LOADING

Type to search

சமூகம்

காஷ்மீர் பிரச்சனையும் அமெரிக்காவின் முரண்பாட்டு அரசியலும்

admin 2 months ago
Share

காஷ்மீர் பிரச்சனையும் அமெரிக்காவின் முரண்பாட்டு அரசியலும்.

உலக நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை எந்தவித நியாயவாதங்களும் இல்லாமல் செய்யும் அமெரிக்கா காஷ்மீர் விவகாரத்தில் ஏனோ ஒருவித தொலைவை கடைப்பிடிக்கிறது. இத்தனைக்கும் காஷ்மீர் பிரச்சனை ஒரு நாட்டின் ஆட்சியாளர்களுக்கிடையே அல்லது அரசிற்கும் மக்களுக்கும் இடையே மட்டும் நடப்பதல்ல. கூடுதலாக ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையே நிகழும் சிக்கலான உரசல். இதனை மையப்படுத்தி இரு நாடுகளுக்கிடையே முதன்மையாக மூன்று போர்கள் நடந்துள்ளது. தொடர்ந்து இருதரப்பினரிடையே ஐக்கிய நாடுகள் சபை வரை சர்வதேச வாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், அமெரிக்கா ஏன் ஆர்வம் காட்டவில்லை? என்ற கேள்வி மூலம் அமெரிக்காவின் அயல்நாட்டுத் தலையீடுகளை அங்கீகரிப்பது என்றில்லாமல், அதன் நிலையின்மீதான காரணங்களைத் தேடுவதே பதிவின் நோக்கம்.

ஆப்கனில் அமெரிக்காவிற்கும் தாலிபான்களுக்கும் இடையேயான பிரச்சினை முடிவை எட்ட, கடந்த 18 ஆண்டுகளாக அங்கிருந்த அமெரிக்க ராணுவத்தினரைத் திரும்பப் பெற அமெரிக்கா முன்வந்தது. அல்-கொய்தா மற்றும் பிற பாகிஸ்தானியத் தீவிர குழுக்களுடன் தாலிபான்களுக்கு இருக்கும் தொடர்பைக் குறிப்பிட்டு, சிக்கல் சுமுகமாக நிறைவடையப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உதவியை வேண்டினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.அந்தவகையில், கடந்த ஜூலை 22ம் தேதி டிரம்ப்-இம்ரான் கான் இடையே நடந்த பேச்சுவார்த்தை ஓர் முக்கியத்துவத்துடன் முடிவடைந்தது.

புல்வாமா தாக்குதல் பதற்றத்திற்குப் பிறகு காஷ்மீர் சர்ச்சையைச் சர்வதேச அளவில் பேசுபொருளாக்கி தீர்க்க வேண்டும் என்று தொடர் முயற்சிகளை மேற்கொண்டார் இம்ரான் கான். குறிப்பாக அமெரிக்கா போன்ற வலிமையான நாட்டின் துணை தேவைப்பட்டது. ட்ரம்புடனான இந்த பேச்சுவார்த்தையைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டார் இம்ரான் கான். ஆப்கன் தீர்வுக்கு கைமாறாக காஷ்மீர் பிரச்சனைக்கு உதவ வேண்டும் என்று ட்ரம்பை கேட்டுக்கொண்டார். இதனைத் தொடர்ந்தே காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என்ற ட்ரம்பின் அறிவிப்பு புதிய பரபரப்பை ஏற்படுத்தியது.

 ‘இருநாடுகளுக்கிடையேயான பிரச்சனையில் மூன்றாம் நபர் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்று இந்தியா கறாராகக் கூறியது. மேலும் தொடர விரும்பாத அமெரிக்கா இதிலிருந்து மெல்லப் பின்வாங்கத் தொடங்கியது. சுமுகமாகச் சம்பந்தப்பட்ட இருவர் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்று கூறியது. பின், அமெரிக்காவின் தலையீட்டை உணர்ந்த இந்தியா சில நாட்களில் காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்கிறது. இந்தியாவின் தன்னிச்சையான இம்முடிவுக்கு அமெரிக்காவிடமிருந்து எந்தவித எதிர்வினையும் இல்லை. இருநாட்டுப் பிரச்சனையை அவர்கள்தான் அமைதியான வழியில் தீர்க்க வேண்டும் என்ற தமது பழைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்ற அமெரிக்கா, சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாகத் தன்னிலையை வெளிப்படுத்த மறுத்தது. இருநாடுகள் பேசிக்கொள்வோம் என்று கூறிவிட்டு திடீரென தன்னிச்சையாக முடிவெடுத்த பிரதமர் மோடியை விமர்சிக்க விரும்பாத அமெரிக்கா, மாறாகப் பாகிஸ்தானைக் கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது.

நடந்து முடிந்த G-7 மாநாட்டில் தீர்வை குறித்து (மீண்டும்) பேசலாமா என்று கூறிய டிரம்பிடம், மூன்றாம் நபர் பேசுவதற்கு எதுவுமில்லை என்று மறுத்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. ட்ராம்பின் அழைப்பிற்கு இம்ரான் கான் இணங்கியபோதும், இந்தியாவின் மறுப்பை ஏற்று விலகி நிற்கிறது அமெரிக்கா. ‘பிரச்சனையைக் கவனித்துக் கொண்டிருக்கிறோம், அமைதியை வரவேற்கிறோம் என்று இன்று மீண்டும் பழைய பல்லவியையே பாடத்தொடங்கிவிட்டது அமெரிக்கா.

இரைச்சலைவிட சில நேரங்களில் மௌனத்தின் இருப்பியலை உற்றுநோக்க வேண்டியது அவசியம். விலகி நின்று கவனிக்கிறோம் என்ற அமெரிக்காவின் அடக்கத்தையும் அவ்வாறே பார்க்க வேண்டியுள்ளது. இம்ரான் கானுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகே, காஷ்மீர் விவகாரத்தைக் கையில் எடுக்கிறார் டிரம்ப். அதாவது பாகிஸ்தான் சார்பான ஒரு நிர்ப்பந்தத்தின் பேரில் என்று கூறலாம். ஆனால், காஷ்மீர் மீதான உரிமை நீக்க நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தானைக் கட்டுப்பாட்டுடன் இருங்கள் என்று சொல்லுமளவிற்குப் பாகிஸ்தானிற்கு நேரெதிராக ஒலித்தது அமெரிக்காவின் குரல். மேலும், நடுநிலை வகிப்போம் என்று பெயரளவிற்குச் சொன்னாலும் சிறப்புரிமை நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஒருதலைபட்சமான கள்ள மௌனத்திற்குத் தன்னை உட்படுத்திக்கொண்டது அமெரிக்கா.

பாகிஸ்தானுக்குப் பிறகு இந்தியாவின் நடவடிக்கையை எதிர்த்த மற்றொரு நாடு சீனா. இந்நடவடிக்கை எல்லை பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும் என்றே சீனா கருதியது. தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்ட பாகிஸ்தானுக்கும் சீனா ஆதரவளித்தது. ஆகமொத்தம் விவகாரம் சீனாவை ஒருமுனையில் நிறுத்துவதாக அமைந்துவிட்டது. எனவே, இது வெறும் எல்லை பிரச்சனை என்றில்லாமல் அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போரின் வெளிப்பாடே என்று கருதுகிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.

இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நீண்ட நாள் உள்நோக்கம், டிரம்ப் அறிவித்த சர்வதேச அளவிலான மதிப்பீட்டின் ஒளியின் கீழ் நிறைவேற்றப்பட்டது (சில மாதங்களுக்கு முன் ஜப்பானில் நடந்த G-20 மாநாட்டில் காஷ்மீர் தீவிரவாதம் குறித்து டிரம்ப்-மோடி அக்கறை காட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது). ஆசியப் பிராந்தியத்தில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அமெரிக்கா தைரியமாகக் கையிலெடுத்த காஷ்மீர் பிரச்சனையின் விளைவே இன்றைய நிகழ்வுகள் என்கிறார்கள் விமர்சகர்கள். தெற்காசியப் பிராந்தியத்தில் நட்புறவை வலுப்படுத்தும் சீனா, ஆசிய மண்டலத்தில் சீரான வர்த்தக போக்குவரத்தை அமைக்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது. அதைச் சமாளிக்க வேண்டுமெனில் அங்கு தன் இருப்பை அவசியமாகக் கருதுகிறது அமெரிக்கா. அதன் மௌனத்திற்குப் பின்னாலான இருமைய அரசியல் உருவாக்கம் இதுதான் என்று ஊடகங்கள் குற்றம் சாட்டுகிறது.

இன்று அமெரிக்காவின் கள்ள மௌனத்திற்கான எதிர்வினை அமெரிக்காவிலேயே எழுந்துள்ளது. காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நேரடியாகக் கடிந்துள்ளார் ஜனநாயக கட்சியின் வரும் தேர்தல் போட்டி அதிபர் வேட்பாளர்களில் ஒருவரான ‘பெர்னி சாண்டர்ஸ்.’ மேலும், மருத்துவ உதவியைக் கூட பாதுகாப்பின் பெயரில் தடை செய்திருக்கும் இந்தியாவின் மனித நேயமற்ற செயலுக்கு எதிராக அமெரிக்கா கண்டிப்பாகப் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இந்தியா ஜனநாயகத்தை அழித்துக் கொண்டிருப்பதாகப் பல ஜனநாயக கட்சியினர் தம் குரலைப் பதிவு செய்துள்ளனர். சிறப்பு உரிமை நீக்கப்பட்ட பிறகு அதைக் கொண்டாடும் விதமாக அமெரிக்காவில் வாழும் இந்திய உயர்சாதியினர் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டனர். ஆனால், இன்று அதற்கு எதிராகப் பல ஜனநாயக குரல்கள் ஒலித்துக்கொண்டுள்ளது. பெரும்பாலும் வெளியுறவு விவகாரங்களில் அமெரிக்கக் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டிலேயே இருக்கும். அப்படியிருக்கையில் பின்னணி அரசியலைக் கடந்து ஜநாயக்கத்திற்காக எதிர் குரல்கள் எழுவது வரவேற்கக்கூடியதாகும்.

அப்துல்லா.மு

மேற்கோள்கள் :
Scroll – The Guardian – Economic Times – Nikkei Asian Review.

Tags:

1 Comments

 1. Dena September 4, 2019

  Hi, very nice website, cheers!
  ——————————————————
  Need cheap and reliable hosting? Our shared plans start at $10 for an year and VPS plans for $6/Mo.
  ——————————————————
  Check here: https://www.good-webhosting.com/

  Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *