(மொழிபெயர்ப்புக் கட்டுரை – ஆங்கிலத்தில் எழுதியவர்: முகமது அசாருதீன், தேசிய செயலாளர், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு)

தமிழில் – R. அபுல்ஹசன்

எட்டு மாதங்களுக்கு முன்பு முதல்முறையாக அசாமிற்கு சென்றதில் இருந்து ‘சந்தேகத்திற்குரிய வாக்காளர் ‘(D-Voters), அசாம் குடிமக்கள் தேசியபதிவு (NRC) பிரச்னைகளைப் பற்றி ஆய்வு செய்யத் துவங்கினேன். களநிலவரத்தை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பால் (SIO)  எனது தலைமையில் அனுப்பப்பட்ட குழுவின் மூலம் அறிவுஜீவிகள், வழக்குரைஞர்கள், சமூகபோராளிகள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள்,  மத்திய, மாநில அரசுகளால் வஞ்சிக்கப்பட்ட பொதுமக்கள் என்று பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினோம்.

முழுமையான ஆய்வறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றாலும் இந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள அசாமில் வாழும் இந்திய குடிமக்களின் அவலநிலை பற்றிய உண்மைத் தகவல்கள் தேசத்தின் பிறமாநில மக்களால் இன்னும் அறியப்படவில்லை என்பதால் அதைக் குறித்து விரைவாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.  பின்வரும் அறிக்கை அசாம் மக்களுடனான கலந்துரையாடலில் இருந்து தயாரிக்கப்பட்டது.  சில இடங்களில் நமது அவதானிப்புகளும் இணைக்கப்பட்டுள்ளன.

அசாமின் வரலாறு :

1826ல் யான்தாபோ ஒப்பந்தம் மூலம் அசாம், ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு கீழ்வந்த பிறகு அசாமின் பொருளாதார முன்னேற்றத்திற்காக பல்வேறு தரப்பினரும் அழைக்கப்பட்டனர். கல்வியறிவில் சிறந்திருந்த, ஆங்கில புலமை பெற்ற  வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் வருமானம், தபால் அலுவலகங்கள், வங்கிகள், இரயில்வே போன்ற துறைகளின் நிர்வாகத்தை கவனித்தார்கள். பிற்காலங்களில் இந்த மக்கள் அசாமிய சமூகத்துடன் இரண்டற கலந்துவிட்டனர். பிகார், ஜார்கண்ட், உத்திரபிரதேசத்தின் சில பகுதிகளில் இருந்தவர்களை அசாம் தேயிலை உற்பத்தித் தொழிலுக்காக ஆங்கிலேயர்கள் அசாமிற்கு அழைத்து வந்தனர். இவர்கள்தான் அசாமின் தொழிலாளர் சமூகமாக பரிணமிக்கின்றனர்.  இப்படி அசாமில் குடியேறிய மக்களுக்கும்,   ஆங்கிலேயர்களுக்கும் உணவு தேவைக்காக கிழக்கு வங்காளத்தில் விவசாயத்தில் சிறந்து விளங்கிய முஸ்லிம்களை அசாமிற்கு அழைத்து வந்தார்கள் ஆங்கிலேயர்கள்.  விவசாயத்திற்கு தகுந்ததான நிலங்களையும், கட்டற்ற இயற்கைவளங்களையும் கொண்டிருந்த அசாமில் முஸ்லிம்கள் உணவு,  காய்கறிகள், சணல் உற்பத்தியைப் பெருக்கினார்கள்.

துரதிருஷ்டவசமாக பிறமாநிலங்களில் இருந்து குடியேறி தற்போது அறிவுஜீவிகளாக இருப்பவர்களையும்,  தொழிலாளர்களாக இருப்பவர்களையும் தங்களுக்குள் ஒருவராக அங்கீகரித்துக் கொண்ட அசாமிய சமூகம்,  அவர்களது உணவுத் தேவைகளை பூர்த்தி செய்ய வந்த முஸ்லிம்களை அந்நியர்களாகவே பார்த்தார்கள்.

பிரச்னையும் பின்னணியும் :

 • 1998ல் அப்போதைய அசாம் ஆளுநர் S.K. சின்ஹா, தினசரி 6000 வங்கதேசத்தினர் முறைகேடாக அசாமிற்குள் நுழைவதாக அறிக்கை அளித்தார்.  அதன் உண்மைத் தன்மையை ஆராயாமலே அசாம் உயர்நீதிமன்றம் முறைகேடாக அசாமிற்குள் நுழையும் வங்கதேசத்தினரை கண்டறிந்து வெளியேற்றும்  IM(D)T  சட்டத்தை நீக்கிவிட்டது.
 • ஒரு இந்தியக் குடிமகனின் மீது D (Doubtful) முத்திரை குத்தப்படுவதன் மூலம் அவர்களது குடியுரிமை சந்தேகத்திற்குரியதாக மாற்றப்பட முடியும்.  எந்தவித முன்னறிவிப்பும்,  தகவலும் இன்றி அவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கமுடியும்.
 • எல்லையில் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் வெற்று சந்தேகத்தின் அடிப்படையில் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே ஒருவரை அந்நிய நாட்டினர் என்று முத்திரை குத்தி ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பமுடியும்
 • பாதிக்கப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்று அறியும் கல்வியறிவில்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே உள்ளனர்.
 • அவர்களது பெயருக்கு முன்னால் D முத்திரை எதற்காக குத்தப்படுகின்றது, எதற்காக சந்தேகத்திற்குரிய வாக்காளர் ஆக்கப்படுகிறார்கள் என்பதற்கான போதிய ஆதாரம் எதுவும் அதிகாரிகளிடத்தில் இருப்பதில்லை.  ஆனால் அப்படி D முத்திரை சேர்க்கப்பட்டவர்கள் வெளிநாட்டினர்களாக அறிவிக்கப்படுவார்கள்.
 • ஆணையங்களில் உள்ள அதிகாரிகளில் சிலர் பெயர், வயது, முகவரி மாற்றம், திருமணம் போன்ற தகவல்களில் காணப்படும் சிறுகுறைகளை காரணமாகக்கூறி குடியுரிமையை நிராகரிக்கின்றனர். பலசமயங்களில் சரியான ஆவணங்கள்கூட நிராகரிக்கப்பட்டுள்ளன, ஆனால் அதனைக் குறித்த எவ்வித சரிபார்ப்பும் மாநில அரசால் மேற்கொள்ளப்படுவதில்லை.
 • வெளிநாட்டினர் என்று முடிவெடுத்து அறிவிப்பதற்காக முழு அமர்வு முடிவுகளின் மூலம் உருவாக்கப்பட்ட வழிமுறைகளை ஆணையங்களோ, நீதித்துறையோ முறையாக பின்பற்றுவதில்லை. வெளிநாட்டினர் என்று அறிவிக்கும் முன்பு வைக்கப்படும் விளக்கங்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதை ஆணையங்கள் கொள்கையாகவே வைத்துள்ளன.
 • ஒவ்வொரு வருடமும் பிரம்மபுத்திரா மற்றும் பிற ஆறுகளில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால் இலட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக முஸ்லிம்கள் நிலங்களை இழந்து,  வீடுகளை இழந்து வெளியேற்றப்படுகிறார்கள்.  அரசுகள் இந்தமக்களை மீள்குடியேற்றம் செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்வதில்லை.  இப்படி நிலமற்ற,  வேலையற்ற முஸ்லிம்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளுக்காக வேலை தேடி பல இடங்களுக்கு செல்லும் போது சித்ரவதைக்குள்ளாக்கப்படுவதும்,  சந்தேகத்திற்குரியவர்கள் என்று முத்திரைகுத்தப்பட்டு பிறகு வெளிநாட்டினர்கள் என்று அறிவிக்கப்படுகின்றார்கள்.

பிமலாகாத்தூன் அரசின் பலியாடா அல்லது கல்வியறிவின்மையா?

வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்படும் சில வழக்குகளில்,  பாதிக்கப்பட்ட மக்களின் வழக்கறிஞர்கள் செய்யும் அற்பமான தவறுகளால் ஆணையங்கள் மூலம் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டு அசாம் முழுவதிலும் உள்ள 6 வெளியேற்றும் முகாம்களில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.

பிமலாகாத்தூன் என்ற பெண்ணுக்கு காவல்துறையிடம் இருந்து நோட்டீஸ் வருகிறது.  அவர் ஒரு வழக்கறிஞரை சந்தித்து தான் ஒரு இந்திய பிரஜை என்பதற்கான அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறார்.  ஆனால் அதற்கு பிறகும் அவருக்கு இரண்டு நோட்டீஸ்கள் அனுப்பப்படுகிறது.  அவரது வழக்கறிஞர், பிமலாகாத்தூனை இந்தியர் என்று நிரூபிப்பதற்கான போதிய வாதங்களை வைக்காமல் போனதால் ஆணையம் பிமலாகாத்தூனை வெளிநாட்டைச் சார்ந்தவர் என்று அறிவிக்கின்றது.

பிறகு அவரை இளையமகனுடன் காவல்துறை கைது செய்து தேஜ்பூர் மத்திய சிறையில் அடைக்கின்றனர்.  பிமலாகாத்தூன் 4 குழந்தைகளின் தாய், மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்த அவரது கணவர் சமீபத்தில் இறந்து, பிள்ளைகள் மூத்தமகனுடன் இருந்தனர்.  பிறகு மூத்தமகனும் இறந்துவிட்டார்.  தற்போது பிமலாகாத்தூன் சிறையிலும்,  பிள்ளைகள் அவரது வயதான தாய், தந்தையுடனும் வசித்து வருகின்றனர்.  தேஜ்பூர் சிறையில் உதவிக்கு யாருமின்றி அடிப்படை தேவைகளுக்காக கூட மிகவும் சிரமப்படும் ஏழ்மை நிலையில் இருக்கும் தனது வயதான பெற்றோருக்கும், பிள்ளைகளுக்காகவும் கண்ணீருடன் வாழ்ந்து வருகிறார்.

அவரது பிள்ளைகள், தங்களுடைய தாயை மாதம் ஒருமுறை சிறையில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.  பிமலாகாத்தூனை சிறையில் சந்தித்த போது தனது சோக வாழ்வை விவரித்தார்.  அதனை அவரது பிள்ளைகள் உணர்வுகள் ததும்ப கேட்டுக் கொண்டிருந்தனர்.  பிமலாகாத்தூனுடன் இன்னும் பலரும் சிறையில் நோன்பிருக்கின்றனர்.  சிறை நிர்வாகம் அவர்களுக்கு தேவையான உணவுகளை வழங்குவதில்லை.  ஈத்கா கமிட்டி சிறையில் தினமும் 200 நபர்களுக்கு நோன்பு துறப்பிற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர்.

அவரது குழந்தைகளின் கல்வி முடக்கப்பட்டுள்ளது.  தாயின் அன்பிலிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். அவருக்கு என்ன நடக்கின்றது, எப்போது விடுதலை செய்யப்படுவார், அவரது குழந்தைகளின் எதிர்காலம் என்ன என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரியவில்லை.

ஒருவருடைய வாழ்வின் கதையைத்தான் இங்கே விவரித்துள்ளேன். இதுபோல இன்னும் பல ஆயிரக்கணக்கான சோகம் அப்பிய வாழ்வுகள் அசாம் மாநிலம் முழுவதும் விரவிக்கிடக்கின்றன.

குடிமக்களின்  தற்போதைய  நிலை :

அசாம் குடிமக்களின் பட்டியலை மாநில அரசு தயாரித்து வருகின்றது.  மக்கள் தாங்களோ, தங்களது குடும்பத்தினரோ 24, மார்ச் 1971க்கு( வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களுக்கான இறுதிதேதி) முன்பு அசாமில் குடியிருந்ததற்கான ஆதார ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்.   NRC பட்டியலை புதுப்பிப்பதற்கான படிவத்தை அனைத்து சமுதாயத்தினரும் பூர்த்திசெய்ய வேண்டும் என்ற போதிலும் சரிபார்ப்பு வழிமுறைகள் முஸ்லிம்களுக்கும், வங்காள இந்துக்களுக்கும் கடினமானதாக  அமைக்கப்பட்டுள்ளன. 2.9 மில்லியன் பெண்கள், பெரும்பாலும் முஸ்லிம்கள், 4.5 மில்லியன் பிறமக்கள் என்று மொத்தமாக 13 மில்லியன்பேர் 31, டிசம்பர் 2017ல் வெளியிடப்பட்ட முதல் தேசிய குடிமக்கள் பதிவு (NRC) வரைவில் நீக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 30,2018ல் வெளியிடப்பட இருக்கும் NRC பட்டியலில் இருந்து உண்மையான இந்திய குடிமக்கள் அதிக எண்ணிக்கையில் நீக்கப்பட வாய்ப்புள்ளது. வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்ட, மாநிலமெங்கும் 100க்கும் மேற்பட்ட சிறப்பு நீதிமன்ற ஆணையங்களில் வழக்குகளில் சிக்கியுள்ள மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குறித்து NRC எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை.

குறுகிய காலத்தில் NRC பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள், வெளியேற்றும் முகாம்களில் அடைக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டு, வாக்களிப்பதற்கான உரிமை மறுக்கப்பட்டு, எவ்வித நிலமும் வாங்க முடியாமல் இந்திய குடிமகனுக்கான எவ்வித அடிப்படை உரிமைகளும் பெறமுடியாமல் கிட்டத்தட்ட மியான்மரில் அழிக்கப்படும் ரோஹிங்க்யா மக்களைப்  போல ஆக்கப்படுவார்கள்.

நீதிக்காக பிரார்த்திப்போம் :

ஒருபுறம் இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜூன் 30ம் தேதி வெளியிடப்படும் பட்டியலில் விடுபடும் மக்களுக்கு தங்கள் குடியுரிமையை நிரூபிக்க ஒன்று அல்லது இரண்டு மாதகால அவகாசம் அளிக்கப்படும். மொத்தமுள்ள 100 சிறப்பு ஆணையங்களில் 89ல் மட்டும்தான் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வளவு குறைவான ஆணையங்களால் எப்படி பல இலட்சக்கணக்கான மக்களின் வழக்குகளை முடிக்க முடியும்?

மூத்த வழக்கறிஞர்கள் பலரும், இந்த ஆணையங்களில் பணிகளில் இருப்பவர்கள் பெரும்பாலும் ஒரு சார்புடையவர்களாகவும்,  தற்காலிக பணியாளர்களாகவும் இருப்பதால் அரசையும் அரசியல்வாதிகளையும் திருப்திப்படுத்துவதன் மூலம் தங்கள் பணிகளை நிரந்தரமாக்கவும் வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட அதிகாரிகளை வைத்துக் கொண்டு எப்படி நீதி கிடைக்கும்?

மறுபுறம் இந்தியாவால் வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்டவர்களை தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்று வங்கதேச அதிகாரிகள் கேட்கின்றனர். ஜூன் 30ம் தேதிக்கு பிறகு அசாமிய குடிமக்களின் நிலை மியான்மர் முஸ்லிம்கள் நிலையின் இரண்டாம் அத்தியாயமாக இருக்கப்போகிறதா?

நூற்றுக்கணக்கான கேள்விகள் இருக்கின்றன. ஆனால் ஒருவரிடத்திலும் பதில் இல்லை. அசாமின் இந்த நிலைக்கு யார் காரணம்? தற்போதைய, கடந்தகால அரசுகளா? அல்லது கல்வியறிவற்ற மக்களின் தலையெழுத்தா இது?

மனிதநேய அடிப்படையில் சிந்தித்து அசாமில் இருக்கும் இந்திய குடிமக்களின் அவலநிலையை நீக்கி அவர்கள் கண்ணியமான வாழ்வு வாழ மக்கள்  சிந்திக்க வேண்டிய தருணம் இது.

2,371 thoughts on “அசாம் குடிமக்களின் அவலநிலை

 1. Pingback: aralen
 2. Pingback: levitra 20 mg
 3. Pingback: cbd oil
 4. Pingback: cbd pure
 5. Pingback: viagra for sale
 6. Pingback: cialis generic
 7. Pingback: viagra for sale
 8. Pingback: chloroquine cost

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *