கன்னியாகுமரியில் பாரத மாதாவை இழிவுபடுத்திப் பேசிய குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார் அருட்தந்தை ஜார்ஜ் பொன்னையா. அவரைக் கைது செய்ததோடு ஆளும் திமுகவின் முன்னணி தலைவர்கள் அதனை நியாயப்படுத்தி வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சி.பி.எம் கட்சி அவருக்கு எதிராக கன்னியாகுமரியில் போஸ்டர் ஒட்டுகிறது. குமரி காங்கிரஸ் தவிர, தலைமைப் பொறுப்பில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்களும் ஜார்ஜ் பொன்னையா மீது தவறு இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். ஆக, பாரத மாதாவைத் தமிழ்நாட்டில் படிப்படியாக இந்துக் கடவுளாக மாற்றும் பணிகள் நம் கண்ணெதிரே நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. செந்தில் வேல், புதிய தலைமுறை கார்த்திகேயன் உள்ளிட்ட இந்து லிபரல் ஊடகவியலாளர்களும் பாரத மாதாவை இந்துக் கடவுளாகவும், பாரத மாதா குறித்து பேசுவது இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகவும் கருதுகிறார்கள்.

பாரத மாதா என்பது இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரின் தேச பக்தியை அளவிடும் கருவியாகவே தொடக்கத்தில் இருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டு ‘பாரத் மாதா கி ஜெய்’ என்று சொல்லாததால், ஒவைசியின் கட்சியைச் சேர்ந்த வாரிஸ் பதான் மகாராஷ்ட்ராவில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்திய ராணுவத்தின் முழக்கமாகவும் ’பாரத் மாதா கி ஜெய்’ முன்வைக்கப்படுகிறது. ஆனால், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் கலவரம் செய்யும் கும்பல்களாலும், முஸ்லிம்களை வேட்டையாடி கும்பல் படுகொலை செய்யும் சங் பரிவார் அமைப்பினராலும் இந்த முழக்கம் பிரதானமாகக் கேட்கிறது.

1870களில் வங்காளத்தில் பங்கிம் சந்திர சத்தோத்பத்யாய் எழுதிய ‘ஆனந்த மதம்’ என்ற நாவலில் அறிமுகப்படுத்தப்பட்ட கதாபாத்திரம், ’பாரத மாதா’. இந்த நாவல் 1770களில் வங்காளத்தில் நிகழ்ந்த கடும் பஞ்சத்தின் பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த நவாப்களை எதிர்த்து இந்து சாமியார்களும், முஸ்லிம் பக்கிர்களும் கிளர்ச்சி செய்த இந்த நிகழ்வை மாற்றம் செய்தார் பங்கிம் சந்திர சத்தோத்பத்யாய். இஸ்லாமியர்களான நவாபும், அவரது வரி வசூலிப்பாளர்களும் இந்து மக்களின் மீது வன்முறை செய்ததாகவும், பஞ்சம் ஏற்பட்ட போது இந்துக்கள் காட்டில் சாமியார்களோடு தஞ்சம் புகுந்ததாகவும், சாமியார்கள் அவர்களுக்கு புதிதாகக் கடவுள் ஒன்றின் கோயிலைக் காட்டியதாகவும், அந்தக் கடவுளின் துணையோடு நவாபின் படைகளை இந்து மக்கள் வென்றதாகவும் இந்தக் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்தக் கடவுள் தாய்நாட்டின் உருவம் என்றும், அது ‘பாரத மாதா’ எனவும் இந்தக் கதை கூறுகிறது. இப்படியான கற்பனை கதாபாத்திரமாக சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாரத மாதா, தற்போது இந்தியாவின் தேசப்பற்றின் அளவுகோல்.

பங்கிம் சந்திராவின் நாவலுக்குப் பிறகு, பிரிட்டிஷ் வரைந்து கொடுத்த இந்திய வரைபடங்களில் பாரத மாதாவை வரையும் போக்கு உருவானது. 1936ல் காசியில் பாரத மாதாவுக்குக் கோயில் கட்டப்பட்டு, அதனை காந்தி திறந்து வைத்தார். அந்தக் கோயில் எந்த உருவமும் இன்றி, வெறும் இந்திய வரைபடமாகவும், அனைவரும் பயன்படுத்தும் இடமாகவும் காந்தி திறந்து வைத்த போது இருந்தது என்ற வரலாற்றுக் குறிப்புகள் இருக்கின்றன. மேலும், காந்தியின் திறப்பு விழாவுக்கு வந்த தலித்துகள் தங்களைச் சுத்தம் செய்து பாரத மாதா கோயிலுக்குள் வருவதற்கு சோப்புகள் வழங்கப்பட்டதாகவும் இந்தக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளன. காலப் போக்கில், இந்திய வரைபடம் மாற மாற, அதற்கேற்ப பாரத மாதாவின் உருவமும் மாறியிருக்கிறது.

‘பாரத மாதா’ இந்து உயர்சாதி ஆண்களின் கருத்துருவாக்கத்தால் உருவாக்கப்பட்டிருக்கும் சித்திரம். பெண்மையைக் குழந்தைப் பேறொடு மட்டுமே இணைக்கும் போக்கின் வழியாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தச் சித்திரத்தை, தாய்நாட்டைக் காக்க அதிகமாக மகன்களைப் பெற்றுத் தருமாறு பிரார்த்தனையும் செய்யப்படுகிறது. மேலும், இந்தியாவின் தலித், இஸ்லாமிய, கிறித்துவ, பழங்குடி பெண்களின் தோற்றத்தில் இல்லாத பாரத மாதா, தலை முதல் கால் வரை தங்க நகைகள் அணிந்த உயர்சாதி, பணக்கார வீட்டுப் பெண்ணின் தோற்றத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆண் மையவாத சிந்தனையில் உருவாக்கப்பட்டிருக்கும் பாரத மாதாவின் ஓவியங்கள் காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களை அடைந்திருக்கின்றன. பகத் சிங்கின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, பகத் சிங் தனது தலையை பாரத மாதாவின் காலில் சமர்ப்பிப்பது தொடங்கி, சமீபத்தில் கொரோனாவைத் தனது சூலத்தால் வதம் செய்யும் பாரத மாதா வரை வெவ்வேறு பாரத மாதாக்களின் படங்கள் கிடைக்கின்றன.

பங்கிம் சந்திர சத்தோத்பத்யாய் எழுதிய ‘ஆனந்த மதம்’ நாவலில் ‘வந்தே மாதரம்’ பாடல் எழுதப்பட்டிருக்கிறது. துர்கையின் வடிவத்தில், தாய்நாட்டின் கடவுளை வடிவமைத்து, ’பாரத மாதா’ எனப் பெயர் சூட்டி, அதற்காக எழுதப்பட்ட வாழ்த்துப் பாடல் அது. இதன் பின்னணியில் இருக்கும் இந்துத் தேசிய சிக்கலை உணர்ந்த ரபீந்தரநாத் தாகூர், அப்போதைய காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சந்திர போஸ்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் தாகூர், “வந்தே மாதரத்தின் அடிப்படையே துர்கையைப் போற்றும் சாயலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் முஸ்லிம்களைப் பத்து கைகள் கொண்ட தெய்வத்தைத் தாய்நாட்டின் உருவம் என வணங்கச் செய்து, தேச பக்தியை நிரூபிக்க வைப்பது தவறானது. பங்கிம் சந்திராவின் நாவல் கற்பனையானது; இலக்கிய அடிப்படையில் அணுகப்பட வேண்டியது. அதில் வரும் பாடலை அந்தக் கதையோடு அணுகலாம். நாடாளுமன்றத்திற்குள் அரசியல் செய்வதற்காக அதனைப் பயன்படுத்த முடியாது” என்றார். தாகூரின் அச்சத்தைக் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு கட்சிகளும் புறக்கணித்திருக்கின்றன.

பாரத மாதா குறித்த பேச்சுக்காக ஜார்ஜ் பொன்னையாவைக் கைது செய்திருப்பதன் மூலம், திமுக தான் ’நடுநிலையான’ கட்சி என்பதை நிரூபித்திருக்கிறது. ஜார்ஜ் பொன்னையாவை விமர்சிப்பதன் மூலம், ’நாங்கள் தவறு செய்யும் சிறுபான்மையினரையும் கண்டிக்கும் நடுநிலையாளர்கள்’ என்று லிபரல்களும் நிரூபிக்க முயற்சி செய்கிறார்கள். இதன் மூலம், பாரதிய ஜனதா கட்சி இந்து மக்களிடையே எந்த உணர்வையும் தூண்டிவிடாமல் இருக்கவும், ’நாங்கள் இந்துக்களின் பக்கம் நிற்பவர்கள்’ என்ற செய்தியை உணர்த்துவதற்காகவும் இந்தக் கைது நிகழ்ந்திருக்கிறது. பெரும்பான்மை இந்து மதத்தை விமர்சிப்பதைப் போல,சிறுபான்மை இஸ்லாமியர்களையும், கிறித்துவர்களையும் விமர்சிப்போம் என்று பர்னிச்சர் உடைக்கும் ஆன்லைன் லும்பன்கள் வெறும் நூற்றாண்டு பழமை கொண்ட இந்துத்துவ பாரத மாதா குறித்து தர்க்க ரீதியான விமர்சனங்களைச் செய்வார்கள் என நம்புகிறேன்.

ஹெச்.ராஜா ஜவாஹிருல்லாஹ் குறித்து பேசிய போது, ’வெறி நாய்’ என்று நழுவியவர்கள், ஜார்ஜ் பொன்னையா மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பது பெரும்பான்மைவாதத்தின் திமிர்ச் செயல். பெரும்பான்மைவாத மக்கள் தூண்டப்படும் விளிம்பில் இருப்பதை சரிசெய்ய எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் இருக்கின்றன ஆளும் திராவிடக் கட்சிகள். தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் தனியார் நிலங்களில் மசூதியோ, தேவாலயமோ கட்ட முடியாத அளவுக்கு அறிவிப்பற்ற தடையொன்று நிலவுவது குறித்து இன்னும் பேசப்பட வேண்டும்.

இனியும் இது ‘பெரியார் மண்’ என்று பம்மாத்து காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை.

~ ர. முகமது இல்யாஸ்.

படம்: முதன்முதலாக வரையப்பட்ட பாரத மாதா உருவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *