்கிருந்து சென்ற நமது சீக்கிய சகோதரர்கள் சட்டப்பூர்வமாகவே இங்கிலாந்தில் தலைப்பாகை அணிந்து அங்குள்ள அரசுப்பணிகளில் பணியாற்றிட உரிமை பெற்றிருக்கிறார்கள் என்பது இங்கு கவனத்திற்குரியது.

இங்கிருந்து சென்று எங்கெங்கோ உரிமை பெற்று தத்தமது மத அடையாளங்களோடு தொழில் செய்யும் இடங்களிலும், கல்வி நிலையங்களிலும் கல்வி பயிலவும், பணிபுரியவும் முடியும் நிலையில், இங்கு மட்டும் ஏன் பிற சிறுபான்மையினருக்கு அத்தகைய உரிமைகள் மறுக்கப்படுகின்றன? என்பது விவாதத்திற்குரிய கேள்வி. இக்கேள்வியில் தான் இன்றுள்ள அதன் அரசியலையும் நாம் புரிந்துகொள்ள முயலவேண்டி இருக்கின்றது.

ஓர் உதாரணம் தருகின்றேன். கடந்த அக்டோபர் 2020இல் உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் “தாடி” வைத்த குற்றத்திற்காக இன்தசார் அலி என்கிற உதவி காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். “முறையாக கடிதம் எழுதி அனுமதி கேட்டு விட்டுத்தான் தான் தாடி வைத்ததாகவும், ஆனால் அனுமதி கொடுக்கப்படாமலேயே தாடி வைத்தீர்கள் என்று குற்றம் சாட்டி தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகவும்” ஊடகங்களில் அப்போது பேட்டி அளித்திருந்தார். வழக்கம்போல் நமக்கு ஒரு நாள் செய்தியாக மறைந்துவிட்ட இந்த கால் பத்தி செய்திக்குப் பின் ஒரு குடும்பம் தனது வருவாயை இழந்து விட்டதோடு, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட மாவட்ட காவல் ஆய்வாளர் அபிஷேக் சிங் “தனக்கு அப்படித்தான் உத்தரவு வந்தது. அதன்படிதான் நான் செய்தேன். மேற்கொண்டு இதில் சொல்வதற்கு எனக்கு கருத்து ஏதுமில்லை!” என்று கூறியதோடு இது குறித்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் கேள்விக்கு பதிலை முடித்துக் கொண்டதும் நம்மில் பலருக்குத் தெரியாது.

நிறைவாக, உடுப்பி மாவட்ட கல்விவளாக உடை நிகழ்வு என்பது உண்மையில் ஒரு நாடகத்தின் ஓர் காட்சி போன்றது தான். தொடர்ந்து பல பத்தாண்டுகளாக வளர்ந்து இன்று ஆட்சிக்கட்டிலில் வந்துவிட்ட பாசிசத்தின் அடுத்தடுத்த செயல் திட்டங்களில் இது ஓர் சிறிய சம்பவம் மட்டுமே. இன்றைக்கு இந்தியாவில் தேசம், தேசிய அடையாளம், தேசியம் என்பவை எல்லாம் ஓட்டரசியலாக மாற்றப்பட்டுவிட்ட சூழ்நிலையில், இது போன்ற செயல்கள் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டால், அடுத்தடுத்து சமூகத்தின் எல்லா துறைகளிலும் – எல்லா மட்டங்களிலும் இந்த ஒற்றை அடையாளப்படுத்தும் அரசியல் தொடர்ந்து நிகழவே செய்யும்.

Center for the Study of Developing Societies (CSDS) என்கிற சமூக-அறிவியல் ஆய்வு மையம் இந்தியா நெடுகிலும் பல ஆய்வுகளின் அடிப்படையில் மாதிரிகளை எடுத்து தொகுத்தளித்த ஆய்வறிக்கை இதைத்தான் அறிவியல் பூர்வமாக கூறுகின்றது.

  • ஜனநாயகத்திற்கான ஆதரவு நிலை குறைந்துள்ளது
  • மத அடிப்படையிலான பிரிவினைகள் தலை தூக்கிவிட்டது
  • இந்தியன் என்பது இந்து என்பதும் ஒன்று தான்
  • பன்மைத்துவம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை

இவைதான் இன்றைய இந்திய பெரும்பான்மை மக்களின் அரசியல் கருத்துநிலைகள். நிச்சயம் இவைகளுக்கும், “இந்தியா” எனும் இறையாண்மைக்கும் கிஞ்சிற்றும் தொடர்பில்லாததை நாம் அறிவோம். அறிய வேண்டியர்களுக்கு அறியத்தருகிறோமா?

நாடு சந்தித்து வரும் எத்துணையோ சவால்கள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. அதில் இப்போது நாம் பேசி உள்ளவையும், இதுவரை கண்ட நிகழ்வுகளும் கடுகளவே!

சிந்திப்பதற்கும், உரையாடுவதற்கும் இன்றும் வாய்ப்பிருக்கின்றது. ஆனால் வெற்றி அதனை எவ்வளவு விரைந்து, வீரியமாய் முன்னேடுக்கின்றோமோ அதிலேதான் தங்கியிருக்கின்றது.

ஃபஹ்ருத்தீன் அலி அஹ்மத் – எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *