ஜனவரி மாதம் 27 ஆம் தேதி திருச்சியில் வழக்கம் போல அமைதியாக விடிந்தாலும் அந்த நாள் முழுவதும் அமைதியாக இல்லை.அதற்கு காரணம் திருச்சியின் முக்கிய பகுதியில் நடந்த படுகொலை.


பொதுவாக கொலைகள் எந்த பகுதியில் நடந்ததோ அங்கு தான் பரபரப்பு ஏற்படும்.ஆனால் அன்று நடந்த படுகொலை தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.ஏன் என்றால் அந்த கொலையை செய்தவர் பாபு என்கிற இஸ்லாமியர் கொலை செய்யப்பட்டவர் விஜயரகு என்கிற பா.ஜ.க பிரமுகர்.இந்த கொலை நடந்த உடனேயே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பா.ஜ.க பிரமுகர் கொலை என சமூக வலைத்தளங்கள் மூலமாக பரப்பி விடப்பட்டது. பா.ஜ.க வின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இஸ்லாமிய பயங்கரவாதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தன் விஷத்தை டிவிட்டரில் கக்கினார்.நேரம் செல்ல செல்ல பரபரப்பும் அடுத்து என்ன நடக்குமோ என்கிற அச்சமும் மக்களிடையே நிலவியது.
பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க வின் முக்கிய நிர்வாகிகள் திருச்சியில் முகாமிட்டனர்.எல்லோரும் ஒரே குரலில் படுகொலை செய்யப்பட்ட விஜயரகு சி.ஏ.ஏ சட்டத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார் அதனை பொறுத்து கொள்ள முடியாமல் இஸ்லாமிய பயங்கரவாதிகள் அவரை கொலை செய்து விட்டார்கள் என கூறிக்கொண்டே இருந்தனர்.இது தவிர தமிழ்நாடு இஸ்லாமிய பயங்கரவாதிகளின் கூடாரமாக ஆகிவிட்டது என தங்களின் இஸ்லாமிய வெறுப்பை வார்த்தைக்கு வார்த்தை கூறினர்.பொதுமக்களும் உண்மை நிலை என்ன என்பது தெரியாமல் இருந்தனர்.இந்த நிலையில் கொலை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மண்டல ஐ.ஜி அமல்ராஜ், நடைப்பெற்ற கொலைக்கும் மதத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.இது தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக தான் நடந்தது.இந்த கொலையில் இரண்டு மதத்தை சேர்ந்தவர்கள் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். ஐ.ஜி யின் இந்த தகவலின் பின் தான் அடுத்து என்ன நடக்குமோ என செய்வதறியாமல் இருந்த இஸ்லாமிய இயக்க தலைவர்களும்,பொது மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இந்த விவகாரத்தை பொறுத்தவரை இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது என்பதும் அதன் காரணமாகவே கொலை நடந்துள்ளது என்பதும் பா.ஜ.க வினருக்கு நன்கு தெரியும் இருந்தபோதும் அவர்களின் கொள்கையான இஸ்லாமிய வெறுப்பை பரப்பி விட்டு அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடுவது என்பதை தமிழ்நாட்டிலும் மேற்கொள்ள முயற்சித்தார்கள்.ஆனால் வட இந்தியாவில் வெறுப்பை விதைத்து கலவரம் நடத்துவது என்கிற சங்பரிவாரிகளின் செயலை தமிழகத்தில் எப்படியாவது செய்து விட வேண்டும் என சங்பரிவார கூட்டம் எத்தனிக்கிறது.
உண்மை காரணங்களை காவல் துறையினர் கூறி குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்த பின்பும் ஆரம்பத்தில் சி.ஏ.ஏ க்கு ஆதரவாக செயல்பட்டதால் விஜயரகு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என கூறிய ஹெச்.ராஜா,அர்ஜீன் சம்பத் போன்றோர் இந்த விவகாரத்தில் அவர்கள் எதிர்பார்த்த எதையும் செய்ய முடியாத விரக்தியில் இந்த கொலை லவ் ஜிஹாத் காரணத்தினால் தான் நடந்தது என அவர்களின் கருத்தை வழக்கம் போல் அவர்களே மாற்றி கூறினர்.


இஸ்லாமிய வெறுப்பு என்பதை அந்த கட்சியின் அடிப்படை உறுப்பினர் அனைவருக்கும் ஊட்டப்பட்டுள்ளது.அதன் விளைவாக இஸ்லாமிய பெயர் கொண்ட ஒருவர் கொலை செய்து விட்டார் என தெரிந்த உடனே பயங்கரவாத செயல்,தீவிரவாத செயல் என பேசி தங்கள் உணர்வை வெறுப்பாக வெளிக்காட்டினார்கள்.

ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் அதுவும் திருச்சி போன்ற நகரங்களில் அவர்களின் செயல் எப்போதும் எடுபடாது.இந்த கொலைக்கு காரணம் முன்விரோதம் தான் என தெரிந்ததும் இஸ்லாமியர்களை விட அதிக அளவில் நிம்மதி அடைந்தவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் தான்.கொலை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் அந்த கொலையை தங்களது அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் போது கொலை செய்யப்பட்டவர் மீது வரும் பரிதாபம் என்பது மறந்து அதை அரசியலாக்குபவர் மீது வரும் கோபம் அதிகமாகும்.அத்தகைய கோபம் இந்த விவகாரத்திலும் நடந்தது.
இந்த கொலையை தொடர்ந்து நடந்த பா.ஜ.க வினரின் சில அடாவடி தனங்கள் நிச்சயம் பா.ஜ.க வினர் மீது சில மக்கள் வைத்திருந்த சிறிய அளவிலான நம்பிக்கை முற்றிலுமாக தகர்ந்தது என்றே சொல்லலாம்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை வெறுப்பை விதைத்து அரசியல் லாபம் சம்பாதிக்கலாம் என நினைத்தவர்களின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது.இதற்கு முன்பு எத்தனையோ கொலைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது.எத்தனையோ இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அவர் சாார்ந்த மதத்தவர்களாாலேயே

அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.ஆனால் அப்பொழுது எல்லாம் ஒரு வார்த்தை கூட பேசாத சங்பரிவார கும்பல் அவர் கொள்கை சார்ந்த ஒருவர் முன்விரோதம் காரணமாகவோ அல்லது வேறு ஏதோ தனிப்பட்ட காரணங்களுக்காகவோ கொல்லப்பட்டால் குறிப்பிட்ட மதத்தை குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களை குற்றம்சாட்டி மத வெறுப்பை உருவாக்குகிறார்கள்.மத வெறுப்பை விதைத்து அவர்கள் அறுவடை செய்ய விரும்பியது கோவை சசி குமார் இறந்த போது அவரது இறுதி ஊர்வலத்தில் நடந்தது.அதையே திருச்சி விஜயரகு கொலை சம்பவத்திலும் அவர்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் நல்வாய்ப்பாக அது போன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.

அரசியல் என்றாலே அது வெறுப்பை விதைப்பது தான் என்கிற கொள்கையின் அடிப்படையில் நடைப்போட்டு கொண்டு இருக்கும் பா.ஜ.க வால் தமிழ்நாட்டில் ஒரு போதும் வெற்றி பெற முடியாது.அதை அவர்கள் ஒரு போதும் உணரமாட்டார்கள்.வெறுப்பரசியலை அவர்கள் மேற்கொள்ளும் வரை அவர்களுக்கு தோல்வியும்,மதச்சார்பற்ற ஜனநாயகவாதிகளுக்கு வெற்றியும் தான் கிடைத்து கொண்டே இருக்கும் என்பது தான் நிதர்சனம்.

  • முஜாஹித்

12 thoughts on “படுகொலையும் – பா.ஜ.க வின் வெறுப்பரசியலும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *